POST: 2021-04-26T11:49:45+05:30

கட்டுரை
======
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 83

மாநாட்டில் மகிழும் மனம்

முனைவர் ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

தமிழ் மக்களுக்குத் தம் மொழியின் மீது ஆறாக்காதல் ஊனிலும் உயிரிலும் கலந்த உணர்வாக நெடுங்காலமாகவே மிளிர்கிறது .

தமிழைக் கடவுள் ,மாந்தர்க்கு உயிர் அனைத்து உறவுகளையும் விஞ்சிய ஒப்பற்ற உறவு என்று போற்றுவது மரபு .

மேலும் தமிழ்மொழியும் தமிழ்மக்களும் தொன்மைப் பெருமையைத் தமக்கு வாய்த்த மிகப்பெரிய செல்வமாகக் கருதினர் .

வாழ்க்கை ,கல்வி ,அறிவு, இன்பம் இவற்றை விடத் தமிழ் மேலானது என்று மகிழ்ந்தனர் .

திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் பழங்குடியென்னும் சொல்லுக்குத் ” தொன்று தொட்டு வருகின்ற குடி ” என்று பொருள் கூறி ” தொன்றுதொட்டு வருதல் சேர, சோழ, பாண்டியன் என்றார் போலப் படைப்புக்காலத் தொடங்கி மேம்பட்டு வருதல் ” என்று விளக்கியுள்ளார் .

உலகத் தோற்றத்தின் போது தமிழ் மக்கள் இருந்திருத்தல் வேண்டுமென்பது அவர் கருத்தாக இதனால் தெரிய வருகிறது .

புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூலுள் தமிழ்வீரரின் குடிநிலையை விளக்கவந்த வெண்பாவில் ” கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு , முன்தோன்றி மூத்தகுடி ” என்று அதன் ஆசிரியர் குறித்துள்ளார் .

கடையூழி வெள்ளம் விட்டு நீங்க , முற்பட மலைதோன்றி நிலம் தோன்றாத நிலையில் வாளுடனே எல்லாரிலும் முற்பட மலையிடத்திலே தோன்றிப் பழையதாகிய குடி என்பது அவ்வடிகளின் பொருள் பரிமேலழகருக்குக் காலத்தால் முற்பட்ட இந்நூலாசிரியருக்குத் தமிழ்மக்கள் படைப்புக்காலந் தொட்டு மேம்பட்டு வருகின்றவர்கள் என்ற கருத்தின் உறுதியும் இங்கே காணலாம் .

” மங்கை ஒருத்தி தரும் சுகமும் எங்கள் மாத்தமிழுக்கு ஈடில்லை ” என்றார் பாவேந்தர் .

தன் மகவைக் கண்ணுக்குக் கண்ணாகப் போற்றி வளர்க்கும் தாய் எந்நேரத்தில் , எங்கிருந்தேனும் இடர் வருமோ என்று ஏங்கி மார்போடணைத்து மடியை விட்டு நழுவாமல் கண்ணிமை போல் காத்து வருகிறார் .

கண்ணன் இள மகவாகத் தொட்டிலில் கிடந்த போது தொட்டிலைச் சுற்றிச் சுற்றி கூர்வேலோடு தந்தை நந்தன் விழிப்போடிருந்தான் .என்பர் .

” கரும்பே ,தீச்சாறே ! கனியே ,சுளையே ,அரும்பின் நகையே , அணிதந்த செந்தமிழே ,அன்பே ” என்று கொஞ்சிக் குலவும் தாய்க்கு நெஞ்சம் பதறுகிறதாம் .

தமிழே உன் எழிலை ஈடழித்து வரும் கொடுமையை நினைத்தால் நெஞ்சு பதைக்கும் .சாற்றவாய் பதைக்கும் என்று அன்னை பதறுகிறாளாம் .

புரட்சிக்கவிஞர் தாம் அன்னையாக நின்று தமிழ்க்குழந்தையை அப்படி அரவணைக்கிறார் .

நாளும் தன் குழந்தைக்குத் திருநாளாகவும் , அனைவரையும் அழைத்துக் குழந்தைக்கு அணி மணி பூட்டிக் கொண்டாடுவதும் இயல்பு .

அன்பு ஆர்வமாகி , ஆர்வம் உணர்ச்சியாகி , உணர்ச்சி எழுச்சியாகி – இயக்கமாக அமைய வேண்டும் .

புலவர்கள் ஒன்றாகக்கூடி நன்றாக எண்ணி நலம் செய்ய வேண்டும் என்பது தான் புலவர் கூடல் – தமிழ்ச்சங்கம் என்று மிளிர்ந்தது .

இந்த நினைவில்தான் உலகத்தமிழ் மாநாடு காண அறிஞர் உலகம் விரும்பியது .

பேரறிஞர் அண்ணாவும் ,முத்தமிழ்க் கலைஞரும் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டைச் சென்னையில் வரலாற்று விழாவாக வடிவமைத்துப் போற்றினர் .

அந்தத் தொடரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை கூடல் மாமதுரையில் ,மக்கள் வெள்ளம் நிரம்பி வழிய மாட்சி பெருகிய மாநாடாகப் புரட்சித்தலைவர் நடத்தினார் .

அப்போது கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் கட்டுரை படித்தார் .

அறிஞர் பலரோடு கலந்துரையாடி , ஐம்பது முறையேனும் திருத்தமும் – வடிவமும் பெற்றுப் புரட்சித்தலைவர் பெயரில் வெளிவந்ததே இனிவரும் கட்டுரை . .

”தமிழுக்கும் அமுதென்று பேர் ! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ! ”

,என்று அழகாக எடுத்துச் சொன்னார் பாவேந்தர் பாரதிதாசன்.

” யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்”

என்று பெருமிதம் பொங்கிட முழங்கினார் மகாகவி பாரதியார்.

உலகத்தின் இருளை அகற்றுவதில் ஒப்பற்று நிற்பன ” மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று, ஏனையது தன்னேர் இலாத தமிழ் ” என்று ஒரு மேற்கோள் பாடல் குறிப்பிடுகின்றது.

‘ ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன் – இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் ” என்று ‘ தமிழ்விடு தூது ‘ கோடிட்டுக் காட்டியது .”

இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் ” என்றும் ‘ தேனுறை தமிழ் ‘ என்று கல்லாடமும், ‘ தமிழ் தழீ இய சாயல் ‘ என்று சிந்தாமணியும் போற்றுகின்றன.

” பொருப்பிலே பிறந்து தென்னன்

புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே இருந்து வையை

ஏட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர்

நினைவிலே நடந்து ஓர் ஏன மருப்பிலே பயின்ற பாவை

மருங்கிலே வளரு கின்றாள் ”

என்று வில்லிபாரதப் பாயிரம் வியந்து பாடியது .

” தண்டமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இக்

கொழி தமிழ்ப் பெருமை யார் அறிவார் ?

என்று குமரகுருபரர் குறிப்பிட்டார் .

” எத்திசையும் புகழ். மணக்க இருந்த பெருந்தமிழ் அணங்கே ” என்று மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை பாடலை நாளும் பாடி வருகிறார் .

இந்த நாட்டவர் மாத்திரமல்ல – தமிழின் அழகிலும் ஆழத்திலும் ஈர்க்கப்பட்டுத் தம்மை இழந்த அயல் நாட்டவர்களும் சூட்டிய புகழாரங்கள் பல .

டாக்டர் கிரௌல் ” தமிழ் மொழியை அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளிக் கலன் ” என்றும், திருக்குறளை அதில் வைக்கப்பட்ட ” தங்கச் சொற்கள் ஆப்பிள் ” என்றும், ” தமிழ் என்னை ஈர்த்தது,
திருக்குறளோ என்னை அவர் பக்கம் இழுத்தது ” என்றும், புகழ்கின்றார்.

டாக்டர் கால்டுவெல் ” உலகில் மிகச் சிலவான மொழிகளுக்குத் தான் அறிவியல் அடிப்படையிலான இலக்கணம் அமைந்துள்ளது. அவற்றில் தமிழே முன்னிற்கிறது. தொல்காப்பியமும் நன்னூலுமே இதற்கு மாபெரும் சான்றுகள் ” என்று மொழிந்தார் .

அப்படிப்பட்ட அருமைக்கும் பெருமைக்கும் உரிய அன்னைத் தமிழுக்கு விழா நடக்கிறது.

ஆராய்ச்சி அறிஞர்கள் பங்கு கொள்கிற அரங்கம் மாநாட்டின் இதயம் போன்ற இன்றியமையாத பகுதி என்றாலும், அந்த நிகழ்ச்சியைத் திருவிழாவாகப் பெருவிழாவாகக் கொண்டாடும் பொறுப்பினைத் தமிழக அரசு உவந்து ஏற்றுள்ளது.

தமிழ் நாட்டிலே மாத்திரமல்ல – தமிழ் பேசுகிற உலகின் எல்லாப் பகுதி மக்களும் எழுச்சியோடு எண்ணிப் பெருமிதம் கொள்கின்ற இனிய நிகழ்ச்சியாக இந்த உலகத் தமிழ் மாநாடு அமைந்துள்ளது.

அறிவுலகப் பேராசான் – நமது ஆருயிர் அண்ணன் பன்னிரு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிற்குப் பிறகு, பாரிசிலும் யாழ்ப்பாணத்திலும் மாநாடுகள் நடைபெற்றன.

அண்ணன் ஏந்திய ஒளிவிளக்கினைக் காலத்தின் கட்டளையாக அவருக்குப் பிறகு நான் ஏந்துகின்ற பொறுப்பினை ஏற்றுக் கொண்டு, அவரின் அன்புத் தொண்டனான நானும், வரலாற்றில் அழியாத இடம் பெற்றிடப் போகும் இந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைக் கொண்டாடுவதில்-கோலாகலப் பெருவிழாவாகக் காண்பதில் மறைந்த தமிழகத்தின் புகழை மீண்டும் நிலை நாட்டிக் காட்டுவதில் தமிழன் தானும் தாழான்; எவரையும் தாழ்த்தான் என்பதனை அகிலத்திற்கு அறிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

மொழி மற்றவர்களுக்கு ஒரு வழியாக இருக்கலாம் .அறிவு நிறை பகைப்பும் வாய்க்காலாக இருக்கலாம்; மொழி எண்ணங்களை எடுத்துச் சொல்கிற ஊடகம் தானே என்றும் கூடச் சிலர் பேசலாம்.

தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்மொழி வெறும் வழி மட்டுமல்ல; அதுவே நமக்கு ‘ விழி ‘, உணர்ச்சி வயப்பட்டு உற்சாகத்தில் உதிர்க்கின்ற சொற்களில்லை இவை. இரண்டாயிரம் ஆண்டுக் காலத் தமிழகத்தின் எழுச்சி – வீழ்ச்சி – வெளிச்சம் – இருட்டு – மேடு – பள்ளம் இவற்றை உற்றுப்பார்த்தால் – உணர்ந்து நினைத்தால் ஒன்று புலப்படும்.

தமிழனின், தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்வும் வளமும் அவனது மொழியோடு இரண்டறக் கலந்து இணைந்து இயைந்து நிற்பதைப் பார்க்கிறோம்.

மொழி வரலாற்றில் அவனது மொழிக்கு ஊறு நேர்ந்தபோதெல்லாம் அவனது அரசியல், பொருளாதார, பண்பாட்டின் அடித்தளங்கள் அசைந்திடக் காண்கிறோம்.

ஆகவே தான் தமிழன் தன்னுடன் ஊனில் – உதிரத்தில் – உணர்வில் – ஒடுங்கி ஒன்றிக் கலந்த தன் தாய் மொழியை உயிர் மூச்சாகப் போற்றிடத் தலைப்பட்டான்.

ஆங்கிலம் உலகின் பல பகுதிகளில் பரவியுள்ள மொழி; மறுக்கவில்லை . இருந்தும் அது ஆட்சி செய்வோரின் அருமை மொழியாகிச் சென்ற இடங்களில் எல்லாம் வார்த்தைகளை, வழக்குச் சொற்களை அள்ளிச் செர்த்துக் கொண்டது. ஆங்கில அகராதியில் ‘ மிளகுத் தண்ணீர் ‘ என்ற சொல் கூட அரங்கேறியிருக்கிறது.

தமிழ்மொழி மாத்திரம் அதற்கு நேர் மாறாகக் கலப்புச் சொற்களைக் களைந்து தனது தனித்தன்மைதனைக் காப்பதிலேயே கருத்தாக இருக்கிறது.

இந்திய மொழிகள் சிலவற்றில் தான் இந்த மொழித் தூய்மை இயக்கங்கள் அண்மைக் காலத்திலே தோன்றியிருக்கின்றன.

திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவை, வட மொழிச் சொற்களை விரும்பி ஏற்றுக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

மலையாளச் சொல்லகராதியை உருவாக்கிய சுரானந்த் குஞ்சன்பிள்ளை , இக்கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அருகிலிருக்கிற மற்ற மொழிகள் வட சொற்களை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறபோது, தமிழ் மாத்திரம் வடசொற்களை மாத்திரமல்லாது பிறமொழிச்சொற்களைக் கூட ஏற்காமலேயே, தனது தனித்தன்மையோடு விளங்குவதைக் காண்கிறோம்.

தமிழ் மூத்த முதன்மொழி – மாற்றம் – வளர்ச்சி இவற்றிற்கான கூறுகளைத் தன்னகத்தே இயல்பாகவே கொண்ட தனி மொழி என் பதாலேயே இவ்வாறு முடிந்தது.

உலகத்தின் பெரும் பகுதியில் ஆங்கிலம் வழங்கப்பட்டும், பெரும்பாலும் அதன் பயன் கருதி மாத்திரமே பலரும் அந்நாள் தொட்டு அதனைப் பயின்று வந்தனர்.

ஆனால் நமது தமிழ் மொழியைப் பொறுத்தமட்டில் மேற்கு நாட்டு அறிஞர்கள் பலரும் பெரும்பாலும் பயன்பாடு கருதி அல்ல – அதன் அழகிலும் ஆற்றலிலும் மயங்கியே கற்றனர்.

மேற்கு நாட்டவர்கள் தங்கள் சமயத்தைப் பரப்புவதற்காகவே தமிழ் கற்றனர் என்றால், திருக்குறளை – திருவாசகத்தை இலத்தீனிலும், ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் பெயர்ப்பானேன் ?

இந்தத் தமிழ் இலக்கியக் களஞ்சியத்திலே தம்மையே இழந்தனர் என்பது தான் உண்மை

”சிந்து வெளி நாகரிகம்” அழிந்து பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்த அறிஞர்கள் ஒன்றை உறுதியாகக் குறிக்கின்றனர்.

மாறி வரும் காலத்தோடு மாற இயலாத நாகரிகம் – வெளி நாகரிகத் தாக்குதல்களைத் தாங்க இயலாத நாகரிகம் – ஆகவே அது அழிந்துபட்டது என்பது அவர்களின் கருத்து.

இது மொழி வரலாற்றுக்கு

முற்றிலும் பொருந்துவதாகும்.

இலத்தீன், வடமொழி போன்றவை நடைமுறை மொழிகளாக இல்லாது போனதற்கே அடிப்படைக் காரணம், மக்களால் அது பேசப்படவில்லை என்பது மாத்திரமல்ல – மாறி

வரும் காலத் தேவைகளுக்கு ஏற்ப அவைகளால் வளைந்து, நெளிந்து புதிய வடிவங்களைப்பெற இயலவில்லை என்பதுமாகும்.

ஆங்கிலம் இதற்கு ஒரு விதிவிலக்கு.’கொச்சை மொழி’ கூட, இலக்கிய உத்தியாக ஆங்கிலத்தில் இந்த நூற்றாண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

கால வெள்ளத்தால் கரைக்க இயலாத தனி மொழியாகத் தமிழ் திகழ்வதற்குக் காரணம் – அது கவிதையாகப் பிறந்து – உரை நடையாகத் தவழ்ந்து – வசன கவிதையாக

வளர்ந்துகொண்டிருக்கிறது. களவியலில் காணப்படுகின்ற ‘பாண்டிய நாடு பன்னீராண்டு வற்கடம் செல்ல’ என்னும் தமிழும், இன்று கடைக்காரர் பேசுகிற தமிழும் முரண்பட்டவை.

இருந்தும் எட்டு நூற்றாண்டுகளில் இத்தனை மாறுதல்களுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்ட தமிழ், இன்னமும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் பல மாறுதல்களுக்கு உட்பட்டாலும் அதன் தனித்தன்மை மாறாது

விளங்கும் உயர் தனிச் செம்மொழி.

‘ ‘தமிழ் உருக்க உணர்வைக் காட்டும் இரக்கத்தின் மொழி ” என்றே குறித்தார் தனிநாயக அடிகளார்.

ஒவ்வொரு மொழிக்கும் ஓர் அடிப்படைக் கூறு உண்டு. அவ்வியல்பில் மாத்திரமே அது சிறந்தோங்கிப் பொன்றாப் பொலிவுடன் நின்று நிலை பெறும்.

ஒரு மொழி கவிதைக்குப் பொருத்தமாக இருக்கும்; மற்றொன்று கட்டளை பிறப்பிக்கவே பொருத்தமாக அமையும்.

‘அம்மையே ! அப்பா ! ஒப்பிலா மணியே !’ என்று உள்ளத்தை உருக்குகின்ற உணர்ச்சிப் பாடல்களே, தமிழில் மிக நன்றாக வடிவம் பெறும் என்பது, தனிநாயக அடிகளார் கருத்து.

இருந்தாலும், ஆற்றலை வெளிப்படுத்துகின்ற ‘ கலிங்கத்துப் பரணி’ ‘அன்புணர்வை வெளிப்படுத்துகின்ற ‘தேவாரம்’, ‘திருவாசகம்’ இரண்டுமே தமிழிலே இடம்பெறக் காண்கிறோம்.

நகை, அழுகை, இளிவரல், மருட்கை , அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சமநிலை என்கிற ஒன்பான் சுவைகளும்,

ஒருங்கே பரவி நிற்கிற அழகினைத் தொட்ட தொட்ட இடமெல்லாம் தமிழில் தட்டுப்படக் காண்கிறோம்.

இன்னது தான் இம் மொழியிலே சிறப்பாக வரும் என்ற பொதுவிதிக்கு மாறாகத் தமிழில் எந்த உணர்வினையும் வெளிக்காட்ட இயல்வதைக் காண்கிறோம்.

மகாகவி பாரதியாரின் ‘ பாஞ்சாலி சபதம் ‘ பல்வேறு சுவைகளின் களஞ்சியமாக இருப்பதே சான்றாகும் .

” வார்த்தைகள் நடந்தால் வசனம்; நடனமாடினால் கவிதை ” என்பார்கள்.

வசனம் என்பதோ கண்ணிலே பட்டுக் கருத்திலே தைக்க வேண்டும்.

கவிதையோ காதினைத் தொட்டுக் கருத்திலே நிலைத்தாக வேண்டும்.

‘காதினைத் தொட்டு’ என்று எண்ணும் போது கவிதைப் பெண்ணுக்கு ஓர் இசைச் சதங்கை எப்போதும் தேவை .

‘இசையோடு சொல்லப்படாத கவிதையோடு இதயம் இசையாது; மனம் ஒன்றாது; கவனம் கலையாது . கவிதையின் வெற்றி கலகலப்பான ஓசையிலே இருக்கிறது. ஒன்று துள்ளலாக விழும்; மற்றொன்று தழுவலாக வரும். எப்படி இருந்தாலும் ஓசை அமைதி இருக்க வேண்டும்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை

– ஒளவை நடராசன்

thamizhavvai@hotmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *