அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 61
“நா.பா. என்னும் நல்லிசைப் புலவர்”
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் இரண்டாம் ஆண்டு இறுதியில் 08.01.1991 அன்று சென்னை வானொலி நிலையத்தில்
‘நூல்நயம்’ பகுதியில்
ஆற்றிய என் உரை:-
நல்ல நூல்களைப் போன்ற நண்பர்களை நானிலத்தில் நாம் எளிதில் எங்கும் காண முடியாது.
இனிய நண்பர்களின் உறவுக்கு உவமை கூற வந்த திருவள்ளுவர்
“நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மன மகிழ்ச்சிக்காகவும், நல்லுணர்ச்சிக்காகவும், தகவல்களை அறிவதற்காகவும், நடைமுறை வாழ்க்கையின் நளினங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும், புதிய சிந்தனைகளை வளர்ப்பதற்காகவும் என்றெல்லாம் நூல்கள்
சிந்தனையாளர்களால் எழுதப்படுகின்றன.
மனதில் மலரும் சிந்தனைகள் சொல்லாகவும், பிறகு எழுதப்படும் எழுத்தாகவும் பதிய வைப்பது ஒர் அரிய கலையாகும்.
இப்போது நாம் நூல்நயம் நுகரப்போகும் நூல் ‘தகடூர் வரலாறும்-பிரகலாதன் சரித்திரமும்’ என்பதாகும்.
ஒரு நாட்டினுடைய வரலாற்றை அந்த நாட்டின் இலக்கியங்களில்,
மக்களின் வாழ்க்கை வழியில் அவர்கள் வாயிலிருந்து உதிரும் பழமொழியில்
அவர்கள் கையாண்ட கருவியில் அவர்கள் உருவாக்கிய நாணயங்களில்,
கல்வெட்டுக்களில்,
செப்பேடுகளில்
திரட்டப்பட்ட பொருள்களில்
அயல் நாட்டு வழி நடையாளர்கள் எழுதி வைத்த குறிப்புகளில்
எனப்பல வழிகளில் கண்டறியலாம்.
ஒரு வரலாற்றை வரைந்து காட்டுவதென்பது அருமையான செயல்.
நினைத்ததை எல்லாம் வரலாற்று ஆசிரியரால் எழுத முடியாது.
ஆனால், நினைத்து,நினைத்து தகவல்களைத் தேடித் தேடி, அங்குமிங்கும் ஒடி ஒடித் திரட்டிய விளக்கங்களைச் சான்றுகளுடன் தெளிவாக எழுத வேண்டும்.
“ஒரு வரி எழுதுவதற்கு ஒன்பது மைல் பயணம் செய்தவர்” என்று எழுத்தாளர் அடிசனைப்பற்றிக் கூறுவார்கள்.
காலங் கடந்த பொருள்களையும்,
கல் மேடுகளையும் ஆய்வுக்கண்ணோடு செப்பேடுகளையும்
ஆராய்ந்து காண்பதையே தன்னுடைய அலுவலகப்பணியாக கொண்டுள்ள ஆசிரியர் இந்த நூலை எழுதியிருக்கிறார்.
நாமெல்லாம் அறிந்த ஊர் தான் தகடூர்.
இப்போது தருமபுரி தனி மாவட்டத்தில் (02.10.1965 முதல்) தருமபுரி என்ற பெயரோடு இருக்கிறது.
தகடூர் என்னும் இந்தப் பெயரைப் பதிற்றுப்பத்து வழங்குகிறது.
தருமபுரியின் தென் கிழக்கில் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதமன் கோட்டை என்னும் ஊர் அதியமான் கோட்டை என்பதன் சிதைவாகும்.
கோட்டையின் இடிபாடுகளையும் சிதைபாடுகளையும் இன்றும் காணலாம்.
கோட்டையும் சிதைந்தது விட்டது. அது கொண்ட பெயரும் மறந்து விட்டது.
தகடு என்றால் பொன், பூவின் புறவிதழ் என்ற பொருள் உண்டு.
பூவிற்குப் ‘புறவிதழ்’ என்ற பொருள் உண்டு.
பூவிற்குப் புறவிதழ் போலத் தன் மாநகருக்குப் புறத்தே பொலிவாகக் கட்டிய மதிலின் மாட்சியினால் தகடூர் என்ற பெயரைத் தன்னூருக்கு தந்திருக்கிறார் போலும் அதியமான் நெடுமான் அஞ்சி.
மட்டப்பாறை, குட்டப் பாறை, தட்டைப் பாறை, தகட்டு மலை என்ற மலைப் பெயர்களைப் போல, உயரமில்லாமல் ஓரளவு குறைந்த தகடாக இருந்த மலையூர் என்ற கருத்தில் தகடூர் என்றார்களோ என்னவோ!
அமிழ்தை விஞ்சுகின்ற அரு நெல்லிக்கனியை ஒளவைக்குத் தந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி, அற்புதமான அந்த தருமத்தைக் கண்டு தான் தருமபுரி என்று பின்னாளில் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது.
தருதல் வழியாகப் பிறந்த சொல் தான் தருமம்.
எனவே, ஈடில்லாத நெல்லிக்கனியின் ஈகையைக் கருதி, அந்த ஊரைத் தருமபுரி என்றே அழைக்கலானார்கள்.
வைரக்கற்களைப் போன்ற வரலாற்றுச் செய்திகளையும் ஒரு பழஞ்சுவடியில் பதுங்கிக்கிடந்த பிரகலாதன் சரித்திரம் என்ற மணிகளையும் ஒன்றாகக் கோர்த்து நூலாசிரியர் நன்மாலையைக நமக்கு அணிவித்து மகிழ்கிறார்.
ரூ.50/- என்னும் விலைக்குக் கிடைக்கும் இந்த நூல் அளவாலும் பொலிவாலும் அழகிய நூல்,
சிந்தனையைத் தூண்டுகிற சீறிய நூல்,
நம் கருத்தில் மட்டும் நிறைந்திருந்தத பழைய வரலாற்றுப் படிவத்தை வரைந்து காட்டுகிற பயனுள்ள நூல்.
வானொலி நிலையத்தின் வாயிலாக நூற்கனிகளை சுவைத்து திறனாய்வதில் மகிழ்ந்தேன்.
அப்பா அடிக்கடி என்னிடம் சொல்லி படிக்க வைத்தது தீபம் நா.பார்த்தசாரதியின்
(18.12.1932 – 13.12.1987) நூல்களைத்தான்.
நா.பா.வின் குறிஞ்சிமலர், பொன்விலங்கு தான் அனைவரும் படித்து மகிழ்வார்கள்.
குறிப்பிட்ட இரு புதினங்களும் புதின உலகத்தின் வைரப் பரல்கள் எனலாம்.
அரவிந்தனைப் போல, பூரணி போல நாமும் வாழவேண்டும் என்று பலர் முயற்சித்தனர்.
அவ்வண்ணமே, நா.பா.வின் மணிபல்லவம், இராணி மங்கம்மாள் போன்ற புதினங்களையும் குறிப்பிடலாம்.
நா.பா. ஒரு சமயத்தில் ‘தீபம்’ இதழை நடத்த முடியவில்லை என்ற போது பல மாதரசிகள் தங்கள் அணிகலன்களை அவரிடம் நேரிலும் அஞ்சலிலும் அனுப்பி வைத்து நடத்தச்சொன்னது மறக்க முடியாத வரலாறாகும்.
அவரும் சில தருணங்களில் மறக்காமல் வந்த ஆபரணங்களை உரியவர்களிடம் தக்க முறையில் திருப்பி அனுப்பிய நேர்மையும் போற்றத் தகுந்த நெறிமுறையாகும்.
மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் தமிழில் புலவர் பட்டம் பெற்று இலக்கியக் கல்வியில் நுண்மான் நுழைபுல ஆற்றல் வாய்ந்த எழுத்துச் சிகரமாவார்.
அப்பாவும் அவரும் நல்ல நண்பர்கள் ஆவார்கள்.
ஒரு முறை பட்டிமன்றத்தில் அப்பாவை நோக்கி ஒளவை அதிகமாக புறம் பேசுபவர் என்றாராம்.
