கருணீகர் நல்வாழ்வு
தமிழ்நாடு கருணீகர் சங்கம் மாத வெளியீடு
மார்கழி – தை
சனவரி – 2021
மாத இதழ்
கலித்தொகை அறிமுகம்
முனைவர் ந.அருள்,
இயக்குநர்,
மொழிபெயர்ப்புத் துறை
‘ கற்றறிந்தார் ஏத்தும் கலியென்பது ‘ கலித்தொகை. கருத்து வளமிக்க நூல், காதலைப் பற்றிக் கூறும் நூல்; தமிழர் பண்பாட்டைப் பற்றிப் பேசும் நூல்; அன்பு, பண்பு முறை, நிறை, பொறை, போற்றுதல், ஆற்றுதல் போன்றவற்றுக்கு விளக்கங்களைத் தருகின்ற நூல்; வலிமைக்கு எளிமையான நூல்; எளிய சொற்களைக் கண்டு, அரிய நீதிகளைக் கூறும் நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், முதுமொழிக்காஞ்சி தவிர, வெண்பாவில் அமைந்தவை. எட்டுத்தொகை நூல்கள், ஆசிரியப்பா அல்லது அகவற்பாவில் அமைந்தவை .
கலித்தொகையில் மொத்தமுள்ள 150 பாக்களில், முதலாவதாகத் தோழி கூற்றாக அமைந்துள்ள 133 ஆம் பாடல், சோழன் நல்லுருத்திரன் பாடியது. 19 அடிகளை உடைய பாடலில், 6 முதல் 14 அடி முடியவுள்ள 9 அடிகளை மட்டும் இங்குக் காணலாம். அவை, திருக்குறள் சார்ந்த நெறிகளையே எடுத்தியம்பும் திறத்தைக் காண்போம்.
ஆற்றுத லென்பதொன்ற லந்தவர்க் குதவுதல்
போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்
அறிவென படுவது பேதையார்சொல் நோன்றல்
செறிவெனப் படுவது கூறியது மறாஅமை
நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை
முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல்;
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல் !
ஏதுமற்ற ஏழை எளியவர்க்கு – வறியவர்க்கு வேண்டுவன ஈதல்வேண்டும்; முதலாவதாகப் பசிப்பிணி அகற்றும் மருத்துவராக இருத்தல் வேண்டும். அடுத்த அடிப்படைத் தேவைகளான உடை வழங்குதல், உறையுள் வழங்குதல் வேண்டும். மொத்தத்தில் உற்றுழியும் உதவுதல் உயர்ந்தநெறி புணர்ந்தாரை எனில், நட்டச் செய்தாரை என்பது பொருள். இதுவே ‘ஆற்றுதல் ‘ ஆகும் .
அவரை ஒருபோதும் பிரிதல் கூடாது. அந்த நட்டம் நுனிக்கரும்பிலிருந்து அடிக்கரும்பைச் சுவைப்பதுபோல் – அதாவது வளர்வதாக இருத்தல் வேண்டும். அதைத்தான் ‘ போற்றுதல் ‘ என்கிறார்.
பண்பெனப்படுவதும் குணமெனப்படுவதும் ஒன்றுதான். முன்னோர் சென்ற நன்னெறியில் நாமும் நடைபயில்வதே ‘ பண்பு ‘ எனப்படும். ‘ அன்பு ‘ எனப்படுவது தெரிந்தவர்மாட்டுக் கொள்ளும் பற்றுள்ளமாகும். எனவே உற்றாரும் உறவினருமாகிய அனைவரிடத்திலும் அன்பு கொள்ள வேண்டும்.
‘ அருளென்னும் அன்பீன் குழவி ‘ என்பார் திருவள்ளுவர். மேதையர் எனப்படுவோர். பேதையர் பிதற்றும் தகாச்சொற்களைப் பொறுத்துக் கொள்ளலாகும்.
அறிவானது அற்றம் காக்கும் கருவியில்லையா ? ‘ பொறுத்தார் பூமியாள்வார் ‘ என்பதையும் நினைவிற்கொண்டு வாழ்வதே அறிவுடைமையாகும்.
செறிவென்பது ‘ திண்மை ‘ எனப்படும் ஒருவர், முன்னர்க் கூறியதை மறக்காமலும், மறைக்காமலும் இருப்பதே ‘ செறிவு ‘ எனப்படும். மறைபொருள் என்பது ஒன்றைப் பிறர் அறியாமல் பாதுகாத்துக்கொள்வது.
இல்லையெனில், வெளிப்பட்டு வேதனைப்படுத்தும், இத்தகைய நிலைப்பாடே ‘ நிறை ’ எனப்படும். கண்ணோட்டம் என்பது, இரக்கம் எனப்படும். அத்தகு இரக்கம் கொள்ளாமல், உயிரைக் கொல்லுதல் கூடாது. “ வௌவல் ‘ என்பதற்குக் கவர்தல் என்பது பொருள்.
எனவே, இரக்கமின்றி அரக்கத்தனமாக எந்த உயிரையும் வௌவுதல் கூடாது. மன்னவன், மக்களை ‘முறை செய்து காக்க வேண்டும். ‘ முறை செய்து காட்டாற்றும் மன்னவன் மக்கட் கிறைபென்று ‘ வைக்கப்படும் இல்லையா ? மனுநீதிச்சோழன், தன் மகனென்றும் பாராமல் வீதிவிடங்களைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றதை ‘ முறைசெய்தல் ‘ எனலாம். ‘ முறை ‘ யெனில், ‘ நீதி ‘ யென்க ! ‘ பொறை ‘ என்பதன் பொருள், பொறுமை என்பதாகும்.
தன்னைப் பிறர் போற்றாமல் தூற்றியபோதும் பொறுத்துக்கொள்ளுதல், ‘ பொறை ‘ எனப்படுவதாகும்.
அடுத்ததாகக் ‘ கண்டோர்கூற்று ‘ என்னும் தலைப்பிலான 9 ஆம் பாடல். 24 அடிகளைக் கொண்ட அதிலிருந்து 12 ஆம் அடி முதல் 20 ஆம் அடி முடியவுள்ள 9 அடிகளைக் கொண்ட பகுதியைக் காண்போம்.
‘ பலவுறு நறுஞ்சாந்தம் படுபவர்க் கல்லதை,
மலையுளே பிறப்பினும், மலக்கவைதா மென்செயும் ?
நினையுங்கா லும்மகள் நுமக்குமாங் கனையளே !
சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை,
நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செயும் ?
தேருங்கால், நும்மகள் நுமக்குமாங் கனையளே !
ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை,
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செயும் ?
சூழுங்கால், நம்மகள் நமக்குமாங் கனையளே ! ‘
பழங்காலத்தில், ஈருடல் ஓருயிராய்க் காதலர் வாழ்ந்தனர். திருமணத்திற்குத் தடையென்றால், தலைவன் தலைவியை உடனழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வான்.
அங்ஙனம் ஒருவன் ஒருத்தியை அழைத்துச் சென்றுவிட்டான். அவரைத் தேடிச் செவிலித்தாய் செல்கிறாள். துறவியர் சிலர். எதிர்ப்படுகின்றனர். அவரிடம் அவள், ‘ ஓர் இளம் இணையர், இவ்வழியே சென்றாரா ? ‘ என வினவுகிறாள்.
அவரும், ‘ அவ்விணையர் சென்றதை யாமும் கண்டோம்; அவர் செய்த செயல்தான் யாதோ ? இல்லறம் மேற்கொள்ளத்தானே செல்கின்றனர் ? அது நல்லது தானே ? என்றனர். இதுதான் ‘ கண்டோர் கூற்று ‘. ‘ சந்தனம் மலையில் பிறந்தாலும், மலைக்குப் பயனில்லை; பூசுபவர்க்கே அது பயனாகும். முத்து, கடலில் பிறந்தாலும், கடலுக்குப் பயனில்லை ; அணிபவர்க்கே அது பயனாகும். இசையோ யாழில் பிறந்தாலும், யாழுக்குப் பயனில்லை; செவிமடுப்பவர்க்கே அது பயனாகும்.
அவற்றைப் போலவே, உம்மகள் பிறந்த இடத்திற்கப் பயன்படுவதைக் காட்டிலும், புகுந்த இடத்திற்குத்தானே பயன்பட முடியும் ? சிறந்த முடிவைத்தானே தேர்ந்தெடுத்துள்ளான். எனவே, துயர் களைக ! என்று கண்டோர் அறிவுறுத்தினர். *

Add a Comment