பூம்புகார்ப் பனுவல் புதைந்ததே !
” பூம்புகார் மாமணி ” புலவர் தியாகராசனை ஐம்பதாண்டுகளாக அறிவேன் .
பூம்புகாரில் பெருந்தகை இராஜசேகரன் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார் .
பூம்புகார் மண்ணை அடியெடுத்து அளந்தது மட்டுமில்லாமல் அதன் ஆழத்தையும் ஆராய்ந்தறிந்த புலமையும் – தகைமையும் பூண்டவர் .
எவர் புகாருக்கு வந்தாலும் அவரைக் கண்டீர்களா என்றுதான் அனைவரும் வினவுவர் .
சென்னைக்கு வந்து என்னைக் கண்டது முதலமைச்சர் – முத்தமிழ்க் கலைஞரைக் கண்டு அளவளாவியது – கோவை இளஞ்சேரனோடு பூம்புகார் வரைபடத்தை வரைந்து சிற்ப அமைப்பை விளக்கியது போன்ற நிகழ்வுகள் என் நினைவை அலைகழிக்கின்றன .
இனி யார் வந்து பூம்புகாரை விளக்கப் போகிறார்கள் ! .
வாழ்வெல்லாம் பூம்புகார்க் கனவோடு வாழ்ந்த பெருமகன் மறைந்ததையெண்ணி மனம் கலங்கியது .
முதுமை யாரை விட்டது .!
புலவருக்குத் தொண்ணூறு வயது கடந்ததை நினைவூட்டி மயிலாடுதுறையிருந்து நண்பர் தமிழாசிரியர் வையாபுரி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் .
புலவர் திலகத்துக்குப் புகழாரமாகப் புதுவைப் பேராசிரியர் இளங்கோவன் ஆவணப்படம் எடுத்ததைப் போற்றுகிறேன் .
முனைவர் இளங்கோவனைத் தவிரப் பூம்புகாரையும் – கானல் வரிப் பண்ணாராய்ச்சியையும் எவர் ஆர்வங்கொண்டு காத்து வருவார்கள் !
முனைவர் இளங்கோவன் அருங்கலைப்பெட்டகமாக வாழ்ந்து அரும்பணியாற்றுகிறார் .
தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கடலகழாய்வு நடத்தியபோது என்னோடு அவர் உடன் வந்ததை எண்ணி
உருகுகிறேன் .
புலவர் தியாகராசன் நடமாடும் பூம்புகார் மாநகராய் இருந்தார் .
என் நெஞ்சுருக்கத்தைக் குடும்பத்தார்க்கு கூறுவதைத்தவிர ஆறுதலேது !
ஒளவை நடராசன்
30 3 2021

Add a Comment