உரைவேந்தர் ஔவை துரைசாமி அறக்கட்டளை முன்னிலை உரை
முனைவர் ந. அருள் (15.02.2021)
இடம்: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், நன்பகல் 12.45 மணி
மதிப்பிற்குரிய தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பெருந்தகை அண்ணன் கோவியார் அவர்களே!
பேராசிரியர் மணவழகன் அவர்களே!
அகரமுதலியைச் சார்ந்த அண்ணன் கண்ணன் அவர்களே!
பேராசிரியர் கலியாணராமன் அவர்களே!
வருகை புரிந்து இருக்கின்ற பெருமக்களே!
மாணவச் செல்வங்களே…
வணக்கம்.
சென்ற ஆண்டு,(14.3.2020) நானும் அண்ணனும் திருமதி சாந்தகுமாரி சிவாகடாட்சம் எழுதிய பயண நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிறகு முதன்முறையாகக் கொடுந்தீநுண்மியால் இடர்ப்பட்டு ஆறு திங்களுக்கு முன்பு என்னுடைய அருமைத் தாயாரையும்(14.8.2020) இழந்த பிறகு, இதுதான் நான் கலந்து கொள்ளும் 276 நாட்கள் கழித்து முதல் கூட்டமாகும்.
பதினைந்து வயது வரை என்னுடைய பாட்டனாரான உரைவேந்தரை நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
சென்னையில் அவருடன் ஈராண்டுகள் அவரின் தமிழால் தழைத்து வளரப் பெற்றிருக்கிறேன்.
அமெரிக்கா வாழ் பேராசிரியர் வைதேகி எர்பர்ட்டு நன்முயற்சியால் இவ்வறக்கட்டளை நிறுவப்பெற்றுள்ளது.
அவர்களுடைய புலமைக்குத் தமிழக அரசின் ஜி.யு.போப் மொழிபெயர்ப்பாளர் விருதும் கிடைக்கப்பெற்றது நாமெல்லாம் அறிந்ததாகும்.
பேராசிரியர் வைதேகி அமெரிக்காவிலுள்ள அவாய்த் தீவில் இருக்கிறார்கள்.
அவர்கள் படித்தது உரைவேந்தரின் புறநானூறு உரைதான்.
அதை நினைந்து, ‘உங்கள் பாட்டனார் பெயரிலேயே இந்த அறக்கட்டளையை நான் நிறுவுகிறேன்’ என்று சொல்லி அவருடைய பெருந்தன்மையினால் உரைவேந்தர் அறக்கட்டளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ளது.
அவர்கள் பலமுறை என்னிடம் சொல்வது உங்கள் தாத்தாவை வணங்காத நாளில்லை. உரைவேந்தருடைய தமிழ்ப்பணி ஒப்பில்லாதது என்பார்கள்.
தென்னார்க்காடு மாவட்டத்து ஔவையார் குப்பத்தில் சுந்தரம் பிள்ளைக்கும், சந்திரமதியம்மைக்கும் (05.09.1903) ஐந்தாம் மகனாக ஔவை சு. துரைசாமி பிறந்தவராவார்.
இளமையில் சீர்காழி கோவிந்தசாமி ரெட்டியார் பால் கல்வி பயின்று பின்பு திண்டிவனம் அமெரிக்கன் உயர்நிலைப்பள்ளியிலும் பின்பு வேலூர் ஊரிசுக் கல்லூரியிலும் படித்து, முடிவில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்து கரந்தைக் கவியரசர் இரா. வேங்கடாசலம் பிள்ளையவர்களிடம் தமிழ்ப்பயிற்சி பெற்று சென்னைப் பலகலைக்கழகத்து வித்துவான் பட்டம் பெற்றவராவார்.
உரைவேந்தர் முதன்முதலாக எழுதியது ‘திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிக உரையாகும்’.
ஓய்வு பெற்ற பிறகு வெளியிட்டது 1600 பக்கங்கள் கொண்ட நற்றிணை விளக்கவுரையாகும்.
என்னுடைய பாட்டனாருக்கு மணி விழா(1963) நடந்த பொழுது நானிலம் போற்றும் கவிஞர் மீரா எழுதிய பாடல் வரிகளை, உரைவேந்தரின் அருமை மருமகள் திருமதி சீதை மெய்கண்டான் நெகிழ்ந்து பாடியதை இத்தருணத்தில் கேட்போமாக! (இணைப்பு:- பாடல் ஒலிக் கோப்பு).
மாநிலக் கல்லூரியில் நான் இளங்கலை தமிழிலக்கியம் பயிலுங்கால் என் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் எங்கள் வகுப்பில் மாணவர்கள் மத்தியில் தான் தமிழ் முதுகலை பயிலும்பொழுது என்னுடைய பாட்டனார் உரைவேந்தர் தான் தன்னுடைய ஆசான் என்றும், தொல்காப்பியம் உவமையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு விளக்கம் வழங்குகையில் சங்க இலக்கியங்களையும், பாரதிதாசன் பாடல்களையும், மேற்கோள் காட்டுவார் என்றும் பாரதிதாசனைப் பயிலவேண்டிய புலமைசால் அணுகுமுறையை உரைவேந்தரே எங்களுக்கு அறிமுகப் படுத்தினார் என்றும் பெருமையாகச் சொல்வார்.
பேராசிரியப் பெருந்தகை கல்யாணராமன் உரைவேந்தரின் நூல்களை நுண்ணாய்ந்து அறக்கட்டளைப் பொழிவாற்ற குமரிமுனையிலிருந்து வந்துள்ளார்.
பேராசிரியர் கல்யாணராமன் உயர்ந்த சிந்தனையுடையவர். உயர்ந்த செயலைத் தேர்ந்தெடுப்பார். உயரிய செம்மல். உயரத்திலும் தான்.
எளிய மாணவர்களைத் தோளில் சுமந்து பாராட்டுவார் .பிறரிடம் சென்று தனக்கு என்று எதுவும் கேட்டதில்லை.
எத்தனை மாணவர்களுக்கு பாடநூல்களையும் வாங்கித்தந்தார். கல்லூரிக்கட்டணம் செலுத்தினார் என்று நான் நன்றாக அறிவேன். “தடைக்கற்கள் உண்டென்றால் தடந்தோளுண்டு” என்ற பாவேந்தரின் தொடர்கள் இவருக்குப் பெரிதும் பொருந்தும்.
சங்க இலக்கியத்திற்கும், புத்தாக்க புதின உலகத்திற்கும் பாலமாக விளங்கும் போராசிரியரின் உரையைக் கேட்டு மகிழ்வோமாக!
வாய்ப்புத்தந்த அறக்கட்டளைச் செம்மல் டாக்டர் விசயராகவனுக்கும், பேராசிரியர் மணவழகனுக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.
வணக்கம்.

Add a Comment