POST: 2021-03-15T10:04:21+05:30

மன்னாதி மன்னன் – 77

முனைவர் ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

எங்கெங்கு காணினும் இருக்கை !

எங்கெங்கும் அயல்நாடுகளில் தமிழாய்வுத் தவிசிட வேண்டும் என்ற பொருண்மை ஆர்வத்தோடு பேசப்படுகிறது .தமிழுக்கு வரும் பெருமை தமிழினத்துக்கு வரும் தகைமையாகும் .

இந்த வகையில் ஆர்வேடில் ,ஊசுடனில் ,பெர்கிலியில் பெனிசிலிவேனியாவிலும் , கனடாவில் , தொரோண்தோ ( துரந்தை ) என்றும் தமிழார்வலர்கள் எழுதி வழி காட்டுகின்றனர் .

தொரோண்தோ பல்கலைக்கழகத்திலும் ,செருமனியில் கொலோன் பல்கலைக்கழகத்திலும் , இலண்டனிலும் நெடுங்காலத்துக்கு முன்னரே தர்பனிலும் பேசப்பட்டு ஆர்வேடும் தொரோண்தோவும் வெற்றி பெற்றுள்ளன .

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபொழுது, நிதி வழங்கல் தொடர்பான கூட்டங்கள் நடைபெறும்,

அலுவல் சார் உறுப்பினர்களாக நிதித்துறைச் செயலாளர் இடம்பெற்றிருப்பார்.

எனக்கு நினைவு தெரிந்து எந்தக் கூட்டத்திற்கும் நிதித்துறைச் செயலாளர் வருவதில்லை. வருவதற்கும் இயலாது ,நிதிச் செயலாளர் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இடம் பெற்றிருப்பார் . அவர்கள் சார்பாக, நிதித்துறையின் துணைச் செயலாளர்கள் பங்குகொள்ளும் பழக்கம் இருந்தது.

நான் அவர்களிடம் தஞ்சைக்கு வாருங்கள், சுற்றிப் பாருங்கள், கூட்டத்தில் உங்கள் பங்கு தேவையில்லை என்பேன்.

காரணம்

நாங்கள் நடத்திய கூட்டக்குறிப்பைக் கூட, அவர்கள் எடுத்துச் செல்ல விழைய மாட்டார்கள். பல்கலைக் கழக துணைவேந்தர் பதவி என்பது நுண்ணறிவு வாய்ந்த எதிரதாக் காக்கும் அறிவார்ந்த பணியாகும். எந்தக் குறிப்பு அனுப்பினாலும், ஏன், எதற்கு என்று கேட்கலாம். ஆனால், பல நிகழ்வுகளில், இந்த நிதியொதுக்கீடே தேவையில்லை என்று நிதித்துறையின் உதவிப் பிரிவு அலுவலரே தனக்கு தெரிந்த நிலையிலேயே இலம் என்றெழுதும் எவ்வத்தைக் காணும்பொழுது நெஞ்சு பதறும்.

அரசின் கொள்கைக் குறிப்பாகவோ மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பாகவோ இருப்பவையெல்லாம் கண்ணெடுத்துப் பார்க்க விழையாமல் வேண்டாம் என இவர்களே மறுப்பதுதான் வருத்தமளிக்கும்.

வேறொரு வாய்ப்பில் மத்திய அரசின் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தபோது , நிதி வழங்குவதைப் பற்றி குறிப்புக் கண்டேன்.

மைய அரசு குறிப்பிட்ட தொகையை வேறொரு நிறுவனத்துக்கு அறக்கொடையாக ஈகை செய்வதற்கு முன் அந்நிறுவனமும், மத்திய நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு குறிப்பிட்ட தொகையை வங்கியியல் நிலையாக்க கணக்கீடு வைத்திருப்பார்கள். அதனை ஆங்கிலத்தில் ESCROW Account என்கிறார்கள்.

அந்த நிறுவனம், செலவுசெய்த பின் அறிக்கையாக வழங்கினால் தான் மத்திய நிறுவனம் அத்தொகையை வழங்குமாம்.

செலவுக் கணக்கு அனுப்பவில்லை என்றால், தொகையை வழங்கலாகாது என்பது பொருள்.

எனக்குத் தெரிந்து தமிழகத்தில் இரண்டு மூன்று பல்கலைக்கழகங்களுக்கு கோடி ரூபாய்க்குத் தொகை வழங்கப்பட்டு இதுகாறும் பயன்படாமலேயே முடங்கியிருப்பதைக் காணும்பொழுது அவலமாக இருந்தது .

பேரறிஞர் அண்ணா இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது தமிழகத்திலுள்ள தலைசிறந்த நான்கு பல்கலைக்கழகங்களுக்கு திருக்குறள் ஆய்விருக்கை என்று அமைத்துக் காட்டினார். இன்றைக்குத் திருக்குறள் நிதியம் கடலில் கலந்தது .

அவ்வண்ணமே, என் இனிய நண்பர் முதுபெரும் தமிழறிஞர் சேக்கிழார் அடிப்பொடி தன் சொந்த நிதியத்திலிருந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை நிறுவி ஆண்டுதோறும் பொழிவாற்றுவதற்கு ஈந்து உதவினார்.

பல்கலைக்கழகங்கள் நிதியுதவி பெற்றபின் அவர்கள் செயற்படுத்தும் திட்டங்கள் எல்லாம் ஆண்டுதோறும் தெளிவாகத் தங்கள் ஆண்டறிக்கைகளில் வெளியிடுவதில் பெருமைப்படும் என்ற வண்ணம் தான் பல்கலைக்கழகங்கள் சிறந்து ஓங்கின. ஆனால், தொகை பல்கலைக்கழகத்திற்கு வழங்கும் பொழுதே ஐந்து நிபந்தனைகள் விதிக்கப்பட்டதைப் படித்து அயல்நாட்டிலுள்ள பெரும்பேராசிரியர் ஒருவர் வருந்திச் சொன்னார். தமிழகத்தில் வேண்டுமென்றால், இந்நிலைகள் நீடிக்கலாம்.

ஆனால், எங்கள் நாட்டில் அப்படியெல்லாம் நடைபெறாது.

ஐந்து திங்களுக்கு முன்பு தீநுண்மித் தாக்குதல் பெருக்கத்திற்காக என்னால் இயன்றவரை ஒரு தொகை வழங்கினேன்.

அப்பல்கலைக்கழகம் அதற்கு எனக்கு இதுவரை பத்துமுறை நன்றி தெரிவித்து மடல் எழுதுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் உங்கள் தொகையினால் நாங்கள் எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் என்று பண்பாட்டுச் செறிவோடு அவர்கள் அனுப்பும் அறிக்கைகளைப் பார்த்தபொழுது இனிக்கிறது என்றார். ஆனால், நீங்கள் விதிக்கும் நிபந்தனைகள் வேதனையளிக்கிறது. சான்றாக

வழங்கிய தொகை நாங்கள் குறிப்பிட்ட ஆராய்ச்சிக்கு மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்ற நிலையே மாறிவிடுகிறது ..

தமிழகப் பல்கலைக்கழகங்களில் வறுமை என்றே அறிஞர் வா செ குழந்தைசாமி வருந்தி எழுதினார் .

நமது நாட்டில் அரசியல்வாதிகள் ,நிருவாக அலுவலர்கள் என்ற இருவர் சேர்ந்த தனிக்குடும்பம் எவரையும் எளிதில் நுழைய இசைவதில்லை .

அழைக்கப்பட்ட விருந்தாளிகள் போல் வந்து திரும்பலாம் .குடும்பத்தில் ஒருவர் போல செயல்பட முடியாது .

இந்த அமைப்பு நமது நிருவாக நிலையில் பல இடங்களில் முரண்பட்டிருக்கின்றன .

எனவே நிதிப் பற்றாக்குறை நிலையான நோயாக நிறுவனங்களைப் பிணித்திருக்கிறது எனினும் காலம் மாறும் என்ற நம்பிக்கையில்

என்னினும் மிஞ்சினோர் வளர்க ;எம்மிமினம்

எவரினும் மேலென எழுக ;நாள்தோறும்

தன்னினும் மிஞ்சினோர் சமைவதற்கெனத்

தடம்அ மைப்பவர் தம்புகழ் பாடுவேன்

என்று அறிஞர் வா செ கு எழுதிய கவிதை பல்கலைக்கழகங்களில் பளிங்கு மேடையில் பொறிக்கத்தக்க ஊக்க வரியாகும் .

கதை , புதினம் ,கட்டுரை இலக்கியக் கலைத்திலகமாக வாழும் அறிஞர் அ முத்துலிங்கம் தினக்குரலில் பாரதிசெவ்வியாக வழங்கிய நேர்காணல் இருக்கை தவிசுகளைப் பற்றி நமக்கு ஏற்படும் எதிர்பார்ப்புக்களை

வனப்பாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறது .

நான் கற்ற இன்பத்தை பகிர்ந்தளிக்க விரும்புகிறேன் .

பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் தொரோண்தோ ( துரந்தை ) பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் வாய்ப்பு ஒன்று வந்தது.

அப்பொழுது அதற்குத் தேவையான நிதி ஒரு மில்லியன் தாலர்கள் மட்டுமே. அதைத் திரட்டமுடியாமல் அந்த வாய்ப்பு நழுவிப் போனது. அது சோகமான கதை.

பின்னர் 2017 ஆரம்பத்தில் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க Tamil Chair Inc எனும் அறக்கட்டளைக்கு அதிசயமாக சம்மதம் கிடைத்தது.

இந்த அறக்கட்டளையை ஆரம்பித்த நிறுவனர்களில் நானும் ஒருவன். இருக்கை அமைக்க தேவை ஆறு மில்லியன் அமெரிக்க தாலர்கள் என்றார்கள்.

உலகளாவிய ரீதியில் நிதி திரட்டலைத் தொடங்கினோம். எப்படி இவ்வளவு பணத்தைத் திரட்டப் போகிறோம் என்ற மலைப்பு ஆரம்பத்தில் இருந்தது.

அமெரிக்கா, கனடா, இந்தியா, கொரியா, ஹாங்காங் , மலேசியா, பொஸ்ட்வானா ( ஆப்பிரிக்கா ) போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் பணம் வந்து குவியத் தொடங்கியது.

இலங்கையில் இருந்துகூட 25,000 தாலர்கள் அனுப்பப்பட்டன என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள். தேவைப்பட்ட நிதிக்கு மேலாகப் பணம் சேர்ந்தபோது ‘இனி போதும், நிறுத்துங்கள்’ என்று அறிக்கை விட வேண்டி நேர்ந்தது.

இந்த ஆர்வத்தையும், தமிழர்களின் எழுச்சியையும் அவதானித்த ரொறொன்ரோ ( ஈழத்தவர் ஒலிப்பு முறை ) பல்கலைக்கழகம், இங்கே வதியும் தமிழ் மக்களை அணுகியது.

கனடாவில் மூன்று லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழ் இருக்கை ஒன்றை இங்கே அமைப்பதற்கு ரொறொன்ரோ பல்கலைக்கழகம் சம்மதம் வழங்கியது. இதற்குத் தேவையான நிதி மூன்று மில்லியன் தாலர்கள் ( இலங்கை ரூ 39 கோடி ). ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தை அணுகுவதற்கு நாங்கள் நேரம் பார்த்துக் காத்திருந்த வேளை அவர்களாகவே எம்மை தொடர்புகொண்டது ஆச்சரியமான விசயம்.

ஆர்வேடுக்கு நேர்ந்ததுபோல உலகம் முழுக்க இருந்து பணம் வந்து குவியவில்லை.

ஆனாலும் தமிழ் மக்களின் ஆர்வம் வியப்பூட்டியது. கனடாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் பணம் வந்தது. இந்தியாவிலிருந்துகூட ஒன்றிரண்டு பேர் பணம் அனுப்பினார்கள்.

முதல் வருடத்தில் நாங்கள் வைத்த இலக்கு ஒரு மில்லியன் தாலர்கள். கெடு முடிவதற்குள் அந்தப் பணத்தைச் சேர்க்க முடிந்தது. மீதி இரண்டு மில்லியன் தாலர்கள்தான். அதையும் விரைவில் திரட்டிவிடலாம் என்ற நம்பிக்கை உண்டு.

இதிலே சுவாரசியமான விசயம் என்னவென்றால் நாங்கள் எத்தனை ஆயிரம் தாலர்கள் சேர்ந்தன என்று தினம் தினம் கணக்குப் பார்த்தோம். பல்கலைக்கழகத் தலைவர் விஸ்டம் டெட்டி மாத்திரம் எத்தனை பேர் நன்கொடை கொடுத்தார்கள் என்பதையே உன்னிப்பாகக் கவனித்தார். ‘இது ஓர் இனக்குழு ஒன்றுசேர்ந்து உண்டாக்கும் இருக்கை. பணம் ஒரு நாள் இலக்கை எட்டும், ஆனால் எத்தனை பேர் பங்குபற்றுகிறார்கள் என்பதுதான் எங்களுக்கு முக்கியம்’ என்று விளக்கம் கொடுத்தார்.

மூன்று மில்லியன் தாலர்களை இருப்பு நிதியாக வைத்து உருவாக்கப்படும் ரொறொன்ரோ தமிழ் இருக்கை, தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைக் கற்றுத்தருவதோடு பல்வேறு முக்கியமான ஆய்வுகளை முன்னெடுக்கும் மையப்புள்ளியாகவும் அமையும்.

ஏனைய செம்மொழிகள் அனைத்துலகக் கல்வி மையங்களில் நிறுவப்பட்டு ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் மூலம் பல நன்மைகள் பெற்றுள்ளன.

இங்கே அமையும் தமிழ் இருக்கை தமிழுக்கான அங்கீகாரத்தை அளிப்பதோடு தொடர் பயன்பாட்டிற்கும், முன்னேற்றத்துக்கும் வலுச்சேர்த்து பல கல்வி நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும்.

ரொறொன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தின் முன்னாள் தலைவர், ‘தமிழ் இருக்கையானது உயர் கல்வி நிறுவனத்தில் தமிழ் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்காக மக்களின் ஆதரவுடன் நிறுவப்பட்டு என்றென்றும் நிலைத்திருக்கப்போகும் ஒரு கல்வி அலகாகும்.

ஒரு மொழி பேசும் குழுவினரால் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் முதல் இருக்கை என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று.

இது வேறு இருக்கைகளுக்கு முன்மாதிரியாக அமையும். தமிழ் மொழியின் பாரம்பரியத்துக்கும், தொன்மைக்கும் அதன் மேன்மைக்கும் சாட்சியாக என்றென்றும் நிலைத்து நிற்கும்’ எனத் தமிழ் இருக்கை ஆரம்பக் கூட்டத்தில் கூறி வாழ்த்தினார்.

ரொறொன்ரோவில் நிறுவப்படும் தமிழ் இருக்கை, இந்தியத் துணைக்கண்டத்தைத் தாண்டிய தமிழ்க் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு முதன்மையான இடமாக அமையும்.

அருகிவரும் தமிழ் இலக்கிய நூல்கள் மற்றும் ஆவணங்கள் எண்மியமாக்கப்பட்டு இங்கே பாதுகாக்கப்படும். கனடிய அரசு வழங்கும் நல்கைகளை தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.

தமிழ் கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் ஒழுங்குசெய்வதுடன் வருகைப் பேராசிரியர்களுக்கும் வழி செய்யலாம்.

சிறந்த ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்கலாம். தமிழ் இருக்கை என்பது நுழைவாயில்தான். தக்க பேராசிரியர் அமைந்தால் முதல்தரமான பல்கலைக்கழகத்தில் ஒரு மொழிக்கு கிடைக்கக்கூடிய அத்தனை வாய்ப்புகளையும், பயன்களையும் நாம் முழுமையாக அடையலாம்.

ஆரம்பத்தில் ஆர்வேடு தமிழ் இருக்கை நிதி சேர்ப்பு சரியாகவே போகவில்லை. அதைப் பற்றிய புரிதல் மக்களுக்குப் போய்ச்சேர சில மாதங்கள் பிடித்தன.

அமெரிக்க, கனடா போன்ற நாடுகளிலிருந்து ஒரு சில செல்வந்தர்கள் பணம் சேர்த்தாலே இந்த இருக்கையை இலகுவில் உண்டாக்கியிருக்கலாம்.

அதை நாங்கள் விரும்பவில்லை. பல்கலைக்கழகமும் அப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை. உலக மக்களால் இருக்கை உருவாக்கப்பட்டு அது உலக மக்களுக்குச் சொந்தமாக வேண்டும் என்பதே பலரின் கோரிக்கை.

தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், வானொலி, முகநூல் என சகல ஊடகங்களிலும் பரப்புரை செய்தோம்.

தமிழ்நாடு அரசு நன்கொடை வழங்கியதை தொடர்ந்து நிதி சேகரிப்பு வேகம் பிடித்தது. ஆறு மில்லியன் தாலர்களை தாண்டியபோது, ‘நிதி இலக்கை அடைந்துவிட்டது, மேலும் பணம் அனுப்பவேண்டாம்’ என உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டிய கட்டாயம் நேர்ந்தது.

இப்பொழுது பேராசிரியர் தேர்வு முயற்சியை ஆர்வேடு பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கிறது.

விரைவில் இருக்கை செயல்படத் தொடங்கும்.ரொறொன்ரோவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மூன்று லட்சம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியில் தேர்ச்சிபெற்றவர்கள். இங்கே வாரத்துக்கு பல தமிழ் கலாச்சார, கலை நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. வாரத்துக்கு ஒரு புத்தக வெளியீடாவது நடக்கிறது.

ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு இதை விடச் சிறந்த இடம் ஏது. ஒவ்வொரு சனவரி மாதமும் கனடாவில் தமிழ் மரபு மாதமாக கொண்டாடப்படுகிறது.

ரொறொன்ரோ பல்கலைக்கழகம்கூட 2019 வருடம் முதல்முறையாக தமிழ் மரபு மாதத்தை கொண்டாடியது. தமிழின் மேன்மை பற்றி பல்கலைக்கழகத் தலைவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

தமிழ் இருக்கை அமைய வேண்டும் என்ற ஆர்வம் தமிழ் மக்களுக்கு இருக்கும் அதே அளவுக்கு பல்கலைக்கழகத்துக்கும் இருக்கிறது. இது ஒரு வரம் என்றே எனக்குப் படுகிறது.

அமோகமான ஆதரவு கிடைத்துள்ளது. புலம் பெயர்ந்தவர்களுடைய ஆதரவு இல்லாமல் நிதி சேகரிப்பது சாத்தியமே இல்லை. திரட்டிய நிதியில் 99 வீதம் புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து கிடைத்ததுதான். புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால் அது கனடாவை மாத்திரம் குறிப்பிடவில்லை.

புலம்பெயர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் வசிப்பவர்களையும் சேர்த்துத்தான் பார்க்கவேண்டும்.

பெரும்பான்மையான கொடைகள் கனடாவில் கிடைத்தவை. இந்தியாவில் இருந்தும் சிலர் பணம் அனுப்பி உதவியிருக்கிறார்கள். அங்கே அனுமதி பெறுவதில் பல சிக்கல்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி பணம் வந்து சேர்ந்திருக்கிறது.

2700 கி.மீட்டர் தொலைவில் அல்பெர்ட்டா மாகாணத்திலிருந்து ஒரு சிறுமி அவருடைய பிறந்த நாளுக்கு கிடைத்த பணத்தை அப்படியே அனுப்பியிருந்தார்.

நெகிழ்வாக உணர்ந்த சமயம் அது. சிறுமிக்கு நன்றிகூறிவிட்டு அவருடைய அப்பாவிடம் பேசினேன். அவர் சொன்னார்,’ரஜினியின் பேட்ட சினிமா 2 வாரம் ஓடியதற்காக விழா எடுக்கிறார்கள். தமிழ் 2500 வருடங்களாக ஓடுகிறது. அதையல்லவா நாங்கள் கொண்டாடவேண்டும்.’ முதல் ஒரு வருடத்தில் 600 பேர் பணம் கொடுத்து ஒரு மில்லியன் டொலர் சேர்ந்துவிட்டது.

ஏற்கனவே சொன்னதுபோல இந்த தமிழ் இருக்கை தமிழர்களுக்கு சொந்தமானது.

கனடா வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கு சொந்தமானது. தமிழ் மொழிக்கு சொந்தமாக ஒரு நாடு இல்லையென்றாலும் அந்த மொழி ஓர் உலகமொழி.

உலகத் தமிழர்களிடமிருந்து நிதி சேர்ப்பதுதான் நோக்கம். ஏற்கனவே சொன்னதுபோல கனடிய அரசு வழங்கும் நல்கைகளை தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.

சிறந்த ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்கலாம். ஒரு மொழிக்கு கிடைக்கக்கூடிய அத்தனை வாய்ப்புகளையும், பயன்களையும் நாம் முழுமையாக அடையலாம்.

கனடிய அரசிடம் தமிழ் இருக்கைக்கு பணம் கேட்கும் திட்டம் தற்சமயம் இல்லை. கணிசமான தொகை சேர்ந்த பின்னர் அரசாங்கத்தை அணுகலாம் என்ற எண்ணம் உண்டு. சமயம் வரும்போது அதற்கான முயற்சிகளை கைக்கொள்வதில் ஒரு தடையும் கிடையாது.

ரொறொன்ரோவில் இருக்கை ஒன்றை உண்டாக்குவதன் மூலம் தமிழை உலகமயமாக்கலாம். ரொறொன்ரோ பல்கலைக்கழகத்திலிருந்து இந்த வாய்ப்பு எங்களைத் தேடி வந்திருக்கிறது.

கனடாவின் இரண்டாம் தலைமுறை இப்போது தலையெடுத்திருக்கிறது. முற்றிலும் கனடியச் சூழலில் வாழும் மூன்றாவது தலைமுறை தமிழை மறந்துவிடும். மிக முக்கியமான ஒரு சந்தியில் நாங்கள் நிற்கிறோம்.

இந்தத் தலைமுறை தாண்டினால் தமிழ் இருக்கை என்பது கனவாகிவிடும். இதுதான் தருணம். இப்பொழுதே செய்யவேண்டும்.

தமிழ்நாட்டிலும் – சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பதவியே இலாசரசு வழங்கிய நிதியத்திலிருந்து அமைந்த இருக்கையாகும் .

பிறகு அது பொது நீரோட்டத்தில் கலந்ததது .தமிழ்ப் பல்கலைக்கழகம் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,,

இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகம் , ஈழப் பல்கலைக்கழகம் தமிழுக்கு ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன .

இந்நிறுவனங்களை ,பேராசிரியர்களை அணுகிக் கருத்துரைகளைப் பெறலாம் .

” செயத்தக்க செய்யாமையானும் கெடும் ” என்பது திருக்குறள் ..

தொடர்வோம் …

பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை

– ஒளவை நடராசன்

thamizhavvai@hotmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *