விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஒளிவிளக்கே வாழி !
பல்கலைத்திலகம் அண்ணாச்சி செவாலியர் வி ஜி சந்தோசம் அவர்கள்
என் வாழ்வோடு இழைந்து பெரும் பங்காற்றும் பெருமகனாவார் .
எந்நாளும் தமிழர் நலம் பற்றி எண்ணுவதும் –
எளியோர்க்கு எப்போதும் துணைக்கரம் எங்கும் சென்று நீட்டும் மனமும்
அவருடைய பெருமிதத்தைப் பறை சாற்றுகின்றன .
அவர் நெஞ்சத்தில் கட்டிய திருவள்ளுவர் திருக்கோயிலின் அருளால்
உலகெங்கும் சென்று திருவள்ளுவர் சிலைகளை நிறுவும்
பெரும் பணியைத் தன் தோள் மேல் சுமந்து வருகிறார் .
” சிலை வழங்கும் செம்மல் ”
புகழோங்கிய செங்குட்டுவனாக மாறினார் .
அவர் முகத்தில் கனநேரமும்
நான் கடுகடுப்பைக் கண்டதில்லை .
முத்தமிழ்க்காவலர் தொட்டுத் தொடங்கிய
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும்
கலைவிழாக்களைக் – கருத்தரங்குகளை – நூல் வெளியீடுகளை
வழங்கித் தனிப்புகழ் நாட்டியுள்ளது .
அறிஞர்களை உடனழைத்துக்கொண்டு அவர் நடத்திய
உலகச் சுற்றுலாக்களுக்கு அளவில்லை .
அரசராகத் தானிருந்தும் அறிஞர்களை தந்தை வடிவில்
அரவணைக்கும் திறமும் – கடல் கடந்த நாடுகளில்
தமக்குக் கிடைக்கும் பாராட்டுக்களை எல்லாம்
தமிழறிஞர்களின் தாள்களுக்குக் காணிக்கையாக்குகிறேன் என்று
அமெரிக்க நாட்டில் வாசிங்டன் – நியூயார்க்கு மாநகரிலும்,
ஆஸ்திரிலேயாவில் மெல்பெர்ன் – சிட்னி மாநகரங்களில்
உருக்கமாகப் பேசினார் .
என் இதய மருத்துவத்துக்காக என் இல்லத்துக்கு வந்து
தனி வழிபாடு நடத்தியதை என் துணைவியார் கண்டு
நெஞ்சம் விம்மிக் கண்ணீர் மாலையைச் சொரிந்தார் .
பொன்மாலைக்கு வாய்த்த நன்மாணிக்கமாக
” இளையதிலகம் ” பீட்டர் அண்ணாச்சிக்கு வாய்த்திருப்பதும்
தலைவர் வளர்த்தெடுக்கும் பண்பாட்டுப் பரிவும்
வரலாற்றுப் பெருமையுடையன .
நாள் தவறாமல் நண்பர்களுக்குத் தொலைபேசியில் நலமா
என்று கேட்டு வாழ்த்தும் வான்மனம்
அவருக்கு வாய்த்த வரமாகும் .
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் அவருடைய
இதயக் கனியாகும் .
தமிழக அரசு தகுதியறிந்து விஜிபி உலகத்தமிழ்ச்சங்கத்துக்கு தமிழ்த்தாய்
விருது அளித்துப் பெருமை பெற்றதை
உலகத் தமிழர்கள் உவந்து போற்றுகின்றனர் .
அன்பே பிழம்பாய் அமைந்த அண்ணாச்சி
பல்லாண்டுகள் பல்வளப் புகழ் பெற்று
ஓங்கி உயர்க என்று
என் சிறு செந்நா வாழ்த்துகிறது ! .
ஒளவை நடராசன்

Add a Comment