சிந்தனை செய் மனமே !
நல்லிதயச் செம்மல் ஞானதேசிகன் அவர்களை
நான் அரசு மொழிபெயர்ப்புத் துறையில் சேர்ந்த
1975 ஆம் ஆண்டு முதல் பலமுறை கண்டு பேசி
மகிழ்ந்திருக்கிறேன் .
வழக்கறிஞராகவும் – அரசியல் தலைவராகவும்
அறநெறி பிறழாத பெருந்தகையாகத் தேசிகன்
திகழ்ந்தார் .
த மா கா வின் துணைத் தலைவராக
இருந்தபொழுது காங்கிரசு இயக்கத்தின்
தேர்தல் அறிக்கையை நீங்கள் மொழிபெயர்த்துத்
தரமுடியுமா ! என்று நெருக்கமாகக் கேட்டார் .
மகிழ்ச்சியோடு என் நண்பர் இராஜகோபாலனை
அனுப்புகிறேன் ,அவரை நான் இராஜாஜி என்று தான்
அழைப்பேன் என்றேன் .
சிரித்துக்கொண்டு இராஜாஜியையும் – உங்களையும்
ஒன்றாக இந்தப் பணியில் பங்குபெறச் செய்திருக்கிறேன்
என்று மகிழ்ந்து போற்றினார் .
நீங்கள் மேற்பார்வையிட்டுத் திருத்தினால்
கலைஞர் பார்த்தது போல என்றார் .
அரசியலில் கருத்து வேற்றுமை இருந்தாலும் –
அனைவரையும் ஒரு சுடுசொல் சொல்லாமல்
அரவணைத்தார் .
அவருடைய பண்பு நலனைத் திருமதி சோனியா காந்தி அம்மையார்
பாராட்டிய நிலையில் நாடாளுமன்ற மேலவையில் இருமுறை
வாய்ப்புப் பெற்றார் .
தீநுண்மி அவரை வதைக்கின்றது என்ற செய்தி
அறிந்தவுடனே மனம் துணுக்குற்றது .
மெல்ல மெல்ல நலமடைந்து வருகிறார் என்ற செய்தி
ஆறுதலைத் தந்தாலும் – அச்சம் மட்டும்
என் மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்தது …
பரிவும் – பண்பும் மிளிர வாழ்ந்தவரைப்
பறிகொடுத்துவிட்டோம்.
பண்பாட்டுக் கற்றையில் ஓங்கி நின்ற
ஒரு தளிர் உதிர்ந்துவிட்டது .
வாடிய மனத்தோடு
ஒளவை நடராசன்
18.1.2021

Add a Comment