அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 75
எதையும் எதிர்பாராத அன்பு
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
இளம்பருவத்தில் பல ஊர்களுக்குப் பெற்றோர்கள் எங்களை அழைத்துச் சென்றதை முன்னரே குறிப்பிட்டுள்ளேன்.
எங்களுடைய பாட்டனார் உரைவேந்தர் ஔவை துரைசாமி மதுரை இல்லத்திற்கு ஆண்டிற்கு ஒருமுறை சென்று வருவது மகிழ்ச்சியான விடுமுறைப் பயணமாகும்.
என்னுடைய பாட்டியார் உலோகாம்பாள்
(10.06.1911 – 07.03.1990)
எங்கள் மூவர் மீதும், பாசமும் பரிவும் பொழிந்து தள்ளுவார்கள்.
அவர்கள் விரும்பிச் செய்த இனிப்புப் பலகாரங்களை உண்டு மகிழ்ந்திருக்கிறோம்.
விடியற்காலையில் பாட்டியார் செய்கின்ற வழிபாட்டு முறை நீண்டதாகவும், அழகாகவும் என் கண்களுக்கு இன்றும் தெரிகிறது.
அவ்வழிபாட்டு முறையினை இன்றும் அவர்களுடைய 80 வயது திருமகளான என் அத்தை திலகவதியாரும்,
மருமகளான என் சித்தி முத்துலட்சுமியும் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது பெருமிதமான மரபின் மாட்சியாகும்.
பாட்டியார் வழிபாடு முடிந்த பிறகு விறகு அடுப்பில் அமுதென இட்டலியை, எள்ளு மிளகாய்ப் பொடியில் நல்லெண்ணெயுடன் குழைத்து உண்ண வைப்பது எல்லையில்லா மகிழ்ச்சியாகும்.
அவ்வண்ணமே, மாலையில் கைவண்டி ரிக்ஷாவில் அழைத்துக் கொண்டு இல்லத்திற்கு அருகிலுள்ள திரையரங்கிற்குச் செல்லும் பாங்கும், அதேபோல மதுரை மீனாட்சியம்மன் கோயில் வழிபாட்டிற்கும் அழைத்துச் சென்றது நினைவினின்று நீங்கவில்லை.
மரபார்ந்த மடிசார் புடவையணிந்து சுறுசுறுப்பாக இயங்கும் எங்கள் பாட்டியார் அடிக்கடி சொல்லும் சொற்கள் இன்றும் என் நினைவில் பசுமையாய் உள்ளன. ‘
மூலக்காட்டார்’, ‘என் ஓரகத்தி புண்ணியகோடி’ போன்றவை அவர் திருவாய் மலரும் குடும்பத் தொடர்களாகும்.
பாட்டனாரின் வெற்றிகளுக்குப் பாட்டிதான் ஆணிவேராகத் திகழ்ந்தார்.
என் அப்பா மீது பாட்டியார் அளப்பரிய அன்பும் பாசமும் கொண்டவராவார்.
அப்பா தன் அம்மாவைப் பற்றி உருக்கமாக எழுதிய தொடர்:-
“ஒளவை துரைசாமி, லோகாம்பாள் பெற்ற பதினோறு பிள்ளைகளில், புகழ் பெற்ற பிள்ளை நீ என்று நீ பிறந்த ஆரணியை அடுத்த கோட்டுப்பாக்கத்தில் இருந்து, என் தந்தையார் பிறந்த ஒளவையார் குப்பம் இரட்டணையில் தொடங்கி ஊர் மெச்சக் காரணம் நீதானே!
தன் இருபதாவது வயதிலேயே தந்தையாரை இழந்ததால், நாதியில்லாமல் தன் பாட்டி லட்சுமி வீட்டில் வளர்ந்தாராம் அவர்!
உரக்க உரக்கப் பேசுவாய், கோபத்தில் கொதித்துப் போவாய். ஆனால் உனக்கு ஈரமனம், இளகிய போக்கு எழுத்துக் கூட்டிப் படிக்க மட்டும் தெரிந்த நீ, தினம் அதிகாலையில் திருவருட்பாப் பாடலை எப்படிப் பாடினாய் என்று இப்பொழுதும் ஆச்சர்யப்படுவேன்.
சித்தி ஞானாம்பாள், தாய் மாமன் ஏகாம்பரம், லட்சுமி பாட்டி, சந்திரமதியம்மாள் பாட்டி, நாங்கள் பதினோறு பேர், இத்தனை பேரையும் வைத்து அப்பா பார்த்த ஆசிரியர் தொழில் மூலம் கிடைத்த குறைந்த வருவாயை வைத்து, குறை இல்லாமல் குடும்பம் நடத்திய சிறந்த நிர்வாகி நீ! அம்மா!
எங்கள் அப்பா கற்றுத் தேர்ந்த கல்விமான்தான். ஆனாலும் அவரை, எங்கள் பாட்டி “உங்களுக்கு என்ன தெரியும்” என்று அடிக்கடி கூறுவார். என் தந்தை கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல், “எனக்கு என்ன தெரியும்” என்று சொன்னால், “அவளுக்கு என்ன புரியும் என்று சொல்லிச் சிரிப்பார்.
உனக்கு 5 ஆண் பிள்ளைகள் இருந்தாலும், ஒரே பிள்ளை நீதான் என்பாய், என் மகனுக்கு ஈடில்லை என்பாய்.
ஒருமுறை அப்பாவைப் போல் ஆசிரியர் வேலைக்குப் போகிறேன், என்று செய்யாற்றில் இருக்கும் போது சொன்னேன்.
வேண்டாமப்பா நீ அரசாங்க உத்தியோகத்தில் பெரிய ஆபீசரா போ என்றாய். ஆனாலும் நான் அப்பாவைப் போல் தஞ்சை சரபோசி கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணிபுரிந்த போதும், நீ ஆசைப்பட்டது போல், தில்லி வானொலி அறிவிப்பாளராகப் பணியாற்றிய போதும், தமிழக அரசில் மொழி பெயர்ப்புத் துறை இயக்குநராக ஆனபோதும் மகிழ்ச்சியில் திளைத்தாய்,
புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆர் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை என்ற ஒரு துறையையே புதிதாக உருவாக்கி என்னை அரசு செயலாளராக அழகு பார்த்தபோதும், மதுரை உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது முதன் முதலாக நம் வீட்டுக்குத் தொலைபேசி வைக்கப்பட்ட போதும் ஒரு குழந்தையைப் போல் அதைத் தொட்டுத் தொட்டு மகிழ்ந்தாயே!
அப்பா மறைந்தவுடன் (1981) நீ பேசுவதையே நிறுத்திக் கொண்டாய், அமைதியே வடிவமாகிப் போனாய்.
இந்த நிலையில் உன்னைத் தலைவர் பொள்ளாச்சி மகாலிங்கம் மதுரை வந்து பார்த்த போதும், அப்பாவின் மாணவர் புலவர் கோவிந்தன் வந்து உன்னை விசாரித்த போதும், உணர்ச்சிவயப்பட்டுப் போனேன்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் என் மனைவி மருமகள் தாரா நடராசன், என் தம்பிகள் மெய்கண்டான், நெடுமாறன் பிரபல மருத்துவர்களாகவும், என் தம்பி ஞானசம்பந்தன், மாநிலக் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் ஆனாலும், ‘ஆயிரமாகட்டும், என்பிள்ளை நடராசனை விடவா நீங்கள் பெரியவர்கள்’ என்று சொல்வாய்!
என் தந்தையாருக்கு எந்தப் பிள்ளைகள் வீட்டிலும் போய் இருக்கப் பிடிக்காது.
ஆனால் உனக்கு ஒவ்வொரு பிள்ளைகள் வீட்டிலும் இருக்கப் பிடிக்கும்.
இராமநாதபுரத்தில் நீ நோய்வாய்ப்பட்டுக் கிடந்தபோது கடைசியாக நான் உன்னை பார்க்க வந்தேன்.
அப்பொழுது நான் உயர் அலுவலர் என்ற வகையில் நான் காரை விட்டு இறங்கியவுடன் 5, 6 பேர் புடை சூழ நின்று வணக்கம் வைத்தார்கள், நானும் வணக்கம் சொன்னேன். இதைப் பார்த்த நீயும் கும்பிடு போட்டாய்! அதை இன்று நினைத்தாலும் நெக்குருகிப் போகிறேன்.
என் தெய்வம் எதிரில் நின்று கும்பிட்டது போல் தோன்றியது.
எங்கள் எல்லோருக்கும் சேர்த்து பரிவைக் கொட்டி உன் நலனைப் பார்த்த மெய்கண்டான்- சீதையை இப்போது நினைத்தாலும் நான் நெகிழ்வேன்.
தாயைத் தோளில் தாங்கிய தவம் செய்தவர் மெய்கண்டான்!
சின்ன வயதில் சர்க்கரை டப்பாவைத் திருடி எடுத்துக் கொண்டு சாப்பிடுவேன்.
ஒவ்வொரு முறையும் அடிக்க கை ஓங்குவாய், ஒரு நாளும் அடித்ததில்லை.
ஒரு வேளை நீ ஒரு முறையாவது அடித்திருந்தால், 50 ஆண்டுக் காலமாய் சர்க்கரை நோயால் அல்லல் படாமல் இருந்திருப்பேன்!” அம்மா…
திருமதி. லோகாம்பாளின் மூத்த மகளான என் பெரிய அத்தை பாலகுசத்தின் கணவர் திரு. இரமணன் அவர்களின் உறவினர் முனைவர் நாகலிங்கம் எங்கள் மூன்று பேரிடமும் பரிவாகப் பழகும் பண்பு அண்ணனாய் மிளிர்ந்தார்.
அண்ணன் நாகலிங்கம் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயிலுங்கால் அண்ணாநகர் இல்லத்திற்கு அடிக்கடி வந்து எங்களையெல்லாம் தன்னுடைய மாமா இல்லமான பெருங்களத்தூருக்கு அழைத்துச் சென்றது மறக்கவொண்ணாத நிகழ்வாகும்.
அப்பொழுது அவர் எங்களை புகைவண்டித் தொடரியில் அழைத்துச் சென்று மதிய உணவு உண்டு மாலையில் அழைத்து வந்து விட்டது புதுமையான சுவையான நிகழ்வாகும்.
எந்தையாரின் முனைவர் பட்ட ஆய்வேடான ‘சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்’ என்னும் தலைப்பில் பல்கலைக்கழகத்தில் தருவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது, அண்ணன் நாகலிங்கம் அப்பாவுக்குத் துணையாக ஓரிரு வாரங்கள் சிறுசிறு உதவிகளைச் செய்து வந்ததையும் நாங்கள் அறிவோம்.
அவர் பச்சையப்பர் கல்லூரியில் தமிழிலக்கியம் பயிலும்போது என்னுடைய பாட்டனார் சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமி அவர்கள் கல்லூரிக்கு வருகை புரிந்து உரையாற்றியதை அவர் இன்றும் சொல்லி மகிழ்வதோடு தாத்தா எழுதிய நற்றிணை விளக்கவுரையிலிருந்து ‘
நின்ற சொல்லர், நீடுதோறு இனியர்’
என்னும் முதற்பாட விளக்கத்தில் ஈர்க்கப்பெற்று அண்ணன் நாகலிங்கம் இன்றும் மனனமாகிச் சொல்வது அவருடைய சிந்தனையின் உயர்வைக் காட்டும்.
தமிழ்த் தென்றல் திரு.வி.க.வைப் பற்றி நுணுகி நுணுகி ஆராய்ந்து, சிறந்த நூல்களைப் படைத்து வாழும் மற்றொரு திரு.வி.க.வாக அண்ணன் நாகலிங்கம் இன்று புகழோடு திகழ்வது எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பெருமையாகும்.
தமிழ்த் தென்றல் திரு.வி.க.வுடன் பழகிய பலதுறை அறிஞர் பல்துறை வித்தகர் கடலூர் தி.கி. நாராயணசாமி நாயுடு அவர்கள் அண்ணன் நாகலிங்கத்திடம்,
“சித்தாந்த கலாநிதி ‘இரும்புக் கடலை’ என்று சொல்லத்தக்க சாத்திர நூலாம் ஞானாமிர்தத்திற்கு விளக்கவுரை எழுதியதன் மூலம் அதனை ‘வேகவைத்த கடலை’யாக மாற்றிய சிறப்பு சித்தாந்த கலாநிதிக்குத் தகும்” என்று அவருடைய உரைச் சிறப்பைப் புகழ்ந்ததை நான் மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் பயிலும்போது, அண்ணன் நாகலிங்கம் குறிப்பிட்டதை என் கருத்துக் கோவையில் 05.11.1987 அன்று எழுதியதை எண்ணி மகிழ்கிறேன்.
தமிழ்த் தென்றல் திரு.வி.க. பேசிய பேச்சையும், நாயுடுவின் இளைஞர் மாநாட்டுப் பேச்சையும் இணைத்து ‘உள்ளம் கவர்ந்த நாயுடு பெருமகனார்’ என்ற நூலாக வெளியிடப்பட்டது.
எந்தையார் வாழ்த்துரை வழங்கினார். அவ்வாழ்த்துரை வருமாறு:-
“என் மருமகனும் மனம் கவர்ந்த பேராசிரியருமான முனைவர் அ.நாகலிங்கம் தமிழோடு சிவநெறி வளர்க்கும் சீர்மையில் உயர்ந்து நிற்பதை நாடு நன்கறியும்.
அவர் கீர்த்தியை, அடக்கத்தை, புலமையை, திறமையையைப் பலர் கூறக்கேட்டு என் நெஞ்சம் நெகிழ்கிறது.
விளைந்த நாள்தொட்டே அரிதின் முயன்று அருங்கலை பயின்று பிறரால் பெரிதும் பாராட்டப்படும் பெற்றிமை அவருக்கு இயல்பாகவே படிந்தது.
நாயுடு அவர்களும் பேராசிரியர் நாகலிங்கம் பற்றி நெகிழ்வோடு பேசுவார்.
காலந்தோறும் உரியார் தோன்றிட சமயக் கலை வளர்ப்பது இயல்பு போலும்!
பேராசிரியர் நாகலிங்கம் அவர்கள் வழி வழி வந்த சிவம் பெருக்கும் மரபைச் சார்ந்தவர்.
பேராசிரியரின் துணைவியாரும் மக்களும் அவர் நின்ற நெறியிலே சிறந்து தொடர்கின்றனர்.
திருமதி நா. கலையரசி மனைத்தக்க மாண்புடையளாகித் திகழ்வதோடு மருகர் நாகலிங்கத்துக்கு உற்ற துணையாகவும் கற்ற கல்வியில் உதவியும் ஒளிர்கிறார்”.
——
‘செந்தமிழ்த் திலகம் பேரறிஞர்
கு. சிவமணி’
உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களுடன் நெருக்கமாகப் பழகி கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் அவர்களின் தவப்பிள்ளை என்ற பெருமைபெற்ற தமிழ் மாமணி பேராசிரியர் கு. சிவமணி பற்றிய குறிப்பு:-
பேராசிரியர் கு.சிவமணி தமிழ்ப்பற்றும், தமிழ் உணர்வும் நிறைந்த பெரும்புலமை வாய்ந்த பேராசிரியர் ஆவார்.
தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் பெரும்புலமையும் அரிய திறனும் வாய்க்கப் பெற்றவர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றிய இவர்தம் வாழ்வு தமிழ்வாழ்வாகும்.
புதுவையில் இப்போது வாழும் பேராசிரியர் சட்டத்தமிழ்ப் பேரகராதி வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூரில் வாழ்ந்த பெரும்புலவர் கரந்தை சிவகுப்புசாமி அவர்களுக்கும், திருவாட்டி பருவதத்தம்மைக்கும் மகனாக 01.08.1932 இல் பிறந்தவர்.
1950-52 இல் இடைநிலை வகுப்பையும்,
1953-55 இல் தமிழ்ச் சிறப்பு வகுப்பையும், முதுகலைப் பட்டத்தையும்
(1958) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்ற பெருமைக்குரியவர்.
பி.டி. பட்டத்தைச் சென்னை சைதாப்பேட்டையிலும்,
பி.ஜி.எல். என்னும் சட்டப் படிப்பைச் சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பயின்றவர்.
முனைவர் பட்ட ஆய்வைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தியவர்.
கரந்தைத் தமிழ்க்கல்லூரியிலும், பாபநாசம் திருவள்ளுவர் கலைக் கல்லூரியிலும் கல்லூரி முதல்வராகவும், குமரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணிசெய்த பெருமைக்குரியவர்.
சென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு, தேர்வுக்குழு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குழுக்களில் இருந்து சீரிய பணிபுரிந்துள்ளார்.
தமிழக அரசின் தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மொழிபெயர்ப்பாளராகவும்,
புதுச்சேரி அரசின் சட்டத்துறையில் மொழிபெயர்ப்பு அலுவலராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர்.
புதுவை மொழியியல் நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராக விளங்கியவர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரகரமுதலி சீராய்வுத் திட்டத்தின் பதிப்பாசிரியராக விளங்குகின்றார்.
அருஞ்செயல்கள்:
1959 இல் தமிழகத் தமிழாசிரியர் கழக மாநாட்டில் தமிழ்க்கல்லூரிகளையும் கலைக்கல்லூரிக்கு நிகராகக் கருத வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தவர்.
1965 இல் கரந்தைப் புலவர் கல்லூரியை மூடும் சூழல் உருவானபொழுது அதனைத் தடுத்து நிலைநிறுத்திய தறுகண்மையும் பெருமையும் பேராசிரியர் கு.சிவமணியைச் சாரும்.
1969 இல் நெல்லை மாவட்டம் பாவநாசத்தில் இயங்கிய வள்ளுவர் செந்தமிழ்க்கல்லூரி ஏற்புடைமை இழந்த சூழலில் திருவள்ளுவர் கலைக்கல்லூரியாக உயிர்ப்பித்து வளர்த்த பெருமையும் பேராசிரியர் கு.சிவமணிக்கு உண்டு.
சிதறிக் கிடந்த தமிழ்க்கல்லூரிகளை ஒன்று திரட்டித் தமிழக மொழிகல்லூரிகள் மன்றம் உருவாகக் காரணமாக அமைந்தவர்.
தமிழ்க்கல்லூரிகளைக் கலைக்கல்லூரிகள் போல் கருதவேண்டும் எனவும், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு ஏனைய பேராசிரியர்களுக்கு வழங்கும் ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தமிழ் வித்துவான் பட்டத்திற்குப் பதிலாக பி.லிட் பட்டம் வழங்க வேண்டும் எனவும் அரசுடன் பேசி, தமிழ்க்கல்லூரிகளின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்.
கரந்தைப் புலவர் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியபொழுது ஒரு நல்ல பேராசிரியருக்கு உரிய இலக்கணத்துடன் விளங்கியமையும்,
கரந்தைப் புலவர் கல்லூரித் தேசிய மாணவர் படையை (NCC) உருவாக்கித் தாமே தலைமையேற்று நடத்தியமையும் குறிப்பிடத்தக்க பணிகளாகும்.
நேர்மையும் கண்டிப்பும், எதற்கும், யாருக்கும் வளைந்துகொடுக்காத போக்கும் இவருக்கு மாணவர்களிடத்திலும் பெற்றோரிடத்திலும் நற்பெயர் பெற்றுத் தந்தன.
இவர் கல்லூரி முதல்வராக இருந்தபொழுது மாணவர்கள் வேலை நிறுத்தம் என்ற பேச்சுக்கு இடமில்லை.
“எல்லாக் கல்லூரி முதல்வர்களும் கரந்தைப் புலவர் கல்லூரி முதல்வர் கு.சிவமணி போல் இருந்துவிட்டால் மாணவர்கள் சிக்கலே ஏற்படாது” என்பது காவல்துறைக் குறிப்பு.
ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைத் தமிழாசிரியராக உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.
இவரிடம் படித்த மாணவர்கள் பலர் தமிழகம் முழுவதும் ஆசிரியர்களாகவும், சொற்பொழிவாளர்களாகவும் புகழ்பெற்று விளங்குகின்றனர்.
தமிழக அரசின் தேவநேயப் பாவாணர் விருது பெற்ற தகைசான்ற பேராசிரியர் என்னுடைய பாட்டனார் உரைவேந்தர் ஔவை துரைசாமி குறித்து எழுதிய பகுதிகளை வரும் வாரங்களில் வைர மணி மாலையாக வழங்க முற்படுவேன்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment