POST: 2021-06-08T09:38:50+05:30

தினசெய்தி-3.6.2021 பக்கம் 10

போராட்டமே வாழ்வின் தேரோட்டம் !

அறிவொளியின் வெள்ளம் அறியாமை இருளையும் உறக்கத்தையும் கலைத்து, மக்கள் மனம் விரிவடைந்து, அகண்ட பார்வையால் அனைவரையும் தழுவி, மனிதநலம் காக்கும் மாண்புடைய அறிவுத் தலைவர்களாகத் தமிழினம் விளங்க வேண்டும் என்பதற்கு முன்னோடியாக விளங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சர், இந்நாள் முதலமைச்சரின் தந்தையார் எந்நாளும் தனிப்பெரும் தலைவர் கலைஞர் அவர்கள்.

தமிழக அரசியலின் திருப்புமுனையாக இருந்த தந்தை பெரியார் இருண்ட வீட்டில் உழலும் தமிழர் முதலில் அறிவூட்டப் பெற்றால்தான் நாடு விழிக்கும் எனக் கண்டு, ‘குடியரசு’, ‘விடுதலை’, ‘புரட்சி’ எனும் இதழ்களைத் தந்தார்.

புயல் வீசத் தொடங்கியது.

பேரறிஞர் அண்ணா, மக்களுக்குப் பணியாற்றிடப் பெரியாருடன் சேர்ந்து இதழ்ப் பணியைத் தொடங்கினார்.

1942 – இல், ‘ திராவிட நாடு ‘ என்ற புரட்சிமணக்கும் பெயரில் இதழ் வெளிவரத் தொடங்கியது.

பேரறிஞர் அண்ணாவின் எழுத்து படிப்போரின் இதயத்தைத் தூய்மைப்படுத்தி, நாட்டில் மண்டியுள்ள மூடநம்பிக்கைகளைப் போக்கி, புதிய கருத்து, புதிய எண்ணம், புதிய சிந்தனை எனப் பகுத்தறிவுப் புரட்சி ஏடாக உலா வந்தது.

மாணவர் மன்றங்கள் எங்கும் மலர்ந்தன .

மாணவர் படையின் தளபதியாக அந்நாளிலேயே கிளர்ந்தெழுந்தார் நம் கலைஞர்.

1924 ஜூன் 3ஆம் நாள் திருக்குவளையில் பிறந்த முத்தமிழ் வித்தகர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞரின் தமிழ்ப் புனலில் நீராடிய சுடரொளியாய் முதன்முதலில் ‘ மாணவ நேசன் ‘ என்ற பெயரில் இதழ் தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து திருவாரூரில் ‘முரசொலி’ என்ற பெயரில் ஒரு துண்டு வெளியீடு கொண்டுவந்தார்.

தமிழ்ப் பணியில் முதலில் சிந்தனையைத் தூண்டும் நெறியில் பெண்ணினக் கொடுமைகள் களைந்திட எழுந்த முரசொலியாக, ‘ இளமைப் பலி ‘ எனும் ஒரு சமுதாயக் கதையை எழுதி, அண்ணாவிற்கு அனுப்பி வைத்தார்.

அண்ணாவிற்கு ஒரு தலைமுறைத் தம்பியும், தமிழகத்துக்கு ஒரு தமிழினத் தலைவரும் கிடைத்தன .

திருவாரூர்க் கூட்டத்தில் இவர்களின் சந்திப்புக் கலைஞரை முழுநேர எழுத்துப் பணிக்கும் , மக்கள் அணிக்கும் மாற்றியது.

எண்ணத்தை வண்ணமாக்கும் கலைச் செம்மையும், செழுமையும் நிரம்பப் பெற்ற முத்தமிழ்க் கலைஞர், அக்கால ஊடகங்களாகிய நாடகங்கள், திரைப்படங்களில் நடித்தும், கனல் கக்கும் வைர வரிகளை எழுதியும், மக்களிடையே மகத்தான தலைவராக ஈடற்ற வளர்ச்சி பெற்றார்.

‘ சாந்தா அல்லது பழனியப்பன் ‘ என்ற நாடகத்தைக் கலைஞர் எழுதிப் புதுவையில் நடத்திய போது நடந்த தாக்குதலில் கலைஞர் அடிபட்டார் என்பதைக் கேட்டும் படித்தும் பதறிப் போய் திராவிட நாடு இதழில் உருகி உருகி பதிவிட்டதைக் குறித்தாக வேண்டும் .

தன்னைப்போல் இயக்கத்தூண்கள் இன்னலுக்கு ஆட்பட்ட போதெல்லாம் உதவிக்கரம் நீட்டி ஓடோடி வந்திடுவார்.

கட்சியின் வேர் வரை அவர் உயிரோட்டமான உறவைத் தொடக்கத்திலிருந்தே இயக்கத்தில் வளர்த்த தனிப் பெருமை கொண்டார்.

தமிழ் இலக்கியங்களில் கரை கண்டவர்;

எங்கெல்லாம் தமிழுக்கு உயர்வு தர வேண்டுமோ, அங்கெல்லாம் கலைஞர் முன் நின்று தன் கடமையைச் செய்தவர்.

உலகத் தமிழ் மாநாடு, தமிழை செம்மொழி என மத்திய அரசு அறிவிக்கச் செய்தது என்பதை நாடு எந்நாளும் போற்றுகிறது .

வள்ளுவர் கோட்டம் முதல் தென்குமரியில்
திருவள்ளுவர் சிலை வரை திருவள்ளுவர் மீதிருந்த ஆழமான மதிப்பை வெளிக்கொணர்ந்தார்.

குறளோவியம் அவர் தீட்டிய அருமையான கலைக் காவியம்.

கவியரங்கங்களில் பங்கு பெறுவது அவருக்குக் கரை கடந்த காதல் .

எண்ணிலடங்காத கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கினார் .

அரசியல் கேட்க வந்தவர்களைக் கவிதைச் சுவைஞர்களாக ஆக்கியவர் கலைஞர்.

‘ கவிக்கோ ‘ அப்துல் ரகுமான் அவர்கள், அண்ணாவைப் பற்றி, ”

அழுகின்ற போதும் மேகம் போல் அழுதவன் .
விழுகின்ற போதும் விதைபோல் விழுந்தவன் நீ ”
எனப் பாடியதைக் கேட்டுப் பரவசப்பட்டு, ”

இரகுமான் எங்களுக்குக் கிடைத்த வெகுமானம் ” என்றும்,
” குடமிட்ட தீபம் இவர் –
இனிமேல் குன்றிலிட்ட தீபம் ”
என்றும் பாராட்டினார் . ”

வார்த்தைகளில் சித்து விளையாட்டு என்பது, அவர் கருவிலே பெற்ற திரு .

தமிழன்னை அவருக்கு வாரி வழங்கியுள்ள வரம் ” எனக் கலைஞர் கூறியது அவருக்கே பொருத்தமானதாக அமைந்தது.

கலைஞர் ஒரு போராட்ட நாயகர் . 1953 ஜூலை 15-இல் மும்முனைப் போராட்டத்தில் தொடங்கி, இந்தி எதிர்ப்புப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு, நெருக்கடி நிலை எதிர்ப்பு என அவர் போராடியே வளர்ந்தவர்; வாழ்ந்தவர்.

எழுபதாண்டுகளுக்கு முன்னர் நடந்த முதல் மாநாட்டில் பேரறிஞர் அண்ணாவைத் தலைமை தாங்க அழைத்து வழிமொழிந்து பேசிய முத்தமிழறிஞர் கலைஞர் கூறிய தொடர்கள்

வாழ்வு மூன்றெழுத்து –
வாழ்விற்குத் தேவையாம் பண்பு மூன்றெழுத்து ,
பண்பிலே பிறக்கும் அன்பு மூன்றெழுத்து ,
அன்பிலே சுரக்கும் காதல் மூன்றெழுத்து ,
காதல் விளைக்கும் வீரம் மூன்றெழுத்து ,
வீரர் செல்லும் களமும் மூன்றெழுத்து ,களத்திலே பெற்றிடும் வெற்றி மூன்றெழுத்து ,
வெற்றிக்கு அழைக்கும் அண்ணா மூன்றெழுத்து ,
அவர் தாங்கும் தலைமை மூன்றெழுத்து ,
காத்திருந்து தங்கள் கண்களால் நாங்கள் ஆற்றும் கடமையும் மூன்றெழுத்து
என்று முழங்கினார்

அவர் அன்று கூறிய தொடர்தான் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பாடல் வரியாகப் பிறந்தது .

கலைஞர் என்பதா அறிஞர் ,கவிஞர் ,கதையாசிரியர்
,நாடக வேந்தர் ,
திரைக்கதை மன்னர் ,
செம்மொழிச் சிகரம் ,
வரலாற்று வரைவாளர் ,
ஆட்சித்தலைவர் ,
தோல்வி என்ற சொல்லையே கண்டறியாத தேர்தல் களத்திலகம் என்று அடுக்கிச் சொல்லலாம் .

அவர் தொட்டால் மண் – பொன்னாயிற்று .
கல் – கனியாயிற்று ,
முள் – மலராயிற்று ,
சொல் – வரலாராயிற்று .
போராட்டமே தலைவர் வாழ்வின் தேரோட்டமாகும் .

இன்றைய நம் மாண்புமிகு முதலமைச்சருக்குக் கூட முதலில் ‘ ஐயாத்துரை ‘ எனப் பெரியார் பெயரையும், அண்ணாதுரை பெயரையும் இணைத்து வைக்க இருந்ததாகவும், பின்னர் அவர் பிறந்த நாளில் உலகப் புகழ் பெற்ற போராட்ட வீரர் தலைவர் ஸ்டாலின் பெயரை வைத்ததாகவும் சொல்வார்கள்.

தமிழகத்திலேயே அதிக ஆண்டுகள் முதலமைச்சராகவும், நீண்டகால எதிர்க்கட்சித் தலைவரும் அவர்தான்.

பத்து நாவல்கள்,
21 நாடகங்கள்,
8 கவிதை நூல்கள்,
37 சிறுகதைகள்,
6 உரைநூல்கள்,
ஒரு பயண நூல்,
ஒரு தன் வரலாறு
என ஏராளமாக எழுதியவர்.
75 திரைப்படங்களில் அவரது பங்களிப்பு உண்டு.
13 சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியையே கண்டிராத தலைவர் அவர்.
அவரின் மேடைப் பேச்சுக்களைத் தொகுத்தால், நூற்றுக்கு மேல் புத்தகங்களை உருவாக்கலாம்.

முத்தமிழ்க்கலைஞரின் புகழ் சொல்லும் பல திட்டங்கள் –
சமத்துவபுரம்,
அனைவரும் அர்ச்சகராகலாம் சட்டம், உள்ளாட்சியிலும், அரசுப் பணிகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு.

உழவர் சந்தை,
நலிவுற்றோர் மறுவாழ்வுத் திட்டம், கண்பார்வை வழங்குதலுக்கும், மருத்துவ நல முன்மாதிரித் திட்டங்கள்
என, அக்காலத்தில் வந்த பல தமிழக முன்னேற்றப் படிகள், பொருளாதார நிபுணர்களால் புகழ்ந்து பாராட்டப்பட்டவை.

மக்களுக்காக வாழ்ந்து மறைந்த மாபெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

கலைஞர் கூறிய இந்த வரிகள் இன்றும் பொருத்தமானவை.

நீ தந்த விளக்கை எடுத்து நடக்கின்றோம் !
நெய்யிட்டுத் திரியிட்டு உதவுகின்றார் தமிழ் மக்கள்
கடும் மழையில் அணையாமல் காற்றுக்கு நடுங்காமல்
கரம்பொத்திக் கைவிளக்கைக் காக்கின்றோம்

அடித்தளத்து மக்களுக்கு அடுக்கடுக்காய்ச் சாதனைகள்
உன் வழியில் அயராமல் நடப்பதற்குத் துணை நிற்போம்.

என்ற முழக்கம் நம் மாண்புமிகு முதல்வரின் குரலாகவே நெஞ்சைத் தொடுகிறது .

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெரும் புகழ் என்றும் வாழும் !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *