கரூர் தந்த கலைப்புதையல் !
பேராசிரியர் கருவை பழனிசாமி அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி கரூர் கலைக்கல்லுரியில் பணி நிறைவோடும் – மன நிறைவோடும் ஓய்வு பெற்றார்.
அவர் அருமைத் திருமகன் சுதந்திரராஜ் மரகதவேல் சென்னையில் வழக்கறிஞராகச் சிறப்போடு வாழ்கிறார் .
நண்பர் கருவையார் ஓய்வுக்குப் பிறகு சென்னையில் சூளைமேட்டில் மகன் இல்லத்தில் தங்கியிருந்தார்
வாரந்தவறாமல் வந்து பகுத்தறிவுக்குக் கனலாக எரிந்து சைவப்பழமாகக் கனிந்தார் .
பெருந்தகை ஆ இராசா மாணவராக அவரிடத்தில் பயின்றார்
என்னிடத்தில் அமைச்சர் அவரைப் பாராட்டிப் புகழ்வார் .
மாணவ – ஆசிரியர் உறவு மாட்சியுடைய பரிவாக இருவரிடமும் ஒருமுகமாக ஒளிர்ந்தது .
திருக்குறளில் திளைத்த மகிழ்ச்சிப் பெருமிதத்தோடு வாழ்ந்தார்.
திருமறைகளிலும் தோய்ந்தார் .
காலையில் எழுதுவதும் – மாலையில் இலக்கிய அரங்குகளுக்குச் சென்று கேட்பதிலுமாக இனிதாகப் பொழுது கழித்த ” புலவர் திலகம் ” மறைந்தார் என்ற செய்தியை மனம் தாங்க முடியவில்லை .
பேராசிரியரின் கட்டுரைகளை – சிறுசிறு நூல்களாக வெளியிட்ட பனுவல்களை இணைத்து ஒரு தொகுப்பு நூலை வழக்கறிஞர் வெளியிட முயல்வார் எனத் துணிகிறேன் .
வெண்ணீரு பூசிய நெற்றியோடு – குமிழ் சிரிப்பு இணைய அவருடைய வடிவம் காண்பாரைக் குளிர்ச்சி செய்தது . தியாகராய நகர் அலுவலகத்துக்கு அவர் வந்து என்னோடு பழகிய காட்சி என் நெஞ்சில் பதிந்து நிற்கிறது .
உள்ளம் போற்றிய நண்பர்கள் உதிர்ந்து வருவதைக் கண்டும் – கேட்டும் கலங்குகிறேன் .
ஆறாத் துயருடன்
ஒளவை நடராசன்

Add a Comment