செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 32
உண்மைத்தமிழர் உணர்ந்தே தீர்வர் !
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
ஒரு நாட்டின் நாகரிகத்தையும் கலை ,வாழ்வியல் பண்பாட்டையும் விளக்குவனவற்றுள், அந்நாட்டு மக்களால் கொண்டாடப் பெறும் விழா சிறப்பிடம் பெறுகின்றன.
அம் முறையில் பொங்கல் விழா உழவர் திருநாள் – தமிழர் திருநாள் – திருவள்ளுவர் திருநாள் என்று தமிழ் மக்களின் பலவகைச் சிறந்த பண்பாடுகளை விளக்கும் நிலையில் அமைந்துள்ளது.
ஆராய்ச்சி அறிஞர்கள், உலகில் முதன் முதலாக மனிதன் குறிஞ்சி நிலத்தில் தோன்றி, அதனை அடுத்த முல்லை நிலமாகிய காடுகளில் காய்கனி வகைகளை உண்டு வந்தான் என்றும் , பின்னர் அவன் காலப் போக்கில் உழுதற்றொழிலை உணர்ந்து பயிரிடக் கற்றுக் கொண்டு, ஓரிடத்தில் நிலையாக வாழத் தலைப்பட்டான் என்றும் கூறுவர்.
மனிதன் வயல்களில் உழுது பயிர்த் தொழில் செய்ய முற்பட்ட நிலப் பகுதியே மருதத்திணை எனப் பெறுவதாயிற்று.
மருதத்திணைப் பகுதியிலேயே மக்கள் நகரங்கள் அமைத்து, மிகப் பெரிய அளவில் சேர்ந்து வாழத்தலைப்பட்டனர்.
மருத நகரங்கள் அமைந்தன.
நகரங்கள் அமையத் தொடங்கிய காலம் முதல் தான். மனிதன் நாகரிக வளர்ச்சி பெறத் தொடங்கினான்.
நாகரிகம் என்னும் சொல் நகர் என்ற சொல்லினின்றே தோன்றியதைக் காணலாம். ‘
Civilization ‘ என்னும் ஆங்கிலச் சொல் ‘ City ‘ எனப் பொருள்படும் ‘ Civitas ‘ என்னும் சொல்லினின்றே தோன்றியது என்பர் .
உழவுத் தொழில் தொடங்கிய பின்னரே மனிதன் பண்பாடு வளரப் பெற்றான்.
பண்பாடு எனும் சொல் , Agriculture என்னும் சொல்லோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையதாகும் .
இம் முறையில் ஆராய்ந்தால், பொங்கல் விழா தமது நாகரிகப் பண்பாட்டு விழாக்களும் தலை சிறந்ததாக உணரலாம்.
பொங்கல் தொழிலின் உயர்வும் இன்றியமையாமையும் பற்றி யாவரும் உணருவர்.
உழவு தான் தலை என்பது திருவள்ளுவம் .
இந்த வகையில் திருவள்ளுவர் திருநாளும் சேர்ந்து பொங்கல் தமிழ்ப்புத்தாண்டாக அமைந்தது .
ஆண்டுகள் ,மாதங்கள் முதலிய கணக்கெல்லாம் தமிழ் மரபைத் தாண்டிக் கலப்பாக அமைந்துவிட்டன .
விரோதி என்பது ஓர் ஆண்டா ,புரட்டாசி என்பது ஓர் திங்களா என்றெல்லாம் தமிழுலகில் ஆராய்ந்துள்ளனர் .
உழவன் கால் நடந்த அறுவடைத் திருநாளே ஆண்டின் முதல் நாள் என்று கருதினர் .
இந்தச் சூழலில் தமிழ்ப்புத்தாண்டு விழாவாகவும் அமைத்த தனிப்பெருமை கலைஞரைச் சார்ந்தது .
முத்தமிழ் அறிஞர் இது தொடர்பாக எழுதியதை என்றும் நினைக்கத்தக்கது .
நமது கழக அரசு நடத்திய கோவையில் நிகழ்ந்த செம்மொழித் தமிழாய்வு மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பா என்னால் எழுதப்பட்டதே தவிர, அந்தப் பாடலில் என்னைப் பற்றிய பாராட்டு எதுவுமே கிடையாது.
தஞ்சையில் அம்மையார் ஜெயலலிதா நடத்திய மாநாட்டிற்காக வருகை தந்த இலங்கைத் தமிழ் அறிஞர் கா. சிவத்தம்பி உட்படப் பலர் மாநாட்டில் கலந்துகொள்ள அப்போது அனுமதிக்கப்படவே இல்லை.
இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் எல்லாம் விரட்டப்பட்டார்கள் என்று ஏடுகளிலேயே அப்போது செய்தி வந்தது.
ஆனால் கோவையில் கழக அரசு நடத்திய செம்மொழி மாநாட்டிற்கு ஜார்ஜ் ஹார்ட், அஸ்கோ பர்போலா, வாசெக், கா. சிவத்தம்பி, உல்ரிக் நிக்காலொசு, கிரிகோரி ஜேம்ஸ், அலெக்சாண்டர் துபியான்கி, ஆண்ட்ரீஸ் கத்தோலியஸ், சீன நாட்டைச் சேர்ந்த கலையரசி, தாமஸ் லேமன் ஆகிய
வெளிநாட்டு அறிஞர்கள் எல்லாம் வருகை தந்து பாராட்டினார்கள்.
முன்வரிசையிலே அமர்ந்திருந்தார்கள்.
நட்சத்திரங்களின் பெயர்கள் எல்லாம் திரிந்துதான் மாதங்களின் பெயர்களாக உள்ளன என்று கூறும் அம்மையார் அவர்களே, இந்தப் பெயர்கள் எல்லாம் திரிந்தன என்றால், நட்சத்திரங்களின் பெயர்களை மட்டும் ஏன் பழைய பெயரிலேயே உச்சரிக்கிறார்கள் ?
நட்சத்திரங்களின் பெயர்களும் அல்லவா திரிந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும் ?
தொல்காப்பியர் “ திங்கள் முன்வரின் இக்கே சாரியை ” – இகர ஈற்று மாதப் பெயர்கள் ( ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, மாசி, பங்குனி ) – ” இக்குச் ” சாரியை பெறும் என்றும் “ திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன ” ஐகார ஈற்று மாதப் பெயர்கள் ( சித்திரை, கார்த்திகை, தை ) முன் சொன்னவாறு இக்குச் சாரியை பெறும் என்றும் கூறியுள்ளாரே, அப்படியென்றால் இந்தப் பெயர்கள் எல்லாம் தொல்காப்பியர் காலத்திலேயே திரிந்து விட்டன என்று அம்மையார் சொல்கிறாரா ?
” தை பிறந்தால் வழி பிறக்கும் ” என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர,
” தை பிறந்தால் புத்தாண்டு பிறக்கும் ” என்று குறிப்பிடப்படவில்லை என்று சொல்லியிருக்கிறார் .
தமிழ் ஆண்டின் தொடக்கமே தை முதல் நாள் என்றும், அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படுகின்றது என்றும் அந்த நூலிலே உள்ளது என்பதை எழுதிக் காட்டியிருக்கிறேன்.
இந்தப் பொருள் புரியாமல் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றுதான் அதிலே உள்ளது என்று உண்மைக்குப் புறம்பாகச் சொல்லியிருக்கிறார்.
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பேசிய அம்மையார் பௌர்ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயர் தான் மாதத்தின் பெயராக அமைந்துள்ளது என்று கூறியதையொட்டி, சித்திரை, கார்த்திகை மாதங்களைத் தவிர மற்ற மாதங்கள் எல்லாம் நட்சத்திரங்களின் பெயர்களில் இல்லையே என்று நான் கேட்டிருந்தேன்.
அதற்கு பேரவையில் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, அந்தப் பெயர்கள் எல்லாம் திரிந்து மாதங்களாகி விட்டன என்று வழக்கம்போல திருத்திக்கூறப் பார்த்திருக்கிறார்.
உதாரணமாக விசாகம் என்பது வைகாசியாகவும் – அனுஷம் என்பது ஆனியாகவும் – பூராடம் என்பது ஆடியாகவும் – திருவோணம் என்பது ஆவணியாகவும் – மிருகசீர்ஷம் என்பது மார்கழியாகவும் – பூசம் என்பது தை யாகவும் – மகம் என்பது மாசி மாதமாகவும் – உத்திரம் என்பது பங்குனியாகவும் வார்த்தைகள் திரிந்து விட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
சூரியன் கிழக்கே உதிக்கிறது, மேற்கே மறைகிறது என்று முன்பு சொன்னார்கள்.
பிறகு தான் விஞ்ஞானிகள் அது தவறான கூற்று, சூரியன் ஒரே இடத்தில் தான் இருக்கிறது; பூமிதான் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது என்று கூறிய பிறகு அதை ஏற்றுக் கொண்டோம்.
அதைப்போலவே பூமி தட்டையாக உள்ளது என்று சொல்லப்பட்டது.
பிறகு விஞ்ஞானிகள் கண்டு பிடித்துச் சொன்ன பிறகு, பூமி உருண்டை என்பதை ஏற்றுக் கொண்டோம்.
ஏன் இதை முன்பே சொல்லவில்லை என்றா கேட்க முடியும் ? ”
என்று குறிப்பிட்டேன்.
இதிலே எந்த ஆண்டு முடிவெடுக்கப்பட்டது என்பது பிரச்சினையல்ல.
” தினமணி ” நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த திரு. சாமி தியாகராசன் எனக்குக் கூட கடிதம் ஒன்றை , 1921 ஆம் ஆண்டில் மறைமலை அடிகள் தலைமையில் பச்சையப்பன் கல்லூரியில் பேசி முடிவெடுத்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லையே என்று எழுதியிருந்தார்.
எப்போது முடிவெடுத்தார்கள் என்பதைவிட என்ன முடிவெடுத்தார்கள் என்பதுதான் முக்கியம்.
முடிவெடுத்தவர்கள் யார் என்பதுதான் முக்கியம்.
அந்த அடிப்படையில் தான் கழக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது.
இதிலே உள்ள முக்கிய குறையே; தமிழர்களுக்கு என்று முறையான வரலாறு இல்லை என்பதுதான்.
இந்தக் குறை என்னால் மாத்திரமல்ல; நம்முடைய தமிழறிஞர்கள் பலராலும், வரலாற்றுப் பேராசிரியர்களாலும் உணரப்பட்டது.
பொறியாளர் வே. வரதராசன் அவர்கள் எழுதிய ” தமிழர் நாகரிகம் ” என்ற நூலில்
* 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ் அறிஞர்களும், சான்றோர்களும், புலவர்களும் ஒன்று கூடி ஆராய்ந்து திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவதென முடிவெடுத்தனர்.
திருவள்ளுவர் காலம் கி.மு. 31 என்றும் அதையே திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம், தைத் திங்கள் முதல் நாள் ( பொங்கல் திருநாளில் ) எனவும் முடிவெடுத்தனர் ” என்றுள்ளது.
1937 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் – தந்தை பெரியார், உமாமகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியன், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி. ராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி போன்றோர் கலந்து கொண்ட அவையில் – தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் தனது தலைமையுரையில் வலியுறுத்தியிருக்கிறார்.
9 – 5 – 1971 இல் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற தமிழகப் புலவர் குழுவின் முப்பதாம் கூட்டத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா என முடிவு செய்யப்பட்டது.
மேலும் கடந்த இரண்டு நாட்களாக நமது ” விடுதலை ” நாளிதழில் அமெரிக்காவில் நாசா விண் மையத்தில் பணியாற்றும் பிரபல விஞ்ஞானி முனைவர் நா. கணேசன் அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையில் இந்தப் பொருள் பற்றி விரிவான விளக்கங்களையும், எந்தெந்தப் புலவர்கள், தமிழறிஞர்கள் கடந்த காலத்தில் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தெரிவித்தார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது.
இந்தப் புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே தான் – எந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல்,தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதால் 2008 இல் நான் இவற்றையெல்லாம் அறிந்து ஆய்ந்த பிறகு முடிவெடுத்து அறிவித்தேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
தமிழக வரலாறு ஒருநாள் நிச்சயமாக இதனை மெய்ப்பிக்கும் ! தமிழர்களின் சரியான அடையாளத்தை அழித்திட முற்படுவது நன்றன்று , அதற்குப் பொய்யான நியாயம் கற்பித்திட முயலுவதும் போலியாகப் புயம் தட்டிப் புறப்படுவதும் பொருத்தமாகாது என்பதை
உண்மைத் தமிழர் விரைவில் உணர்ந்தே தீர்வர் !
அன்புள்ள,
மு.க.
22 4 2012
தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Add a Comment