POST: 2021-05-23T10:26:31+05:30

`அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 60

“கொள்கை முரசு கொட்டுக!”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு அரசு

பேராசிரியர் க.ப. அறவாணன் எழுதிய ‘தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்’ நூற்றிறனாய்வின் வானொலி உரைத் தொடர்ச்சி வருமாறு:-

“வேலை இல்லாதோர் எண்ணிக்கை பெருகுவதும் அடுத்தபடியாக வந்தாரை வாழ வைத்து இருந்தாரைத் தாழ வைத்த தமிழகத்திலும், புரட்சியின் சங்கநாதம் எனப் பாராட்டப் பெறும் புதுவையில் தான் இந்நிலை கூடுதலாக உள்ளது.

இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலையின் போது, மக்கள் வெளிப்படுத்திய துன்ப முறை வேறு. தமிழர்கள் வெளிப்படுத்திய துன்பமுறை வேறு.

இந்திரா அம்மையார் இறப்பைத் தாளாமல் தமிழர்கள் நால்வர் தற்கொலை செய்து கொண்டார்கள். அதில் மூன்று பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்தனர். ஒருவர் நஞ்சுண்டு இறந்தார். அதுமட்டுமின்றி ஏழுபேர் நெஞ்சு அதிர்ச்சியால் இறந்தனர்.

இந்திரா காந்தி அம்மையார் பிறந்த உத்திரப் பிரதேசத்திலோ, அவர் குடும்பத்தின் பிறந்தகமான காஷ்மீரிலோ, அவரைத் தேர்ந்தெடுத்த ஆந்திரத்திலோ, வேறு எங்கும் யாரும் தற்கொலை செய்யவில்லை.

ஆக, தமிழினத்தின் மன வீழ்ச்சியை இங்ஙனம் சொல்லலாம்.

போர்க்குணமின்மை,
தாழ்வு மனப்பான்மை,
அயல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கண்மூடி வரவேற்றுப் போற்றும் போக்கு, தொலைநோக்கின்மை,
சமய நம்பிக்கை மற்றும்
கடவுள் வழிபாடு
ஆகிய இந்த ஆறும் நம்மைப் பின் இழுத்து தள்ளிக்கொண்டிருக்கின்றன.

அது போலச் சில ஆண்களுக்கு முன்பு குமுதத்தில் தொடர் கதை ஒன்றில் சாதியை புண்படுத்தியதால் தொடர்கதை இடையிலேயே நிறுத்தப்பட்டது.

ஆக சாதி பற்றி எவனும் குறைவாகச் சிறிதே கூறினாலும் நாம் பொங்குவோம், கொதிப்போம், குதிப்போம், வெட்டுவோம்.

ஆக தமிழர்களுக்குக் கூட்டூக்கம் கிஞ்சித்தும் கிடையாது.

தமிழ்நாட்டின் ரசிகர் மன்றங்கள் பெருகிய அளவிற்குச் சிந்தனை மன்றங்கள் பெருகவில்லை.

ஏன் பல்கலைக்கழகங்களிலேயே கட்சி மன்றங்கள் வளருவது போல அறிவரங்க மன்றங்கள் வளரவேயில்லை.

சிந்தையில் மயங்குகிற நாம் சிந்தனைக்கு மரியாதை தருவதில்லை.

இத்தனை குறைகளை நுட்பமாக விளக்கிய பேராசிரியர் அறவாணன் தன்னுடைய நூலின் வாயிலாகவே வழிகாட்டுகின்ற முடிவுகளையும் பெருமிதமாக வழங்கியுள்ளதை நாம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

தன்னம்பிக்கை வேர்கொள்ள மொழிதான் முதற்படி.

தமிழைப் பள்ளிமுதல் பல்கலைக் கழகம் வரை பாடமாக வைக்கவேண்டும்.

தமிழுக்குத்தான் மரியாதை தரப்பட வேண்டும்.

அப்பொழுதுதான் தாழ்வு மனப்பான்மை, அயல் மொழிப் பண்பாடு, நாகரிக மோகம் போன்றவைகள் விடைபெறும்.

தன்னம்பிக்கை உரம்பெறும்.

அதே போல சாதிச் சங்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

நகரில் வாழும் தமிழருடைய ஒரு குடும்பத்தை உற்றுப் பார்த்தால் அவர்களுடைய உறைவிடம் ஐரோப்பிய முறையில் இருக்கும்.

அவர்தம் உடைகள், உணவுகள், பல் துலக்கு முன் காபி, பல் துலக்கிய பின் சிற்றுண்டி, சப்பாத்தி, குருமா, ரொட்டி, ஜாம் அதுபோக குழந்தைகளின் மம்மி டாடி அழைப்புகள் என்றுதான் தெரியும்.

நீதிமன்றத்திற்கு ஆங்கிலமும், கோயிலுக்கு வடமொழியையும், நிர்வாகத்திற்கு இந்தியும், இசைக்குத் தெலுங்கும், ‘ஐயோ! சுடுகாட்டிற்காவது இருக்கட்டும்’ எங்கள் தமிழ் என்ற அவலநிலைதான் உள்ளது.

ஒரு காலத்தில் திராவிடர் தம் குழந்தைகளுக்குப் பெயரிடும் போது தாய்ப் பெயரையே முதலெழுத்தாக வழங்கினர்.

திராவிடரை ஒத்த பழக்கவழக்கங்கள் உடைய ஆப்பிரிக்கரிடமும் தாய்வழிப் பெயரிடும் முறை, இன்றும் வழக்கில் உள்ளது.

தோதுவரிடை வழங்கும் ஒருத்தி பல கணவர் என்ற கோட்பாடு மருந்துக்குக்கூட தமிழ் மக்களிடையே வழங்கவில்லை.

மணவாளன் உயிருடன் இருக்க மறுமணத்திற்கு உரிய சுயம்வர அறிவிப்புச் செய்த நள தமயந்தி கதை தமிழுக்குரியது அன்று.

மணவாளன் இறக்க மற்றவனை நாடிய சூர்ப்பனகைக்கதை. தமிழர் கற்பனையன்று.

அதேபோல பாரதம் தமிழர்க்கோ திராவிடர்க்கோ உரியது அன்று.

தமிழ்ப் பண்பாடு என்பது ஒரு பொருட்காட்சிப் பொருளாகி விட்டது. இந்த வரலாற்றுண்மையை நன்கு அறிந்த சில வம்பர்கள் பண்பாட்டுப் படையெடுப்புகளையும், பண்பாட்டுக் கலப்பினையும் வரவேற்று எழுதுகிறார்கள்.

தமிழ்நாட்டில் நேற்று நிகழ்ந்ததும் இன்று நிகழ்வதும் பண்பாட்டுக் கலப்பன்று.

ஒரு பண்பாட்டு அழிப்பு, அழிவு. மூச்சை அடக்குவது வேறு. மூச்சையே விட்டுவிடுவது வேறு. தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டு மூச்சையே விட்டு விட்டனர் என்பதுதான் இந்த நூலின் பேச்சு மூச்சு!

இந்த அரிய நூலை பேராசிரியர் அறவாணன் பல ஆண்டுகளாக எழுத வேண்டும் என்று எண்ணித் தீரத் தெளிந்த நூலாகும்.

1982 இல் தொடங்கி 1986-இல் பெரும் பகுதி நிறைவு பெற்றது.

இந்நூலில் ‘பண்பாடு என்றால் என்ன?’ என்பதை மானுடவியற் பார்வை மூலம் அணுகியிருக்கிறார்.

அது போக, இன வெறுப்புக்கு உரிய காரண காரியங்களையும், அதன் கொள்கைகளையும், பொருளாதார மேன்மையால் படர்கிற அடிமை நிலைப்பாடுகளையும், அறியாமையால் விளைகின்ற மூடப்பழக்க வழக்கங்களையும், போலி அறிவால் ஏற்படுகிற கருத்துச் சிதைவுகளையும் வரைபடமாக வரைகிறார்.

மேலும், மலையாள மொழிப்பிறப்பும், யவனக் கலப்பும் வரதட்சணை என்பது ஆரியரால் விளைந்த விஷம் என்று கூறி அதன் சொல் விளக்கங்களும், கர்ணன், ஏகலைவன் வரலாறுகளை திரும்பிப் பார்ப்பதும், கிரேக்கர்கள் வாழ்வியல் நெறிமுறைகளையும் ஒருங்கே கண்டு வருந்துகிறார்.

அதுபோக அராபிய, இசுலாமிய படையெடுப்புகளை பற்றியும் விளக்கமாக ஆராய்ந்து இவையனைத்தின் துணைக்கொண்டு ஆராய்ச்சி உரையை நுணுக்கமாக முடிக்கிறார்.

இந்த அறிவு விளக்கப் பனுவலில் இளைஞர்களுக்கு தமிழகத்தின் வளரும் எரிமலைகளுக்கு 11 கட்டளைகள் இடப்பட்டுள்ளன.

அவற்றை நுணுகிப் பார்த்து செயலளவில் மாணவர்கள் இயக்கமென இயங்க வேண்டும்.

ஆக உறங்குவது போல உள்ள தமிழ் வல்லாளர்களுக்கு இளையோருக்கு விழிப்பூட்டுகிற வினாக்கள் விடுத்துள்ளார் ஆசிரியர்.

நமக்கு வாய்த்த இந்நூல் தமிழர்களின் உரிய நேரத்தில் கிடைத்த உறுதியான நல்லுரை கொட்டும் வீர முரசு எனலாம்.

இக்கொள்கை முரசு எங்கும் கொட்டட்டும்.” என்று என் வானொலி உரை 19.11.1990 அன்று நிறைவு பெற்றது.

பேராசிரியர் அறவாணன் இலயோலா கல்லூரித் தமிழ்த்துறையைத் தலைமை தாங்கிய பொழுது, வாராவாரம் ‘வியாழன் விருந்து’ நடத்தினார் என்பது இன்றைய மாபெரும் பேச்சாளர் பெருமக்களெல்லாம் நினைந்து நினைந்து போற்றுவதை நாம் எண்ணிப் பெருமையடையலாம்.

அந்நாள்களில் வானொலியில் பேசுவது என்பது எல்லையில்லாத மகிழ்ச்சியாகும்.

மாநிலக்கல்லூரியில் இளங்கலை தமிழிலிக்கியம் பயிலும் பொழுது ஆய்வு மாணவராக இருந்த அண்ணன் பழ அதியமான் மற்றும் ஆங்கில இலக்கிய முதுகலை மாணவர் மோகனகிருஷ்ணன் சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியதும் குறிப்பிடத்தகுந்தன.

அவ்வண்ணம் சன் தொலைக்காட்சியின் எடுப்பான முழங்கு குரலான தூரன் கந்தசாமி மாநிலக் கல்லூரியில் முதுகலை தமிழிலக்கிய மாணவச்செம்மலாகவும் மூத்த மாணவத்திலகமாக திகழ்ந்த பெருமிதம் வாய்ந்தவர்.

எழுத்தாளர் சு. சமுத்திரம் சில நிலைகளில் வானொலி நிலையத்தில் இயக்குநராக இருந்த போது என்னை எப்படி ஏற்ற இறக்கத்தோடு பேச வேண்டும் என்று சுட்டிக்காட்டியதை நினைந்து மகிழ்கிறேன்.

எந்தையார் 1963 ஆம் ஆண்டில் தில்லியில் வானொலியில் பணியாற்றிய பெருமிதம் வாய்ந்தவர்.

நடிகர் சரத்குமார் தந்தையார் இராமநாதனும் அப்பாவும் தில்லியில் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.

அப்பா செய்திகள் சொல்லத் தொடங்கிய பிறகு தமிழிலில் பெரிய ஒலி வடிவ மாற்றத்தைத் தந்தது என்று பலர் பாராட்டியுள்ளனர்.

அப்பா பல முறை சென்னை வரனொலியில் பேசியது பலர் அறிவர்.

3.12.2018 அன்று தமிழ் அமுதம் என்ற தலைப்பில் மூன்று நிமிடங்களுக்கு மூன்று வாரமாக பேசிய அருமையான உரை,

20.9.2019 அன்று திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் குறித்த செப்பமான மூன்று நிமிடங்களுக்கு பத்து நாள் உரை

திருவெம்பாவிற்கு வானொலியில் பொழிந்த உரை நூலாகவே வெளி வந்துள்ளது.

என் அம்மாவும் பல நிலைகளில் சென்னை (30.3.1966, 5.1.1971) மதுரை வானொலிகள் வாயிலாக மருத்துவ பொருண்மைகள் தொடர்பாக உரையாற்றிய பெருமிதமானவர்.

என் அண்ணன் மருத்துத்திலகம் கண்ணன் நியூசிலாந்திலும், ஆசுத்திரேலியாவிலும் பல வானொலி நேர்காணல்கள், முதியோர் நலன் தொடர்பான பல நல்லுரைகளை தேனொலியாக பொழிவாற்றியதை எண்ணி மகிழ்கிறேன்.

வானொலி உங்கள் நண்பன் என்பது எங்கள் குடும்பத்திற்கு பொருத்தமான பொன்வரிகள்.
——
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி

பேரறிஞர் ‘உபய வேதாந்த’ வை. கோபால கிருஷ்ணமாசாரியாரின் மாணாக்கரும், விவேகாநந்தர் கல்லூரித் தமிழ்த்துறைப் தலைவராகத் திகழ்ந்த பேராசிரியர் சி.ஜெகந்நாதாச்சாரியார் வரைந்த பத்துப்பாட்டு ஆராய்ச்சியுரையின் தொடர்ச்சி வருமாறு:-

பகுதி-3

காக்கக் கடவிய நீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா – பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி.

அறுமுகவா – ஆறுமுகனே ! காக்க கடவிய நீ – காப்பதற்கெனக் கடம்பூண்டுள்ள நீ, காவா திருந்தக்கால் – (கடமை மறந்து) காப்பாற்றாமலிருப்பாயாயின், (அஞ்ஞான்று) ஆர்க்கு – யாருக்கு, பரம் ஆம் – மேலுலகம் கிட்டும் ? ( வீடுபேறு சித்திக்கும்).

ஒருவர்க்கும் கிட்டாது என்றபடி); (ஆதலின்), பூக்கும் கடம்பா – பூத்த கடம்பமாலையை யணிந்துள்ளவனே !

முருகா-, கதிர் வேலா – ஒளிவிடுகின்ற வேலனே! நல்ல இடம் காண் – காப்பதற்கு நல்ல இடம் என்னிடத்துக்காண்பாயாக; இனி – அங்ஙன் கண்ட பின்னர், இரங்காய் – (என்மாட்டு) இரக்கங்கொள்வாயாக;

இதனால், முருகன் காத்தலாற்றான் வீட்டுலகம் சித்திக்கும் என்பது பெறவைக்கப்பட்டது.

எனவே, வீடுபேறு வழங்குந் தகுதி முருகனுக்கே யுளது என்றபடி. கடவு – கடமை: ‘என்னுக் கடவுடையேன் யான்’ (இராமா நுச நூற்றந்தாதி: தனியன்) என்ற விடத்துங் காண்க.

பரம் – மேலுலகம், வீட்டுலகம்: ‘ இகபரமாகி யிருந் தவனே ‘ என்றது திருவாசகம். ‘ மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று ‘ என்றார் நாயனாரும். ‘ ஆர்க்கும் பரமாம் ‘ என்று பாடங்கொள்வாருமுளர்:

அப்போது, ஆர்க்கும் – யாவர்க்கும், பரம் ஆம் – பாரம் ஏற்படும் என்று பொருள். பாரம் – துன்பச் சுமை. ஈற்றடியில் மோனையழகு காண்க.
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு–சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற்றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்.

நெஞ்சே – மனமே! (நீ) பரங்குன்றில் – திருப்பரங் குன்றத்துக் கோயில் கொண்டுள்ள, பன்னிருகைக் கோமான் தன் பாதம் – பன்னிரண்டு திருக்கைகளைக் கொண்ட தலைவனாகிய முருகப் பெருமானின் திருவடிகளை, கண் குளிரக் கண்டு – கண்குளிரும்படி பார்த்து, கரம் கூப்பி – கைகூப்பி வணங்கி, ஆசையால் – ஆர்வத்தோடு, அணி முருகாற்றுப்படையை – அழகிய திருமுருகாற்றுப் படையென்னும் நூலை, பூசையாக்கொண்டே – (முருகனின்) நித்திய பூசனைக்குரியதாக்கொண்டே, சுருங்காமல் – தவறாமல், புகல் – (நியமத்துடன்) சொல்வாயாக (பாராயணஞ் செய்வாயாக என்றபடி);

இதனால், முருகனுடைய திருவருளை விரும்புபவர் நித்திய பூசைக்குரியதாகத் திருமுருகாற்றுப்படையை ஏற்றுக்கொண்டு, நியமத்துடன் பாராயணஞ்செய்தல் வேண்டுமென்பது பெறவைக்கப்பட்டது.

ஈண்டு, கவி தமது நெஞ்சை விளித்துக் கூறுமுகத்தான் அனைவர்க்கும் அறிவுறுத்துகிறார்.

‘நெஞ்சே’ என்றதால் மனமும், ‘புகல்’ என்றதால் வாக்கும், ‘கூப்பி, கண்டு’ என்றவற்றால் காயமும் தெரிவிக்கப்பட்டுத் திரிகரணங்களாலும் முருகனை வழிபடல்வேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டது.

ஆசை – ஆர்வம்: பத்தி. பூசை – நித்தியபூசனை: ‘சிறப்பொடு பூசனை செல்லாது’ என்றவிடத்துப் போல. சுருங்குதல் – ஒழுக்கம் முதலியவற்றினின்று தவறுதல்;
இப்பொருளில் வருதலை “துகிலிடைச் சுற்றியில் தூநீ ராட்டி, நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி, சொல்லின பரிசிற் சுருங்கலன்” என்ற திருக்கண்ணப்பதேவர் திருமறத்திலுங் காணலாம்.

இனி, சுருங்காமல் – தப்பாமல், சங்கிரகமாக்காமல் எனப் பொருள் காணலுமாம்.

இத்திருமுருகாற்றுப்படையை நியமமாகப் பாராயணஞ்செய்யுங்கால், பெரியோர்களால் தொன்றுதொட்டு ஓதப் பெற்றுவருகின்ற கட்டளைக்கலித்துறைச்செய்யுள் பின்வருமாறு : ”

ஒருமுருகா என்ற னுள்ளங் குளிர உவந்துடனே, வருமுரு காவென்று வாய்வெரு வாநிற்பக் கையிங்ஙனே, தருமுரு ‘கா வென்று தான்புலம் பாநிற்பத் தையல் முன்னே, திருமுரு காற்றுப் படையுட னேவருஞ் சேவகனே” என்பது.

நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாடோறுஞ் சாற்றினால்-முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தானினைத்த வெல்லாந் தரும்.

நக்கீரர் தாம் உரைத்த – நக்கீரராகிய பெரும் புலவர் சொன்ன, நல் முருகாற்றுப்படையை – நல்ல திருமுருகாற்றுப் படையை, நாள்தோறும் – தினமும், தன் கோல – தன் அபிமானம் அகங்காரம்) கெட, சாற்றினால் – ஓதினால், முன் – (அங்ஙனம் ஓதுபவர்) முன்னே , கோலம் மா முருகன் – அழகிய சிறந்த முருகன், வந்து – தோன்றி, மனக்கவலை தீர்த்து அருளி-(அன்னார்க்குள தாம் மனக்கவலையனைத்தையும் போக்கி யருள் செய்து, பின்னும்), நினைத்த எல்லாம் – அவ்வோதுபவர் நினைக்கின்ற எல்லா விருப்பங்களையும், தான் தரும் – தானே தருவன்;

இதனால், திருமுருகாற்றுப்படையை நாடோறும் ஓது தலால் உண்டாம் நற்பயன் கூறப்பட்டது.

முருகாற்றுப்படைக்கு ‘நல்’ என்ற அடைகொடுத்தது, சொற்பொருளமைதியும் சிறப்பும் நோக்கி. இந்நூல் பதினோராந் திருமுறையில் சேர்க்கப்பட்ட சிறப்பும் நினைக.

தற்கோலல் – தற்செருக்குக் கெடுதல். தன் – தானென்னுஞ் செருக்கு; அகங்காரம். கோலல் – கொல்லுதல், கெடுதல். நக்கீரரை நற்கீரரென்றும் வழங்குப: அப்பெயர் ஈண்டு எதுகைக்குச் சிறந்து காணினும், நக்கீரர் என்பதே பெருவழக்காதலின், இன வெதுகை வந்தது.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *