POST: 2021-12-19T11:37:28+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 88

ஏகாம்பர வாழ்வும் தொடர்ச்சியும்

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

1940 ஆம் ஆண்டில் பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாமா ஏகாம்பரம் போர்த்தொழில் நுட்ப வினைஞராக (War Technician) கோவையில் இரண்டாண்டுக்காலம் பணியாற்றினார்.

1943 இல், அரசுப்பணித் தேர்வில் தேர்ந்து, பொதுப்பணித் துறைக் கணக்குப் பிரிவில் பணியாற்றினார்.

வேலூர், ஆரணி, மேட்டூர் கேரளத்திலுள்ள மலம்புழா அணை, ஆகிய திட்டப் பகுதிகளில் மாமாவின் பணி தொடர்ந்தது.

வேலூர் வணிகர் பழனிப் பிள்ளை – இலட்சுமியம்மாள் இணையரின் ஒரே மகளான திருமதி குசலாம்பிகையை, 1946 ஆம் ஆண்டு, மாமா மணந்தார்.

அத்தை குசலாம்பிகை, வேலூர் ஊரிசு கல்லூரியில் இண்டர்மீடியட் வரை பயின்றவராவார்.

தாத்தா பாட்டியுடனேயே வீட்டில் மூத்த மகனைப் போல் வளர்ந்த மாமா ஏகாம்பரம், தாத்தா கடைப்பிடித்த பொறுப்பு, நாணயம், விருந்தோம்பல் முதலிய நல்ல பழக்கங்களைத் தாமும் தம் வாழ்க்கையில் மேற்கொண்டதை அப்பா வியந்து சொல்வார்.

தாத்தாவின் கட்டுரைகளைத் திருந்திய கையெழுத்துப் படியெடுத்துக் கொடுக்கும் பயிற்சி, இவரது தமிழார்வத்திற்கு உரமூட்டியது என்பார்கள்.

கேரளத்தில் இவர் பணியாற்றிய ஐந்தாண்டுக் காலத்தில், நாள்தோறும் குறைந்தது, இரண்டு மணிநேரம், படிப்பதையும், எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த்தையும், விடுமுறை பெற்றேனும், நூல்நிலையம் சென்று படிக்கும் ஆர்வம் இவருக்கிருந்ததையும் பலமுறை அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அதுமட்டுமின்றி, தாத்தா எழுதிய ‘சேரமன்னர் வரலாறு’ என்னும் சீரிய நூலுக்கு உறுதுணை புரியும் பல அரிய நூல்களை, இவர் கேரளத்திலிருந்து வாங்கி அனுப்பி வைத்தவராவார்.

1961 ஆம் ஆண்டு, சென்னைக்கு மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் பெற்ற மாமா ஏகாம்பரம், தலைமைக் கணக்கு அலுவலக (AG’s Office) கோட்டக் கணக்கராகப் பதவி உயர்வு பெற்றார்.

தம் நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களைக் கவிதை நடையிலேயே எழுதும் விருப்பமுடைய ஏகாம்பரம் மாமா, புதினங்கள் எழுதுவதிலும் ஈடுபாடுடையவரானார்.

அப்பா அடிக்கடி சொல்வார், மாமாவுக்குத் திரைப்படங்களுக்கு திரைக்கதைகள் புனைவதற்குரிய ஆலோசனைகளைப் பிறருக்கு வழங்குவதில் மிகுந்த நாட்டமுண்டென்றும், திரைப்பட இயக்குநர் பீம்சிங் மாமாவின் நெருங்கிய நண்பரென்றும் சொல்வார்.

பணியாற்றிய காலத்திலேயே எழுதும் பழக்கத்தைப் பொழுது போக்காகக் கொண்டிருந்த ஏகாம்பரம் மாமா, வரலாற்றுக் கட்டுரைகளை வரைவதில் வல்லவராக விளங்கினார்.

வடார்க்காடு மாவட்டத்தில், தேசியப் போர்முனைக் கொள்கை பரப்புத் தலைவராக விளங்கிய
திரு. மா. கந்தசாமி நடத்திய ‘உதயம்’ என்ற திராவிடர் கழகச் சார்பு ஏட்டில் மாமா எழுதிய ‘சரித்திரச் சாளரம்’ என்ற கட்டுரை வெளியானது.

இதன் மூலப்படி யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை.

விரைந்து வளரும் தொழில்நுட்ப உலகத்தில் ஐம்பதாண்டுகளுக்குள் வரையப்பட்ட கட்டுரைகளை மீட்பது அரும்பணியாகவே உள்ளது கவலையளிக்கிறது.

கலைத்தந்தை வள்ளல் கருமுத்து தியாகராச செட்டியாரால் மதுரையிலிருந்து வெளியிட்ட தனித்தமிழ் நாளேடான, ‘தமிழ் நாடு’ இதழில் புகையிலை, ஆராத துக்கம் முதலிய பல்சுவைக் கட்டுரைகளை ஏகாம்பரம் மாமா எழுதியுள்ளார்.

வேலூர் திராவிடர் பதிப்பகத்திற்காக, ‘குமுதம்’ என்ற புனை பெயர் பூண்டு “பெரியார் பொன்மொழிகளைத்’ தொகுத்தளித்தார்.

சேலம் ஜலகண்டபுரம் ப. கண்ணன் அவர்களின், ‘பகுத்தறிவு’, சிந்தனைச்சிற்பி சி.பி. சிற்றரசு அவர்களின் ‘தீப்பொறி’, அறிஞர் அரங்கண்ணலின் ‘அறப்போர்’ ஆகிய இதழ்களிலும் அவ்வப்போது மாமா கதைகளும், கட்டுரைகளும் – எழுதி வந்ததைப் பொறியாளர் திலகம் பக்தவத்சலம் மாமாவைப் பற்றித் திரட்டிய ‘கட்டுரைக் கரும்பில்’ படித்ததை மகிழ்ச்சியுடன் மீளத் தெரிவிக்கிறேன்.

1959 ஆம் ஆண்டு, வேலூரில் நடைபெற்ற மாநில என்.ஜி.ஓ. மாநாட்டுச் சிறப்பு மலரின் பதிப்பாசிரியராகவும், முதல் தரமான அழகிய அச்சு மலராகத் திகழ்ந்ததை என் பாட்டனார் உரைவேந்தர் பாராட்டியதை ஏகாம்பரம் மாமா தன் வாழ்நாள் முழுவதும் சொல்லி மகிழ்ந்தவர்.

அரசு சாரா அமைப்பு மாநாடுகளில் நடிக்கப் பெற்ற “இன்பச் சுடர்” , “ஊமை கண்ட கனவு”, “சர்க்கரைப் பந்தல்”, “அமர வாழ்வு” முதலிய நாடகங்களை ஏகாம்பரம் மாமா எழுதியவையாகும்.

அவர் இவற்றில் ‘அமர வாழ்வு’ மட்டும் நூலுருவில் வெளிவந்து அப்பாவின் நூலகத்தில் அணிசெய்வதைக் குறிப்பிட விழைகிறேன்.

மைய அரசுப்பணியில், செங்கற்பட்டு, மண் வள எந்திர ஆய்வியல் கோட்டம், காஞ்சிபுரம் நிலத்தடி நீர்க்கோட்டம், முதலிய துறைகளில் பணியாற்றிய ஏகாம்பரம் மாமா, ‘அகில இந்திய வானொலி’யின் கட்டுமானப் பிரிவிலும், இறுதியில், தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சித் துறையிலும் கோட்டக் கணக்கராகப் பணியாற்றி, 1979-ஆம் ஆண்டு, தன்னுடைய 56-ஆம் வயதில் விருப்ப ஓய்வு பெற்றார்.

ஏகாம்பரம் மாமா, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் சுற்றிப் பார்த்ததோடு. இவரது பிள்ளைகள் இருவரும் அமெரிக்காவில் இருப்பதனால், அத்தையுடன் மும்முறை அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களையும் பார்த்து வரும் வாய்ப்பினையும் பெற்றார்.

மாமாவின் மணிவிழா, 1983-ஆம் ஆண்டு நியூயார்க் நகரிலுள்ள பிள்ளையார் கோயிலில் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

அவர் தியாகராயநகர் 121-ஆவது கோட்டத்தின் குடிமக்கள் நல்வாழ்வுச் சங்கத்தின் தலைவராகச் சிறப்புறப் பணியாற்றினார்.

இவருடைய மூத்த மகன் ஒப்பற்ற டாக்டர் இளமதி எம்.டி.,எஃப்.ஏ.சி.பி., எஃப்.ஏ.எஸ்.என்., 1973 முதல் நியூயார்க்கில், சிறுநீரகத் துறையில் சிறப்பு வாய்ந்த மருத்துவராகப் பணியாற்றுவதோடு, 1977 ஆம் ஆண்டு சாரா என்னும் அமெரிக்கரை மணந்து, இவர்களுக்குப் பிறந்த பிள்ளையான சிவன், இளம் பருவத்தில் சென்னைக்கு எங்கள் இல்லத்துக்கு வந்ததும், மகிழ்ந்து விளையாடியது பெருமகிழ்ச்சியாகும்.

அவர் ‘ஆஷ்லி’ என்ற அமெரிக்க நாட்டுப் பொன்மகளைத் திருமணம் செய்து அவர்களுடைய பெண் குழந்தைக்கு ‘மாரி’ என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

மற்றும் மகளுக்கு என் அம்மாவின் பெயரான ‘தாரா’ என்றும் பெயர் சூட்டி அவரும் ‘ஜானி’ என்பவரத் திருமணம் செய்து ‘அலெக்ஸ்’ என்ற மகனுக்குத் தாயாகவும் உள்ளார்.

மருத்துவர் இளமதி தன் முதல் மனைவி சாராவை மணவிலக்கு செய்து, மருத்துவர் ‘ஈலீன்’-ஐத் திருமணம் செய்து அமெரிக்காவிலேயே சீரும் சிறப்புமாகவுள்ளார்.

இவருடைய மகள் தாராவின் திருமணத்தின் போது (2016) நான் வரைந்த நன்றியுரையை உருக்கமாகப் படித்தேன் என்று இளமதி மாமா என்னிடம் நெகிழ்ந்து சொல்வார்.

அந்நன்றியுரை:-

‘அனைவருக்கும் வணக்கம்.

என் எழிலார்ந்த மகள் தாராவின் திருமணத்திற்கு வருகை புரிந்து இத்திருமண விழாவைச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் தங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிப் பூக்களை வாரி வழங்குகிறேன்.

என் மகள் ‘தாரா’ மணமகனின் வாழ்விற்கு மேலும் ஒளியூட்டுவாள் என்பது உறுதி.

இங்கு ‘ஒளியூட்டுதல்’ என்ற சொல்லை நான் பயன்படுத்துவதற்கான காரணத்தைச் சற்றே விளக்க விரும்புகிறேன்.

‘தாரா’ என்ற சொல் விண்மீனைக் குறிக்கும்.

என் வாழ்வில் என்றென்றும் ஒளியூட்டிவரும் இவ்விண்மீன், மணமகன் வாழ்விலும் நிச்சயமாக ஒளியூட்டவே செய்யும் என்பது உறுதி.

என் பெயருடனும் இதற்கு ஒரு தொடர்புண்டு.

என் பெயரிலுள்ள ‘மதி’ நிலவைக் குறிக்கும்.

நிலவும் விண்மீனும் வானில் ஒளிவீசுவதைப் போல எங்கள் வாழ்வும் ஒளிபொருந்தியே அமைந்துள்ளது.

அவ்வாறே, மணப்பெண்ணின் தாயார் சாராவும் என் மகள் தாராவும் ஒத்த ஒலிப்பைக் கொண்டுள்ளனர்.

தா- என்ற எழுத்துக்குப் பதில் சா, அவ்வளவுதான்.

இந்நாளுக்காக நான் கடந்த பல ஆண்டுகளாகக் காத்திருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு மகள் பிறக்கும் நாள், ஒரு தந்தைக்கு எவ்வளவு முக்கியமானதோ, அவ்வாறே அவள் புதிய வாழ்வைத் தொடங்கும் இந்நாளும் முக்கியமானதாகும்.

அவள் எப்பொழுதுமே என் இளவரசிதான்.

அவள் குழந்தைப் பருவத்திலிருந்து தற்போதுள்ள மங்கைப்பருவத்தை எய்துவதைக் கண்டவன் நான்.

என் வாழ்வில் அவள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தினாளோ, அவ்வாறே மணமகனின் வாழ்விலும் ஏற்படுத்துவாள் என நான் திண்ணமாகக் கூறுகிறேன்.

என் மகளைக் கைப்பிடித்த மணமகனை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கு உளப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைப் போலவே நீங்களும் பேறுபெற்றவர்களாக இருப்பதால், புதிய வாழ்க்கையில் நுழையும் பெருமகிழ்ச்சி உங்களுக்கும் கிட்டும்.

உங்கள் திருமண உறவால் இணையற்ற மகிழ்ச்சியைப் பெறுவீர்களாக என வாழ்வாங்கு வாழ்த்துகிறேன்.

என் உரையை நிறைவு செய்வதற்கு முன்பாக, புகழ்மிக்க வரிகளைக் குறிப்பிட விழைகிறேன்.

“உன்னை வயிற்றில் சுமக்கும் பேறு எனக்கில்லை. அதனால் என் நெஞ்சில் நிறைந்தவாறு தீர்த்துக் கொள்கிறேன்”.

இவ்விணையரைக் உலகம் வாழ்த்தட்டும்.

இன்றைக்கும் என்றென்றைக்கும் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்.

பெருமக்களே,

2047 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவப் பேராசான் வகுத்த குறளை இவ்விடத்தே குறிப்பிட விழைகிறேன்.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை (51)

இதன் பொருள்:-

இல்லறத்துக்கு ஏற்ற பண்புடையவளாய்த் தன்னை மனைவியாகக் கொண்ட கணவனது வருவாய்க்குத் தக்க குடும்பம் நடத்துபவள் வாழ்க்கைத் துணையாவாள்.’

——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (12)

“2.ஆடூஉவறி சொல் மகடு உவறி சொல்,
பல்லோரறியும் சொல்லொடு சிவணி,
அம்முப்பாற் சொல் உயர் யர் திணை யவ்வே” என்பது சூத்திரம்.

இச்சொல்லதிகாரக் குறிப்பு எழுதிய சாஸ்திரியார் இதன் ” ருள் முன் சூத்திரத்தில் கூறப்பட்ட இருதிணை உயர்திணை ஆணைக் குறிக்கும் சொல் என்றும் பெண்ணைக் குறிக்கும் சொல் என்றும் பலரைக் குறிக்கும் சொல் என்றும் மூவகைப்படும் என்பதே ” என்று கூறுகின்றார்.

இவர் உரையினையும் சூத்திரத்தையும் நோக்குவார்க்கு ஆடூஉ வறிசொல் , மகடூஉ வறிசொல் என்பவை முறையே “ஆணைக் குறிக்கும் சொல்லென்றும் பெண்ணைக் குறிக்கும் சொல் லென்றும் பொருள்படுவதும், ஆனால் ஆடூஉ வென்பதற்கு ஆண் என்பதும், மகடூஉ என்பதற்குப் பெண் என்பதும் சொற்பொருளாம் என்பதும் தோன்றும்.

ஆனால் ஆண் , பெண் என நிற்கும் பெயர்கள் இரு திணைக்கும் உரிய மரபியலில் கூறப்படும் பொதுப் பெயர்களாகும்.

ஆடூஉ , மகடூஉ வென்பவை “ஆடூஉ மகடூஉ வாயிரு பெயரும்” ( 163 ) என , உயர்திணைக்கே யுரியவாய்க் கூறப்படும் சிறப்புப் பெயர்களாம் .

இச் சிறப்புப் பெயர்க்குரிய சிறப்புப் பொருளைக் கூறாது , அஃறிணைக்கும் உரிய பொதுப் பொருளைக் கூறுதல் குற்றமாகும் .

இதுபற்றியே ஆசிரியர் சேனாவரையர் ஆண்மகனை ஆடூஉ என்றலும் பெண்டாட்டியை மகடூஉ என்றலும் பண்டையோர் வழக்கு என்று கூறினார்.

இனி இங்கு உயர்திணை என்பது பயனிலையாகவும் அம்முப்பாற்சொல் என்பது எழுவாய் ஆகவும் இருப்பினும், கூறப்பட்ட உயர்திணை என்பது உத்தேசியமாதல் பற்றி அதனை எழுவாயாகவும், அம்முப்பாற் சொல் என்பதை பயனிலையாகவும் கொள்ளல் வேண்டும் என்கின்றார்.

இதன்கட் கூறப்பட்ட உத்தேசியம் என்பது தமிழ் நூல்களில் உத்தேசம் என வழங்கும்.

உத்தேசம் கூறிய பின்னர் இலக்கணம் கூறுதல் முறைமை (சிவஞான பாடியம் குத்திரம் 2 ), “இம்மூன்று (னஃகனொற்றே முதலிய மூன்று ) சூத்திரங்களிலும் ஆடூஉ வறிசொல், மகடூஉ வறிசொல், பலரறி சொல் இவற்றின் இலக்கணம் சொல்லப்படுகிறதே யன்றி இம்மூன்று சொல்லு உயர்திணைச் சொல் என்று சொல்லப்படவில்லை என்று இவர் பின்னர் கூறுதலால், இவ்வாறு இலக்கணம் தோன்றுவதற்குரிய உத்தேசம் ஆடூஉவறிசொல் முதலாக பயனிலை கூறப்படும் முப்பாற் சொல்லுமே என்பது பெறப்படும்.

படவே உத்தேசமாக இவற்றை பயனிலை என்றும் பயனிலையாதற்குரிய உயர்திணைய வென்பதை உத்தேசமாக்கி எழுவாய் என்றும் கொள்ளுதல் அமையாது.

மேலும் ஆசிரியர் மாதவச் சிவஞான யோகிகள் சிவஞானபோத மாபாடியத்துள் “முன்னர்க் கூறப்படுவதாகிய இலக்கணத்தை அவாய் நிற்பத எடுத்துக் கோடலே உத்தேசம் எனப்படும் என்று கூறுதலால், னஃகானொற்றே என்ற குத்திரம் முதலாகக் கூறப்படும் இலக்கணத்தை அவாய் நிற்பனவாய் ஆடூஉ வறிசொல் முதலிய முப்பாற் சொல்லும் எடுத்துக் கொள்ளப் படுகின்றன.

ஆகலின் இவற்றை உத்தேசமாய்க் கொள்ளுவதே நியாய துணிபாம்.

அங்ஙனமிருக்க உயர்திணைய வென்பதை உத்தேசமென்று இவர் கூறிக்கொள்ளுதல் பொருந்தாது.

அன்றியும் இச்சூத்திரத்தின் சொற்கிடக்கைமுறை அம்முப்பாற் சொல் என்பது எழுவாயாகவும் உயர்திணை யவ்வே என்பது பயனிலையாகவும் அமைய நிற்பதால் அதற்கேற்பப் பொருள் கொள்ளுதல் நேர்மையாகும்.

கடா நேரிது அன்று என்னும் கொள்கையினைச் சாஸ்திரியார் சற்றேறக் குறைய இரு வரிகளால் விளக்குகிறார்.

இது நியாய நூல் முறைப்படி சொற்பல்குதல் என்னும் குற்றமாம்.

ஆங்கிலேயரும் பொருள் விளக்குவதற்காக மிக்க சொற்களைப் பெய்து கூறுதல் குற்றம் என்பர்.

இனி, சிவணி… “ஆறாம் வேற்றுமை ஏற்றுநின்ற சொல் பெயராயும் வினைக்குறிப்பாயும் நிற்குமாகலான்” எனச் சேனாவரையரும், “உயர்திணைய வென்ற ஆறாம் வேற்றுமையாய் நிற்கும் சொல் ஈண்டுப் பெயராகாது வினைக் குறிப்பாய் நின்றது” என்று நச்சினார்க்கினியரும் கூறியவற்றுள், உயர்திணைய என்பது ஆறாம் வேற்றுமை யுருபேற்று வினைக்குறிப்பாய் நின்றதென்ற முடிபு பொருந்தாது என்பதைத் விருத்தியுடையார் தொல்காப்பிய முதல் சூத்திர மறுத்துவிட்டதனால், இதனைக் கொண்டு முடியும் சிவணி என்பது வினையெச்சமன்று என்று இவர் (சாத்திரியார் ) கருதி விட்டார் போலும் ……

இவர் கூறியவாறு கொடாராயினும் என்பதனைக் கொடாராயினதூஉம் என்று கொண்ட வழி இக்கருத்தே கொண்டு ஆசிரியர் தொல்காப்பியனார் கொடுத்தற்குரிய முற்றும்மை கொடாராயினார் என்பதும் உரையாசிரியரும் இத்துணையல்லது விரிபடாது என்பது ஈண்டுக் கூறியது என்றார் என்பதும் முடிபுகளாம்.

ஆகவே உயர்திணைக்குரிய பால் அம் மூன்றுமே என வரையறுத்துக் கூறுதற்கு அம்முப்பாற்சொல்லும் என உம்மை கொடுத்துக் கூறல் வேண்டியிருக்க, கொடாமை அவ்வாறு வரையறுத்துக் கூறுதற்கே என்று கூறுதல் மாறுகொளக் கூறலாம்.

ஆகலின் குறிப்புரைகாரர் கருத்து குற்றமுடைத்தாதல் அறிக.

ஆகையால் அதனைக்
கொடா ராயின தூஉம் என்று கொள்ளுதல் குற்றமாம்.

அன்றியும் சேனாவரையர் கொண்ட முடிபுக்கு ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியதே இவர்கருதியவாறே, போதிய ஏதுவாகியவிடத்து உரையாசிரியர் கூறியதெனக் கூறல் , மிகை என்னும் குற்றமாம் .

வரலாற்று நெறியினும் பெரியதோர் வழுவாம் . ”
சண்டைக் கோழியே சிறந்த சேவலென்றும், மேசை தட்டிப் பேசுவோரே சிறந்த வழக்குரைஞர் என்றும் கூறுவதைப் போல தமிழறிந்த உண்மைப் புலவர் பெருமக்களுக்கிடையேயும், வம்பு வாது செய்பவரே பெரும் புலவர் என்று கருதிய காலமும் இருந்தது .

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *