POST: 2021-12-13T08:44:57+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 31

பெண்ணியப் புரட்சி !

திரு வி க வின் கொள்கைப்படி பெண்மை , தாய்மை , இறைமை என்றெல்லாம் சமயவுணர்வோடு நிறையக் குறிப்பிட்டுள்ளார் .

பெண்ணின் பெருமை திரு வி க வின் புகழ் கூறும் சீரிய நூலாகும் .

பேசாத தலைவியரும் பேசும் தோழியரும் பெண்மையின் வடிவங்களாகச் சங்க இலக்கியத்தில் காணலாம் .

சமணத்தின் வெளிப்பாடாகச் சிலர் கருதினாலும் திருக்குறள் பெண்மையை நிறைவாகவே இனங்கண்டிருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் மாதவியும் பெண்மையின் இரண்டு வரைவிலக்கணங்களாக இடம் பெற்றனர் .

கண்ணகியுடையது வெறும் பெண்மை என்று மட்டுமே அமைந்திருக்க, மாதவியுடையது பெண்மையும் பெண்ணியமும் கலந்ததாக இருக்கிறது.

பெண்மையை மட்டுமே பற்றியிருந்த கண்ணகி தேவையேற்பட்டதால் பெண் ஆற்றலையும் நிறுவினாள் .

சங்ககாலப் பெண்களிடம் இந்த மூன்றும் ஒத்த அளவில் கலந்திருந்தன.

இந்த முகப்புரையோடு முத்தமிழறிஞர் கலைஞர் பெண்ணியம் பற்றி எழுதிய கட்டுரை சிந்தனைக்குரியது .

ஈரோடு கலைக் கல்லூரி ( தன்னாட்சி ) தமிழ்த் துறை சார்பில் டாக்டர் திரு. ந. வேலுசாமி அவர்களை இயக்குநராகக் கொண்டு நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் வழங்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுரைகள் தொகுக்கப் பெற்ற ” 21ஆம் நூற்றாண்டில் பெண்ணியம் ” என்ற பெரிய தொகுப்பை திரு. வேலுசாமி அவர்களே நேரில் வந்து என்னிடம் கொடுத்தார்.

ஆம்; ” பெண்ணியம் ” என்பது புத்தகத்தின் பெருந்தலைப்பு.

“ புண்ணியம் ” என்பது பக்தர்களுக்கு விருப்பமான நல்ல வார்த்தை என்பது போலவே – |“ கண்ணியம் ” என்பது சான்றோர்க்குப் பொருந்தும் நல்ல வார்த்தை என்பது போலவே – “ பெண்ணியம் ” என்பதும் மகளிர்க்கான அனைத்து உரிமைகளையும் வலியுறுத்தி எழுந்துள்ள புது வார்த்தையாகும்.

இந்த நூல் எனக்கு நினைவூட்டியது;

தந்தை பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துரைத்த கருத்துக்களடங்கியதும் –

” பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ளதுமான ” பெண் ஏன் அடிமையானாள் ? ” என்ற நூலைத்தான் ! திரும்பவும் இப்போது அதனை எடுத்து ஒருமுறை படித்து முடித்தேன்.

ஈரோடு கலைக் கல்லூரி கருத்தரங்கத்தில் வழங்கப்பட்ட ஆய்வுரைகள், ஓர் அரண்மனையின் கூடகோபுரங்கள் என்றால்;

பெரியார் அவர்களின் “ பெண் ஏன் அடிமையானாள் ? ” எனும் அந்த ஆய்வுரை நூல் அந்தக் கோபுரங்கள் அனைத்துக்கும் உச்சிக் கலசமென்றுதான் உரைத்திட வேண்டும்.

அந்த நாலில் முத்தாய்ப்பான கருத்துக்களில் ஒன்றாக ;

நம்மைப் பொறுத்தவரை ஆண்களுக்குச் சொன்ன இயல்புகள் எல்லாம் பெண்களுக்குப் பொருந்துமென்றும் அவர்களுக்கும் ஆண்களைப் போலவே உரிமைகள் ஏற்பட வேண்டுமென்றும் – அம்மாதிரியே அவர்களும் நடந்து கொள்ள வேண்டுமென்றும் உலக வாழ்விலும், சமுதாய நிலம், சட்டத்திலும், மதத்திலும் ஆண்களுக்குள்ள சௌகரியங்களும், உரிமைகளும் பெண்களுக்கும் அமைய வேண்டுமென்றும் – அப்பொழுது தான் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் ஏற்பட்டதாகும் என்பதுடன் உண்மையான திருப்திகரமான இன்பத்தையும் ஆசையையும் அடைய முடியும் என்றும் கருதுகின்றோம் ”

இவ்வாறு தந்தை பெரியார் எடுத்துரைக்கும் இந்தப் பகுதியின் விரிவாக்கமாகத்தான் அந்த நூலில் அவரது பல கருத்துகள், ஒரு மலரின் அடுக்கடுக்கான இதழ்களாக நமக்குத் தோன்றுகின்றன.

மிகுந்த விருப்பமுடன் பெண்ணியம்’ கருத்தரங்கத் தொகுப்பு நூலினை திரு. வேலுசாமி அவர்கள் என்னிடம் வழங்கியுள்ளார் எனினும்;

பெண்ணியப் பின்னணியில் என் அன்பு மகள் கனிமொழியின் கவிதைகள் பற்றிய ஆய்வுரைகளும் அந்நூலில் அடக்கம் என்பதைக் காணும் பொழுது – பெரியார் பாசறையில் அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்டு அந்த மாணவப் பருவத்திலேயே 1940 களில் பெண்ணியம் என்ற தலைப்பில் இல்லாவிடினும் அந்தக் கருத்தமைந்த “ இளமைப்பலி ” எனும் கட்டுரையை அண்ணாவின் “ திராவிட நாடு ” இரண்டாவது அல்லது மூன்றாவது இதழிலேயே எழுதியவன் நான் ! ஒரு பெண்ணின் இளமை எப்படி பலியிடப்படுகிறது என்பதை உருக்கமுடன் வரைந்த எழுத்துச் சித்திரம் அது !

ஆருயிர் இளவல் வீரமணி அவர்கள், பெரியார் அவர்களின் பெண்ணுரிமை பற்றிய சிந்தனைகளை பெட்ரண்டு ரசல் ” அவர்களின் சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலின் பதினாறாம் பதிப்புக்கும் முன்னுரை எழுதியிருக்கிறார்; 1987 லேயே !

எனவே வழிவழியாகப் பெரியார் தொடங்கிய பெண் விடுதலை இயக்கத்தை அன்று முதல் இன்று வரை ஒல்லும் வகையெல்லாம் வளர்த்திடவும் வலிவு கொள்ளச் செய்திடலாம் அவரது
வழித் தோன்றல்கள் தங்களை ஒப்படைத்துக் கொண்டு உழைத்திடுகிறார்கள் என்பதற்குச் சான்றாகத்தான் – இந்திய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் – மகளிர்க்கு இட ஒதுக்கீடு சட்டப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று உரத்த குரல் எழுப்புகிறோம்.

‘ பெண்ணியம் ‘ நூலில் கருத்தரங்க ஆய்வுரையில் இடம் பெற்றோர் – அவர்களால் உரைத்துப் பார்த்து உணரப்பட்டு உரைக்கப்பட்டுள்ள கதை, கட்டுரை, கவிதை இவற்றில் எதுவாயினும் அவற்றில் உரிய இடம் பெறுவோரில் அய்யா, அண்ணா வழி வந்த என் போலப் பலரும் உள்ளனர்.

இளமங்கையொருத்தியின் துயரைப் படம் பிடித்து முதல் கட்டுரையாக ‘ இளமைப்பலி ‘ எழுதிய காலந்தொட்டு – இன்று வரை கதையோ, காவியமோ, திரை ஓவியமோ, நாடகமோ, நவீனமோ – எதிலும் என் பேனா முனை பெண்ணுரிமைப் போர்ப்படையின் வாள் முனையாகத்தான் வாய்த்திருக்கிறது.

‘ அய்யன் வள்ளுவரின் குறளுக்கு உரை எழுதிய நிலையில் கூட பெண்ணுரிமையை – வலுவில் புகுத்தியல்ல; இயல்பாகவே எடுத்துக் காட்டியுள்ளேன்.

” தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை என்பதற்குக் கணவனைத் தொழுதெழும் மனைவி;

பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்று பரிமேலழகர் முதல் அறிஞர்கள் பலரும் உரை கண்டனர்.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களோ; ” பெய் எனக் கூறும் வேளையில் பெய்கின்ற மழை போன்றவள் அந்த மனைவி ” என்று உரை கண்டார்.

ஆனால் நான் கண்ட உரையோ; ” கணவனைக் கடவுளாகத் தொழுதிடும் மனைவி, பெய் என்று ஆணையிட்ட நாளுக்கு அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போல அடிமையாகத் தன்னை எண்ணிக் கொள்வாள் ” என்பதாகும்.

மந்திரி குமாரி திரைப்படத்தில் மாபாவியான மணாளனை மலையிலிருந்து உருட்டி விடுகிறாளே அமுதவல்லி ;

அந்தப் பெண்ணியத்தின் மூலத்தை ‘ குண்டலகேசி ‘ இலக்கியத்திலிருந்து நான் எடுத்துள்ளதை அப்போதே அறிவித்துள்ளேன் !

” தேவகி ‘ படத்திலும் – ‘ திரும்பிப்பார் ‘ – ‘ பராசக்தி ‘ – நீதிக்குத் தண்டனை ‘ என்று வரிசையாக வந்த திரைப்படங்களிலும் – பெண்ணியத்தின் பிரதிநிதிகளாகப் பாத்திரங்கள் படைக்கப்பட்டதை ஆய்வுரையின் உதவியின்றியே அறிய முடியுமே !

‘ மணிமகுடம் ‘ நாடகத்திலும், திரைப்படத்திலும் புரட்சிக் கூட்டத்தின் தலைவராக விளங்குவதே அல்லி எனும் அறிவார்ந்த பெண்மணிதானே !

” கண்ணுக்குள் பாவை போல் உருண்டிடும் உள்ளம் – கைம் பெண்ணுக்கு இருப்பதையும் உணர்ந்திடுவாய் ”

1945 க்கு முன்பே நான் எழுதிய கவிதை வரிகள் இவை.

இத்தனையும் சுய விளம்பரமல்ல; சுயமரியாதை இயக்கத்தின் சுடரொளி; பெண்ணியத்தின் புத்தொளியாகவும் அன்று முதல் இருந்து வருகிறது என்பதற்கான விளக்கமேயாகும்.

இந்த ஆய்வுரைத் தொகுப்பு நூலில் ” இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சமீபத்தில் ஆண் பெண் இருவருக்கும் சம பங்கு சொத்துரிமை தர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது ‘ என்று

திரு. வி. மாரிமுத்து அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து இவர் போன்றோர் சிலர் திராவிட இயக்கச் செய்திகளில் முழுமையான அக்கறை காட்டுவதில்லை என்று தெரிகிறது.

அனைத்திந்திய அளவில் இப்போதுதான் மகளிருக்குச் சொத்துரிமை சட்டம் வந்துள்ளது.

ஆனால் 1989 ஆம் ஆண்டிலேயே என் தலைமையிலிருந்த ஆட்சியிலேயே தமிழகத்தில் ”
பெண்ணுக்குச் சமபங்கு சொத்துரிமை ” சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பதை எப்படி மறந்தனர் என்பது புரியவில்லை .

எள் முனையினும் சிறிய இந்தக் குறைகளை முள் முனையெனக் கருதாமல்; இந்தப் பெண்ணியம் ஆய்வுத் தொகுப்பு நூலினை எண்ணிட எண்ணிட இறும்பூது எய்துகிறேன்.

7-10-2005

தொடர்புக்கு :

thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *