விகடகவி
ஒரு சூப்பர் டிஜிட்டல் வீக்லி
பாரதியார் ஸ்பெஷல்
11 12 2021
பாரதியின் குயில் பாட்டு..!
ஆர்.ராஜேஷ் கன்னா
https://www.vikatakavi.in/magazines/241/8980/bharathiyen-kuyil-patturajeshkhanna.php
கவினெழு சுடரே
குளிர் இளந்திருவே – வண்ணக்
குழலிசை அமுதே
ஆவென அழகாய் உன்றன்
அலகினை விரித்தே
தேனார்ப் பாவினை இசைப்பாய்
இன்பப் பண்ணொடு கலந்தே!
பாடிக் காட்டிடு தமிழே என்ற தேன்கவி வரிகளுக்கு உயிரோவியமாக பல இராகங்களில் பண்ணிசைத்து குயில்பாட்டு முழுவதையும் கொரோனா தீநுண்மிக் காலத்திற்கு முன் தொடங்கி, பாரதி பிறந்த நன்னாளான இன்று, நிறைவடைகிறது.
குயில் பாட்டின் முழுத்தொடரைப் பாடிய கலைமாமணி முனைவர் சூரியப் பிரகாசின் இசைப்பயணம். இது பற்றி சென்ற வருடம் விகட கவியில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
சூரியப் பிரகாஷ் பாட, தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் அருள் பாடலின் சிறப்பையும், கருத்தையும் தன் எழுச்சிக் குரல் வாயிலாக கருத்து விளக்கங்களையும் தொடர்ந்து செய்து வந்த இம்முயற்சியை உலகத்தில் பரந்துள்ள பல தமிழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
அருளும், சூரியப் பிரகாஷும் சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் பயின்ற மாணவர்களாவார்கள்.
இவர்கள் இருவரும் பள்ளி முடித்து, கல்லூரிக் கல்வி கற்று பல ஆண்டுகள் இடைவெளி கழித்து, பள்ளி மாணவர்கள் ஒருசேர நடந்த சந்திப்பில் மீண்டும் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்த பொழுது சூரியப் பிரகாஷ் தன் வாழ்வை இசை மயமாகவும்,
அருள் தன் வாழ்வைத் தமிழ் வழியாகவும் அமைத்துக்கொண்டிருந்த பொருத்தங்களை இணைத்துப் பேசிக்கொண்டிருந்த தருவாயில், கலைமாமணி சூரியப் பிரகாஷ் தான் பாடும் பாடல்களுக்கு எங்காவது ஒருமுறை தமிழில் நீ விளக்கம் சொல்லக் கூடாதா என்று வினவிய பொழுது…
அருள் மலைத்துப் போய், உங்கள் பயணமும் என் பயணமும் எந்த மையப் புள்ளியில் இணையுமென்று எனக்குத் தெரியவில்லை.
உங்களைப் போல இசைத்திறமை அறியாத என்னை எப்படி இணைத்துக் கொள்வீர்கள் என்று தெரியவில்லை என நழுவி விட்டார்.
முதலில் வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் பாரதி புகழ் வழக்கறிஞர் இரவி, அருளிடம், பாரதியைப் பற்றிக் கட்டுரை எழுதத் தூண்டிய போது, அருள் ‘
பாரதியாரை நாழும் நினைவோம்’ என்று தொடங்கி,
‘புதுவைக் குயிலின் பொன்னோவியம்’
என்ற தலைப்பில் 05.05.2020 அன்று எழுதியதை இணையத்தில் வெளியிட்ட பொழுது,
கருநாடக இசைக் கலைஞர் கலைமாமணி ஆர். சூரியப் பிரகாஷ் அருளை அழைத்து, “பாரதியின் குயில் பாட்டுக் கவிதை வரிகளை உலகம் முழுவதும் இணையத்தில் கொண்டு சேர்க்க ‘குயில் பாட்டு பாடுவோம்’ என்ற தலைப்பில், யூடியூபில் 25 வாரத் தொடராகப் பாடுகிறேன்.
அதற்கான விளக்கத்தையும், ஆங்கில மொழிபெயர்ப்பையும் நீங்கள் விளக்க வேண்டும்.
நாமிருவரும் இணைந்து குயில்பாட்டுக்கு ஒரு புதுவடிவம் கொடுக்கலாமே” என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க…
24.05.2020 அன்று தொடங்கப்பட்ட இசைப்பயணம் பல்வேறு இடர்களுக்கு மத்தியில், தத்தித்தத்தி 11.12.2021 அன்று நிறைவடைவதை, தமிழ்கூறு நல்லுலகம் பாராட்டி மகிழ்கிறது.
அருளின் தாயார் மருத்துவமாமணி தாரா நடராசன், இம்முயற்சியைப்பெரிதும் பாராட்டி, அருளை ஊக்குவித்துக் கொண்டிருந்த தருணத்தில், 14.08.2020 அன்று தீநுண்மித் தாக்குதலுக்கு ஆட்பட்டு, இயற்கையெய்திய பெருந்துன்பத்திலிருந்து அருள் மீண்டு வருவதற்கே பல திங்களாயிற்று.
அத்தருணங்களில், கலைமாமணி சூரிய பிரகாஷ், அருளை ஆற்றுப்படுத்தி, அவருக்காகவே காத்திருந்து, அவர் தேறிவந்த பிறகு, குயில்பாட்டு இசைப்பயணத்தைத் தொடர்ந்தார்.
பௌளி, நாட்டை குறஞ்சி, ஆகிரி, சுமநேச ரஞ்சனி, நளின காந்தி, அடாணா, சிந்து பைரவி, தர்பாரி கானடா ஆகிய இராகங்களில் மெட்டமைத்து, கருநாடக இசையில் குயில் பாட்டுப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
குயில் குறிஞ்சி இராகம் கிராமிய இசையைத் தழுவியும், இயற்கையாக ஏற்படும் மகிழ்ச்சியைக் கொண்டும், உற்சாக இராகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
சூரிய வசந்தா இராகம் வீர உணர்ச்சி மற்றும், சோக உணர்ச்சியினை ஏற்படுத்தும் மற்றொரு புதிய இராகமாக உருவாக்கியுள்ளார் கலைமாமணி டாக்டர் ஆர். சூரியபிரகாஷ் என்பது பெருமையிலும் பெருமையாகும்.
குயில்பாட்டு 744 அடிகளையும், பாட்டாகப் பாடி, நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளார் சூரிய பிரகாஷ்.
குக்கூ என்ற குயிலின் குரலில் காதல், அருள், இன்பம், நாதம், தாளம், பண், புகழ், உறுதி, கூடல், சூழல் ஆகிய பத்துப் பொருண்மைகளையும், ஒலியாலும், சூழலாலும், குரல் வெளிப்பட்ட முறையாலும்,
பாரதியார் உணர்வதையும், சின்னக்குயிலின் மடியில் வெட்டுண்ட நிலையில் கிடக்கும் சேரமானின் இறுதிப்பேச்சு,
கண்ணகியின் மடியில் வெட்டுண்ட கோவலன் பேசிய இறுதிப் பேச்சைப் பல இடங்களில் குயில்பாட்டு தனக்கு நினைவூட்டியதைப் பெருமிதமாக முனைவர் அருள் நம்மிடம் சொல்லும்போதே குயில்பாட்டின் ஒவ்வொரு பாடல் தொடரிலும் எவ்வளவு கருத்துக்களைச் சொல்ல வருகிறார் என்று தெரிய வருகிறது.
குயில் பாட்டு பாடுவோம் என்ற இந்தப் படைப்பு இசையறிஞர்களுக்கும், தமிழார்வலர்களுக்கும் கிடைத்த அருமருந்து;
இதுவரை யாரும் செய்திராத நல்லதொரு முயற்சி.
குயில்பாட்டு பாரதியாரின் உயிர்ப்பாட்டாகும்.
தமிழில் முன்னெல்லாம் கோகிலம் என்பார்கள்.
அதனால் தான், தன் அருமைத் திருமகளின் குரலுக்கு, வசந்தகோகிலம் என்றே பெயரிட்டார்கள்.
கோகிலம் என்பது குயிலாகும்.
அதனால்தான், இசையரசிக்கு கோகில வாணி என்றே பெயரிட்டார்கள்.
குயில்பாட்டில், காதல் காதல் காதல், அதுபோயின் சாதல் சாதல் சாதல் என்ற அந்த வரிகள் தான் வைரவரிகளாகவும், சாதனை வரிகளாகவும், கல்வெட்டு வரிகளாகவும் சாசன வரிகளாகவும் இளையோரின் இதய கீதமாகவும் பாரதியார் படைத்துக் காட்டினார்.
உலகெங்கும் உள்ள அனைவருக்கும் தெரிந்த தேன்வரிகள் இவைகளாகும்.
இந்த வரிகளை பாரதியார் சொல்லும்போதே அவருக்கு திருவள்ளுவருடைய இன்பத்துப்பால் தான் நினைவுக்கு வந்தது.
உலகிலுள்ள கலைகள் யாவும் இசையின் உயர்ந்த நிலையை அடையவே தாமும் ஆசைப்பட்டு அதனை அவாவி நிற்கும் நிலையில் இசைக்கு என்ன குறை கூறமுடியும்
(All arts aspire the status of music) என்றார் கோல்ட்ரிஜ்.
எந்தவொரு படைப்பையும் இசையாக மாற்றிக் காட்டுகிற அந்த விதம், அந்த இசைக்கும், அந்தப் பாட்டுக்கும், அந்தக் கருத்துக்கும் ஒரு மாபெரும் சிறப்பு என்று கூறினார்.
அந்த சிறப்பு, இந்தக் குயில் பாட்டில் பொதிந்து கிடக்கிறது.
குயில்பாட்டை இசைப்பாட்டாகவே பாடிக் காட்டிய பெருமை சூரிய பிரகாசைச்சாரும்.
சூரிய பிரகாஷ் பாடிய குயில்பாட்டைக் கேட்ட இலண்டன் வாழ் தமிழர் பெருமிதமடைந்து, “சூரிய பிரகாஷின் குரல் வளம், மாந்தளிரைக் கோத வைக்கும் குயிலின் குளிர்காலக் கூவலைப் போல உள்ளது” என்று சொல்லிச் சிலாகித்தார்.
குயில் பாட்டின் ஒவ்வொரு வரிகளையும் முனைவர் அருள் தமிழில் நீண்ட விளக்கங்களுடன் எழிலார்ந்த ஆங்கிலத்திலும், குயில் பாட்டின் சிறப்பினை உலகிலுள்ள எல்லோரும் அறிந்து கொள்ளும் வண்ணம் நுட்பமாக விளக்கினார்.
கரைபுரள அலைபுரள சூரிய பிரகாஷ் பாடிக்காட்டிய குயில் பாட்டு மகோன்னதமான வரவேற்பைப் பெற்று, இலண்டன், அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள தமிழார்வலர்கள் குயில்பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.
பாரதியாருடைய தலைசிறந்த மூன்று படைப்புகள் எவையென்னால்,
தேசிய உணர்ச்சிக்காக – பாஞ்சாலி சபதமும்,
தெய்வீக உணர்ச்சிக்காக – கண்ணன் பாட்டும்,
தத்துவ நோக்கத்திற்காக – குயில் பாட்டும்
என்று போகிற போதே அருள் தன்னுடைய கருத்து மழையை அங்கிங்கெனாதபடி குயில்பாட்டில் சொல்லி வந்தது பெருமிதமாக உள்ளது.
கலைமாமணி சூரியப் பிரகாஷ் தனிமனிதராக இப்பணியைச் செய்யவில்லை.
அவர் குடும்பமே ஒரு நல்லதொரு பல்கலைக்கழகம் போல குயில்பாட்டை ஓம்பி வளர்த்தனர்.
அவருடைய பெற்றோர்கள் அவருக்குக் கிடைத்த மாணிக்கச் செல்வங்களாவர்.
அவருடைய தாயார் நாங்கள் இருவரும் சென்னை கிறித்தவப் பள்ளியில் பயிலும்போதே பேச்சுப் போட்டிகளிலும், கவிதைப்போட்டிகளுக்கும் நடுவராக வந்த மாதரசியாவார்.
சூரிய பிரகாசின் துணைவியார் ஒரு பக்கம், அவருடைய மக்கட்செல்வங்கள், துபாயிலிருந்து அவருடைய தங்கை யூடியூப் வாசகர்களுக்காக, அழகாக எடிட் செய்த காட்சிகளைப் பார்த்தால் யாவரும் உறுதியாகப் பாராட்டுவார்கள்.
பாரதியை நாம் சென்னையிலே தான் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தோம்.
அவருடைய இல்லம் கூட இங்கு சென்னையில் தானே இருக்கிறது.
எங்கிருந்து புதுவைக்குச் செல்கிறார்?
எப்படி அவருக்கு அந்தப் புதுவை மீது வேட்கை?
எங்கிருக்கிறது அந்த குயில் பாடுகிற காடு?
அந்த வனம் எங்கே?
என்றெல்லாம் வினவத் தோன்றும்.
இந்தியா வார இதழைப் பாரதியார் நடத்திக்கொண்டிருந்தபோது, இந்த இதழ் சென்னையில் நடத்த முடியாத சூழலில் அரசியல் புகலிடமாகப் புதுவைக்குச் செல்கிறார்.
அதுவரை புதுவை கடன்காரர்களுடைய புகலிடமாக இருந்த பகுதியாகும்.
புதுவையில் தான் அவருக்கு எங்கிருந்தோ வந்தான் என்பது போல குவளைக் கண்ணன் அவருக்கு நண்பராக வந்ததும், வெள்ளச்சி கிருஷ்ணசாமி செட்டியாருக்குப் புதுவையை அடுத்த முத்தியால்பேட்டைக்குப் பக்கத்தில் அழகான தோப்பு இருந்தது.
அந்தத் தோப்பில்தான் பாரதியார் மணிக்கணக்காக இருப்பாராம்.
அந்தத் தோப்பே தான் பாரதியாருடைய குயில்பாட்டினுடைய காட்சித் தலமாகவும், தமிழ் உள்ளவும் சாகாவரம் பெற்று விட்டது இந்தத் தோப்பு என நாம் சொல்லலாம்”
என்று நுட்பமாக முனைவர் அருள் குயில் பாட்டினூடே மேற்குறித்த கருத்துக்களையும் பாரதி புகழ்பெற்ற ரா.ஆ. பத்மநாபன் அவர்கள் தன்னுடைய சித்திர பாரதியில் பாரதியார் நூற்றாண்டின்போது, வெளியிடப்பட்ட தன்னுடைய நூலில் மிக அழகாக அந்த குயில்பாட்டு பாடப்பட்ட அந்தத் தோப்பின் படத்தையும் வெளியிட்டிருப்பதையும் அருள் தெரிவித்தது ஆச்சரியமுட்டும் செய்தியாக அமைந்தது.
பாரதியார் பற்றி அருள் மற்றும் கலைமாமணி சூரிய பிரகாஷ் ஒராண்டுக்கு மேல் கடும் முயற்சி செய்து குயில் பாட்டை உலகெங்கும் கொண்டு சென்றது பாரதிக்கு இவர்கள் செலுத்திய புகழாஞ்சலி என்றே சொல்லவேண்டும் !
https://www.vikatakavi.in/magazines/241/8980/bharathiyen-kuyil-patturajeshkhanna.php

Add a Comment