மன்னாதி மன்னன் – 78
இக்கரைக்கு அக்கரை சர்க்கரை !
முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணை வேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம்
ஒரு குடும்பத்தில் ஒரு மொழி , சிலருக்கு இரண்டு மொழிகள் , இன வாழ்வியல் பண்பாட்டுக்கூறுகள் மக்களினத்தின் பெருமை கொழிக்கும் புதையலாகும் .
காலம் செல்லச்செல்ல மொழி பேசும் எல்லைகள் குறைந்து மாநிலங்கள் ,நாடுகள் என்ற அளவில் நின்றன .
மக்களின் உறவு மரபார்ந்த உறவிலிருந்து தாம் கற்பித்திருந்த குலம் ,சமயம் .ஊர் தாண்டி உலகளாவியதாக விரிந்தது .
மக்களுக்குக் குலம், ஊர் , நாடுகள் தாண்டித் திருமணம் நிறைவேற்றியது .
அனைவரும் மகிழ்ந்து வாழ்வதோடு மக்கட் செல்வங்களும் வளர்ந்துள்ளனர் .
தாய்மொழி வேறு ,தந்தை மொழி வேறு ,தாயின் வழக்கம் வேறு ,தந்தையின் மரபு வேறு என்றாலும் பிள்ளைகள் தாய் தந்தையர் இருவரையும் முடிந்த வரையில் பின்பற்றுகின்றனர் .
இந்த நிலையில் வீட்டு மொழி , வாழும் நாட்டு மொழி , படிக்கும் கல்விமொழிகள் வேறாக அமைகின்றன .
இந்த நிலையில் வாழும் மூன்றாம் தலைமுறையினர் தம் மொழியை மரபைப் போற்றுவது ஒரு சிக்கலாக அமைகிறது .
இனம், நிறம் கலந்து அமெரிக்கராக ,ஐரோப்பியராக அமைவார்கள் .
இந்த எல்லையில் எந்த மொழியின் முதன்மையும் துறைதோறும் தாம் சார்ந்த தொழிலோடு இணைந்தால் தான் சிறப்புறும் .
என்னைப் பார்க்க இராமேசுவரம் அரசு கல்வி அறிவியல் கல்லூரியின் முதல்வராக இருக்கும் பேராசிரியர் இராமன் வந்திருந்தார் .
அவரோடு மாணவர் சிலர் வந்தனர் .
நலம் வினவிவிட்டு இந்த நால்வரும் தமிழில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் .
இருவருக்கு வேலை கிடைக்கவில்லை .
எஞ்சிய இருவர் அமெரிக்கப் பணத்தில் திங்களுக்கு அறுபது டாலர்கள் கூடப் பெறமுடியவில்லை என்றார் .
என்னப்பா ! டாலர் கணக்கில் சொல்கிறீர்களே என்றேன் .
நீங்களும் அரசும் மில்லியன் கணக்கில் தானே மேலைநாட்டு இருக்கைகளுக்கு நிதியுதவி செய்கிறீர்களே ! என்று சற்று உரத்த குரலில் வினவினார் .
இவர்கள் அயலக இருக்கையில் எப்படிச் சேர்வது என்று என்னைக் கேட்டார்கள் நான் உங்களை நினைத்தேன்.அழைத்து வந்தேன் என்றார் .
வேண்டுமானால் என் தலைதனைக்கொண்டு விலைதனைப் பெறுக ! என்று சிரித்தபடி சொன்னேன் .
அப்போது அந்த மாணவர் எழுதிய கவிதையைக் காட்டினார்
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தனிலே
இருக்கை அமைக்கின்றார் தோழி !
கொடுக்கும் கோடிகளைக் கொழித்தவர் கைகளிலே
கொடுத்து மகிழ்கின்றார் வாழி !
தோற்கும் தமிழுணர்வைத் தாயகத்தில் வளர்க்காமல்
தொல்லைப்படுகின்றார் தோழி !
மேற்கிலா வளமில்லை எங்களையும்
மெல்ல நினையாரோ தோழி !
என்ற கவிதையைப் படித்துச் சிந்தித்தேன் .
ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு மதுரை மாநகரில் எவரும் மலைக்கத்தக்க வகையில் நடந்ததைப் பலமுறை குறித்திருக்கிறேன்
.மாநாட்டில் ஒரு கருத்தரங்கம் முடிந்த நிலையில் மூவர் அயல்நாட்டவர் ,இருவர் மாணவியர் ,ஒருவர் மாணவர் வந்து புரட்சித்தலைவருக்கு வணக்கம் கூறினர்
அமெரிக்கா ,போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன் .
அண்ணா ! .இவர்கள் தமிழில் ஆராய்ச்சி செய்கிறார்களாம் .ஒருவர் செய்வது நாகர்கோயில் வழக்குச் சொற்கள் ,மற்றொருவர் திருவண்ணாமலை தெருக்கூத்து ,மற்றொருவரோ மதுரை கரகாட்டம் என்றேன் இதைக்கேட்டுப் புரட்சித்தலைவர் வியப்போடு பார்த்தார் .
தமிழாராய்ச்சி என்றீர்களே ! இதுதானா அது ! ஏதோ ஒரு நாட்டிலிருந்து நிதி கூட என்னைக் கேட்டார்களே ! என்றார்
.உடன் நின்றவர் அமைச்சர் நாவேந்தர் காளிமுத்து ” அவர் மெல்ல
என்ன செய்வது இலக்கியப்பயிற்சி இல்லாமல் போய்விட்டது
.நாட்டுப்புறவியல் ,மொழியியல் என்று இவர்கள் போக்கில் ஆராய்ச்சிகளை இப்படிச் செய்கிறார்கள் ” என்றார் .
அமெரிக்கா போற்றும் வழக்காற்றியல் என்றேன் .
இப்போதெல்லாம் வழக்கு அளவீட்டுத் திட்டம் என்ற ஒரு பட்டப்படிப்பே வந்திருக்கிறது .
,இந்த அடிப்படையில் தான் மொழியியலில் ஒரு மொழியின் சொற்களைக் கண்ட துண்டமாக வெட்டி ஆராயும் புதுமையை அமெரிக்கரின் வழிகாட்டுதலோடு ஆய்வுப்பணிகள் தொடர்ந்துள்ளன .
இலக்கிய மொழி – அலங்கார மொழி என்றும் அது மக்களிடமிருந்து விலகி நிற்கிறது என்று சொல்வது நமக்கு விளங்கவில்லை .
மொழியியலை உயிரியல் துறையைப் போன்று பிரித்துப்பிரித்து ஆராயும் போக்கு மொழியியலில் நிலவுகிறது .
இலக்கிய நயப்பாடே எல்லாவற்றுக்கும் அடிப்படை என்று விளக்கிக் காட்டி நம்மால் வெற்றி பெற முடியவில்லை .
செருமனியில் இருந்து வந்தவர் என்னை ஒருமுறை கண்டு பேசினார் .
அவர் பேச்சினூடே நான்கு பக்க வண்ணக் கையேடு ஒன்றை என்னிடம் வழங்கிச் சென்றார்.
செருமனியிலுள்ள லீப்சிக் பல்கலைக்கழகத்தில் பதினைந்து நாள் வடமொழிப் பேச்சுப் பயிற்சி வகுப்பினை முனைவர் சதானந்த தாஸ் நிகழ்த்தவிருக்கிறார் என்று அச்சிடப்பட்டிருந்தது.
சதானந்த்தாஸ் இதுகாறும் வடமொழிப் பேச்சுப் பயிற்சியினை செருமனியிலுள்ள ஈடல்பெர்க் பல்கலைக்கழகத்தில் பதினேழு கோடை வகுப்புகளும், லாசான் பல்கலைக்கழகத்திலும், ஆஸ்திரேலியா தேசியப் பல்கலைக்கழகத்திலும் மூன்று கோடை வகுப்புகளும் அதுமட்டுமின்றி, வடமொழியில் உயர்நிலைப் பேச்சு வகுப்புகளை பிளாரன்சு பல்கலைக்கழகத்தில் ஐந்து கோடை வகுப்புகளும் மற்றும் அர்ஜெண்டினாவிலுள்ள வடமொழிப் பயிற்சி மையத்தில் வடமொழி கற்பித்தலையும், காசியிலுள்ள ஞான பிரவாகா பண்பாட்டு மையத்தில் பயிற்சியும், கோவாவில் சதுவாலா வடமொழிப் பயிற்சி மையத்திலும் கற்றுத்தருவதாக வெளியிடப்பட்டிருந்தது.
இதில் பாராட்டப்பட வேண்டிய தகவல் என்னவென்றால், அறிஞர் பெருமக்களும் மாணவ மணிகளும் வழக்கில்லாத வடமொழியைத் தன்னம்பிக்கையுடன் மீட்டுருவாக்கம் செய்து அன்றாடம் பயன்படுத்துவதற்காக இவ்வகுப்புகள் நடைபெறுகின்றன என்றும் அச்சிடப்பட்டிருந்தது.
ஏறத்தாழ எண்பதாண்டுகளுக்கு மேலாக வடமொழிக்கல்வி உலகப் பல்கலைக்கழகங்களில் எப்படியோ இடம் பிடித்துள்ளது .
யார் ,எவ்வளவு நிதியம் வழங்கினார்கள் என்பது வியப்பாகவே உள்ளது .
தமிழறிஞர் என்று போற்றப்படும் ஜார்ஜ் ஆர்ட்டு முதல் பெரும்பாலானோர் வடமொழிப்புலமை வழியாகத்தான் தமிழை அணுகினர் .
இந்த அழகில் அது எவருக்கும் தாய் மொழியில்லை .
செம்மொழி என்று விரல்விட்டு எண்ணுகின்றவர்களின் முதல் விரல் வடமொழி என்றுதான் மடங்குகிறது .
அமெரிக்க ஐக்கிய நாட்டின் கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள ஆர்வர்டு பல்கலைக்கழகம் உலகப் பல்கலைக்கழகங்களிலேயே 380 ஆண்டுத் தொன்மை பூண்ட தலையாய பல்கலைக் கழகமாக விளங்குகிறது.
இதுவரை இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கைக்கென வாய்ப்பு அமையவில்லை .
அமெரிக்க நாட்டின் புகழ்வாய்ந்த மருத்துவர், வி. ஜானகிராமனும் ( நாவலரின் உறவினர் ), மருத்துவர் திருஞானசம்பந்தமும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைப்பதற்காக, 2.7 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டியதாகவும், ஒப்பந்தப்படி 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டியிருந்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் 2017-ஆம் ஆண்டு பத்து கோடி ரூபாய் இவ்விருக்கைக்காக நிதி ஒப்பளிப்புச் செய்யப்பட்டது.
28.06.2018 அன்று சட்டமன்றப் பேரவையில் விதியெண் 110-ன்கீழ் பின்வருமாறு அறிவிப்பும் செய்யப்பட்டது:-
” இந்தியாவிலுள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தமிழிருக்கை ஏற்படுத்தி தமிழ் வளர்க்க முயல்வது என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக இலண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவிலுள்ள ஜோகன்ஸ்பர்க் பல்கலைக்கழகம், மலேசியாவிலுள்ள மலேயாப் பல்கலைக்கழகம், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் பெருகி வாழும் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலுள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழிருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும். இதற்கென ஆண்டுதோறும் ஐந்து கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்படும்.”
ஊசுடன் மாநகரம் அமெரிக்காவின் நான்காம் பெரிய நகரமாகும்.
50 ஆண்டுக்காலமாகத் தமிழர்கள் இந்நகரில் கடல் கடந்து தம் மொழி கலை பண்பாட்டு விழுமியங்களை வளர்த்து வருகின்றனர்.
ஊசுடன் பல்கலைக்கழகம் 1927- ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது என்றும் ஊசுடன் டெக்சாசிலுள்ள பெரிய பல்கலைக்கழகம் என்றும், ஆதாய நோக்கமற்ற நிறுவனமாக ஊசுடன் தமிழாய்வுகள் இருக்கை அமைப்பு 2019 – ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாள் அன்று தோற்றுவிக்கப்பட்டது.
ஊசுடன் பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை நிறுவிட இந்திய மதிப்பில் 15 கோடி ரூபாய் ( இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ) தொகை செலுத்த வேண்டும்.
தமிழாய்வுக்குப் பயன்படும் வகையில், ஊசுடன் தமிழாய்வு நிறுவனத்தின் 75 விழுக்காடு தொகையினை டெக்சாசு அரசு உதவித் தொகையாக வழங்கும் என்றும், தமிழ்த்துறைக்கான ஒரு முழுப் பேராசிரியர் பதவியை ஏற்படுத்திட இப்பல்கலைக்கழகம் நிதிவழங்கும் என்றும், இந்த நிதி தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் பொருளாதாரத் திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் 7 கோடி ரூபாய் ( ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் ) நிதி உதவி வேண்டினர் .
அனைத்தையும் ஆராய்ந்து தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் மட்டும் நிதி ஒப்பளிப்பு செய்தது. அவ்வாறு தொகையை வழங்கும்பொழுது, ஆறு நிபந்தனைகளைத் தமிழக அரசு விதித்துள்ளது .
ஒப்பளிப்புச் செய்யப்படும் தொகை, தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் பொருளாதாரத் திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இருக்கை அமைப்பது தொடர்பான பணி முன்னேற்ற அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும்.
ஒப்பளிப்புச் செய்யப்படும் தொகைக்குரிய பயனீட்டுச் சான்றிதழை அப்பல்கலைக் கழகத்திடமிருந்து பெற்று அரசுக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் அனுப்ப வேண்டும்.
மேற்படி பல்கலைக்கழகம் செலவினங்கள் தொடர்பான ஆவணங்களையும் விவரங்களையும் அரசு வேண்டும் போது உடனுக்குடன் அளிக்க வேண்டும்.
எந்த நோக்கத்திற்காக நிதி ஒப்பளிப்புச் செய்யப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு மட்டுமே ஒப்பளிப்புச் செய்யப்பட்ட தொகை செலவிடப்பட வேண்டும்.
திட்டம் உரிய வரையறையில் நிறைவேற்றப்பட வேண்டும். காலத்தாழ்வு ஏற்படின் பெறப்பட்ட நிதயுதவித் தொகை உரிய வட்டித் தொகையுடன் அரசுக்குத் திரும்பச் செலுத்த வேண்டும்.
இதில் என்ன வேடிக்கையென்றால், ஊசுடன் பல்கலைக்கழகம் இதுகாறும் ஆறுகோடி நிதி திரட்டியதா ?
இருக்கைக்குப் பேராசிரியர் அமர்த்தப்பட்டாரா ? என்று இன்று வரை எவருக்கும் தகவலில்லை.
அள்ளித்தெளித்தாற்போல அடுத்த நிதியொதுக்கீடாக, கனடா பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் இதே தொகை நிதியுதவியாக வழங்கப்பட்டது.
இன்னும் தவிப்பைக் காட்டுவது போல செருமனிக்கு ஏன் நிதியுதவி தரவில்லையென்று நண்பர்கள் சிலர் வினவிக் கொண்டிருக்கிறார்கள்.
நிதித்துறை இந்த நல்கைகளை நுணுக்கமாக ஆராய்ந்தனரா என்று அறிய முடியவில்லை .
தமிழ் வளர்ச்சி கலைப்பண்பாட்டுத் துறையின் அரசு செயலாளராக நான் இருந்தபொழுது பண்பாட்டுப் பொருண்மைகள் குறித்து மைய அரசை வினவும் பொழுதெல்லாம் மைய அரசின் ஓர் அமைப்பாக அமைந்திருந்த இந்தியக் கலைப்பண்பாட்டு நல்லுறவு நிறுவனத்திடம் தான் நாங்கள் எழுதிக் கேட்கும் வழக்கமிருந்தது.
.1950 ஆம் ஆண்டில் ஆசாத் அவர்களால் உலக நாடுகளோடு கலை பண்பாட்டு நல்லுறவை வளப்படுத்தத் தோன்றியது .
ICCR வாயிலாக 1970 – ஆம் ஆண்டில் தமிழ்மொழிக்கென ஒரு துறையினைப் போலாந்து நாட்டில் வார்சா பல்கலைக்கழகம் உருவாக்கியது.
இப்பல்கலைக்கழகத்திற்கு அப்பொழுது தமிழ்ப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற பொருண்மை எழுந்தபொழுது ICCR வருகை தரு பேராசிரியர் என்ற முறைப்பாட்டில் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களிலுள்ள பேராசிரியப் பெருமக்களைத் தெரிவு செய்து போலந்துக்கு அனுப்பினார்கள்.
எனக்குத் தெரிந்து ஒரு பருவத்திற்கு 15 மாணவர்கள் பயில்வார்கள்.
ஆக நான்கு பருவங்கள் என்று கூட்டினால் 60 மாணவர்கள் மட்டும்தான் பயிற்சி பெறுவார்கள்.
ICCR பேராசிரியருக்கும் அவருடைய குடும்பத்தினர் ஒருவருக்கும் போய்வரும் வானூர்திப் பயணச் செலவினை மேற்கொள்வார்கள். அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் தங்கும் வசதிகளைச் செய்து தரவேண்டும்.
வருகை தரு பேராசிரியர் ஒவ்வொருவருக்கும் மூன்று லட்சம் ரூபாய் திங்கள் ஊதியம் வழங்கப்படும்.
போலந்திலிருந்து மாணவர்கள் சிலர் தமிழ் நாட்டிலும் புதுவையிலும் வந்து ஆராய்ச்சி செய்தார்கள்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் நாவல்களில் ஆய்வுசெய்த ஒரு போலந்து மாணவர் பல்கலைக்கழகத்தில் பதினைந்தாண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
அதேபோல பேராசிரியர் யார்ஸ்லேவ் வாஸக், செக்கோஸ்லோவேகியாவில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவராவார்.
செம்மொழி நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதையும் அவர் பெற்றவர் .
அமெரிக்கா, கனடாவில் உருவாக்கப்படும் இவ்விருக்கைகளில், தமிழ் நாட்டில் பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியர்களை ICCR வகுத்த நெறிப்படி பேராசிரியர்களாக அந்நாடுகளுக்குச் சென்று பணியாற்றும் வாய்ப்பு நல்க வேண்டும் என்பது தமிழர்களின் அவாவாகும்.
முப்பதாண்டுகளுக்கு முன்பு அருமைப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் கலிபோர்னியா பர்களி பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதையும் நினைவுகூர விழைகிறேன்.
பேராசிரியர் மறைமலையின் அரும்பணியால் தனித்தமிழ் வீறு கொண்டு திராவிடப் பெருமிதம் தளிர்விட்டது .
மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பலர் தமிழ்நாட்டு இளைஞர்கள் இன்று உலகெங்கும் சென்று வெற்றி காண்பது போல நம்முடைய தமிழ்ப் பேராசிரியர்களும் இங்கேயே உழல்வதைக் காட்டிலும் அமெரிக்க வானில் சுழல வேண்டாமா ?
இவைகளெல்லாம் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமாகாது !
இக்கரைக்கு அக்கரை சர்க்கரை .!

Add a Comment