ஔவை நடராசன்
24.04.2021
86-ஆம் பிறந்தநாள்
ஆற்றல் அருவியைப் போற்றுகிறேன்! பல்லாண்டுப் பாடுகிறேன்!
‘சொல்லின் செல்வர்’ சுகிசிவம்
என் வாழ்வின் சிந்தனைப்போக்கை மாற்றியமைத்து, எனக்குள் ஆழமான பல அலைகளை உருவாக்கிய ஒளவை நடராசன் அவர்களை நான் எப்போதும் நன்றியோடு பாராட்டுகிறேன்.
ஔவைக்கு ஒரு முகம் அல்ல. பல முகம் உண்டு. பன்முகத்திறமையும் உண்டு.
அவரோடு பழகிப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். வெளியில் தெரிந்திருக்கிற – வெளியுலகத்தில் நமக்கு அறிமுகமாகி இருக்கும் பேரறிஞர், மூதறிஞர் ஔவை என்பது ஒரு தனி நிலை.
நல்ல முறையில் நட்பு வட்டத்தோடு, அவரோடு கூடவே இருந்து பார்த்துப், புரிந்து வைத்துக்கொண்டிருக்கும் ஔவை ஒரு தனித்த ஔவை.
எனக்கொரு பெரிய வாய்ப்பு, அருட்செல்வர் அவர்களின் இராமலிங்கர் பணி மன்றத்தில் ஒரு பத்தாண்டுக் காலம் மேடை விழாக்கள் நடைபெறும்போது, வருகிறவர்களை வரவேற்பது, உபசரிப்பது போன்ற பணிகளை நானும் நண்பர் இரவி போன்றவர்களும் செய்யும்போது, அவர் கூடவே இருப்போம்.
கல்லூரிக்குச் செல்லாமல் நாங்கள் அவரிடத்தில்தான் கற்றோம்.
அதுவரைக்கும் நாங்கள் ஒழுங்காகக் கல்லூரிக்குச் சென்று வந்தோம் . எங்களிடம் கல்லூரிக்கெல்லாம் போய் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்ற முதல் இலக்கணத்தை எனக்குப் புன்னகையாக நடத்தியவர் ஒளவை தான்.
அதைவிட நான் ஒரு உண்மை சொல்லட்டுமா ?
கல்லூரிக்குப் போயிருந்தால் நான் என்ன கற்றிருக்க முடியுமோ அதைவிட அதிகம் கற்றுக்கொடுத்தவர் ஔவை.
ஏனென்றால், பேசிக்கொண்டே இருக்கும்போது, நற்றிணைக்கு விளக்கம் சொல்வார், சிலப்பதிகாரத்திற்கு விரிவுரை சொல்வார்.
யாராவது பேச்சாளர் பேசியிருப்பார். அவர் சொல்வது எப்படிப் பொருந்தும், அதற்கு இது பொருள் கிடையாது, இதை மேடையில் சொல்ல முடியாது. ஆனால், எங்களிடம் சொல்வார். அதற்கு உண்மையான பொருளுரை என்னவென்று எங்களிடம் புரிய வைப்பார் .
இதை எந்தப் புத்தகத்தில் போய்ப் படிக்க முடியும்?
நீங்களெல்லாம் இந்த பல்கலைக்கழகத்திற்கு வெளியில் இருந்து படித்தவர்கள்.
நான் பக்கத்தில் இருந்து படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அவருடைய அறிவு அவ்வளவு ஆழங்கால் பட்டது.
சிலம்பொலி ஐயா நகைச்சுவையாக ஒரு முறை செய்தி ஒன்று சொன்னார். ஒளவைக்கு அது நூற்றுக்கு நூறு பொருந்தும்.
“ஒரு பற்றாளர் என்ற தீவிரத்தன்மையோடு சிலர் சில செய்திகளுக்குச் சென்று சிக்கிக்கொள்கிறார்களே? அவர்கள் ஞானம் அடையவே முடியாது. எந்த மிகைப்பற்றாளனும் ஞானம் அடைந்ததாக வரலாறே இல்லை. ஆனால், நடுநின்ற நடுவாக யாரால் இருக்க முடிகிறதோ? அவர்கள்தான் நிறைவான ஞானத்தை நோக்கிப் பயணிக்க முடியும்.
தெரிந்து வைத்தார்களோ, தெரியாமல் வைத்தார்களோ, திருவருட்பா படித்ததால் வந்ததோ, படிக்காமல் வந்ததோ, நடுநின்ற நடுவாக நிற்கத்தெரிந்தவர்”. எங்கள் ஒளவை நடராசன். நடுநின்ற நடு
ஔவையிடம் நாங்கள் படித்தப் படிப்பு எளிதானது அல்ல
,எங்கும் கிடைக்காத புதையல் , உண்மையிலேயே அவ்வளவு வியப்பான படிப்பு.
ஒளவை ஐயா என்றால் எங்களுக்குப் பாசம் அதிகம்.
நாங்கள் இராமலிங்கர் பணிமன்ற விழாவில் இருக்கிறபோது, ஒருமுறை அருட்செல்வரும், ஒளவையும் வந்துகொண்டிருந்தார்கள் .
எங்களுக்கு ஔவை என்றால் உயிர், அருட்செல்வர் ஐயாவுடன் அப்போதுதான் பழக்கம்.
நானும் இரவியும் ஔவையைப் பார்த்து, “சார் வணக்கம், சார் வணக்கம்” என்றோம்.
“IG-யோடு, Constable வரும்போது, Constable-க்கு Good Morning சொல்கிறீர்களே, Constable வேலை போய்விடுமே, உங்களுக்கு IG யாரு? Constable யாருன்னு தெரியவில்லையே?” என்று நிகழ்ச்சி முடிந்தவுடன், எங்களை அழைத்து, எவரை எப்படி அணுகி அவர் மனத்தில் இடம்பெற முடியும் என்ற நுட்பத்தை எங்களுக்கு நயமாகச் சொல்லிக் கொடுத்தவர் ஔவையாவார்.
இதனை இப்போது நான் நன்குணர்கிறேன்.
ஒருநாள் இரவிக்கும் – ஒளவை ஐயாவுக்கும் இடையில் ஒரு சிறிய கருத்து வேறுபாடு…
யாரோ ஏற்படுத்திவிட்டது. அப்போது, ஔவை அவர்கள் மேடையில் அமர்ந்திருந்தார் .
இரவி அப்போது வந்தார். அப்போது ஒரு சீட்டு எடுத்து, இரண்டு வரிகள் எழுதினார்.
“ஆரார் எது சொன்னபோதும் யாழா முழவோடு மோதும்?”
ஒரு சங்க இலக்கியப் புலவன் எழுதிய கவிதையும், ஔவையின் இந்தக் கவிதையும் ஒற்றைத் தன்மையுடையன.
எவ்வளவு பெரிய கவிஞர் என்று எளிதில் காட்டிய மகா இரசிகர் ஔவையாவார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஒரு சிறப்பு கிடைத்தபோது, மத்திய அமைச்சர் ஒருவர் வந்து பாராட்டினார். “It is yet another feather on his cap” என்று ஒரு தொடரைச் சொன்னார்.
இது ஆங்கிலத்தில் பயன்படுத்துகிற ஒரு எளிமையான தொடர் தான்.
வேறு எந்த மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும், ‘இது அவரின் தொப்பியில் குத்தப்பட்ட மற்றொரு இறகு’ என்று மொழிபெயர்த்திருப்பார்.
ஆனால், ஔவை நடராசன் ,
“இது மன்னாதி மன்னனின் மணி மகுடத்தில் மற்றுமொரு மாணிக்கக்கல்” என்று உரை பெயர்த்தார்.
இதையெல்லாம் கேட்டு, நான் அந்நாளில் வியந்திருக்கிறேன்
. எப்படி இந்த மனிதருக்கு சொற்கள் அருவியாகக் கொட்டுகின்றன ? எவ்வளவு தெளிவு?
என்ன அழகான மொழியாளுமை ? அப்படியே திகைத்துப் போனேன்.
நான் இன்றைக்கு வாழ்வில் ஓரளவு உயர்ந்த நிலையில் இருக்கிறேன் என்று சொன்னால், அதில் நான் நன்றிக்கடன் பட்டிருக்கும் நான்கைந்து நபர்களில் மிகமிகமிக குறிப்பிடத்தக்கவர் பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் ஆவார்.
