POST: 2021-04-04T11:17:43+05:30

கட்டுரை
=====

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 53

“இருந்தமிழே உன்னால் இருந்தேன்!”

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வதில் தணியாத ஆர்வம் கொண்டவன் நான்.

என்னுடைய இளமைக் காலத்திலிருந்தே என் நினைவுகள் அந்தத் திசையிலேயே சிறகடித்தன.

வள்ளியம்மாள் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் போதே,‘ சித்தார்த்தா மீண்டும் மனக்குழப்பமா’?, என்று புத்தரைப் பற்றிய ஒரு பக்கக் கட்டுரைப் பகுதியை மனப்பாடமாக ஒப்பித்துப் பேசியதை எண்ணிப் பார்க்கிறேன்.

பத்தாம் வகுப்பு பயிலும் பொழுது என் மாமா அறிஞர் குமரவேலன் எழுதிய ‘17ஆம் நாள்’ நாடகத்தில் துரியோதனனாகப் பேசிய வசனங்களும் மறக்க முடிவதில்லை.

மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியத் துறையில் 1985இல் சேர்ந்த பொழுது அவ்வாண்டு இறுதியில் என்னுடைய தந்தையார் என்னை அழைத்து ‘பேசுவதைக் காட்டிலும் பல நூல்களை நீ தொடர்ந்து படிக்க வேண்டும், பல பாடல்களையும் மனப்பாடம் செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.

‘கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவாய்’ என்பது போல பல நூல்களைப் படிக்கத் தொடங்கினேன்.

என்னிடம் முதன்முதலாக தந்தையார் கொடுத்து படிக்கச் சொன்ன புதினம், காலத்தால் அழிக்க முடியாத முதல் புதினமான (23.08.1879) பிரதாப முதலியார் சரித்திரம் தான்.

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நான் படிக்கும் முதல் புதினமும் இதுதான் தமிழ் உலகத்திற்கும் வெளிவந்த முதல் புதினமும் பிரதாப முதலியார் சரித்திரமே ஆகும்.

நீதியரசர் வேதநாயகம் பிள்ளையின் (1826-1889) நூலிலுள்ள அருமையான பகுதி என்னை வியக்க வைத்தது.

“பாடசாலையிலே படிக்கிற படிப்பு அஸ்திவாரமாகவும், பாடசாலையை விட்ட பிற்பாடு, தானே படிக்கிற படிப்பு மேற்கட்டத்துக்குச் சமானமாயுமிருக்கின்றது.

பூட்டி வைத்திருக்கிற பொக்கிஷத்திற்குத் திறவுகோல் கொடுப்பதுபோல, எந்த புத்தகத்தை வாசித்தாலும், பொருள் தெரிந்து கொள்ளும்படியான ஞானத்தைத் தரும்.

இனிமேல் நீ உன்னுடைய முயற்சியால் அக்கருவூலத்தைத் திறந்து நீ நிறைய படிக்க வேண்டும்”

என்ற அப்பொன் வரிகள் நெஞ்சில் பசுமரத்தாணிபோலப் பதிந்து விட்டது.

இவ்வரிகளைப் படித்தபொழுது அப்பா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை தெரிந்து வியந்தேன்.

ஒரு நீதியரசர் தன் புனைக்கதையில் உண்மை வரிகளைப் படம் பிடித்துள்ளார் என்று காணும்போது என் நெஞ்சம் பதறியது.அவ்வரிகள்:

“தமிழ் நியாயவாதிகள் ,தமிழில் வாதிக்காமல் ஆங்கிலத்தில் வாதிக்கிறார்களென்று கேள்விப்படுகிறோம்.

தேசமொழியும் தமிழ்! வழக்காடு மன்றத்திலும் தமிழ்! நீதிபதியும் தமிழர்! வாதிக்கிற வக்கீலும் தமிழர்! மற்ற கட்சிக்காரர்களும், வக்கீல்களும் தமிழர்களே! இப்படியாக எல்லாம் தமிழ்மயமாயிருக்க ஏன் வக்கீல்கள் ஆங்கிலத்தில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை?

தாய்மொழி பேசத் தெரியாமலிருப்பதைப்போல இழிவான காரியம் வேறொன்றிருக்கக் கூடுமா?

ஆங்கிலச் சொற்களுக்குச் சரியான பிரதிபதங்கள் தமிழில் இல்லையென்று வக்கீல்கள் சொல்லுவது அவர்களுடைய தெரியாமையல்லாமல் உண்மையல்ல.

தமிழ் நூல்களைத் தக்கபடி அவர்கள் ஆராய்ந்தால் பிரதி பதங்கள் அகப்படுவது பிரயாசமா?

வழக்குமன்றங்கள் நாடக சாலையாகத் தோன்றுகின்றனவேயல்லாமல் நியாயசபையாகத் தோன்றவில்லை.

ஆங்கிலத்தில் வாதிக்கிற நியாயாதிபதிகள் தமிழ் நாட்டையும், தமிழ் மொழியையும், மற்ற வக்கீல்களையும், கட்சிக்காரர்களையும், அனைத்து மக்களையும் மெய்யாகவே அவமானப்படுத்துகிறார்கள்”

என்று 1857-இல் எழுதியிருப்பதைப் படிக்கும்போது அவலமாகவே இன்றும் உள்ளதே என்றுதான் புலம்பத் தோன்றுகிறது.

ஏட்டுக் கல்வியைத் தவிர புதினம், கவிதை, கட்டுரை, நாடகம், சங்க இலக்கியம், சமயம், அறிவியல், தத்துவம் ஆகியவையெல்லாம் அவ்வப்போது படிப்பதுதான் படிப்பாக அமையும்.

ஒருவனுக்குக் கல்வி, அறிவு, தெளிவு இருந்தால் தான் அவன் முழு மனிதன் என்றே கருதப்படுவான்.

எதையும் நான் படிப்பேன் என்ற ஒரு உந்துதல் ஏற்பட்டால் நம்மை மரணத்திலிருந்தும் கூட அது எழுப்பி விடும் என்பார்கள்.

இப்பொழுதெல்லாம் எனக்குள்ள ஆசை உலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் எப்படியாவது படித்து விட வேண்டும் என்பதுதான்.

இவ்வரிகளைக் கண்ணும் காதும் பதித்துக் கொண்ட கருத்துக் கோவை என்ற தலைப்பில் 18.12.1985 அன்று பதிவிட்டு எழுதியதை நினைத்து மகிழ்கிறேன்.

எப்பொழுதும் எந்த நூலைப் படித்தாலும் அதில் வருகின்ற சிறப்பான வரிகளையும், எனக்குப் பிடித்த கருத்துக்களையும் என்னையறியாமல் கோடிட்டு வரைவதும், பல கருத்துக்களை நான் தனியாக எழுதி வைத்திருந்ததை மீண்டும் என்னுடைய நினைவு ஓட்டத்தில் மீட்டெடுப்பதற்கு இது நல்ல வாய்ப்பாயிற்று.

இவ்வுலகத்தில் எதையும் தமிழில் சொன்னால், நிச்சயமாக அச்செய்தி பொன்னாகும்.

அதுபோல் சரித்திரங்களையெல்லாம் தமிழில் அழகாக, முதன் முதலாகப் புதின வகையில் எழுதிக் காட்டி, வெற்றி பெற்று எல்லோருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் கல்கி (09.09.1899 – 05.12.1954) ஆவார்.

அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘நூறு கடல்களையுடைய நூதனமான கரை’ எனலாம்.

அவருடைய ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தில் வரும்,

“தாங்கள் சொல்லிப் பாருங்கள். எனக்கு நூறு உயிர்கள் இருந்தால் அவ்வளவையும் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணம் செய்வேன்.

ஆயிரம் சாம்ராஜ்யங்கள் என் வசம் இருந்தால் அவ்வளவையும் தங்கள் விருப்பத்திற்காகத் தியாகம் செய்வேன்.

இகத்தையும் பரத்தையும் என்றென்றைக்கும் இழக்கும்படி சொன்னால் அதற்கும் சித்தமாயிருப்பேன்.

கொடிய பகைவர்களை மன்னிக்கச் சொன்னால் மன்னிப்பேன்.

