இரண்டாம் தவணை தடுப்பூ இட்டுக்கொண்டோம் !
நான் – என் மகன் அருளும் காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை சென்று இரண்டாம் தவணை(12.4.2021) தடுப்பூசி இட்டுக்கொண்டோம் .
மருத்துவத்திலகமாகவும் – இராம வாரிதிச்சுடராகவும் திகழும் டாக்டர் பிரியா இராமச்சந்திரன் அவர்களே வந்திருந்து மேற்பார்வையிட்டார்கள் .
என்னுடைய தனிச் செயலாளர் பொன்னேரி பிரதாப் என்னைச் சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்றார் .
மருத்துவமனையின் அலுவலர்களின் பொறுப்புணர்வும் – செவிலியர்களின் பரிவும் என்னைப் பெரிதும் கவர்ந்தன .
வாக்களிப்பது போல இதுவும் காலத்தினால் செய்துகொள்ளும் உயிர்க் கடமையாகும் .
அனைவரும் ஏற்க முன்வரவேண்டும் .
அச்சம் சிலரிடம் காணப்படுகிறது .அதட்டவும் முடியவில்லை .
அளிப்பு ஏதேனும் செய்ய எந்த முயற்சியும் இல்லை.
காவல்துறை ,அங்காடிகள் ,வங்கிகள், உணவுக்கூடங்கள் ,நிறுவனங்கள் விழிப்போடு இதனை நிறைவேற்ற முடியும் .
கடுமையான வலியோ ,பிற நோய்களைக் காட்டியோ தடை வேண்டியதில்லை.
எப்படிச்செய்தால் முழு வெற்றி பெறலாம் என்று அரசு மேலும் ஆராயலாம் .
கருணையே வடிவமான தாரா அம்மையார் சிறிது காத்திருந்திருந்திருக்கலாம் .இல்லாமல் சென்றார்களே என்றெழுதிய ஏர்வாடியாரின் ஏக்கம் எங்களை அழவைத்தது .
ஊதியம் தருகிற நாளில் நிதியட்டை (ஏ டி எம் ) நிறுத்தம் .தடுப்பூசி கொள்ளாதவர்களுக்குச் செயற்படாது ,கைபேசி இயங்காது என்றெல்லாம் ஆணையிட்டால் என்ன என்று நினைக்கத் தோன்றியது .
எங்கள் எதிரிலேயே ஓட்டுநர் இதுவரை எட்டுக் காரணங்களைச் சொல்லித் தப்பித்து வருகிறார்.
நோயின் கொடுமை நொடிக்கு நொடி அவலத்தை எட்டுகிற போது தடுப்பூசி வாராது வந்த மாமணி என்று மனதார வரவேற்க வேண்டாமா !
” ஏவவும் செய்கலான் தான் தேறான் ” என்று அரசே பிறரை நொந்து கொண்டு தவிக்கலாமா ?
மக்களால் மக்களுக்காக மக்கள் நடத்தும் மக்களாட்சி
மாண்புடையதாயிற்றே !
ஒளவை நடராசன்

Add a Comment