முத்தமிழ்க்காவரும்-கல்வி வேந்தரும்
________________________________________
தமிழகத்தின் பல்கலைக்கழகங்களையெல்லாம் ஒருங்கு சேர்த்துக் காணும்போது வெற்றித்திருமுகத்தோடு விளங்கும் விஐடி பல்கலைக்கழகத்தை உலகமே போற்றி மகிழ்கிறது.
பேரறிஞர் அண்ணா இப்பொழுது வாழ்ந்தால் அவர் மனம் எவ்வளவு பெருமிதம் அடைந்திருக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது.
இளமையிலேயே அரசியல் புலமையும், ஆற்றலும் வாய்ந்தவராக நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக பேரறிஞர் அண்ணாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும் தகுதி கொண்டவர்தான் கல்வி வேந்தரும், கல்வி நெறிக் காவலரும் உயர்ந்து ஓங்கிய ஒருமாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி என்று அழைக்கப்பட்ட பெருமை கொண்ட விஐடி பல்கலைக்கழகத்தை நடத்துவதை நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.
அடக்கத்தாலும், ஆற்றலாலும், தகுதியாலும், திறமையாலும், அறிவாலும், பண்பாலும் ஓங்கிய புகழ் கொண்ட வேந்தர் அவர்களை நான் மகிழ்ச்சியோடு வணங்குகிறேன்.
இந்த நாள் ஒரு பொன்னாள்; தமிழகத்திற்கே தனிச்சிறப்பு வாய்ந்த நன்னாள்; ஓயாத சங்க நாதமாக தமிழ்நாடு மட்டுமின்றி உலகத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தமிழ் முழக்கம் செய்த பெருந்தகை, அறிவுக்கடல், முத்தமிழ்க் காவலருக்கு ஈடாக நாம் யாரையும் நினைக்க முடியாது.
நினைப்பதென்றால் பேரறிஞர் அண்ணா அவர்களே ஒரு கூட்டத்தில் பேசும்போது “கோடிக்கணக்கான நண்பர்கள் என்னை அண்ணா என்று அழைக்கிறார்கள். நான் அண்ணா என்று அழைக்கிற பெருமை கொண்டவர் எங்கள் அண்ணா முத்தமிழ்க் காவலர் கிஆபெ அவர்கள்தான்” என்று நெஞ்சுருக குறிப்பிட்டது இப்பொழுதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
முத்தமிழ்க் காவலர் தொழிலால் வணிகத்தைத் தொடங்கியவர்; தொண்டால் தமிழ் உலகத்திற்கு பெருமையும் தகுதியும் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக எத்தகையோர் முன்னணியில் போய் நின்று அவர் ஆற்றிய பணிகளை நாம் போற்றி மகிழ வேண்டும்.
அவர்கள் திருக்குறளை எடுத்துச் சொல்கிற அழகிற்கு திருக்குறளைப் பரப்பிய ஒரு வளத்திற்கு சிறு குழந்தைகள் முதல் சிந்தனையாளர்கள் வரை திருக்குறளை எப்படி எல்லாம் உணர்ந்து மகிழ வேண்டும் என்று அவர் எழுதிய நூல்கள் நாம் எந்நாளும் போற்றிப் பார்க்கவேண்டிய கலைக் கருத்துக் களஞ்சியம் ஆகும்.
கிஆபெ எழுதிய நூல்களெல்லாம் எண்ணினால் நூறு பக்கங்கள் தான் இருக்கும். ஆனால் அந்த நூறு பக்கங்கள் ஆயிரம் கருத்துக்களைக் கொண்டவை; பதினாயிரம் சிந்தனைகளை எழுப்ப வல்லவை; பதினோரு லட்சம் பேருக்கு சென்று மனதைத் தைக்கின்ற அளவிற்கு ஆழ்ந்த புலமை உடையவர் முத்தமிழ்க்காவலர்.
அவர் தன்னுடைய வாழ்வின் முதுமைப் பருவத்தில் அவர் இல்லாத அரசியல் கட்சிகளுக்குத் தலைமை தாங்கிய நிகழ்ச்சிகளெல்லாம் பல உண்டு.
அவர் தன்னுடைய முதுமைக் காலத்தில் தமிழகப் புலவர்களை எல்லாம் ஒருங்கு கூட்டி புலவர் குழு என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
எனக்கென்ன பெரிய மகிழ்ச்சி என்று சொன்னால் புலவர் குழுவை அவர் தொடங்கிய போது எப்படி பண்டைத் தமிழுலகத்தில் 49 புலவர்கள் அமர்ந்திருந்து தமிழ் ஆராய்ந்தார்கள் என்று நான் சொல்லி வந்ததை கண் முன்னால் கண்டு மகிழ வேண்டும் என்ற வகையில் புலவர் குழு அமைத்தார்கள்.
புலவர் குழு அமைத்தது மட்டுமல்லாமல் அதில் தகுதி வாய்ந்த புலவர்களை தெரிவு செய்து அமர்த்த வேண்டும் என்பதற்கும் அவர்கள் முன் நின்றார்கள்.
இந்த நாளில் தந்தையுடைய புகழை நான் நினைக்கின்ற போது அவரது குடும்பத்தில் பிறந்த குலவிளக்காக, குடும்ப விளக்காகத் திகழும் எனது அருமைத் திருமகள் மணிமேகலை கண்ணனைப் பற்றியும் நான் சில தகவல்கள் சொல்லி ஆகவேண்டும்.
அப்பாவின் கனவைத் தப்பாமல் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நினைப்பது இயல்புதான் என்றாலும் மணிமேகலை ஓய்வு ஒழிவு இல்லாமல் களைப்பு காணாமல் எந்த நேரத்திலும் நினைத்தபடி தந்தையினுடைய சிந்தனையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பொறுப்பாண்மைக் குழுவின் தலைமையை ஏற்று மணிமேகலைக் கண்ணன் புலவர் குழுவை நிலைநிறுத்தி இருக்கிற பெருமையை தமிழுலகம் என்றும் மறவாது.
எந்த ஒரு நிறுவனமும் உருவாகிறது என்றால் அதற்கு இடையூறுகள் வருவது என்பது இயல்புதான். அப்படி தடைகள் பல நூறு வந்தாலும் அவர்கள் அதைப்பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் தான் தனியாக நின்று இந்த இந்தப் பணியை ஆற்றி வருகின்ற மகள் மணிமேகலை பல்லாண்டு காலம் சீரிய முறையில் புகழோடு வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.
வேந்தர் பெருந்தகை விஸ்வநாதன் அவர்களும் முத்தமிழ்க் காவலர் விஸ்வநாதன் அவர்கள் பெயரையும் இரண்டையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கும் போது முத்தமிழ்க் காவலர் இல்லையே என்று மனம் வருந்தும்போதெல்லாம் கல்வி நெறிக்காவலர், வித்தகர் விஸ்வநாதன் நம்முடன் இருக்கிறார் என்ற மன அமைதி நமக்கு உண்டாகிறது.
வேலூர் புகழ் வாய்ந்த அறிவுத்திருநகர்.
அந்த வேலூரின் வெற்றித் திருமகன் என்று எவரைக் கேட்டாலும் சொல்வதற்கு விஐடி பல்கலைக்கழகம் இருக்கிறது.
அருமைப் பெருந்தகை விஸ்வநாதன் அவர்கள் முத்தமிழ் காவலர் தொடங்கிய பணிகளைத் தொடர்ந்து நடத்துகிற வகையிலே தான் மக்களுக்கு இட்டு வழங்க வேண்டிய ஆயிரம் திருப்பெயர்களையும் தமிழ்நெறிக் கழகத்தையும் உருவாக்க வேண்டும் என்று முன்னிற்க வேண்டும் என்பதை எண்ணி நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
எத்தணையோ துன்பங்கள் வாழ்வில் வரும் போகும். ஆனால் இன்பம் என்பது தமிழ்தான். உணர்வு என்பது தமிழ்தான்.
நனியுண்டு நனியுண்டு காதல்; தமிழ்நாட்டு நனி யாவர்க்குமே தமிழ் மீதில் என்று நான் சொல்லி தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழறம் வெல்க! என்று மூன்று முழக்கங்களுக்கும் தந்தையாக திகழ்ந்த முத்தமிழ்க் காவலரின் புகழ் நெடிது வாழ்க! வெல்க!! வணக்கம்!
முத்தமிழ்க்காவலரின் 123ம் பிறந்த நாள் புகழ் வெல்க
ஒளவை நடராசன்

Add a Comment