அத்தியந்த நண்பர்களின் தலையைக் கொண்டு வந்து தங்கள் காலடியில் போடச் சொன்னால் போட்டுவிட்டு மறுகாரியம் பார்ப்பேன்… !

இல்லையெனின் கடல்களுக்கு அப்பாலுள்ள பவழத்தீவிலிருந்து விலைமதிக்க முடியாத பவழங்களைக் கொண்டு வரச் சொல்லுங்கள், ஆழ்கடலின் அடியில் இருந்து முத்துக்களைக் கொண்டு வரச் சொல்லுங்கள்.

மேரு மலையின் உச்சிச்சிகரத்திலே ஏறிச் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வரச் சொல்லுங்கள்.

மேக மண்டலத்துக்கு மேலே பறந்து நட்சத்திரங்களைப் பறித்துக் கொண்டு வந்து கொடுத்து ஆரம் தொடுத்துத் தங்கள் கழுத்தில் போடச் சொல்லுங்கள்.

பூரண சந்திரனைக் கொண்டு வந்து தங்களுடைய முகம் பார்க்கும் கண்ணாடியாக்கித் தரும்படி சொல்லுங்கள்”

என்ற கல்கியின் வனப்பு வரிகள் என்னை அக்காலங்களில் மிகவும் கவர்ந்தன.

மீண்டும் அதே பொன்னியின் செல்வன் புதினத்தில் இயற்கைக் கோலத்தை பேராசிரியர் கல்கி புனைந்து காட்டும் தேன்சுரக்கும் வரிகள்:

“பின்பனிக்காலம் வழக்கத்தை விட விரைவாக விடை பெற்றுக் கொண்டு சென்றது.

தென்றல் என்னும் தெய்வ ரதத்தில் ஏறிக்கொண்டு வசந்த காலம் வந்தது.

பைங்கிளிகள் மாமரங்களில் குங்கும நிறத் தளிர்களுக்கு அருகில் தங்கள் பவள வர்ண மூக்குகளை வைத்து ஒத்திட்டுப் பார்த்தன.

அரச மரங்களின் தங்க நிறத் தளிர்கள் இளங்காற்றில் அசைந்தாடி இசை பாடின.

புன்னை மரங்களிலிருந்து முத்துப்போன்ற மொட்டுக்களை உதிர்த்துக் கொண்டு குயில்கள் கோலாகலமாகக் கூவின.

இயற்கைத் தேவி உடல் சிலிர்த்தாள்.

பூமாதேவி குதூகலத்தினால் பொங்கிப் பூரித்தாள்.

இலைகள் உதிர்ந்து மொட்டையாகத் தோன்றிய மரங்களில் திடீரென்று மொட்டுக்கள் அரும்பிப் பூத்து வெடித்தன.

மாதவிப் பந்தல்களும், மல்லிகை முல்லைப் புதர்களும், பூங்கொத்துக்களின் பாரம் தாங்க முடியாமல் தவித்தன.

நதிகளில் பிரவாகம் குறைந்துவிட்டது. கரையோரமாகப் பளிங்கு போன்ற தெளிந்த நீர் சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது….

அருவி விழும்போது எழுந்த ‘சோ’ என்ற சத்தம் நூறு சிங்கங்களின் கர்ஜனையையும், இருநூறு யானைகளின் பிளிறல்களையும் விழுங்கி விடக்கூடியது.

வந்தியத்தேவனுடைய செவிகளில் ஆயிரம் கிண்கிணிகள் ஒலித்தன. வானத்திலிருந்து பொன்மழை பொழிந்தது..

தளிர்களும் மலர்களும் குலுங்கிய மரங்களின் உச்சியில் வர்ணப் பட்டுப்பூச்சிகள் இறகுகளை விரித்து நடனம் புரிந்தன.

சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும் எளியவர்களின் வாழ்வையும் காட்டியவர்களில் தலைசிறந்தவராக திரு. ஜெயகாந்தன் (24.04.1934-08.04.2015) திகழ்கிறார்.

அவருடைய ‘பாரிசுக்கு போ’ என்ற புதினத்தில் என்னைக் கவர்ந்த வரிகள்:

“இலக்கியம் என்பது ஒரு தேசத்தின், ஒரு நாகரிகத்தின், ஒரு காலத்தின். ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல்.

இலக்கியத்தின் வெற்றி என்பது காலத்தை வெல்வது, உங்களைக் கடந்து செல்வது என் வெற்றி”.

அதேபோல அவருடைய ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ கட்டுரையில் நான் கோடிட்டிருந்த வரி:

“நான் மானசீகமாய் இலக்கிய மகுடம் தரித்துக் கொண்டு எனது பழைய நாற்காலியை அரியாசனமாய் அவதானித்துக் கொண்டு இறந்த காலங்களிலேயும், எதிர்கால நூற்றாண்டுகளிலும் இலக்கியத்தில் ஏகச் சக்ராதிபத்தியம் செய்ய வேண்டும் என்னும் ஒரு மாபெரும் கனவு”.

30.7.86 அன்றைய குறிப்பேட்டில் எழுதிய வரி:

“பல நூல்களை நான் இப்பொழுது படித்துக் கொண்டிருந்தாலும் கட்டுரைகளையும், கதைகளையும் தவிர பல வல்லுநர்கள் பேசிய சொற்பொழிவுகளையும் படிக்கும் வாய்ப்பும் கிட்டியது.

அதில் நான் படித்தது துணைவேந்தர் தந்தை என்று அழைக்கப்பெற்ற ஏ.எல் முதலியாரின் (14.10.1887-15.04.1974) உரையாகும்.

முதலியார் மருத்துவராகவும், பல்லாண்டுகளாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றிய அறிஞர்.

அறிஞர்கள் உலகம் அவரை என்றும் போற்றுமாறு உயர்ந்து நின்றார்.

அவருடைய ஆங்கில உரையில் நான் திக்குமுக்காடிப் போய் விட்டேன் என்று சொல்வது மிகையாகாது.

அவருடைய ஆங்கில உரைக் குறிப்புகளை கைநோகக் குறித்துள்ளேன்.

காரணம், இந்நூலினை என்னுடைய பின்வீட்டு நண்பர் ஸ்ரீராம் தான் படிக்கும் சென்னை ஐஐடி நூலகத்திலிருந்து படிப்பதற்காக என்னிடம் தந்தது நீங்கொணாத நினைவாகும்.

அந்நூலில், குறிப்பாக ஒரே ஒரு வரியை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுவதில் நான் பெருமைப்படுகிறேன்

“Knowledge is proud that it knows so much,

while Wisdom is humble that it knows no more”

இதே வரிகளை என்னுடைய ஆருயிர் அம்மா அப்பாவின் ஆங்கில நூலின் முதல் பக்கத்தில் எழுதி வைத்திருந்ததை ஒருநாள் கண்டு என் கண்கள் கசிந்தன.

—–

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

உரைவேந்தரின் உரைத் தொடர் – (ஈ)

திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி

அலைவாய்க்கு யானைமேற் செல்லும் முருகப் பெருமான் திருவாவிநன்குடியில் சின்னாள் தங்கியிருப்பன்.

அப்போது பல்வேறு முனிவர்களும் விரதிகளும் தாபதர்களும் முன்னே வர யாழ் வன்மையும் மென்மொழியும் உடைய இசைவாணர் நரம்புக் கருவிகளை இசைத்துவர, உடல் நலமும், மேனி நலமும், கற்பு நலமும் உடைய நன் மகளிர் உடன்போந்து விளங்க, திருமாலும், உமை யமர்ந்து விளங்கும் திருமேனியையுடைய சிவபெரு மானும், வெள்ளையானையேறும் இந்திரனும், முருகனால் ஒறுக்கப்பட்ட பிரமன் பொருட்டு வந்து காண, ஆதித்தர், உருத்திரர், வசுக்கள், மருத்துக்கள் என நால்வகைய ராகிய முப்பத்து மூவரும், பதினெண் கணங்களும் தாம் உறுகுறை தீர்ந்து முறைபெறல் வேண்டி விண்மீன் போன்ற தோற்றமும் காற்றொத்த செலவும், இடி போன்ற குரலும் உடையவராய் வான் வழியாக வந்து வழிபாடு செய்வர்.

அக்காலை முருகப்பெருமான் மடந்தையோடு திருவோலக்கமிருந்து அவர்கட்குத் தன் திருவருளை வழங்குவன்.

ஆவிநன்குடி யென்பது இப்போது பழனியென வழங்கும் ஊர் ;

இது சங்க காலத்தில் பொதினியென்ற பெயருடன் ஆவியென்னும் வேளிர் தலைவனுக்கு உரியதாயிருந்தது.

இதன் அருகில் ஆய்க்குடியென இருக்கும் ஊர் ஆவிகுடி யென்பதன் மரூஉ வழக்கு.

இப்பகுதியைக் கல்வெட்டுக்கள் வையாவி நாடு என்றே குறிக்கின்றன.

ஆவிகுடியினும் இப் பொதினிப்பகுதி நன்செய்வளம சிறந்திருந்ததுபற்றி இது ஆவி நன்குடியென வழங்கிற்று.

இவ்வரலாறு விளங்காத காலத்தில் பொதினி பழனியாயிற்று ; திருவாவி நன்குடி திரு, ஆ, இனன், குடி என்று பிரிக்கப்பட்டுத் திருமகளும், காமதேனுவும், ஞாயிறும், நிலமகளும், தீக்கடவுளும் வழிபட்ட இடம் எனப் புராண வரலாறு பெறுவதாயிற்று.

திருவேரகம் என்னும் திருப்பதியில் அடியார் வழிபட முருகன் எழுந்தருளுவன்.

இந்த அடியார்கள், உயர்குடியில் தோன்றி நாற்பத்தெட்டாண்டுகள் பிரம சரியங்காத்து அறங்கூறும் கொள்கையும் நாடோறும் முத்தியோம்பும் முறைமையும் உடைய இருபிறப்பாளராகிய வேதியராவர்.

ஒவ்வொரு நாளும் காலமறிந்து வேத மோதுவது இவர்களது தொழில் ; மார்பிலே ஒன்பது புரிகொண்ட மூன்றாகிய பூணூல் அணிந்திருப்பர்.

இவர்கள் நாட்காலையில் நீராடி, ஈரவுடை தானே புலருமாறு அரையில் உடுத்து இருகைகளையும் தலைமேல் குவித்து முருகன் திருப்புகழையேத்தி , அப்பெருமானுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தை நாப்பிறழுமளவும் பன்முறையும் ஓதி மணமிக்க புதுமலர்களை அவன் திருவடியில் இட்டு வழிபடுவர்.

அவ்வழிபாட்டை முருகன் பெரிதும் உவந்தேற்று அவ்வூரிலே எழுந்தருளியிருப்பன்.

ஏரகம் என்பது தஞ்சைக்கு அருகேயுள்ள சுவாமிமலையென்று கூறுவர்.

இதற்கு அருணகிரிநாதரது திருப்புகழ் ஆதரவு தருகிறது.

நச்சினார்க்கினியர் ” மலைநாட்டகத் தொரு திருப்பதி ” என்று எழுதுகின்றார்.

தென் கன்னடத்து உடுப்பிப் பகுதியில் ஏரகம் என்ற பெயருடைய ஊர் ஒன்று உளது ; இது மலை நாட்டது ; இங்கே பழைமையான முருகன் கோயில் இருந்திருக்கிறது. ” சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும், ஏரகமும் நீங்கா இறைவன் ‘ என்ற சிலப்பதிகாரக் குன்றக்குரவை கூறும் இடங்களுள் வெண்குன்றைச் சுவாமிமலையென அரும்பதவுரைகாரர் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது.

இதனால் ஏரகத்தைப்பற்றித் துணிபு கோடற்கு நன்கு ஆராய்ச்சி செய்யவேண்டியிருக்கிறது.

முருகன் குறிஞ்சிநிலக் கடவுளாதலால், குன்றுகள் எல்லாம் அவன் விளையாட்டயரும் இடங்களாகும்.

இக்குன்றுகளில் வாழ்பவர் குறிஞ்சி நில மக்களான குறவர்க ளாவர்.

இக்குறவர்கள் முருகனை வழிபடுங்கால், இவர்களுள் வழிபாட்டுக்கென ஒருவன் இருப்பன். அவன் முருக னது வேற்படையைக் கையிலேந்தித் தன்னை இன்னான் எனத் தோற்றுவிக்கும் வகையில் இருப்பன் ; அவனை இக் குறவர்கள் வேலன் என அழைப்பர்.

பச்சிலைக்கொடியில் சாதிக்காயும், தக்கோலக்காயும் இடையிடையே விரவ, காட்டுமல்லிகையும் வெண்கூதாளியுமாகிய பூக்களைக்கலந்து கண்ணி தொடுத்துச் சென்னியிற் சூடுவன் ; மார்பின்கண் நறிய சந்தனம் பூசிக்கொள்வான் ; இவ்வேலன் முருகனை வழிபடு தற்கென ஓரிடங்கண்டு தூய்மை செய்து பச்சிலைப் பந்தரமைத்துக் கோழிக்கொடி நட்டுக் கோயிலமைப்பன். அவ்விடத்தே குறவர்கள் அனைவரும் வந்து கூடி மூங்கிற் குழாய்களில் பெய்து வைத்திருக்கும் தேன்பெய்து செய் யும் கட்டெளிவை உண்பர் ; பின்பு இளையரும் முதியரு மாகிய பலரும் கூடிக் குரவைக் கூத்தாடுவர்.

அக் காலையில் தொண்டகம் என்னும் சிறுபறை முழங்கும். அதன் தாளத்துக் கிசையவே கூத்தும் நடைபெறும்.

அவ்விடத்தே சில நல்லிள மகளிர் முருகனைச் சேவித்து நிற்பர்.

அவர் கூந்தலில் சுனைகளிற் பூத்த நீர்ப்பூக்களின் அரும்புகளைக் கொய்து அவற்றைக் கைவிரலால் அலர்த்தித் தொடுத்த கண்ணி சூட்டப்பெற்று இருக்கும்.

கண்ணிக்குப் பின்னே , வேறுபல மலர்ந்த பூக்களின் இதழ்களைப் பிரித்துத் தொடுத்த மாலை சுற்றப்படும்.

அவர்கள் இடையில் கஞ்சங்குல்லைப்பூவும் வேறுபிற பூங்கொத்துக்களும் பைந்தழைகளும் விரவித்தொடுத்த தழையுடை அணிந்திருப்பர்.

முடிமுதல் அடி காறும் பன்னிறப் பூக்களும் பைந்தழையும் புனைந்து மென்மெல இயலும் அவரது இயல் மயிலின் சாயலைக்காட்டி மாண்புறுத்துகிறது.

இந்நிலையில், யாழிசை போலும் இனிய மிடற்றோசையையுடைய மகளிர் சிலர் சேவித்துப் பாடுவர்.

இம் மகளிரிடையே முருகன் தோன்றிக் குரவை யாடும் மகளிர்க்குத் தலைக்கை தந்து அவர்களோடு குன்றுதோறும் விளையாடுவன்.

அவனுடைய பண்புகளுள் இதுவும் ஒன்றாகும்.

இவ்வாறு விளையாடுமிடத்து அவன் சிவந்த ஆடையணிந்து காதில் காம்பு சிவந்த அசோகக் தளிரைச் செருகிக்கொள்வன்.

இடையிற் கச்சையும் காலிற் கழலும் அணிந்துகொண்டு, வெட்சிப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியைத் தலையிற் சூடுவன்.

ஒரு பால் குழலும் , ஒருபால் கொம்பும், ஒருபால் குறிய பல இயங்களும் இசைக்க, யாட்டுக்கிடா பின்வரத் தான் மயில் மேலேறிக் கோழிக்கொடி உயரத்திற் பறக்க நெடியோனாய்க் காட்சி நல்குவன்.

அவன் தோளில் தொடி கிடந்து அழகு திகழும்.

இடையில் கட்டிய அரைக்கச்சையின் மேலே கிடந்து நிலத்தளவும் தொங்குமாறு மேலாடை தரித்துக் கொள்வன்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *