மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 68)
‘நீண்ட தமிழால் நெஞ்சில் நின்றவர்!’
முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
புரட்சித்தலைவரின் பொன்மனத்தில் மாறாத மதிப்புடன் போற்றப்பெற்ற அரசியல் தலைவர்களிடையே தனிச் சிறப்பைப் பெற்றிருந்தவர் நாவலர் தான்.
நாவலருடைய நூற்றாண்டுக் கடந்த நினைவு கூரும் நல்லாண்டாகத் தைத்திங்கள் பிறக்கிறது.
“அகலாது அணுகாது” என்ற தொடருக்கு விளக்கம் தருபவராக எந்நிலையிலும் எவரிடத்திலும் அவையறிந்து நின்ற தகைமை அணிகலனாக இருந்தது.
தன் நெஞ்சில் பட்டதை அஞ்சாமல் ஒருமுறை கூறுவார், மறுப்பு வந்தால் விடையளிப்பார் – விளக்கம் கேட்பார் – பிறகும் பிடிவாதமாக நின்றால் மெல்லிய அவலத்தோடு இசைவார்.
பொருந்தாதவர்கள்,திருந்தாதவர்கள் பலராக இருக்கும் நிலையில் நான் வருந்தாத நாளில்லை,
இப்படித்தான் உலகியல் உள்ளதென்று மனம் நிறைவடைய வேண்டியுள்ளது.
முத்தமிழ்க்காவலர் திருமண விழாக்களில் அறிவுறுத்தியவாறு “அடக்கிப்பார்” , இல்லை என்றால் ” அடங்கிப்போ ” என்பதையும் நாவலர் அடிக்கடி சொல்வதுண்டு.
மூட நம்பிக்கையை வெறுப்பதிலும் பழம்போக்குகளைப் பழிப்பதிலும் தந்தை பெரியாரின் தன்மான உணர்வில் எப்போதும் தளராமல் நிற்பதும், வெண்தாடி வேந்தர் படையில் வெற்றியுலா நடத்திய இளந்தாடி ஏந்தலாக- எழுச்சி வீரராக – மேடைப் புயலாக நாவலர் ஒளிர்ந்தார் .
மேடைத்தமிழில் நகைச்சுவை நிறமும் – உடல் மொழியும் பூசி அவர் உரையாற்றியதை நாடு உச்சிமேல் வைத்து மெச்சியது .என்றும் நாவலர் பேச்சை – ஆர்ப்பாட்டப் போர்ப்பட்டை ஆரவாரத்துடன் மக்கள் கேட்டு மகிழ்ந்தார்கள்.
சும்மா , அதெல்லாம் எதற்கு ஏன் , என்று கேட்கலாமா ! என்று வாழும் மக்களின் நிலையை விரிவாக நையாண்டியாகச் சுட்டிக் காட்டும் போது அவை குலுங்கும் .
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது ,” சிறுத்தையே வெளியில் வா !
பேரன்பு கொண்டோரே ,பெரியோரே பெற்ற தாய்மாரே ,
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
முதலிய புரட்சிக்கவிஞரின் கனல் வரிகளுக்குத் தன் காந்தக் குரலால் புது மெருகேற்றிய பெருமை நாவலருக்கு மட்டுமே அமைந்திருந்த நயப்பாடாகும்.
ஊது ஊது சங்கே என்ற ஒலி எங்கே கேட்டாலும் நாவலரின் நிமிர்ந்த தோற்றமும் ,நேர்கொண்ட பார்வையும், நெடுங்கடல் ஆரவாரமும் எவர் நினைவையும் விட்டு நீங்கா …
மாணவ நிலையிலேயே பல்கலைக்கழக மாமன்றங்களில் வரவேற்பாகவும் – நன்றியுரையாகவும் அவர் தீட்டி வந்த சொல்லோவியங்கள் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்து,
அவருடைய பேச்சாற்றலின் பெருமையை அப்போதே அனைவரும் உணருமாறு செய்து வந்தன.
பல்கலைக்கழகத்தில் வேறு மன்றங்கள் பல இருந்தாலும் அவற்றுள் தமிழ்மன்றமே அவர் காலத்தில் தலைசிறந்து விளங்கியது.
துணைவேந்தரும், மற்ற துறைப்பேராசிரியர்களும் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளில் கலந்து களிக்கும் காலமாக அப்போது போற்றப்பெற்றது.
நாவலர் பேச்சு ஒரு தனிப் பாங்குடையது. தமக்கெனத் தனியே உரியதான ஒரு தனித்திறத்தோடு அவர் பேசுவார்.
செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பழமொழிக்கிணங்க அவர் மாணவராக இருந்த காலத்திலேயே, கேட்டார்ப் பிணிக்கும் தகையதாய்க் கேளாரும் வேட்ப மொழிகின்ற ஆற்றல் படைத்திருந்த அவர் பின்னர் நாளாக நாளாக மட்டில்லாத வகையில் பேச்சு வளமை பூண்டு விளங்கலானார்.
இன்றும் அவரது பேச்சைக் கேட்பதற்காகவே பல்லாயிரக்கணக்கானோர் ஆவல் கொள்ளும் பான்மையில் அவர் பேச்சு அமைந்திருக்கின்றது.
எடுத்தலும், படுத்தலும் விரவிய அவர்தம் குரல்வளம் எல்லோர் உள்ளத்தையும் களிப்பிக்கும் பெருமையினதாகும் .
அடுக்கடுக்காகத் தொடர்ந்து சொற்களை அமைத்துக் கொண்டே வந்து கேட்பவர் வியக்கும் வண்ணம், அழகு மிளிர முடித்து மகிழ்விப்பார் என்று சிதம்பரத்தில் நகராட்சி ஆணையராக அப்போது பணியாற்றிய ஆட்சிமொழிக்காவலர் வரைந்த குறிப்பு எப்போதும் நினைக்கத்தக்கது .
‘வாகீச கலாநிதி’ கி வா ஜ நாவலரைப் புகழ்ந்த பாராட்டுரை தான் எனக்கு இக்கட்டுரைக்குத் தலைப்பாகவே அமைந்தது. “
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் ” என்று கம்பன் அகத்தியரைப் பற்றிச் சொல்வான். அங்கே தமிழை ‘ நீண்ட தமிழ் ‘ என்கிறான் என்பதை நினைக்கும் போது எனக்கு ஒரு தமிழருடைய நினைவு வருகிறது.
அவர் உருவத்திலும் நெடியவர்; பெயரிலும் நெடியவர்; பேச்சிலும் நெடியவர்.
நாவலர் நெடுஞ்செழியனாரைத் தான் சொல்கிறேன்.
தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை, நீர்மை, மென்மை என்ற பொருள் உண்டு. அந்த மூன்றையும் நாவலர் தமிழில் காணலாம்.
‘ அதோடு நெடுமையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும், அவர் பேசுவது நீளும் தமிழ்; குலுங்கும் தமிழ் ; இனிய தமிழ் ‘ என்று எழுதினார் .
ஆலையில் கரும்பை அழுத்திப் பிழிவதைப் போல எழுத்தையும் கருத்தையும் அழுத்தம் திருத்தமாக அவர் எடுத்துப் பேசிய அழகுக்குச் சில தொடர்களைக் காணலாம்.
கவிஞனும் – புரட்சிக்கவிஞரும்
எதற்கும் அஞ்சாமல், விளைவைப் பற்றிக் கவலைப்படாமல், உண்மையைத் துணிவுடன் வெளியிடுபவன் தான் உண்மையான கவிஞன் ஆகிறான்.
சிந்தையால், சொல்லால், செயலால் எதற்கும் அச்சப்படாமல், பணியாமல், வளையாமல் நெளியாமல், விழாமல் சாயாமல் உள்ளதை உள்ளபடியே எடுத்துச் சொன்னவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆவார்.
வேலைக்காரியும் – வீட்டுக்காரியும்
வேலைக்காரி நம் வீட்டுக்கு வருகிறாள். நமக்கு வேண்டிய வேலையைச் செய்து விட்டுத் தன் வீட்டுக்குப் போய்விடுகிறாள்.
பிற மொழிகளை நாம் வேலைக்காரியை நடத்துவது போல நடத்தவேண்டும். நமக்கு வேண்டிய வேலையை வாங்கிவிட்டு, வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும்.
தமிழ்மொழி நம் மனைவியைப் போல் இருக்கிறது. நம்மோடு ‘ எப்போதும் கூடவே இருக்கவேண்டும் . நம் மடிமீது கூட நம் மனைவி அமரலாம் . ஆனால், வேலைக்காரியை அப்படி உட்கார வைக்க முடியாது.
அறிவியல் அறிவு போதாது
நம்முடைய நாட்டிலுள்ள படித்த பட்டதாரிகள் பலரிடையே ‘விஞ்ஞான அறிவு’ ( Scientific Knowledge) இருக்கிறது.
ஆனால், “அறிவியல் அணுகுமுறை ( Scientific approach) இல்லை .
சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் எப்படி ஏற்படுகின்றன என்று மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் விஞ்ஞான ஆசிரியர்களே, தங்கள் சொந்த வாழ்க்கையில் அவற்றிற்கு மாறாக மடமையாளர்களாக இருக்கிறார்கள்.
‘சும்மா’ என்னும் சொல்
நம்முடைய நாட்டில் பலர் சும்மாவே இருக்கிறார்கள். “ ஏன் வேலையில்லையா ? ” என்று கேட்டால், சும்மாதான் இருக்கிறேன் என்கிறார்கள்.
வெளியூருக்கு எதற்காகச் சென்று வந்தீர்கள் ? ” என்று கேட்டால், “ சும்மா தான் போய் வந்தேன் ” என்று சொல்கிறார்கள்.
நண்பரோடு என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் ” என்று கேட்டால், “ சும்மா தான் பேசிக் கொண்டிருந்தேன் ; என்று கூறுகிறார்கள்.
இப்படி எதைக் கேட்டாலும் சும்மா, சும்மா ‘ என்றே நம்முடைய நாட்டவர்கள் சொல்வதை நீங்கள் பார்க்கலாம்.
எனக்குக் கூட ஓர் ஐயம், இந்த வார்த்தை அகராதியில் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். ‘ சும்மா ‘ என்ற வார்த்தையே அகராதியில் இல்லை. அதற்குச் சமமான சொல்லாவது இருக்கிறதா என்று சொற்களஞ்சியம் போன்றவற்றில் தேடிப் பார்த்தேன். அதிலும் இல்லை. ஏனென்றால் சும்மா என்ற வார்த்தையே அமெரிக்காவில் இல்லை. ஏனென்றால், அங்கே எவனும் சும்மாவே இல்லை .
ஒரு முறை அண்ணா சொன்னாராம் ” நாவலர் பேச்சைக் கேட்டு நிஜமாகவே சிறுத்தை கதவைத் திறந்து வந்துவிடப் போகிறது ,
ஏனென்றால் கூப்பிடும் தூரத்தில் தான் இந்த ஊரில் சர்க்கஸ் நடந்து கொண்டிருக்கிறது” என்றார்,
நாவலர் சொற்களிலேயே குறிப்பிடவேண்டுமென்றால் பொங்கும் உணர்ச்சியோடு
“வலிவோடும், பொலிவோடும், எழுச்சியோடும் ,உணர்ச்சியோடும், ஆக்கத்தோடும் ,ஊக்கத்தோடும் , தெளிவோடும்,திட்பத்தோடும், அறிவோடும் ஆற்றலோடும்” என்று அவர் அடுக்கிக் காட்டியதை இளைஞர்கள் கேட்டுக் கிறுகிறுத்துப் போனார்கள்.
உணர்வுப்பிழம்பாக உரையாற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நாவலரின் நாவன்மையைப் பற்றிப் பாராட்டிக் கூறியதையும் நினைவு கூர்கிறேன் .
‘நாவலர்’ என்றால் நாவன்மை படைத்தவர் என்று பொருள். சொல்வல்லார் அனைவரையும் குறிக்கும் பொதுச்சொல் அது.ஆனால் தமிழ்கூறும் நல்லுலகில் ‘நாவலர்’ என்றால் அது நடமாடும் பல்கலைக்கழகமென நம் அண்ணா போற்றியது நமது நாவலரை மட்டுமே குறித்து நிற்கும். அந்தச் சொல்லுக்குச் சொந்தக்காரர் அவர் ஒருவரே. அச் சொல்லுக்குப் பெருமை சேர்த்தவரும் அவரே.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
என்று அவர் முழங்கும்போது நாடே முழங்குவது போல அது எதிரொலிக்கும்.
நடை மிடுக்கும், நகைச்சுவை – எடுப்பும், மோனை எதுகைகளில் மூழ்கித் தோய்ந்து மொத்தமாய்க் கலந்து மெத்தச் சுவைக்கும் அவரது பேச்சும் நாட்டோரைக் கவர்ந்தது. அவருக்கு நீடுபுகழ் சேர்த்தது.
கவியரசர் புலவர் இளஞ்செழியன் நாவலருக்கு மணிவிழா மலரை ஈடில்லாத முத்துமலராக வடிவமைத்ததால் “மலர் மாமணி” என்றே அவரைத் தமிழகம் அழைத்தது.
ஒப்பரிய கவிதைகளாலும் – உயரிய கட்டுரைகளாலும் – கண்ணைக்கவரும் ஒளிப்படங்களாலும் மலரை எழில் மலராக – எண்ணக் குவியலாக – மணியாரமாகவே தொடுத்த திறமையைக் கண்டு அரசியல் தலைவர்கள் பலர் மலர் வெளியிட விரும்பிய பொழுது புலவர் இளஞ்செழியன் அமைத்த மலர் போல என்று தான் எடுத்துக்காட்டி அறிவுறுத்துவார்கள்.
பக்கத்துக்குப் பக்கம் கவியரசரின் கைவண்ணம் நாவலரை மதித்துப் போற்றியபடியே இழைத்து வழங்கிய பளிங்குப்பேழையாக அமைந்தது.
சீர்திருத்த மனமும் – சிக்கனப் போக்கும் கொண்ட நாவலர் நிதியமைச்சராகத் திகழ்ந்தபோது நானும் தலைமைச் செயலகத்தில் செயலராகப் பணியாற்றியிருக்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞரும் , புரட்சித்தலைவரும் ஒரே முகமாக ஒரு கருத்தை வேறுவேறு காலங்களில் கூறினார்கள் .
நமக்கு எதிர்க்கட்சியே வேண்டாம் , நாவலர் ஒருவரே போதும் , நம்மை எதிர்ப்பதற்கு என்று பாராட்டுகின்ற வகையில் எதற்கும் நேர்மையாக மறுத்து நின்ற அவரது போக்கை நினைத்துக் குறிப்பிட்டார்கள்.
நிதியமைச்சருக்கு ஏதேனும் கோப்பு சென்றால் அதுவும் நிதி கேட்டுச் சென்றால் நாங்கள் கதிகலங்கி விடுவோம் .
அத்தனை கேள்விக்கணைகள் .அவர் எழுத்தும் கூட நிமிர்ந்து நிற்கும் ,.குறைந்தது பத்து வரிகளாவது தம் கைப்பட குறிப்புரை எழுதியிருப்பார்.
ஒரு மாநிலத்திலிருந்து தமிழ் மன்றத்துக்கு நிதி நல்கை கேட்டிருந்தார்கள்.
என்னளவில் பரிந்துரைத்து அனுப்பினேன் .
வளர வேண்டிய இந்த இடத்திலேயே வளரவில்லை .இதிலென்ன அடுத்த மாநிலத்துக்கு நிதி நல்கை , ஏற்கவே முடியாது , வந்து பேசுக! என்று எழுதியிருந்தார்.
சென்று பேசினேன். நிதியமைச்சர் ஏற்க முடியாது என்று கூறிவிட்டார்.
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை….
– ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Add a Comment