வேந்தர் விசுவநாதன் புகழ் வெல்க
விஐடி வேந்தர், கல்வி நெறிக் காவலர் நண்பர் விசுவநாதன் அவர்கள் 83 ஆம் பிறந்த நாள் விழா,8.12.2020 கல்வி நலம் விரும்புகிற உலக மக்கள் அனைவரும் போற்றி மகிழ வேண்டிய நன்னாளாகும்.
நண்பர் விசுவநாதன் வளர்ந்த நாளிலிருந்து தன்னுடைய பணிகளில் பரந்து நின்று இன்று கல்வியில் சிறந்து நிற்பதற்கு அவருடைய வளர்ப்பும், அவருடைய நினைப்பும் ,அவருடைய உழைப்பும் பெரும் காரணங்களாகும்.
நண்பர் விசுவநாதன் கல்லூரி பயின்று முடித்த பிறகு அவர் முகத்தில் தெரிந்த களையும் அவர் நெஞ்சத்தில் இருந்த நேர்மையும் பேரறிஞர் அண்ணாவின் மனதை கொள்ளை கொண்டு இளம்பருவத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினராக அவர் டெல்லி மாநகர் சென்று பணியாற்றியதை நினைத்துப்பார்க்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் பிறகு வளர்ந்த வகையில் அரசு அமைச்சராகவும்,கட்சியில் ஆர்வமும் கொண்ட தொண்டராகவும் ஆற்றலோடு பணியாற்றி எல்லா துறைகளுக்கும் எழில் சேர்த்தார்.
தனியார் கல்லூரிகள் தொடங்கலாம் என்ற ஒரு அலை வீசிய போது நண்பர் விசுவநாதன் தொடங்கியது தான் விஐடி பல்கலைக்கழகம்.
நண்பர் விசுவநாதன் கல்வியில் எத்தனை ஆர்வமுடையவர் சிந்தனை வளம் உடையவர் என்பதை அவர் பேசுகிற பேச்சிலிருந்து நாம் காணலாம்.
இந்திய நாட்டிலேயே பொறியியல் துறையில் தலை நிமிர்ந்து நிற்கின்ற பல்கலைக்கழகம் என்ற பெருமிதத்தை வேலூருக்கு வாங்கித் தந்திருக்கிறார் நண்பர் விசுவநாதன் .
நண்பர் விசுவநாதன் தான் நினைத்த கருத்தை அது நேர்மையானதா, நாணயம் கொண்டதா, நன்நம்பிக்கையைக் கொண்டதா என்றெல்லாம் எடை தூக்கிப்பார்த்துத்தான்
தன்னுடைய கருத்துக்களை அவர் வெளிப்படுத்துகின்ற வழக்கம் உண்டு.
அந்தவகையில் கடந்த மூன்றாண்டுகளாக உலகத்தமிழ் இயக்கத்தை உருவாக்கி தமிழ் உணர்வை தடுக்கச் செய்ய வேண்டும் இன்றைய காலநிலை அறிவியல் வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டுவது போல ஆங்கில பழக்கத்துக்கு ஊக்கம் தருவது போல வளர்ந்திருக்கின்றன.
இந்த வளர்ச்சியை பாராட்டினாலும் கூட தாய்த் தமிழை மறந்து போகும் ஒரு தவறான போக்கு தனிப் பெரிய துன்பம் இதை எப்படியாவது போக்க வேண்டும் என்று அவர் தன்னுடைய பணிகளை தொடங்கி உலகத்தமிழ் இயக்கம் உருவானது மட்டுமில்லாமல் ஆயிரம் தமிழ்ப் பெயர்களை தமிழ்ப் பெருமக்களுக்கு எடுத்துக்காட்டி இந்தப் பெயர்களை எல்லாம் ஏன் நாம் வைக்கவில்லை ஒரு அடிப்படையான மிகத் தேவையான தமிழ்ப்பணியை செய்திருக்கிறார்கள்.
கல்விப்பணி, தமிழ்ப்பணி,அரசியல் பணி ஆகிய மூன்று பணிகளுக்கும் ஒப்பற்றவராக விளங்குகிற நண்பர் விசுவநாதன் எந்தக் கருத்தையும் எண்ணி எண்ணிப் பேசுகிற ஆற்றலுடைய அவருடைய மரபு ஓங்கி வளருமானால் நாட்டுக்கு அது பெரும் நன்றியை விளக்கும் என்பதை நான் எப்போதும் உணர்ந்து மகிழ்கிறேன்.
விசுவநாதன் அவர்கள் எத்தகைய மனமும் மாட்சியும் மரபும் தகுதியும் உடையவர் என்பதை அவருடைய செயல்களே உலகிற்கு எடுத்துச் சொல்லும் .
ஆற்றல் அரசராக திகழ்கிற வித்தகர் விசுவநாதன் அவர்கள் பல்லாண்டுகள் வாழ்க .
பல வளம் அந்த நிறுவனத்தை சூழ்க .
தமிழுணர்வு ஓங்குக.
கல்வி நலம் வெல்க
என்று வாழ்த்துகிறேன்.
வணக்கம்.
ஒளவை நடராசன்

Add a Comment