POST: 2021-03-11T10:19:52+05:30

அறிவியல் விளக்கு அணைந்ததே !

அருமைப் பேராசிரியர் அறிவியல் புலத் தலைவர் இளவல் இராம .சுந்தரம் மறைந்ததறிந்து மனம் கவல்கின்றேன் .

இராம .சுந்தரம் தியாகராசர் கல்லூரியில் மாணவராக இருந்த போதே நானும் மாணவராக இருந்த நிலையில் நன்றாக அறிவேன்.

எழிலான தோற்றமும் – இளமைத் துடிப்பும் மிளிர இராம .சுந்தரம் அனைவர் நெஞ்சத்தையும் கவர்ந்தார் .

தமிழ் முதுகலை பயில்வதற்கும் , ஆய்வு செய்வதற்கும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் வாயில் திறந்திருந்த நிலையில் ஆர்வத்தோடு சென்றவர்களில் இராம .சுந்தரம் குறிப்பிடத்தக்கவர் .

நினைத்திருந்தால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே பெரும் பேராசிரியராக அமைய வாய்ப்புக்கள் இருந்தன .

தமிழார்வலர்கள், திராவிட இயக்கப் பற்றாளராகவே தம்மை இணைத்துக்கொண்டு பெருமிதம் கொண்டிருந்தபோது முரண்பட்டு நின்ற புலமை வாணர் இராம.சுந்தரம் .

வார்சா பல்கலைக்கழகம் சென்று பணியாற்றியவர் .

இளமையிலிருந்தே அணிந்து கொண்ட பொதுவுடைமைக் கண்ணாடி வையாபுரியாரையும் , வானமாமலையையும் வாழ்த்துவதாக நில்லாமல் தனித்தமிழாளர்களை வைவதாகவும் நேர்ந்தது .

என்னைப் பார்க்கும் போதெல்லாம் உங்கள் போக்கு வேறு – என் நோக்கு வேறு என்று புன்னகைத்தபடியே சொல்வார் .

பேராசிரியர் இராம .சுந்தரம் அறிவியல் புலத்துக்கு பேராசிரியராக வந்த நிலையில் அறிவியல் தமிழுக்கு பேராக்கத்தை நல்கினார் .

அறிவியல் துறைகள் அனைத்தையும் ஒருங்கு சேர்த்து மாநில அளவில் பேராசிரியர்களும் ஒருங்கிணைத்து அறிவியல் நூல்களைப் படைப்பதில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தனிப்பெருமையுடன் நிகழ்ந்தார் .

என்னை நோக்க இளையவரான பேராசிரியரின் பிரிவு துயரம் தருகிறது .

என் மனங்கரைந்த இரங்கலை எடுத்துச் சொல்வதன்றி வேறு எவ்வாறு ஆறுதல் கொள்ள முடியும் .

திசை மாறிய அந்தப்பறவை விண்ணில் ஒளி வீசி
மின்னிய நாள்களை எண்ணி எண்ணி சோர்கின்றேன் .

துயரத்தோடு
ஒளவை நடராசன் .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *