செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 20
ஒளவை நடராசன்
தினசெய்தி 27.9.2021. பக்கம் 4
அறநிலையத்துறையும் –
அன்னம் பாலிப்பும்
நமது தமிழகம் பலவகைச் சிறப்புகளைக் கொண்டது .
நமது தமிழகத்தைப் போல எண்ணில்லாத திருத்தலங்கள் அமைந்திருக்கும் நாடு வேறு பிறிதெதுவும் இல்லை எனலாம் .
ஆழ்வார்களும் – நாயன்மார்களும் அருட்பெரும் சான்றோர்கள் பலர் தோன்றித் தத்தம் பாடல்களில் போற்றிப் புகழ்ந்து துதித்து மகிழ்ந்த பழம்பெரும் தலங்கள் நூற்றுக்கணக்கில் அமைந்துள்ளன .நாற்பதாயிரம் கோயில்கள் என்று பாரதியார் ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார் .
இப்புகழ் வாய்ந்த நாட்டில் பிறப்பதற்கு வானோரும் கூட மிகவும் விரும்புகின்றனராம் .”
நாம் மண்ணுலகில் தெய்வத் தமிழ்நாட்டில் பிறக்கும் பேறு பெறவில்லையே ! இங்கே விண்ணுலகில் இருந்துகொண்டு நாம் நம் வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கிறோமே என்றும் புலம்புவதாக மணிவாசகர் உருகிக் கூறியுள்ளார் .!
ஆலயங்களுக்குச் சிறப்பு எப்படி அமையும் என்றுரைக்கும் சேக்கிழார்
மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவுகண்டு ஆர்தல்
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என வுரைப்பார்.
இப்பெரும்பேறு வாய்க்கப் பெற்றவர்
நம் அமைச்சர் .
மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு அவர்களை நான் பல்லாண்டுகளாக நன்கறிவேன் .
தொண்டு செய்யவே பிறந்த தோன்றல் என்றால் ஓர் எழுத்துக் கூடப் பிழையில்லை .
.கழகத்தைக் கட்டிக் காத்ததோடு கழகத்தின் கழக விழாக்களை எவரும் கருதிப் பார்க்கமுடியாத அளவுக்கு நடத்தும் பெரும் பேராற்றல் அவருக்கு இயல்பாய் அமைந்தது .
அவர் அழைத்து அணிஅணியாகப் பட்டிமண்டபப் பேச்சாளர் ,கவிஞர்கள் ,
கருத்துரையாளர்கள் ,
பேராசிரியர்கள் எனப் பங்கு பெறாதவர்களே இல்லை .
அப்போதே அவர் கை அன்னமிட்ட கை என்பதை அனைவரும் அறிவர் .
அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதும் புதிய திட்டங்கள் உருவாக்கியதோடு திருக்கோயிலின் சொத்துக்களை மீட்டெடுத்து வரும் மாபெரும் நற்பணியில் வென்று நிற்கிறார் .
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் , அருந்தமிழில் அருச்சனைச் செய்யுங்கள் என்று வழிகளைக் காட்டியதோடு ,வயிறார அன்னம் பாலித்தல் எனப் பல திட்டங்களும் பாராட்டுக்குரியன .
மணிமேகலையைப் போல அமுதசுரபி இல்லாமல் சத்திய தருமச்சாலையில் எளியோர்க்கும் ஏழை மக்களுக்கும் பசியாற்றும் ஞானியாக வடலூரில் வள்ளலார் விளங்கினார் .
இராமலிங்கர் 151 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாலையில் 1867 ஆம் ஆண்டில் ஏற்றிய அடுப்பு இன்றும் அணையாமல் ஆயிரத்துக்குக் குறையாமல் மக்களுக்கு அன்றாடம் அன்னம் பாலிப்பு அளிக்கிறது .
அந்த நெறியிலேயே நம் அமைச்சருக்கும் இப்பெருமை சேர்க்கிறது .
அன்னதானம் மாபெரும் கொடையாகும் .
பசித்துன்பத்தை வள்ளலார் சுட்டிக்காட்டியது உலகில் எவருமே கூறிக் கலங்கியதில்லை .
வள்ளலார் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருபத்து நான்கு பஞ்சங்கள் ஏற்பட்டன என்பர்.
இப்போது அப்படிப்பட்ட துயரங்கள் இல்லை .
பஞ்சங்களை வள்ளலார் நேரில் கண்டார் பசியுடன் அலைந்தோர், இறந்து பட்டோரை எண்ணி எண்ணி தன் மனத்தில் நடுக்கம் கொண்டு அழுதார் .
பசியால் நேர்ந்த அவலத்தை முப்பதுக்கு மேற்பட்ட கொடுமையான நிலைகளைக் கூறி நம் மனத்தைப் பிழிகிறார்.
பசியினால் கண்கள் பஞ்சடைந்து குழிந்து போகின்றது;
காது கும்மென்று செவிடுபடுகின்றது;
நா உலர்ந்து வறளுகின்றது;
மூக்கு குழைந்து அழல்கின்றது; தோல் மெலிந்து உணர்ச்சி கெடுகின்றது;
வாய் உளறுகின்றது;
பற்கள் தளருகின்றன;
நரம்புகள் குழைந்து நைகின்றன; நாடிகள் கட்டுவிட்டுக் கழறுகின்றன; எலும்புகள் பூட்டுவிட்டுக் நெக்குவிடுகின்றன;
இதயம் வேகின்றது;
மூளை சுருங்குகின்றது;
வயிறு பகீரென்று எரிகின்றது;
உயிரிழந்து விடுவதற்கு நெருங்கிய அடையாளங்கள் தோன்றுகின்றன.
பசியினால் இவ்வளவு துன்பங்களும் உயிரினங்களுக்கு ஏற்படுகின்றன.
இத்தனை துன்பங்களும் உணவுண்டபின் நீங்குகின்றன.
பசி போக்கலே மாபெரும் புண்ணியமாகும்.” என்றெழுதினார் .
மேலும் நம் தமிழக முதல்வர் வடலூர் பெருவெளியில் அனைத்துலக சன்மார்க்க ஆய்வு தொடங்கவுள்ளார் .
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கு மாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே.”
என்று திருநாவுக்கரசர் தில்லையில் பாடியதும் நினைக்கத்தக்கது .
மாண்புமிகு முதல்வரின் வழிகாட்டுதலைத் தலைமேற்கொண்டு அறநிலையத்துறையின் கொள்கைக் குறிப்பு அனைவரும் படித்து அறிந்து கொள்ளும் வகையில் உள்ள ஒரு பகுதியைக் காணலாம் .
2021-2022
தமிழகம் எண்ணற்ற புகழ்வாய்ந்த திருக்கோயில்களின் இருப்பிடம். ‘
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டா ‘ என்ற பொன்மொழி தமிழ்நாட்டில் உண்டு.
இக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இல்லாமல் மக்கள் கூடும் மன்றங்களாகவும், பேரிடர்க்காலங்களில் புகலிடங்களாகவும், மன்னர்களின் மன்றங்களாகவும், வரலாற்றைப் பதித்து வைக்கும் ஆவணங்களாகவும், கல்வியைக் கற்றுத் தரும் பல்கலைக்கழக்கங்களாகவும்,
கலைகளைக் காத்து வளர்த்த அருங்காட்சியகங்களாகவும், கலைகளை நிகழ்த்தும் காட்சிக் கூடங்களாகவும், மனத்தை அமைதிப்படுத்தும் வழிபாட்டுக் கூடங்களாகவும் திகழ்கின்றன .
இக்கோயில்களின் மூலம் தமிழ்நாட்டின் இடைவிடாத தொன்மையும் – சிறப்பும் அமைந்த கலைத்தொடர்ச்சியை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
ஒரு காலத்தில் சொற்பொழிவுகளும், இசையரங்குகளும், ஆடல் நிகழ்ச்சிகளும் பெருமளவில் நிகழ்ந்து மக்களை நல்வழிப்படுத்தும் இடங்களாக இவை மிளிர்ந்தன .
பண்டைய மன்னர்கள், பெருங்கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் திருக்கோயில்களுக்கு நிலங்களை வழங்கியும், கட்டடங்களை எழுப்பியும், தங்கம், வெள்ளி மற்றும் பலவிதமான பிற விலையுயர்ந்த சொத்துக்களையும் மிகப்பெரும் அளவில் கொடையாக வழங்கினர்.
திருக்கோயில்கள் நீடித்து நிலைபெறத்தக்க வழிபாட்டுத் தலங்களாகவும் பல்லாண்டுளாக இறையன்பர்களுக்குப் பல்வேறு வசதிகளைச் செய்து தருவதற்கு வாய்ப்பான இடங்களாகவும் இருந்து வருவதற்கு இச்சொத்துக்களே காரணமாக விளங்கி வருகின்றன.
இத்தகைய விலை மதிக்க முடியாத திருக்கோயில்களின் சொத்துக்கள் முறையான பேணுகையுடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சமயத் தலைவர்கள் கற்பித்துள்ள சமய மரபுகளையும் நடைமுறைகளையும் கைக்கொண்டு கடைப்பிடித்து அவற்றின் தேவைகளையும் கருதி, அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அன்றாடப் பூசனை முறைகள், வழிபாடுகள், காலமுறைத் திருவிழாக்கள், திருக்கோயில் புதுப்பிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் ஆகியவை திருக்கோயில்களுக்கென விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுடன் கவனமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பக்தர்களின் இறையுணர்வைப் பெருக்கிடவும், அவர்களுக்கு வேண்டிய வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1 சட்டமும், நிருவாக அமைப்பும்
தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டம், 1959
2. திருக்கோயில்கள், திருமடங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவற்றின் பொதுவான கூறுகளின் முறையான நிருவாகத்தை அரசு கண்காணிக்கவும் உறுதிசெய்யவும் தமிழ்நாடு அரசு முந்தைய சட்டங்களின் பல்வேறு கூறுகளையும் ஆய்வு செய்த பிறகு, 1959 – ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டம் ( சட்டம் 22 / 1959 ) என்றவொரு சட்டத்தை இயற்றியது.
3. இச்சட்டம், ஏற்கனவே இயற்றப்பட்ட பல்வேறு முந்தைய சட்டங்களின் தொடர்ச்சியாகும்.
முதலில் மதராஸ் நிலைக் கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் எண்.VII/1817 உருவாக்கப்பட்டது.
இச்சட்டம், சட்டம் XX/1863 மூலம் நீக்கப்பட்டது. பின்னர், மதராஸ் இந்து சமய அறக்கொடை சட்டம்,
1926 (சட்டம் /I/1927) இச்சட்டத்திற்கு மாற்றாக நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின்படி மதராஸ் இந்து சமய அறநிலைய வாரியம் உருவாக்கப்பட்டது. 1951-ல் சட்டம் XIX-ன்படி, வாரியம் நீக்கம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக இந்து சமய அறநிலையங்கள் மற்றும் அறக்கொடைகள் நிருவாகத்துறை உருவாக்கப்பட்டு, இந்து சமய அறநிறுவனங்கள் மற்றும் அறக்கொடைகளை நிருவகிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இத்துறை ஆணையரைத் தலைவராகக் கொண்டு பல நிலைகளில் அலுவலர்களுக்கு அதிகார வரம்புகள் வரையறுக்கப்பட்டது.
இச்சட்டத்தின் காப்புரைகள் அறக்கட்டளைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
1951-ஆம் ஆண்டு சட்டம் நீக்கம் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டம், 1959 (சட்டம் 22/1959) இயற்றப்பட்டது.
4. இந்து சமய நிறுவனங்களை நிருவகித்திடப் பல்வேறு வழிவகைகளையும், அவற்றைச் செயற்படுத்திடத் தேவையான அதிகாரங்களையும், கடமைகளையும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு இச்சட்டம் மற்றும் அதன் கீழ் இயற்றப்பட்டுள்ள விதிகளில் வரையறை செய்யப்பட்டுள்ளது.
இச்சட்டம் இந்து சமய அறநிறுவனங்களின் நிருவாகத்தைச் சீராக மேம்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகளைக் கொண்டுள்ளது.
மேலும், இச்சட்டம் இந்து சமய அறநிறுவனங்களின் நிதி நிலையை உயர்த்துவதற்கும், அவற்றின் சீரான மேம்பாட்டுக்கும் வழிவகுக்கிறது.
இந்து சமய நிறுவனங்கள்
5. இந்து சமய அறநிலையத்துறை நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழ் 38,667 இந்து சமய மற்றும் சமண சமய நிறுவனங்கள் உள்ளன.
அதன் விவரம் பின்வருமாறு:
இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள நிறுவனங்கள்
1. திருக்கோயில்கள்
36,627
56
2. மடங்கள்
3.திருமடத்துடன் இணைந்த திருக்கோயில்கள்
57
4. குறிப்பிட்ட அறக்கட்டளைகள்
1,721
5. அறக்கட்டளைகள்
189
6.சமணத் திருக்கோயில்கள்
உபதிருக்கோயில்கள், கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்கள் நிருவாகத்தின் ஆளுகையில் உள்ளன
இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்கள், புதுக்கோட்டை மாவட்ட ( அப்போதைய தனியரசைச் சேர்ந்த ) திருக்கோயில்கள் நிருவாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களையும் சேர்த்து மொத்த திருக்கோயில்கள் எண்ணிக்கை 44,291 ஆகும்.
முத்தமிழறிஞர் கலைஞரின் ஆணையில் புகழ் வாய்ந்த திருவாரூர்த் தேரோட்டம் நிகழ்ந்ததைத் தமிழகம் என்றும் போற்றிப் புகழ்கிறது .
செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் …

Add a Comment