ஒரு பேச்சை எப்படி வடிவமைக்க வேண்டும்,
எப்படிச் சிந்திக்க வேண்டும்,
இதில் போய் தேவையில்லாமல் விடாப்பிடியாக மூழ்கிவிடக் கூடாது. இரண்டு தரப்பையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் நமக்கு இருக்க வேண்டும் என்று பட்டிமண்டபத்தில் அடிக்கடி சொல்வார்.
அந்த நடுநின்ற நடுவில் நிற்றல் என்ற கலையை எனக்கு தொடக்கத்திலேயே கற்றுக்கொடுத்த பெருமை ஔவை அவர்களுக்கு உண்டு.
அவர் என்னை அறிமுகம் செய்த ஒரு நிகழ்ச்சியயை இப்போது நினைவு கூர்கிறேன்.
யாருமே செய்யத்துணியாத செயலை, என் வாழ்க்கையில் எனக்கு அவர் செய்தார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையில் விழா. அதுவும் அவர் முதலமைச்சராக புகழின் உச்சத்தில் இருக்கின்ற காலம் அது.
அது ஒரு கவியரங்கம். அந்தக் கவியரங்கத்தில், ஔவை நடராசன் அவர்கள் கவிதை பாடுவதாகப் போட்டிருந்தது.
கவிக்கோ அப்துல் ரகுமான், பொன்னிவளவன், முருகுசுந்தரம் என்று ஆறு அல்லது ஏழு கவியரசர்கள் பாடினார்கள்.
அதில் டாக்டர். ஔவை நடராசன் அவர்களும் கவிதைப் பாடுவதாக கவியரங்க அழைப்பிதழில் அச்சிட்டிருந்தது.
“சுகி நான் ஒரு வேலையாகச் செல்ல வேண்டிருக்கிறது, கவியரங்கத்திற்கு நான் செல்லவில்லையென்றால் தப்பாகிவிடும், ஏனென்றால் முதல்வர் தலைமையில் நடைபெறும் கவியரங்கம்.. நீங்கள் ஒன்று செய்யுங்கள். கவிதை எழுதுங்கள். நான் படிக்கிற மாதிரியே படித்துவிடுங்கள். போய் வாருங்கள்” என்றார்.
என்னைப்போலவே ஏன் எனக்கு மேலாகவே உனக்குத் தகுதியிருக்கிறது.
வாய் திறந்தால் வெண்பா பாடுவது உனக்கு வழக்கமாயிற்றே என்றும் பாராட்டிச் சொன்னார்.
நான் சொன்னேன், முதல்வர் மேடையில், நான் ஒரு கல்லூரி மாணவனாயிற்றே, நான் போய் நின்றால் எப்படி மதிப்பார்கள், நான் யாரென்றே தெரியாது என்றேன்.
“அப்படி அஞ்சாதீர்கள், அண்ணன் கவிஞர் கருணானந்தம் அவர்களிடம் விவரம் சொல்லிவிட்டேன்” என்றார் ஔவை.
அரங்கத்தில் நுழைந்ததும், முதலமைச்சருக்குக் கூட சின்ன கோபம் .ஔவை வரவில்லையென்று. அறிமுகம் பாட வேண்டிய கலைஞர் அறிமுகம் பாடவேயில்லை. அவரை படிக்கச்சொல்லுங்கள் என்றார்.
என்னுடைய துணிவால் அவையை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் அவையை ஈர்த்தேன்.
உடனே கலைஞர் என்னை நிறுத்திச்சொல்லி,
“சிறுவனென்று பார்த்தேன், நீ ஒரு சிறுத்தைக்குட்டி” என்று பாராட்டினார்.
என் வாழ்க்கையில் எனக்கு ஒரு பெரிய ஏற்றம் வருவதற்கு காரணமாக இச் சம்பவம் அமைந்தது.
ஒளவையின் பெருந்தமையை எண்ணிப்பார்த்தேன், நெகிழ்ந்தேன். வாழ்க்கையில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நடுவில் புகழோடு மிளிர்வதற்கு ஒரு மேடையை, தனக்கு வாய்த்த ஒரு மேடையை, மற்றவர்களுக்கு அளிக்க முன்வருவார்களா? அதை எனக்கு அளித்து என் வாழ்க்கையில் மிகப்பெரிய ஏற்றத்தை எனக்கு ஏற்படுத்தித்தந்த அந்த நன்றி, நான் அவருக்கு தெரிவிக்க வேண்டிய மிகப்பெரிய நன்றி.
“நான் பாய்ந்தது எட்டடி தான் சிவம் பாய்ந்ததோ இருபதடி”
என்று ஔவை பெருமிதமாகச் சொன்னது இன்றும் என் செவிகளில் ரீங்காரமிடுகிறது.
எங்கள் மாணவப் பருவத்தில் எந்த வளர்ச்சியும் இல்லாத எங்களுக்காக நேரத்தையும், இடத்தையும் ஒதுக்கி, இதயத்தில் ஒரு இடத்தையும் ஒதுக்கி எங்களுக்காக அந்த பரிவு காட்டினாரே!
அந்தப் பரிவு தான் ஐம்பதாண்டு உறவாக ( இன்று அவருடைய பிறந்த நாளைக் கணக்கிட்டால் நீண்டதாகும்).
ஒருவரைக்கூட அவர் நோகடித்ததாக வரலாறே கிடையாது.
யார் வந்தாலும் அமர வைத்து மரியாதை கொடுப்பார்.
எங்களுக்கு வாழ்க்கைக்கு வேண்டிய பயிற்சியை அளவில்லாமல் வழங்கிய பெருந்தகையாவார்.
இன்றைக்கு ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவர் புகழின் உச்சியில் இருக்கிறார்கள்.
அரசியலில் ஒரு பெருமகனார் உச்சியில் இருக்கிறார். இலக்கியத்தில் ஒருவர் உயரிய நிலையில் இருக்கிறார்.
சமய உலகில் ஒருவர் பெரிய நிலையில் இருக்கிறார்.
ஒன்றை மறந்துவிடாதீர்கள். இன்றைக்குத் தமிழகத்தின் பல திசைகளில் பலபேர் பெரிய நிலையில் இருந்தவர்கள் ஔவையால் வளர்த்துவிடப்பட்டவர்கள் என்பதுதான் உண்மையிலும் மிகப்பெரிய உண்மை.
பலபேர் உயரத்தில் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் மிக இளமையாக இருந்த காலத்தில் அன்பு பாராட்டித் தந்தையைவிட மிக அன்போடு பாராட்டி வளர்த்த பெருமை ஔவைக்கு மட்டுமே உரியது.
அவர் ஒரு பேச்சாளர் மட்டுமல்ல…. ஒரு நல்ல சிந்தனையாளர்.
நானும் பலபேரைச் சந்தித்திருக்கிறேன்.
ஏதாவது ஒரு சமயத்திலாவது விளையாட்டாக, வருத்தமாக எதையாவது சொல்லிப் புலம்புவார்கள்.
ஒரு நாள்கூடத் தன் சொந்த சோகத்தை சொல்லி ஒளவை புலம்பியதாக வரலாறே கிடையாது.
எங்கு இருக்கிறாரோ அந்த இடத்தை உற்சாகமாக வைத்திருப்பார்.
ஆனால் என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை.
தொலைபேசியில் துடித்து துடித்து – கதறிக்கதறி ஒரே முறை அழுதார்.
டாக்டர் தாரா அம்மையாரின் மறைவின் போதுதான்.
நான் சொன்னேன்
‘தமிழ்தான் உங்களுக்கு ஆறுதல். எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்று அடிக்கடி எங்களிடம் குறிப்பிடுவீர்களே! அது உங்களுக்கும் பொருந்தட்டும்’ என்றுதான் நான் சொல்ல நேர்ந்தது.
இன்றைக்கு (24.04.2021) அவருடைய 86-ஆவது பிறந்த நாளாகும்.
வாழ்வாங்கு வாழுமாறு, பல்லாண்டு பல்லாண்டுப் பாடி மகிழ்கிறேன்.

Add a Comment