POST: 2021-10-31T11:07:13+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 81

செவாலியர் சிவாஜி! நடிப்புச் சிகரம்!

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

இளம் பருவத்திலேயே இராயப்பேட்டை பெசண்ட் சாலையில் வளர்ந்த பொழுதே எங்கள் வீட்டின் அருகில் தான் நடிகர் திலகம் சிவாஜியின் (01.10.1928 – 21.07.2001) அலுவலகமும், அவரின் திருமகள் சாந்தி இல்லமும் அமைந்திருந்தன.

நடிகர் திலகத்தைத் தன்னுடைய வெளிநாட்டுச் சீருந்தில் சென்று வருவதை அடிக்கடி பார்த்து வியந்துள்ளேன்.

நடிகர் பிரபுவின் மாமனார் திரு. கோ. பாலகிருஷ்ணன் என் அப்பாவின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நடிப்புப் புதையல்களாகும்.

கண்களை மூடித் திறந்தால், சித்திரமாக ஓவியமாக விரிகின்ற பல காட்சிகள்:-

“வரி, வட்டி, கிஸ்தி… ஏன் கொடுக்க வேண்டும் வரி? எதற்குக் கொடுக்க வேண்டும் வட்டி?

நீர் தான் ஜாக்சன் துரையோ?” என்று வினவும் வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆவேச முகம்,

“நக்கீரா… நன்றாக என்னைப் பார்.” என்ற திருவிளையாடல் பரமசிவனின் உக்கிர முகம்,

“கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து… அதான் ஆத்த விட்டுப் பறந்து போயிட்டுது.” என்ற கௌரவம் படத்தில் வழக்கறிஞரின் விரக்தி முகம்,

“காதலே போ, போ” என்று மதுக்கோப்பையைக் கையில் ஏந்தியபடி தலையில் வழியும் இரத்தத்தோடு கதறும் வசந்த மாளிகையில் காட்சிதரும் கையறுநிலை முகம்,

திருவருட்செல்வரின் ஞானமுகம்,

கப்பலோட்டிய தமிழனின் வீரமுகம்,

பாசமலரின் அன்புமுகம்,

தங்கப் பதக்கத்தின் மிடுக்கு முகம்,

என முடிவிலா ஓவியக் காட்சிகளாக விரிந்து கொண்டே செல்லும்.

என் தம்பி பரதன், நடிகர் திலகம் ஆடிப் பரவசப்படுத்திய ‘
உத்தம புத்திரன்’ படத்தின்
‘யாரடி நீ மோகினி’ பாடல் நடனத்தை அப்படியே ஆடிக் காட்டி மகிழ்வான்.

பல்லாண்டுகளாகக்
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.,
வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார்,
சாக்ரட்டீசு,
திருப்பூர் குமரன்
ஒளிப்படங்கள் எல்லாம்
நடிகர் திலகத்தின் திருமுகங்களாகவேதான் எங்களுக்கு அறிமுகமாயின.

அவருடைய 200-ஆவது திரைப்படமான ‘திரிசூலம்’ படத்தைத் திரையரங்கில் பல மணி நேரம் காத்திருந்து பார்த்த அனுபவம் மலைப்பாகவுள்ளது.

என்னுடைய அத்தை மணிமேகலை நடிகர் திலகம் நடித்த ‘பலே பாண்டியா’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு பிறந்த மூன்றாம் ஆண்மகனுக்குக் கதிரவன் என்ற நடிகர் திலகத்தின் பாத்திரப் பெயர் சூட்டப்பட்டதை நெகிழ்வாகச் சொல்லி மகிழ்வார்கள்.

நடிகர் திலகம் அவர்கள் ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற கட்சியைத் தொடங்கிய வேளையில், 1988-ஆம் ஆண்டில் ‘மராட்டிய மங்கை’ இதழின் கட்டுரையாசிரியர், சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர் செல்வி சித்ரா நாராயணன், என் குதியுந்தில் நடிகர் திலகத்தை அவருடைய தியாகராயநகர் ‘அன்னை இல்லம்’ வளமனையில் நேர்முகம் காணச் சென்றது மறக்கவொண்ணா நிகழ்வாகும்.

நேர்முகத்தின் போது, அவர் அருகில் நின்று ஒளிப்படக்கருவியில் படம் பிடித்த காட்சியையும், அவரின் நேர்காணல் பதிவையும் படித்தால் இன்றும் மனம் கலங்கும்.

அரசியல் உலகம் அவரைப் புறந்தள்ளியது.

“ஏன் அரசியல்?” என்று நான் நிறைவாகக் கேட்ட பொழுது,
“என் போதாத நேரம்.” என்று அவர் சொன்னதும் மனம் கரைந்தேன்.

அப்பொழுது என்னைப் பார்த்து, “யார் தம்பி நீ?” என்றார். நான் உடனே அப்பாவின் பெயரைக் குறிப்பிட்டு, அவரின் மகன் என்றேன்.

உடனே என் தோளைத் தட்டி அப்பாவின் உரையாற்றும் பெருமிதத்தைச் சொல்லி மகிழ்ந்தார்.

நடிப்பில் மூன்று வகைகள் உள்ளன.

மிகை நடிப்பு, இயல்பு நடிப்பு, உணர்வு நடிப்பு.

இம்மூன்று வகையிலும் உயர்ந்து நின்ற பேரிமயமாக ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் திகழ்ந்தார்.

ஒரு நல்ல நடிகருக்கு உடல் மெழுகைப் போல நெகிழவும், பாறையைப் போல இறுகவும், இறகைப் போல மிதக்கவும், கம்பம் போல நிலைக்கவும், மூச்சை நிறுத்தவும், இழுக்கவும், வெளியிடவும், ஓயாமல் ஆராய்ந்து ஆராய்ந்து செய்யும் ஆற்றல் அவசியமாகும்.

பயிற்சி, பயிற்சி, பயிற்சி, ஓயாத பயிற்சி.

தான் விரும்பும் கலையின்மீது அவர் கொண்ட காதல், தீராத காதலாகும்.

அவருடைய முதல் படமான பராசக்தியிலேயே சிகரத்தில் மகுடத்தை அணிந்த பெருமிதம் வாய்ந்தவர்.

நடிகர் திலகத்தைப் பற்றி ஒருமுறை அப்பா பேசியபோது, நடிகர் திலகமே நெகிழ்ந்து மேடையிலேயே அப்பாவை ஆரத் தழுவியது உணர்வுக் காட்சியாகும்.

அப்பா நடிகர் திலகத்தைப் பற்றிப் பேசிய உரைத் துளி:-

“சிவாஜி கணேசனுக்குப் பல துறைகளைச் சார்ந்த நண்பர்கள் உள்ளனர்.

அந்த வகையில், என்னோடும், அன்புடன் பழகி வந்தார்.

நான் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகத் தஞ்சாவூரில் தங்கியிருந்த போது, “என் தம்பி ஔவை நடராசன், பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருப்பதைப் பார்க்க வந்தேன் என்று, ஒருநாள் திடுமென வந்து சிறிதுநேரம் என் அறையில் இருந்து என்னை வாழ்த்திச் சென்றார்.

பிறகு ஒருநாள் அவரது சூரக்கோட்டைப் பண்ணைக்குச் சென்று அவரோடு நானும் அளவளாவி மகிழ்ந்திருந்தேன்.

அப்போது, அவருடைய நடிப்புக்கலை அனுபவங்களையெல்லாம் மனந்திறந்து என்னோடு பேசிக் கொண்டிருந்ததை மறக்க முடியாது.

எப்படிச் சிறப்பாக நடிக்கிறீர்கள்? என்று எல்லோரையும் போல என் வியப்பை அவரிடத்தில் வெளியிட்டேன்.

நடிப்பது கடினம்தான்!
நான் இராமனாக நடிக்க வேண்டும், ஆனால், நான் இராமன் இல்லை என்பது தெரிந்திருக்க வேண்டும்!

இராமன் சீதையைத் தொட்டு நடிக்க வேண்டும்; ஆனால், சீதையாக வேடமேற்ற நடிகையைத் தொடக்கூடாது!

நடிகன் தன்னை மறந்து பாத்திரத்தோடு ஒன்றிக் கலந்தும், அதே நேரத்தில் கலக்காமலும் நடிக்க வேண்டும்.

இல்லையென்றால் அது நடிக-நடிகையரின் குடும்ப வாழ்க்கையைக் குலைக்கும் அளவுக்குக் கொண்டு செல்லும்” என்றார் சிவாஜி.

அவர் மேலும் தொடர்ந்தார், “என் நடிப்பு மிகை என்று சிலர் சொல்லுகின்றனர்.

மிகைப் படுத்தாவிட்டால், என்ன நடிப்பது?” என்று தன் பெருமிதமான குரலில் குழந்தைபோலக் கேட்டு என்னை உற்றுப் பார்த்தார்.

“ஆம்! அவரது நடிப்பில், தமிழினப் பண்பாட்டின் போக்கு தெரிந்தது, தமிழ் ஒலிப்பு முறை தெரிந்தது.

அவர் உடலின் ஒவ்வோர் அசைவிலும் ஆர்வத்தோடு போட்டியிட்ட ஆழமான நடிப்புத் திறனும் தெரிந்தது.

ஆனால், அவர் வகுத்துக் கொண்ட நடிப்பிலக்கணம் அவரோடேயே நின்றது.

ஸ்பென்சர் டிரேசி என்ற மாபெரும் நடிகர், சிவாஜிக்குப் பிடித்தமானவர்.

அவரது உருவப் படத்தை சாந்தி திரையரங்கத்தின் வாசலில் வைத்துள்ளார்.

அவர் நடித்த திரைப்படம் ஒன்றினை ‘ஆர்வர்டு ஆக்கின்ஸ்’ என்ற இயக்குநர் இயக்கி வந்தார்.

ஒரு காட்சியை இயக்குநர் வருவதற்குச் சற்று தாமதமானதால், ஸ்பென்சர் டிரேசியின் போக்கிலேயே நடிக்க வைத்து உதவியாளர்கள் படம்பிடித்து விட்டனர்.

அந்தக் காட்சியைப் பார்த்த இயக்குநர், இந்தக் காட்சியை இப்படிச் செய்தால், நன்றாக இருக்கும் என்று நான் நினைத்திருந்தேனோ, அதை உணர்ந்து நான் சொல்லித் தராமலேயே உங்களால் எப்படி நடிக்க முடிந்தது? என்று ஸ்பென்சர் டிரேசியைக் கேட்டாராம்.

நமது நடிகர் திலகமும் அத்தகைய உயர்ந்த நடிகர் என்பதை நாடறியும்.

நான் உரைக்கும் வார்த்தையெல்லாம், நாயகன் தன் வார்த்தை என்று, இராமலிங்கர் அருளுலகில் பாடினார்.

திரையிசைத் தென்றல் டி.எம். சௌந்திரராசன் அவர்கள், பின்னணியில் பாடியதற்கு ஏற்ப சிவாஜி அவர்கள் முகப்பாங்கோடு, உதட்டை அசைக்கும்போது அது நடிகர் திலகமே பாடியது போல் அமைந்த விந்தையைப் பார்த்து வியந்தோம்.

சிவாஜியின் பாடல் காட்சியில் நமக்கு மேற்கூறிய அருட்பா அடிகளுக்குப் புதுப் பொருள் தெரிந்தது”.

உளன் நடிக்கும், உளம் நடிக்கும் உயிர்க்கு உயிரும் தான் நடிக்கும் ஒப்பற்ற ஒரே நடிப்பு வேந்தர் சிவாஜி அவர்கள்தான்.

எனக்கு நினைவு தெரிந்து, பல நண்பர்கள் தங்கள் அப்பாக்களை நடிகர் திலகம் சிவாஜி கணேசனாகவே உருவகப்படுத்தி மகிழ்வதைக் கண்டுள்ளேன்.

அவர் பேசிய தமிழ் உயிர்த் துடிப்புள்ள நடிப்பால் வெற்றி பெற்றதோடு முழுமையுற்றது.

நடிகர் திலகத்தை நடிப்பின் தனியுலகமாகவே நம் நெஞ்சில் பதித்து அவர் புகழை மதித்துப் போற்றுவோமாக.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் விரலும், முடிசூடிய நடிப்பு வேந்தரின் குரலும் இரண்டும் எட்ட முடியாத எல்லையில் சேர்ந்து விட்டன.

———————————————————
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (5)

கரந்தைத் தமிழ்ச்சங்கம் – தமிழ்த் தொண்டின் வரலாறு

1911-இல் சங்கத்தலைவர் தமிழவேள் த.வே. உமாமகேசுவரனாரின் இளவல் த.வே. இராதாகிருட்டிணரால் தொடங்கப்பெற்றது.

‘தொண்டு-தமிழ்-முன்னேற்றம்’ எனும் குறிக்கோளைச் சங்க இலச்சினையில் பொறித்ததுடன் அதைச் செயற்படுத்தி வந்தது.

தங்கு புகழ்ச் செந்தமிழ்க்கோர் அன்பராகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே’ எனத் தமிழ்த் தொண்டர்களைக் கடவுளுக்கு ஒப்பாகப் போற்றியது.

திரு, திருவாட்டி, தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற எண்ணற்ற நற்றமிழ்ச் சொற்களையே கையாளவேண்டும் என்று தீர்மானம் இயற்றி, அதை நடைமுறைப்படுத்தியது.

தமிழைச் செம்மொழியாக்குதல், தஞ்சையில் ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவுதல் முதலிய தீர்மானங்களை முன்மொழிந்து, அவற்றிக்கான முயற்சிகளை முன்னெடுத்துச்சென்றது.

பிற மொழித் திணிப்பை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டது.

தொடர்வண்டி நிலையம், கடைத்தெரு, கடைகளின் பெயர்கள் முதலியவற்றில் காணப்படும் வடமொழி / ஆங்கிலப் பெயர்களை நீக்கித் தமிழ் இடம் பெற வேண்டும் எனப் போராடியது.

‘தமிழ்ப்பொழில்’ எனும் திங்கள் இதழை நடத்தியது;

இதழாசிரியரியரின் பெயர், பொழிற்றொண்டர்.

இந்த இரண்டுடன் உ.வே.சாமிநாதையர் முதல்வராக விளங்கிய சிதம்பரம் மீனாட்சி தமிழ்க்கல்லூரியும், திருப்பாதிரிப்புலியூர் அருள்திரு ஞானியாரடிகளே ஆசிரியராக அமைந்து தமிழ் கற்பித்த கல்விநிலையமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்வித்துவான் தேர்வு வாய்ப்பும் இருந்தன.

இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் துரைசாமியார் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மதுரையில் நல்வாய்ப்புக்கள் பல உண்டு; படிப்பதற்குச் செந்தமிழ்க்கல்லூரி; கற்பிக்க ஆசிரியர்கள்; உண்டிக்கும் உறையுளுக்கும் செலவு இல்லை. ஆனால், மதுரை நெடுந்தொலைவிலிருந்தது. போக்குவரத்து வசதியும் மிகக் குறைவு.

கரந்தையில் மதுரையில் கிடைக்கக்கூடிய வசதி எதுவும் இல்லை; கல்லூரி இல்லை; கற்பிக்க ஆசிரியர் கிடைப்பார்களா என்பது ஐயப்பாடு; வாழ்வதற்குப் பொருள் தேவை, அதற்கு ஒரு வேலை வேண்டும், அதுவும் உறுதியில்லை; ஆனால், செந்தமிழ் நலம் பேணும் சீர்மை ஒன்றே உண்டு.

வேறொருவரென்றால் வசதி வாய்ப்புக்கள் மிக்க மதுரைச் செந்தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து செலவேதுமின்றிப் பண்டிதர் ஆகியிருப்பர்.

ஆனால், துரைசாமியாரின் சிந்தனை பிறிதாக இருந்தது.

அக்காலத்தில், ‘அரைக் காசு என்றாலும் அரசாங்க உத்தியோகமே மேல்’ என அரசுப் பணி பெருமையாகப் பேசப்பெற்றது.

துரைசாமியார் விரும்பியிருந்தால் மிக எளிதாக அரசு அலுவலகத்தில் குறைந்தது எழுத்தர் வேலையாவது கிடைத்திருக்கும்.

ஏனென்றால், அன்றைய நிலையில், வட்டாட்சியருக்கான கல்வித் தகுதி உயர்நிலைப் பள்ளி இறுதி வகுப்பில் (SSLC) தேர்ச்சி பெற்றிருப்பது.

துரைசாமியார் அதற்கும் மேலான கல்வித்தகுதி பெற்றிருந்தார்; அவருக்கு ஆங்கிலம் நன்கு தெரியும். இருப்பினும், அரசுப் பணியில் அவருக்கு நாட்டமில்லை; செந்தமிழே சிந்தை முழுதும் குடி கொண்டிருந்தது.

தமிழையே பற்றுக் கோடாகக் கொண்டிருந்த சுந்தர துரைசாமியார் தமது 24 ஆம் அகவையில் ஒளவையார் குப்பத்திலிருந்து, தஞ்சாவூர் நோக்கித் தமது தமிழ்ப் பயணத்தைத் தொடங்கினார்.

அதற்குக் காரணம் அந்நாளில், ‘பழுமரம் நாடும் பறவை போல்’ கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்னும் பேராலமரத்தினை நாடிச்சென்று, அதன் தண்ணிய நிழலிலே இளைப்பாறி, நற்றமிழ் நலம் மாந்தி, விழுதாக வெளிப்போந்து, பழந்தமிழின் சீர்மையையும், செழுமையையும் தம் உரையாலும் எழுத்தாலும் பரப்பும் பெருந்தொண்டில் ஈடுபட்ட புலவர் பெருமக்கள் பலர் அங்கிருந்தனர்.

ஒளவை கரந்தையில் காலடி வைத்தபோது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சூழலை அறிந்து கொள்ளல் நலம்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்; அவர் தலைவருள் தொண்டர்.

தமிழ்ச்சங்கக் கல்லூரித் தலைமையாசிரியர் சிவ குப்புசாமியார் தொண்டருள் தலைவர்.

சங்கத்தைப் பொறுத்தவரை முன்னவர் ஆட்சித்தலைவர்; பின்னவர் செயலாட்சியர்.

அவர் இல்லாமல் இவர் இல்லை, இவர் இல்லாமல் அவர் இல்லை.

சிவ குப்புசாமியார், அன்றைய தமிழகம், கேரளம், ஆந்திரம், கன்னடம் அடங்கிய சென்னை மாகாணத்திலேயே தலைசிறந்த கல்வி நிலையமாகத் திகழ்ந்த பள்ளியின் தலைமையாசிரியர் என்பதுடன், திங்கள் வெளியீடாகிய தமிழ்ப்பொழில், அது அச்சடிக்கப்படும் கூட்டுறவுப்பதிப்பகம், கள்ளர் சீரமைப்பு விடுதி, திக்கற்ற மாணவர் இல்லம், பெத்தாச்சி புகழ்நிலையம் எனும் நூல்நிலையம், திங்கள் தோறும் நடைபெறும் ஆய்வரங்கம், ஆண்டுவிழா, கலைமகள் விழா போன்ற பலவற்றுக்கும் பொறுப்பாளராக அமைந்து மிகச்சிறந்த ஆட்சியாளர் எனவும், அந்நாளைய தமிழ்ப் பெரும்புலவர்கள் / அறிஞர்கள் / அடிகளார்கள் ஆகியோருடன் நெருங்கிப் பழகி நேரடித் தொடர்பும் கொண்டவர் என்றும் தனிப்பெரும்புகழ் எய்தியவர்.

ஓர் எடுத்துக் காட்டு:

1938, கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளிவிழா, பெருநாவலர், திருப்பாதிரிப்புலியூர் அருள்திரு ஞானியாரடிகளார் அவர்கள் தலைமையில், அறிஞர்களின் பொழிவுகள்!

தமிழ்உலகே வியக்குமாறு ஐயாயிரவர் திரண்ட மூன்று நாள் திருவிழா!

இதற்கிடையில், கரந்தைப் புலவர் கல்லூரி தொடங்குதல், கட்டுரைக்கோவை வெளியிடுதல், சங்கத் தலைவருக்கும் அமைச்சருக்கும் விருதளிக்கும் விழா, பெருமக்களை வரவேற்று விருந்தோம்பி வழியனுப்பி வைத்தல். இத்தனைக்கும் தலைமையாசிரியரே பொறுப்பு!

விழாவிற்கு ஆறு திங்களுக்கு முன்னால், சங்கத்தலைவர் தலைமையாசிரியரை அழைத்து “குப்பண்ணா! இதோ 700 ரூபாய். இதை வைத்து வெள்ளிவிழா ஏற்பாடுகளைத் தொடங்குங்கள்” என்று ஒப்படைத்தார்கள்.

அந்த அளவுக்குச் செயலாற்றிய கலைச் செம்மல் சிவ குப்புசாமியார் இன்றியமையாதவர்.

ஒளவையவர்கள் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் இருந்தபோதே சங்கத்தில் மாணவராகச் சொற்பொழிவாற்றியிருக்கிறார்.

“குரோதன மாசி 10.2.1926 ஞாயிறு அன்று சங்கக் கல்லூரிக் கொட்டகையில் மாலை இருபத்தி ஐந்து நாழிகைக்குத் திருவாளர் குமாரசாமி பிள்ளை அவர்கள் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது.

அப்போது தஞ்சை ஆசிரியர் கல்லூரி மாணவர் ஒளவை துரைசாமிப்பிள்ளையவர்கள் திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சி என்னும் அரிய விரிவுரையைத் தெளிவாகவும் எளிமையாகவும் நிகழ்த்தினார்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *