சிரிக்க வைத்தார் – இன்று கண்ணீர் சிந்த வைத்தாரே !
தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறையில் நான் அரசு செயலராக இருந்த போது தலைமைச் செயலக அலுவலர்கள் நாடகக் குழுவை நடத்துவதாகவும் அவர்கள் புதுதில்லி சென்று வர விடுமுறையும் – கட்டணச் செலவுத் தவிர்ப்பையும் ஏற்று இசைவளித்துப் பண்பாட்டுத்துறை ஆணையிட வேண்டும் .
இந்தக்கோப்பு எப்படியோ துணைச்செயலாளரிடம் தங்கிவிட்டது .
அப்போது வந்த நால்வருள் திரு .விவேக்கும் இருந்தார் .
பண்பாட்டுத்துறையில் எங்கள் கோப்பு படும் பாட்டை நீங்கள் உடனே நீக்க வேண்டும் என்று துணிவாகச் சொன்னார் .
நான் சிரித்துக்கொண்டு உடனே ஆணை வழங்கினேன் .
அன்று தொடங்கிய பரிவு நேற்று வரை இருந்தது .
முத்தமிழ்க்கலைஞருக்கு நடந்த புகழ் வணக்கக் கூட்டத்தில் ( 19 8 2018 ) என் அருகில் உரிமையோடு வந்து அமர்ந்தார் .
உங்கள் பக்கத்தில் அமர்வதற்கு முப்பது வருடங்கள் ஆயிற்று என்றார் .
எனக்கு என்னமோ நீங்கள்
என் நெஞ்சிலேயே முப்பது ஆண்டுகளாக இடம் பிடித்து இருக்கிறீர்கள் என்றேன் .
என் இரு கையையும் பற்றி
கண்ணில் சேர்த்துக் கொண்டார் .
வட சென்னையில் தனியார் மகளிர் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவச் செல்வங்கள் அனைவரும் விவேக்கைப் பார்க்கத் தவிக்கிறார்கள் நீங்கள் சொன்னால் வருவாராம் என்று தலைமையாசிரியர் ஆழாக் குறையாகச் சொன்னார் .
எதிர்பாராமல் அவர் வீட்டுத் தொலைபேசியை அவரே எடுத்தார் .
நீங்கள் வந்தால் நான் வருகிறேன் என்றார் .
தலைமையாசிரியருக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி .
நடிகர் விவேக் சென்றார் .
நான் செல்ல முடியாது போயிற்று .
அவ்வளவு பெரிய கூட்டமாம் .குழந்தைகள் அவரைக் கொண்டாடித் துள்ளிக் குதித்தார்களாம்
.மறுநாள் நான் கேட்டேன் , எப்படி இருந்தது கூட்டம் என்று ?
அவர் சொன்ன பதில் ,
நான் சிரிக்கச் சிரிக்கப் பேசினேன் .நீங்கள் தான் வராமல் என்னை அழ வைத்து விட்டீர்கள் என்றார் .
காலம் உருண்டோடிவிட்டது…. என்னைப்போல் தளர்ந்தவர்களும் – நலிந்தவர்களும் இன்னும் இருக்கும்போது
விவேக்கை எவர் பறித்தார்கள் !
இது தான் காலம் செய்த அலங்கோலம் .
விவேக் தான் என்னை இப்போது அழ வைத்து விட்டார் .
சிரிப்பு என்பது உதட்டைப் பிரிப்பதல்ல – உள்ளத்தில் சிந்தனை விதைகளைத் தெளிப்பதும் அது தான் .
” இளங் கலைவாணர் (19.11.1961-17.4.2021) தன் ஈகைக் கரங்களால் தொட்டு நட்ட பசுங்கன்றுகளெல்லாம் – செடி கொடிகளெல்லாம் , மரங்களாக நின்று பல்லாண்டுகளுக்கு நிழல் பரப்பும் – வீசுகிற தென்றல் விவேக்கின் பெயரை முணுமுணுக்கும் .
விவேக்கின் குடும்பத்தார்க்கு என் ஆறுதலை எப்படிச் சொல்ல முடியும் ! .
அந்த இளங்கொடிகளுக்குப் பாரியின் தேர் நின்று புகழ் பெருக்குமாக !
ஒளவை நடராசன்

Add a Comment