எதிரணியில் தலைமை தாங்கிய அப்பா சிரித்துக்கொண்டே, நண்பர் நா.பா. அகம் கொண்டவர் என்று பலரும் குறை சொல்வார்களே என்றாராம்.
பட்டிமன்றத் தலைப்பு “சங்க இலக்கியத்தில் விஞ்சிய புகழ்
அக இலக்கியத்திற்காக?
புற இலக்கியத்திற்காக?” என்பதாகும்.
அவருடைய மணிபல்லவம் வரலாற்றுப் புதினம் நுண்ணிய தமிழ்நடை மிளிர்வோடு புனையப்பட்ட கதையாகும்.
நல்ல தமிழ் படிப்பிற்கு இப்புதினம் சான்றாகும்.
சில சான்றுகள் இன்னும் மறக்காமல் பதிந்துள்ளன என்நெஞ்சில்.
அதனை என் கருத்துக் கோவையில் 22.11.1986-இல் பதிந்துள்ளப் பகுதிகள் காண்க.
“நம்முடைய தமிழ் மொழிக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கிறது பார்த்தீர்களா?
பேசினால் ஒருவகை இனிமை; பாடினால் ஒருவகை இனிமை; எழுதினால் ஒரு வகை இனிமை அவ்வண்ணமே, புதிதிலேயே கொடும்பாளூரான் பேசும் ஒரு தொடரில் திருக்குறளை எவ்வளவு நேர்த்தியாக தன் உரையிலேயே இணைத்து எழுதிய கலையை என்னென்று சொல்லி பாராட்டுவது.
அதேபோல இக்கதை நெடுகிலும் பலவாண்டுகளாக ஆசிரியர் நா.பா. படித்த தமிழ் இலக்கியக் கருத்துகளையும் அழகான தத்துவங்களையும் பொருத்தமாக இணைத்துள்ளார்.
அறிஞர் நா.பா. எக்காரணத்திலும் கதையின் சுவையும், விறுவிறுப்பும் கெடாதவாறு மிளிர வைத்துள்ளார்.
“நண்பர்களே! நம் எல்லோருக்கும் நோக்கமும், நினைவும் ஒன்றானாலும் அரசும் அவசியம்.
வேறு வேறாக இருப்பவை நன்றாற்றல் உள்ளும் தவறு உண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
அதே போல மகாராணியின் மனம் எப்படி தனிமையில் உழன்றது என்பதற்கு உளவியல் பூர்வமாக எழுதிய வரிகளில் நாட்டுக்கெல்லாம் அரசி கூட்டுக்குள் கிளியாக உள்ளம் குலைய வேண்டியிருந்தது.
மண்ணின் உலகத்தில் பாண்டி நாட்டுக்குத் தேவியாயிருக்க முடிகிறது.
மனத்தின் உலகத்திலோ ஏழையிலும் ஏழைப் போல் வெறுமை சூழ்கிறது. ஒரே அவைக்கலப்பற்ற தனிமை!
உள்ளும் புறமும் நினைவும் கனவும் எங்கும் எதுவும் சூனியமாகப் பாழ் வெளியாய்ப் போய்விட்டது போன்ற தாழ்வு மனப்பான்மை உண்டாக்கும் தனிமை அது.
ஏழை கந்தல் துணிகளை இழுத்துப் போர்த்திக் குளிரைப் போக்கிக் கொள்ள முடியாதது போல் வலுவில்லாத நினைவுகளால் மனத்திடம் கிட்ட மாட்டேனென்கிறது.
மகாமண்டலேசுவர் ஓரிடத்தில் சீவல்லபமாறனிடம் யானைக்குத் தன் பலம் தெரியாதல்லவா ?
சங்க காலத்தில் கிள்ளிவளவன் என்றொரு அரசன் இருந்தான்.
அவனுடைய கண் பார்வைக்கு நினைத்ததைச் செய்து முடிக்க ஆற்றல் இருந்ததை நீ உடன்று நோக்கும் வாய் எரிதலழ நீ நயந்து நோக்குவாய் பொன் பூப்ப செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண்திங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை என்று ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் புகழ்ந்து பாடியிருந்தார் என்று சொல்லிவிட்டு
சேரநாட்டில் யானைகள் இருக்கின்றன,
சோழநாட்டில் சோறு இருக்கிறது பாண்டிய நாட்டில் தமிழறிஞர்கள் இருக்கிறார்கள்
என்று பேசிய வரிகளை நெஞ்சில் நிழலாடினால் தமிழை எப்படி வனப்பாக எழுதலாம் என்பதற்கு 1986 ஆம் ஆண்டில் படித்த இப்புதினம் சான்று.
அதேபோல் 16 பாத்திரங்களின் பெயர்ப் பட்டியல் என் நெஞ்சில் ஆழமாக இன்னும் படிந்த குணச்சித்திரங்களாவார்கள்.
முல்லைப் பற்கள் தெரிய குழல்மொழி,
பாலைப் பருகினால் கழுத்து வழியே பால் தொண்டைக்குள் இறங்குவது தெரியும் சிறப்பான விலாசினி,
நிமிர்ந்த நடை, நேரான பார்வை, கணீரென்று பேச்சு, கலீர் என்ற சிரிப்பு, இளமைப்பருவத்தின் துடிதுடிப்பான பகவதி,
குட்டையான தமிழ்த்தோற்ற முனிவர் அகத்தியர் போன்ற நாராயணன் சேந்தனன்,
இரத்தத்தோடு இரத்தமாகப் பழக்கத்தோடு பழக்கமாக, தமிழ்ச் சுவையும், கவிச்சுவையும் பிறவிலேயே இயல்பாக அமைந்திருக்கின்ற வல்லாள தேவன்,
அம்பலவன் வேளான், குமார பாண்டியன், இராஜசிம்மன், இடையாற்றுமங்கலம் நம்பி, சீவல்லப மாறன், மகா மண்டலேசுவரர், குணவீர பண்டிதர், வானவன் மாதேவி, கோட்டாறு பண்டிதர், வண்ண மகள், புவனமோகினி.
அதே போல இலண்டன், பாரிசு, ரோம், கிரேக்கம், போலாந்து சோவியத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு நா.பா 1976 சனவரி மாதம் முதல் மே மாதம் சென்று வந்த பயணக் கட்டுரையான “புது உலகம் கண்டேன்” கட்டுரைக் கனியில் பல சுவையான நறு மலர்கள் பூத்துக் குலுங்கின.
குறிப்பாக என் கருத்துக்கோவையில் பதிந்த குறிப்பு
“102 மொழிகளில் 447.7 மில்லியன் பிரதிகள் லெனினின் புத்தகங்களும்
81 மொழிகளில் 96.5 மில்லியன் பிரதிகள் மார்க்சு ஏங்கெல்சு புத்தகங்களும்,
புஷ்கின் தொகுதிகளை (பத்து மடலங்கள்) 300,000 இலட்சம் பிரதிகளும்
தாஸ்டயேவ்ஸ்கி தொகுதிகள் (10 மடலம்) 100,000 பிரதிகளும் வெளிவந்தன”
என்று துல்லியமான புள்ளி விவரங்களுடன் குறித்துள்ளார்.
ஓரிடத்தில் மிக நுட்பமாக நா.பா. அவர்கள் பிரான்சில் உள்ள நோத்தர் தாம் இடத்தை நயமாக விவரித்த விதம் அலாதியானது.
“திருச்சிராப்பள்ளி அருகே காவிரி இரண்டாகப் பிரிந்து நடுவே திருவரங்கம் துண்டாக்கி இருப்பதுபோல் பாரிசின் சேன் நதி இரண்டாகப் மாலை போலப் பிரிந்து நடுவே ஒரு சிறு தீவை உண்டாக்கி இருக்கிறது. அதுதான் புகழ்பெற்ற நோத்தர்தாமாகும்.
அறிஞர் நா.பா. வின்
சிந்தனை வளம், சிந்தனை மேடை, வஞ்சிமாநகரம், திறனாய்வு செல்வம் நூல்களும் கற்கண்டு மாலைகளாகும்.
தொல்காப்பியம் – சேனாவரையரின் உரை நூலினைப் படிக்கும் பொழுது என்னுடைய பள்ளி நாட்களின் கணக்குப் பாடம் தான் நினைவிற்கு வந்தது.
அப்போது அப்பா என்னிடம் இலக்கணத்தை நன்கு கற்றால் தான் மொழிப்புலமை வளமாகும் என்று துல்லியமாக விளக்கினார்.
அதற்கேற்ப எழுத்துச்சிகரம் நா.பார்த்தசாரதி வரைந்த ‘சொல்லின் செல்வம்’ நூலினை ஊன்றிப் படிக்குமாறு அறிவுறுத்தினார்.
எளிய முறையில் சொல்லதிகார விளக்கங்களை சொல்லின் செல்வத்தில் காணலாம்.
குறிப்பாக மொழியைப் போற்றுங்கள் என்ற தலைப்பில் செந்தமிழ் வாணர் நா.பா வரைந்த நுட்பமான கருத்து மணிகளை என்னுடைய கருத்துக் கோவையில் 22.11.1986 அன்று பதித்த பகுதியைக் காணலாம்.
மொழியைத் தூய்மை செய்யத் தவறுகின்றவன் மனித வாழ்வின் பயனில் பெரும் பகுதியை வீணாக்குகிறான்.
பிற மொழிகளைக் கற்பது கைகொட்டி வரவேற்கலாம்.
ஆனால், தாய் மொழியை அறியாது பிறமொழி அறிந்ததையே பேரறிவுடைமையாகக் கருதக்கூடாது.
தாய் மொழி இலக்கண இலக்கியங்களைத் துளக்கறக் கற்றுத் தூய பேச்சும், வழுவற்ற எழுத்தும் பெற வேண்டும்.
மிதிக்க வொண்ணாத பொருள்களைக் காலினால் மிதித்து விட்டால் அருவருத்துத் தூய்மை செய்யும் மனிதன், தாய்மொழியில் பிழைபட எழுதினாலும், முன்னரெய்திய அதே அருவருப்பை எய்தித் தூய முறையிற் பேசவும் எழுதவும் பழகிக் கொள்ள முனைந்து பாடுபட வேண்டுமே!
மொழித் தாய் தன் மக்களிடம் எதிர்ப்பார்ப்பதும் அது தான்.
உண்மையைக் கூர்ந்து நோக்கப்போனால் மனிதனுக்கு முதல் தாய்மொழியே, இரண்டாம் தாய் தான் பெற்ற தாயாவாள்.
மொழி மனிதனைப்பழி வாங்குவதில்லை.
மனிதன் புறக்கணிப்பால் மொழியைய் பழிவாங்கப் போய்த்தனக்கே பழியை எய்துகின்றான்.
இக்குறிப்புகளையெல்லாம் நான் தனியாக எழுதி வைத்து இலக்கணப் பயிற்சியில் ஆயந்த போது ஆசிரியர் திலகம் நா.பா வின் பொன் வரிகள் என்னை விழிக்க வைத்தது.
மொழியிலக்கணப் பயிற்சியை ஏதோ ஒரு பயங்கர நிகழ்ச்சியாக எண்ணி அஞ்சுகின்றவர்கள் அவ்வச்சம் நீங்கித் துணிவு பெற இத்துறையிற் செய்ய வேண்டிய முதல் வேலை தமிழ் உணர்ச்சியைப் பரப்புவது.
உணர்ச்சியிலிருந்து பற்றும், பற்றிலிருந்து அறிவும் பெருகும்.
இத்தொண்டு பரந்தால், மொழியிலக்கண ஆர்வம் எங்கும் பரக்கும்.
கல் தோன்றி மண் தோன்றி மூத்த தமிழ்க்குடிக்கு வைப்பு நிதியாக தொல்காப்பியம் அமைந்தது என்று சொல்லின் செல்வர் நா.பா. சுட்டிக்காட்டியதையும், சொல்லின் செல்வம் நூலினை கல்லூரிக்காலத்திலேயே அறிமுகப்படுத்திய என் ஆருயிர் அப்பாவுக்கு பல்லாயிரம் முறை வணங்க கடமைப்பட்டுள்ளேன்.
ஒரு முறை மூதறிஞர் ராஜாஜி கல்கியில் வெளி வந்த குறிஞ்சி மலரைப் படித்து யார் இந்த ஆசிரியர்? ‘மலர்’ என்று எழுதுகிறாரே, ‘பூ’ என்று எழுதினால் தானே புரியும் என்று வினவியதாகக் கூறுவார்கள்.
காலம் புதுமையாகும் பொழுது ஆசிரியர் நா.பா.வின் கருத்து ஏன் சில இடங்களில் இடறியது என்பது புதிராகவே உள்ளது.
சங்கப்புலவர்களை ‘நல்லிசைப்புலவர்’ என்றே அழைக்கும் மரபுண்டு.
அவ்வண்ணமே நல்லறிஞர் நா.பா.வையும் நல்லிசைப்புலவர் என்று அழைத்து மகிழலாம்.
——
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி
‘திருக்கோயில்’ இதழின் தனிப்பெரும் ஆசிரியர் திரு. ந.ரா. முருகவேள் 1981-ஆம் ஆண்டு இதழில் குறித்த பதிவு நோக்கத்தக்கது.
நக்கீரரின் அரிய – அழகிய சொல்லாக்கம்!
கவிஞர்களும் புலவர்களும், ஒரு மொழியின் சொற்களையே கருவிகளாகக் கொண்டு, தத்தம் கலைத் திறத்தின் எழில் நலம் காட்டிக் களிப்புறுத்துவர்.
சொற்களைத் திறன் தெரிந்து கையாளும் அரும் பெரும் திறமையைக் கொண்டே கவிஞர்கள் அல்லது புலவர்களின் அருமையும் பெருமையும் அளக்கப் பெறும்.
நக்கீரர் என்பதில் ந-சிறப்புணர்த்தும் இடைச்சொல்; கீர்-சொல், சொல்வன்மை, நக்கீரர் என்னும் சொல்லுக்குச் ‘சிறந்த சொல்வன்மையுடையவர்’ என்பது பொருள்.
அதற்கேற்ப, நக்கீரர் பலப்பல புதிய அரிய சொல்லாக்கங்களைப் படைத்துக் கவிதை இயற்றும் நல்லாற்றல் மிக்கவர் என்பதனை, அவர் பாடியருளிய திருமுருகாற்றுப்படையில் வரும் பல சான்றுகள் புலப்படுத்துகின்றன.
மாற்றுயர்ந்து தூய சிறந்த பொன்னானது.
ஆடகம், சாதரூபம், கிளிச்சிறை, சாம்பூநதம் என்று நான்கு வகைப்படும்.
இவற்றுள்ளும் சாம்பூநதம் என்னும் பொன்னே மிகவும் சிறந்துயர்ந்தது ஆகும்.
திருப்பரங்குன்றம் ஆகிய மலைநிலத்துச் சூரர மகளிர், சாம்பூநதம் என்னும் உயர்ந்த பொன்னால் இயன்ற அழகிய இழைகளை அணிந்துள்ளனர்.
அதனைக் குறிப்பிட வரும் நக்கீரர், சாம்பூநதம் என்னும் சொல் வடசொல்லாதலின், அதனை அங்ஙனமே தமது தெய்வீகக் கவிதையில் அமைக்க விரும்பிற்றிலர்.
‘சம்பு’ என்றும் சொல்லுக்கு நாவற்பழம், நாவல் மரம் என்பது பொருள்.
அந்நாவல் மரங்கள் நிறைந்திருப்பது சம்புத்தீவம்.
அதன்கண், ‘நாவல்மரப் பழங்களின் சாறு படிந்து அதனால் விளைந்த பொன்’ என்பது, சாம்பூநதம் என்னும் வடசொல்லுக்குரிய பொருள். ஆதலின் அக்கருத்தினைக் குறிக்கும் வகையில் ‘நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை’ என்னும் தொடரினை அழகுற அமைத்து வழங்குகின்றார். நக்கீரர்!
இப்புதிய சொல்லாக்சுகுத்தொடர், நக்கீரரின் நல்ல தமிழ் உணர்வைத் தெள்ளிதின் விளக்குவதாகும்.
நக்கீரர் பெருமானின் நயம்மிகுந்த இத்தகைய நல்ல சொல்லாக்க முறையினைப் பின்வந்த சான்றோர்கள் சிலரும், பெரிதும் தழுவிப் போற்றியுள்ளனர்.
இங்கு ஒன்றை மட்டும் குறிப்பிடுதல் சாலும்.
பாரதக்கதையின் போதரும் ‘திருதராட்டிரன்’ என்னும் அரசனைப் பற்றிய குறிப்பொன்று சங்க கால நூலாகிய கலித்தொகைப் பாடல் ஒன்றில் வருகின்றது.
திருதராட்டிரன் என்னும் சொல், தமிழ்மொழியின் இயல்பிற்கேற்ற சொல்லமைப்பு உடையதன்று.
ஆதலின், அதனை அங்ஙனமே குறிப்பிட விரும்பாமல், பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் சங்க காலப் புலவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
திருதராட்டிரன் கண்பார்வையற்றவன்; பிறவியிலேயே குருடன்.
அவனைப் பிறர் பார்த்தல் இயலுமேயன்றி அவன் பிறரைப் பார்த்தல் இயலாது.
அவனது நிலை கண்ணாடியைப் போன்றது.
கண்ணாடியை நாம் பார்க்கலாம். ஆனால் கண்ணாடியால் நம்மைப் பார்க்கமுடியாது.
இத்தகைய கண்ணாடியைப் போன்ற இயல்புடையவர் ஆதலின் திருதராட்டிரனுக்குத்
‘தர்ப்பண ஆனனன்’,
‘முகுர ஆனனன்’ (தர்ப்பணம், முகுரம் – கண்ணாடி; ஆனனம் – முகம்) எனப் பெயர்கள் வழங்கும்.
இதுபற்றி அவனைன “வயக்குறு மண்டிலத்து வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன்’ என்று பாலைபாடிய பெருங்கடுங்கோ குறிப்பிட்டருளுகின்றார்.
“வயக்குறு மண்டிலம்” என்பது கண்ணாடியைக் குறிக்கும்.
‘ஒளி மிகுந்த வட்ட வடிவம் உடையது’ என்பது பொருள்.
சூரியர்கள் பன்னிருவரின் பகன் என்றும் சூரியன், தக்கனின் வேள்வியில், வீரபத்திரரால் மறுக்கப்பெற்றுக் கண்குருடாயினான் என்பது வரலாறு.
அதனைத் தழுவி ‘வயக்குறு மண்டிலம்’ என்றும் தொடர் ‘பகன்’ என்னும் சூரியனையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.
சாம்பூநதம் என்னும் பொன்னை ‘நாவலொடு பெயரிய பொலம்’ என்று நக்கீரர் வழங்கியதைத் தழுவியே, திருதராட்டிரனை ‘வயக்குறு மண்டிலத்து வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன்’ என்று பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியருளினார் ஆதல் வேண்டும்!
இச்சொல்லாக்க முறையினைத் தழுவி மாணிக்கவாசகர் ‘நரசிங்கம்’ என்பதனை ‘ஆள்அரி’ என்றும் :
திருத்தக்கதேவர் ‘புத்திசேனன்’ என்பானைத் ‘திங்கள் விரவிய பெயரினான்’ என்றும்;
கம்பர் ‘அசகாய சூரன்’ என்பவனைக் ‘கூட்டு ஒருவரை வேண்டாக் கொற்றவன்’ என்றும் ஆங்காங்குத் தம் நால்களில் அழகுற குறிப்பிட்டருள்வாராயினர்.
ஆசிரியர் அருட்டிரு மறைமலையடிகளார்
Tennyson என்பதனைத் தேனிசையன் என்றும்.
Shakespeare என்பதனைச் செகப்பிரியர் என்றும்,
Annie Besant என்பதன் அன்னை வசந்தை என்றும் குறிப்பிடுதல்,
இங்கு நாம் சிந்தித்து இன்புறுதற்குரியது.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment