மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 69
பதற்றமில்லாத பண்பாளர்
முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
நாவலர் எப்படித் தமக்கு வந்த கோப்பினை ஆராய்ந்து முடிவு கட்டினார் என்பதற்கு மேலும் சில சான்றுகள் நினைவில் நிற்கின்றன .
” பெயர் குறிப்பிடப்பெற்ற நால்வரும் இலண்டன் மாநகர் சென்று சிலை கடத்தல் வழக்கில் அரசின் சார்பில் பங்குபெற வேண்டியுள்ளது , செலவை ஏற்க இசைவுக்குப் பணிந்தனுப்புகிறோம் ” என்பது மற்றொரு கோப்பு .
நால்வர் சென்று திரும்பும் செலவுக்கு இங்கிலாந்து நீதிபதியை இங்கே வரவழைத்து வழக்கை முடித்துவிடலாம் , இரண்டு நிலையிலும் எந்தச் செலவு குறைவோ அதற்கு மட்டும் இசையலாம் என்று கோப்பு திரும்பி வந்தது .
கிள்ளித்தருபவர் நிதியமைச்சர் ஆனால் அள்ளித்தருபவர் முதலமைச்சர் , பிறகு அந்த நால்வரும் மூன்று முறை சென்று திரும்பினர் .
.ஒருமுறை என்ன அண்ணா ! எதற்கும் இல்லை என்று எழுதி விடுகிறீர்களே , எங்களுக்கு அச்சமாக இருக்கிறது என்று பணிவோடு சொன்னேன் , என்னை ஏற இறங்கப் பார்த்தார் , இது மக்கள் பணம் , ஒவ்வொரு காசையும் சுண்டிப் பார்த்துத் தான் செலவிடுவதைப் பற்றி முடிவு செய்வேன் என்றார் .
ஆமாம் , நீ தமிழ் படித்திருக்கிறாயே பழைய ஒளவைப் பாட்டி எனக்கு ஒரு பாட்டை நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறார் .என்று அந்த வெண்பாவை அவிநயத்தோடு சொல்லிக் காட்டினார் .
” வாதக்கோன் நாளை என்றான், வையக்கோன் பின்னை யென்றான்
ஏதக்கோன் யாதொன்றும் இல்லை என்றான் – ஓதக் கேள்
வாதக்கோன் நாளையினும் வையக்கோன் பின்னையினும்
ஏதக்கோன் இல்லை இனிது ”
இந்தப் பாடலை நிதிச் செயலாளராகத் திகழ்ந்த அறிஞர் குகன் இ ஆ ப – நிதித்துறையின் கருத்தரங்கக் கூடத்தில் எழுதி வைத்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன் .
முத்தமிழறிஞர் கலைஞர் நான் கோரிக்கை ஆற்றைக் கடப்பதற்குக் குகன் தான் படகோட்ட வேண்டும் என்று ஒருமுறை நயமாகக் குறிப்பிட்டார் .
ஒருமுறை புரட்சித்தலைவர் ஒரு காகிகத்துண்டைக் காண்பித்து விட்டுப் படியுங்கள் என்றார் .தமிழ்த்தாய் வாழ்த்தினை இசைக்க மறுத்த இசையரசிக்கு இந்த நல்கை வழங்க இசையலாமா என்று தங்கள் இசைவைக் கேட்கிறேன் , புரட்சித்தலைவர் கைக்குட்டையை வாயில் வைத்துக்கொண்டு ஒரு இசைக்கு நாலு இசை எழுதி வேண்டாம் என்று நாவலர் சொல்லப்போகிறார் ,நல்ல நிதியமைச்சர் என்றார் .பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை .
உரைவேந்தர் தம் மாணவர் என்ற பெருமிதத்தோடு பொன்விழாவில் வரைந்த கட்டுரையில் வரைந்த பகுதிகளைக் காணலாம் .ஆசிரியர் – மாணவர் உறவுக்கு இது சான்றாகும் .
நெடுஞ்செழியனார்க்குப் பொன்விழா என்ற செய்தியை அறிந்ததும் என் முதுமையுள்ளம் பெருவியப்பில் ஆழ்ந்தது. அவரை நினைக்கும் போதெல்லாம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வகுப்பில் ” கடாஉருவும் கண்ணஞ்சா ” நெஞ்சமும், தெள்ளிய செந்தமிழ் வழங்கும் செந்நாவும், சிவந்து தோன்றும் செம்மல் மேனியும் பீடுநடையும் கொண்டவுருவமே என் மனக்கண்ணில் தோன்றுவது வழக்கம்.
இன்ப இளஞாயிறுகளான புலவர் கோவிந்தனார், நாவலர் நெடுஞ்செழியனார், மதியழகனார், மாதவனார் ஆகிய இவர்களை இதனை எழுதுங்கால் என் மனக்கண் முன் கொணர்ந்து நிறுத்துகிறது.
இவர்களுடைய கூர்த்த நோக்கமும் சீர்த்த முகமும் அன்று பார்த்த இளமை வளமே
கொண்டு என் முன் தோன்றி இன்பம் செய்கின்றன.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியவர்கள் அன்று கோவை மாநாட்டில் ” மணிப்பயல் ” என்று மன மகிழ்ந்து பாராட்டிய என் சிறு செந்நா ” இப்போதும் அதனையே கூறி மகிழச் செய்கிறது. அன்று என் உடன் இருந்து என் கருத்திற் பங்கு கொண்டு உவகை மீதூர்ந்து ” நீங்கள் பல மாணவரை அறியும் ஆசிரியர் ” என்றார்க்கு, “ இந்த மணிப்பயலால் நம் தமிழகம் சிறந்து ஒளிபெறும்; இவனைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்க்க வேண்டும் ” என்று தமிழ்த்தாய் எனக்குள் உணர்த்த யான் அறிஞர் அண்ணாவின் துடையை நன்கு தட்டி வற்புறுத்தினேன்.
மணிப்பயலின் தமிழ் நாட்டரசு மாட்சியை நெஞ்சு கலங்கிக் கண்ணீர்க் கண்களை, மறைக்கினும் துடைத்துக் கொண்டு சொல்லுகிறேன் அறிஞர் அண்ணா இன்று இருந்து காண்டல் வேண்டும்; அவரது கருத்துரையைக் கேட்கும் தவப்பேறு யான் இல்லாதவனாயினேன்.
மிடுக்கான தோற்றமும் கள்ளமில்லாத உள்ளப் பொலிவும், தெளிந்த நாநலமும் உடையவராய் பொன்போன்ற மேனியராய், “ அறக்கட்டளையின் மாண்புகளை முன் மொழிந்து பின்னை அதன் சார்பில் அழைத்தது அவர் ஒரு சிறந்த நாவலராவர் என்பதை வற்புறுத்திற்று. பல்கலைக் கழகத்தின் நீங்கிய சில்லாண்டுகளில் அவர் இயற்பெயர் முன்னர் நாவலர் என்ற சிறப்புப் பெயர் சேர்ந்து கொண்டது ; இன்று “ நாவலர் ” என மொழியின் தமிழ்நாடு முழுவதும் அச்சொல் இரா. நெடுஞ்செழியனைக் குறிப்பது தொடக்கப் பள்ளிச் சிறுவர்
சிறுமியரிடத்தும் நன்கு தெரிந்திருக்கிறது.
பின்பு, அவர் புது மணவாளராய்த் தமது துனைவி திருமதி விசாலாட்சியம்மை யாருடன் ” சோழவந்தான் புகை வண்டி நிலையத்தில் நான் இருந்த பெட்டியில் வந்து அமர்ந்தார். அவரவர் நலங்களை அளவளாவி மகிழ்ந்திருக்கையில் எதிரில் இருந்தவர் பேச்சுக் கொடுத்தார். அவர் வேலூர் மாவட்டக் கூட்டுறவுத் தலைமை யலுவலகத்தவர் என்று அறிமுகம் செய்து கொண்டு சமயச் சார்பாகச் சில கருத்துக்களை வினவத்தலைப்பட்டார். நெடுஞ்செழியனார் அவர்க்கு விடை கூறித் தாம் வேறு வினவத் தொடங்கியதும் அக்கூட்டுறவுத் தலைமையலுவலர்க்கு விடையிறுக்கும் திறம் குறையலுற்றது.
அதனால் அவர் “ அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நாத்திகம் தானே வளர்க்கிறது; வேறு என்ன செய்கிறது ? ” என வெகுண்டார். அப்போது நன்கு சிரித்த நெடுஞ்செழியனார், மிக்க பரிவுடன் உங்கட்கு நாத்திகம் ஆத்திகம் என்ற இரண்டும் நன்கு விளங்க வேண்டும்; என்று சொன்னதும் அவர் அயர்ந்துவிட்டார்.என் ஆசிரியர் ஒளவை எனக்குக் கற்றுத்தந்தது சைவ சித்தாந்தம் .முடிவில் அவர் நாவலர் சொல்வதை அமைவுறக் கேட்பவராகி, ” இன்றைய சமயம் மக்களின் அறியாமை மேல் நிற்கிறது ; அறிவாராய்ச்சி தோன்றிப் பரவும் போது நமக்கு சீர்திருத்தத் தெளிவு பிறக்கும் ” என்றது அவரது நா நலத்தை நான் கண்டு மனம் மகிழ்ந்து வியக்கச் செய்தது.
அறிஞர் அண்ணாவின் அருமந்த அமைச்சரவையில் நாவலர் நல்ல கல்வியமைச்சரானார். மதுரைத் தியாகராசர் கல்லூரியில அவர் உரை நிகழ்த்திய போது அரசியல் எந்திரத்தை ஒரு குதிரை வண்டியாகவும் அமைச்சரவையை அதனை ஓட்டுவோனாகவும் உருவகம் செய்தது இன்றைய அரசியலமைப்பை மக்கள் நன்கு உணர்ந்து மகிழச் செய்த துடன் அவருடைய நா நலம் கிளர்ந்து நின்று இன்பம் செய்தது.
புரட்சித்தலைவர் நாவலரைப் போற்றிய நலத்திற்காக இக்கட்டுரை நீண்டது – புரட்சித்தலைவர் வரைந்த கட்டுரையை நாம் இனிக் காணலாம் …
பேரறிஞர் அண்ணா அவர்களாலேயே ‘ நடமாடும் பல்கலைக்கழகம் ‘ என்று அழைக்கப் பெற்றவர் நமது மதிப்பிற்குரிய நாவலர் அவர்கள் !
பகுத்தறிவுப் பகலவன் – சீர்திருத்தச் செம்மல் நமது அய்யா அவர்களின் நூற்றாண்டு விழா ஆண்டிது. இந்த ஆண்டில் வருகின்ற நாவலர் அவர்களின் பிறந்தநாள் விழாவானது – அதனையொட்டி அமைகின்ற மணிவிழாவானது வேறு எந்த ஆண்டின் விழாவிலும் நனிசிறந்து அமைவதாகும்.
அறியாமை இருள் அகன்றிட, அறிவு ஒளி பரவிட, வளம் பெருகி வறுமை நீங்கிட, துன்பம் போக, இந்நாட்டு மண்ணில் இன்பம் மிக, வாட்டம் நீங்கி வாழ்வு மலர, அய்யா அவர்கள் சுயமரியாதைச் சுடர் கொளுத்திக் குரல் கொடுத்த நேரத்தில், அப்பெரியாரின் பாசறையிலே இளந்தாடி வேந்தராக — பாசமிகு நல்தொண்டராக விளங்கியவர் தாம் நமது நாவலர் அவர்கள் !
பேரறிஞர் அண்ணா அவர்கள் நாவலர்தம் அறிவுக்கு – ஆற்றலுக்கு — உழைப்புக்கு நேர்மைக்கு – – நாணயத்திற்கு ஒழுக்கத்திற்கு – உயர்விற்குஅன்புக்கு அடக்கத்திற்கு என்றுமே பெரும் மதிப்பளித்து வந்தார்கள்.
அந்தக் காரணத்தினால்தான் 1956 மேத் திங்களில் நடைபெற்ற திருச்சி மாநில மாநாட்டிலே தாம் வகித்துவந்த பொதுச்செயலாளர் பொறுப்பினை நாவலர் அவர்களுக்கு அளித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் அகமகிழ்ந்து ,
“ தம்பி வா, தலைமை ஏற்று நடத்த வா ! உன் ஆணைக்கு நாங்கள் எல்லோரும் அடங்கி நடப்போம் ! ” என்று குறிப்பிட்டார்கள்.
அப்படி மனப்பூர்வமாகத் தாம் சொன்னதைப் பிற்காலத்தில் எவரேனும் திருத்திச் சொன்னாலும் சொல்லக்கூடும் என்ற காரணத்தாலோ என்னவோ மறுநாள் நிகழ்ச்சியின்போது அண்ணா அவர்கள் அதுபற்றிய விளக்கமும்
தந்தார்கள் :
” நேற்று நான் நமது பொதுச்செயலாளரை தம்பி வா ! தலைமை தாங்க வா ! உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன் வா ! ” என்று கூறியது வெறும் அலங்காரத்திற்காக அல்ல. அந்த நிலை, நம்முடைய கழகத்தில் கொண்டு வருகிறது. அது மேலும் வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய உண்மையான நம்பிக்கை. அப்படி வளர்ந்தால்தான் நம்முடைய நல்ல சனநாயகப் பண்போடு திகழ முடியும் ! ” என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.
அந்தப் பெரிய இதயத்தாலே இப்படிப் போற்றிப் புகழப்பட்ட நான் அவர்களை இன்றைய தினம் நாம் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பெற்றிருக்கிறோம். இந்தக் காரணத்தாலோ… நாம் நம்மோடு எல்லாச் சீரும் சிறப்பும் பெற்றிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.
1939 – ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக இடைநிலை வகுப்பு மாணவராகப் பயின்ற பட்டுக்கோட்டை இரா. நாராயணசாமி அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைப் பிரச்சாரத்தாலே கவர்ந்திழுக்கப்பட்டு, அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி அவர்களின் வாதத்திறத்தை அடியொற்றி நடந்து, ‘ நெடுஞ்செழியனாகி ‘, மண்டும் மதங்கள் அண்டா நெருப்பாய் படரும் சாதிப் படைக்கு மருந்தாய்- செந்தமிழ்த் தேனீயாய்பைந்தமிழ்த் தேர்ப்பாகனாய் வளர்ந்து இன்று நம் இதயம் கவர்ந்தவராய்நல்ல தமிழ் நாவலராய்க் காட்சியளிக்கிறார்கள்.
” கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் ”
என்று திருவள்ளுவப் பெருந்தகை அவர்கள் சொன்னதற்கேற்ப, நாவலர் அவர்கள் சொல்லாற்றல் மிக்கவர். வாதத் திறமையில் அவரை வெல்ல அவராலேயே முடியும் என்கிற அளவிலே ஒப்பாரும் மிக்காரும் அற்றுத்திகழும் உயர்வாளர்.
தனக்கெனத் தனிப்பாணி வகுத்துக் கொண்டு பேச்சையும் எழுத்தையும் கையாளும் பெருந்தன்மையாளர் !
நாவலரின் எழுத்துக்களிலே இதமான தென்றலை மட்டுமல்ல ; எரிமலையின் வேகத்தையும் உணரலாம். அவர்தம் பேச்சிலே புயலை மட்டுமல்ல; பைந்தமிழ் இலக்கியத்தின் பாங்கையும் உணரலாம்.
தேனியில் அவர் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்ட பின்னாலேயும், ஏற்றுக் கொண்டிருந்த கொள்கைக்காக எதையும் தாங்கும் இதயத்தோடு தொண்டுப் பயணத்தை தொடர்ந்து நடத்திப் பெருமை கொண்ட நாவலர் அவர்கள் பதவிப்பற்று சிறிதும் அற்றவர். ஒன்பதாண்டுக் காலம் அமைச்சராக இருந்தவரென்றாலும், இப்போது நமது நிதியமைச்சராக இருப்பவரென்றாலும், பதவியில்லாத காலத்திலும் அமைதியாக அடக்கமாக பழைய நினைவுகளை அசை போடாமல் மக்கள் மன்றத்தில் மங்காப் புகழோடு திகழ்கிறார் .
புரட்சித்தலைவரின் எண்ணத்துக்கு வடிவம் கொடுத்த வகையில் இந்தக் கட்டுரை எண்ணிப் பார்த்து என் எதிரில் திருத்தி வழங்கினார் என்று மலர்மாமணி புலவர் இளஞ்செழியன் நாவலர் நினைவு நாளில் குறிப்பிட்டார் .
தொடர்வோம் …
பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை
– ஒளவை நடராசன்

Add a Comment