தின செய்தி. 17.9.2021
பக்கம் 3
அடுக்கடுக்கான புது அறிவிப்புகள்
அலையலையாய்ப் புது வெள்ளம் !!
புலவர் உலகம் போற்றி மகிழ்கிறது
ஒளவை நடராசன் பாராட்டுரை
பேரறிஞர் மு வரதராசனாருக்குச் சிலை –
அருட்செல்வர் நா .மகாலிங்கம் அரங்கம் –
முன்னாள் முதல்வர் டாக்டர் பி சுப்புராயன் அவர்களுக்குச் சிலை !
நிதித்தொடர் அவைக் கூட்டங்களில் முதல்வர் எழுந்து நின்றாலேயே மாமழை பொழிகிறது !,
மக்களுக்குக் காதில் மகிழ்ச்சித்தேன் வழிகிறது .
ஒன்றா இரண்டா !
பச்சையப்பர் கல்லூரிக்குப் படியேறிப் படிக்கச் சென்ற நாளிலே மு வ வைப் பார்த்தல் போதும் என்று தான் நாங்கள் மாமதுரையிலிருந்து முதுகலை பயில வந்தோம் !
ஆசிரியர் மு வரதராசனாரை யான் நீண்ட காலமாக அறிவேன்.
அவரை யான் முதன் முதலாகப் பார்த்தபோது அவர்தம் மலர்ந்த விழியும், கூரிய மூக்கும் பரந்த நெற்றியும் நீண்ட முகமும், நிமிர்ந்த பிடரியும் என்னுள்ளத்தைக் கவர்ந்தன .
ஆசிரியர் வரதராசனார் பெருங்கலைஞராய் நாட்டை நல்வழியில் ஒம்புந் தொண்டராவார் என்று யான் நினைத்தது உண்டு.
அந் நினைவு பழுதுபடவில்லை !
அவர் இயற்றியுள்ள நூல்கள் .நாட்டை நல்வழியில் ஓம்பி வருதல் கண்கூடு என்று தமிழ்த் தென்றல் திரு. வி. க , அறுபதாண்டுகளுக்கு முன்னர் மு.வ அவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகிற்குப் படம்பிடித்துக் காட்டினார்.
அஞ்சன மேனி ,உயர்ந்த தோற்றம் ,கலை மிளிரும் கண்கள் ,கனிவின் நிறைகுடம் ,வாய்மையின் உறைவிடம் – என்ற நிலையில் மு வ எங்கள் எதிரில் வகுப்பெடுக்க வந்தார் .
அந்நாளில் தமிழ் படிக்கும் ஆர்வம் இளைஞர்பால் எழுந்ததே அறிவுக்கடல் மு வ வின் எழுத்தால் தான் .
மு வ வின் கதை நூல்கள் இல்லாத கரங்கள் – கரங்கள் அல்ல மரங்கள் என்று சொல்லி மகிழ்ந்தோம் .
மு வ எழுதிய நூல்களில் வரும் பெயர்களை ஆர்வலர் பலர் தம் மக்களுக்குச் சூட்டி மகிழ்ந்தனர் .
பாரி முனை என்று அவர் அழைத்த பெயர் இன்றும் அவரை வாழ்த்துகிறது .
அண்ணல் க த திருநாவுக்கரசு உருகி உருகி எழுதிய ஒரு நூல் அறிஞர் அறவாழி என்பதாகும் .
பேராசிரியர் மு வ என்ற பெயரைக் கூடச் சொல்லாத பணிவு .
அறிஞர் மு வ படைத்த புதினங்களில் உலாவரும் புகழ்ப்பெரியாரின் பெயர் அறவாழி என்பதாகும் !
அந்தப் பெயரையே தம் நூலுக்குச் சூட்டினார் .பேரறிஞர் அண்ணாவும் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் பச்சையப்பர் கல்லூரிக்கு வரும்போதெல்லாம் இது மு வ கல்லூரி தானே என்று முகமலர அகமலர வினவுவார்கள் .
அண்மையில் தலைமைச் செயலாளர் மு வ வின் மொழி நூல் , மொழி வரலாறு நூல்களைக் கேட்டார் என்று என் மகன் முனைவர் அருள் கூறினார் .
அறுபதாண்டுகளுக்கு முன்பே அவர் எழுதிய நூல்கள் அவை .இன்றும் புதுமையானவை .
ஒப்பற்ற பொது நலப் பணிகள் ஆயிரம் ஆற்றுவதற்கு நடுவில் கட்சி ,கருத்து ,கசப்பு ,இனிப்பு வேறுபாடின்றிச் சான்றோர்களுக்குப் புகழ் சூட்டி வருவது அளவிறந்த பாராட்டைத் தருவதாகும் .
அருட்செல்வர் – தொழிலதிபர் – கருத்துக் கருவூலம் – சன்மார்க்கப் பேரொளி – பண்பாட்டின் உறைவிடம்
கொடுத்துச்சிவந்த கொடைக்கரம் – ஆயிரம் தமிழ் நூல்களை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கச் சொல்லி நாடு முழுவதும் விலையில்லாது வழங்கிய பெருந்தகை .
வடலூரையும் ,திருவருட்பாவையும் வையகத்துக்குப் பரப்பிய அண்ணல் செயற்கரிய செயல்வாணர் .
அறிஞர் டாக்டர் சுப்புராயன் பெருந்தலைவர் .
அவர் தலைமுறையினர் அவரைப்போல புகழொடு வாய்த்தவர்கள் .
ஒன்றிய அரசின் அமைச்சராகத் திகழ்ந்தவர் .
பெருமிதம் வாய்ந்த அவர் சிந்தனைகளை நாடு என்றும் போற்றும் .
பேரறிஞர் மு வ சிலை திறப்பு – அருட்செல்வர் அரங்கம் – தலைவர் பி சுப்புராயனுக்குச் சிலை போன்ற எண்ணற்ற செயல்களை நிறைவேற்ற ஆணையிட்டுள்ளார் முதல்வர் .
புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் என்ற திருக்குறளின் நேர்வடிவம் ,நெஞ்சைக்கவரும் தோற்றம் , நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் , நின்ற சொல்லர் நீடு தோன்றினியர் என்று தமிழக முதல்வரைப் புலவருலகம் போற்றி வாழ்த்துகிறது .
எங்கள் பேராசிரியருக்குச் சிலை என்று கேட்டு என் மனம் எக்களிக்கிறது .
தமிழுக்குத் தகும் உயர்வளிக்கத் தலைவன் தோன்றினான் என்று தமிழ்நாடே பாராட்டுகிறது .
அன்போடு
ஒளவை நடராசன்

Add a Comment