அருங்குணப்பெட்டகத்தைத் தொலைத்தோமே !
நம்பி என்று நாடழைத்தாலும் நற்குணம் நிறைந்த தம்பி
என்று அழைக்கும் உரிமை எனக்கு மட்டும் தான் இருந்தது .
எளிமையாக வாழ்க்கையை எடுத்து அடி வைத்த நாளிலிருந்து புயலையும் –
இடர்களையும் பொழுது மாறாமல் அலைக்கழித்த போது
உங்கள் தோளில் சாய்ந்திருந்த அருமைத் திருமகள் அனுசுயாவை
நினைக்கும் போதெல்லாம் உங்கள் நெஞ்சம் எத்தனை ஆண்டுகள்
எப்படி உருகியது என்று எனக்குத் தெரியும்.
என்னை யாரும் பார்க்கவேண்டாம் –
என் இதயமாக இருக்கும் அனுசுயாவின்
கண் கலங்கக் கூடாதென்று என்று
ஆயிரம் முறையாவது கூறியிருப்பீர்கள் .
கல்கத்தாவில் வளர்ந்த சிறுமி –
சென்னைக்கு வந்து
கல்லூரியில் சேர விரும்பிய மணமகள்
ஜெகத்தைத் தவிர வேற ஜெகத்தைக் கண்டறியாத
பொன்மனச்செல்வி கண்களாகத்
தன் மக்கட் செல்வங்களைக்
காத்து வந்த தாய் .
தாமரை இலைத் தண்ணீர் போல
ஒட்டுப் பற்றில்லாமல்
உங்கள் உயர்வையே
வாழ்நாள் முழுவதும் பேசினார் .
அண்ணா ! அனுசுயாவுக்காக எத்தனை கோடி வேண்டுமானாலும்
நான் செலவழித்துப் பித்தனைப்போல்
எல்லாவற்றையும் விட்டு விட்டுச் சென்று விடுவேன் என்று
இன்று சூளுரைத்த உங்களால்
இந்தப் பிரிவைத் தாங்கவே முடியாது .
அருங்குணச்செல்வி அன்பின் உருவான தியாக விளக்கு
எப்படி அணைந்தது !
மூன்று நாளைக்கு முன்னர்தான்
அமெரிக்காவுக்கு உடனே அனுசுயாவை அழைத்துச்செல்லலாம் என்று
ஆனந்தனிடம் பிரதாப்பும் தகவலைத் தெரிவித்தார் ..
ஆயிரம் கைகள் அரவணைத்த போதும்
அகல் விளக்கு அணைந்துவிட்டது ! .
ஆற்ற முடியாத துயரம் .
அலைகடலில் அமிழ்ந்த போதும்
தன்னை மட்டும் நம்பி வாழும்
உங்கள் நெஞ்சுறுதியை மேலும்
இரும்பாக்கிக்கொள்ள வேண்டுகிறேன் .
கடலில் பிறந்தாலும்
முகில் எங்கோ அலையும்
மழை எங்கோ பொழியும்
அதுபோல்தான் உறவும்
நான் என்னை மட்டும்
நம்பி நம்பிப்
பயணம் போகிறேன்… என்ற
தொடர்களைத்தான் வாழ்க்கையில்
தாங்களும் தொடர
முற்படவேண்டும்…
கலங்கிப் புலம்பும்
ஒளவை நடராசன் …
15 12 2020 …

Add a Comment