POST: 2021-02-20T11:39:21+05:30

நயவுரைத்திலகம் நாகை முகுந்தன் நல்லிசை ஓங்குக !

கலைஞானி கமலஹாசன் – இசைப்பேரொளி டி என் சேஷகோபாலன் – நயவுரைத்திலகம் நாகை முகுந்தன் இம்மூவர் முகமும் இராமர் திருமுகத்தை வரைவதற்குப் பொருத்தமாக அமைகிறது என்று ஒருமுறை ஓவியர் சேகர் ஒரு கூட்டத்தில் பேசி மூவர் முகங்களையும் வரைந்து காட்டினார் .

மூன்று பேரும் உடல் உயரத்தில் வேறுபாடு உடையவர்கள் .நாகை முகுந்தன் சற்றே குள்ளமான வடிவம் .

இராம காதை – மாபாரதம் – பாகவதம் – ஆழ்வார்கள் அருளிச்செயல் போலவே இலக்கிய மணங்கமழும் காவியத்திறங்களை விரித்தும் காட்டும் பொழிவுக்கலையில் நாகை முகுந்தன் அனைவரையும் கவரும் ஆற்றல் கொண்டவர் .

திருக்கோயில் திருப்பணிக்கே தம்மை ஆட்கொண்ட நாகை துரைசாமி பாகவதரின் தவம் – நாகை முகுந்தனாக மிளிர்ந்தது

.உயர்வற உயர்ந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ” நான் ஐயம்பெருமாள் கோனாரிடம் படித்தவன் , இப்போதோ நாகை முகுந்தனின் தோழமை பெற்றவன் , அவருடைய பேச்சு என்னை எப்போதும் ஈர்த்தது ” என்றார் .இந்தப் பாராட்டுத்தான் எனக்கு வாய்த்த இமாலயப் புகழேடு எனப் பலமுறை என்னிடம் குறிப்பிட்டுள்ளார் .

நடிப்பியல் உரைப்பெரு நாயகனாக புலவர் கீரன் வலம் வந்து திடுமென மறைந்த பிறகு சோர்ந்திருந்த தமிழ் மக்களுக்கு நானில்லையா என்றெழுந்து நாகை முகுந்தன் ஆற்றிய நல்லுரைகள் செவிக்குத் தேன் விருந்தாய் அமைந்தன

சமய நுணுக்கங்களையும் – சாத்திரக் குறிப்புக்களையும் – சமுதாயச் சிந்தனைகளையும் மணிக்குவியலாகக் கொட்டி முழங்கும் நாகை முகுந்தன் பாரத நாடு மட்டுமன்றிப் பன்னாடுகள் சென்று பெரும் புகழோடு திரும்பியவர் .

தமிழக அரசு இவ்வாண்டு ” சொல்லின் செல்வர் ” விருது வழங்கி நாகையாரைப் போற்றிப் பாராட்டியுள்ளது .

என் மகன் அருளுக்கு நாகை முகுந்தன் இனிய நண்பர் .

அருள் எப்போதாவது அக்காரவடிசிலோடு அத்தர் மணக்க வீட்டுக்கு வந்தால் நாகையாரைப் பார்த்து விட்டு வருகிறான் என்று பொருள் .

பழகுதற்கு இனிமையும் – பரிவு பொங்கும் நெஞ்சத்தோடு அனைவரையும் அரவணைக்கும் பாங்கும் அணி செய்ய வாழும் நயவுரைத்திலகம் நாகை முகுந்தனுக்குப் பல்லாண்டு இசைப்போம் !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *