POST: 2022-02-21T10:03:26+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 41

ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

ஈடற்ற பேச்சாளர் இங்கர்சால் !

அறிவியக்கப் போராளியாக ஒளிர்ந்த இங்கர்சால் பகுத்தறிவுப் பிழம்பாகவும் சீர்திருத்தச் சிந்தனை அருவியாகவும் வாழ்ந்தார் .

தந்தை பெரியார் செய்த புதுமைகள் பல .பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவது பெரியாரின் பகுத்தறிவு எழுச்சியைக் காட்டியது .

இரஷ்யா ,லெனின் ,மாஸ்கோ, இங்கர்சால் என்ற பெயர்கள் எங்கும் ஒலித்தாலும் அவை பெரியார் சூட்டிய பெயர்கள் என்றே அறியலாம் .

ஆடவர் ,மகளிர் என்று கூடப் பெயரில் என்ன வேறுபாடு என்று கேட்டார் .

என் மாமனார் பள்ளிக்கல்வி தான் முடித்தவர்

பகுத்தறிவுச் சிந்தனையில் தேர்ந்தவர் .

அவருக்குப் பிறந்த இரண்டு மகளிருக்கும் இரஷ்யா , இங்கர்சால் என்று முதலில் பெயரிட்டார் .

இந்தப் பெயர்களைக் கேட்டு சமயப்பள்ளிகள் இடந்தர மறுத்தன .

காலத்தின் கோலம் .பின்னர் பரமேசுவரி , தாராபாய் என்று பெயர்களை மாற்ற நேர்ந்தது என்று என் மாமா கூறியதைக் கேட்டிருக்கிறேன் .

இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து ஆசிரியர் அம்மாவை அழைத்துப் பாராட்டியதை நினைவு கூர்கிறேன் .

பேரறிஞர் அண்ணாவை தென்னாட்டு இங்கர்சால் என்று அந்நாளில் மேடையில் அழைத்தனர் .

பல்லாண்டுகளுக்கு முன்னர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய இங்கர்சால் பற்றிய கட்டுரை இனித் தொடர்கிறது .

அறிவுச் சுடராக – ஆற்றலின் ஊற்றாக விளங்கிய – பழுத்த நாத்திகர் – இங்கர்சால் அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் திரிஸ்டன் எனும் சிற்றூரில் 1833 ஆம் ஆண்டு ஆகஸ்டு 11 ஆம் நாள் பிறந்தவர்.

இங்கர்சாலின் தந்தை; மகனைச் சிறந்த கல்வியாளராகவும், மத போதகராகவும் உயர்த்திடப் பெரிதும் பாடுபட்டவர்.

இரவுநேரத்தில் ஒரு நீளமான மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைத்து விட்டு; அது முழுவதும் எரிந்து அணைந்து போகும் வரையில் அந்த வெளிச்சத்தில் மகனைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவாராம்.

தந்தையின் கட்டளைப்படி இளைஞன் இங்கர்சால், அந்த மெழுகுவர்த்தி எரிந்து அணைந்த பிறகுகூட வெளிச்சத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தந்தை வழங்கிய அந்த மத நூல்களைப் படித்துக் கொண்டேயிருப்பது வழக்கமாம்.

அப்படிப் படித்துக் கொண்டிருந்த அந்த இளைஞன் உள்ளத்தில், சமய சம்பந்தமான கருத்துக்கள் பதிவாகவில்லை ; மாறாகப் புரட்சிகரமான பகுத்தறிவுக் கருத்துக்களே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின.

ஆரம்பத்தில் மகன் இங்கர்சால் குறித்து மனவேதனை அடைந்திருந்த தந்தை; அவரது இறுதி நாட்களில் மகன் வழியே தன் மனத்திற்கும் உகந்த வழியென்று மறுமலர்ச்சி பெற்றார் என்பது வரலாறு !

படித்துக் கொண்டே அந்தப் பருவத்திலேயே பகுத்தறிவின் மூலம் பலரைத் தன் பக்கம் ஈர்த்த இங்கர்சால் ஆசிரியராகப் பணியேற்றார்.

அவரது முற்போக்குச் சிந்தனைகளும், அறிவுப் பிரச்சாரமும், அவருக்குச் சிலரைப் பகைவராக்கிய காரணத்தால் ஆசிரியர் பணியிலிருந்து அவர் வெளியேற்றப்படவே; அதனால் அவர் மனம் தளராமல் சட்டம் பயிலத் தொடங்கினார்.

திறமைமிக்க வழக்கறிஞராக விளங்கி;

குறிப்பிபிட்டுச் சொல்லக்கூடிய ஓரிரு பெரிய வழக்கறிஞர்களில் ஒருவர் எனப் புகழ் பெற்றார்.

ஒரு கருப்பர் மீது; பசுவைத் திருடினான் என்று ஒரு வழக்கு – அந்த நீக்ரோவுக்காக வாதாடுவதற்கு யாருமில்லை எனக் கேள்வியுற்று; இங்கர்சால் அவனுக்காகத் தானே வாதாடினார்.

வாதங்கள், எதிர்வாதங்கள் எல்லாம் முடிந்தன. தீர்ப்பு கூறப்பட்டது. கருப்பர் விடுதலையானான். இங்கர்சால் அவனை அழைத்து மறைவாகக் கேட்டார்.

” இப்போதுதான் நீ விடுதலையாகி விட்டாயே; இப்போதாவது உண்மையைச் சொல் என்னிடம் ! நீ பசுவைத் திருடியது உண்மைதானே ? ” ” ஆமாம் – நான் திருடியது உண்மைதான் ! ஆனால் ஒன்று; இந்த வழக்கின் தொடக்கத்தில் நான் குற்றவாளிதான்.

பிறகு; நீங்கள் ஆதாரங்களை அள்ளி வீசி வாதம் நடத்த – வாதம் நடத்த – நான் திருடினேனா என்று எனக்கே சந்தேகமாகிவிட்டது ” கருப்பர் பசு திருடிய வழக்கு ஒன்றே, இங்கர்சாலின் திறமைக்குச் சான்றாகத் திகழ்கிறது என்பர் !

நீதிமன்றத்தில் மட்டுமல்லாது – நெஞ்சு வலி நோயையும் பொருட்படுத்தாமல் சுற்றிச் சுழன்று தனது 66 வது வயதில் கண்மூடும் வரையில் பகுத்தறிவுப் பரப்புரையில் ஈடுபட்டார்.

கட்டணம் அளித்து அவரது உரை கேட்க மக்கள் அலைமோதி வருவார்கள்.

பேசுவதற்கும் அவர் தொகை பெறுவதில் கண்டிப்பானவர். ஆனால் கருத்துக்கள் மக்களிடம் பரவினால் போதும்; தொகை பெரிதல்ல என்று அவர் நினைத்து அவ்வாறே

நடந்து கொண்டதற்கும் அவர் பொதுவாழ்வில் சான்றுகளாகச் சில நிகழ்ச்சிகள் உண்டு.

உதாரணமாக கிளரிமண்ட் என்ற ஓர் ஊரைச் சேர்ந்த அறிவியக்கப் பற்றுக் கொண்ட சில இளைஞர்கள் அவரை கூட்டத்துக்கு அழைத்தனர்.

முனனூறு டாலர் கொடுப்பதாயின் வருகிறேன் என்றார்.

ஒப்புக்கொண்டு அவரை இளைஞர்கள் அழைத்துப் போனார்கள்.

ஊர் மக்கள் பலரும் அந்தக் கூட்டத்திற்கு வரப் பயந்த காரணத்தால் கட்டணமாக 28 டாலர்கள் மட்டுமே வசூலாயிற்று.

இளைஞர்கள் அதை இங்கர்சாலிடம் சொல்லாமல், அவரிடம் பேசியபடியே அவருக்கு 300 டாலர்களைக் கொடுத்துவிட்டனர்.

இங்கர்சால் துருவிக் துருவி அந்த இளைஞர்களைக் கேள்வி கேட்டு, உண்மையான வசூலைத் தெரிந்து கொண்டார்.

உடனே அந்த இளைஞர்களை அருகே கூப்பிட்டு; ” உங்கள் அன்புக்கு நன்றி – ஆர்வத்துக்குப் பாராட்டு – நாணயமான செயலுக்கு வாழ்த்து – இதோ நீங்கள் எனக்குத் தந்த 300 டாலர்களில் 272 டாலர்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் – என் பேச்சு கேட்க வந்தவர்கள் அளித்த கட்டணத் தொகை 28 டாலர்கள் மட்டும் எனக்குப் போதும் ” என்று கூறிவிட்டு விடைபெற்றுப் போனார்.

” அடேயப்பா; இவர் எவ்வளவு பெரிய மனித நேயம் கொண்டவர் – பொருளீட்டுவதற்காகப் பேசும் சொற்பொழிவாளராக இல்லாமல்; கொள்கை பரவுவதற்காகப் பாடுபடுபவர் என்பதால்தான்; அவருக்கு நாம் இந்தக் கூட்டம் நடத்த பட்ட பாடு புரிகிறது என்று அந்த இளைஞர்கள் இங்கர்சாலுக்குப் புகழாரம் சூட்டியிருப்பார்கள் அல

இவ்வுலகை மூடிக் கிடக்கும் மூட நம்பிக்கை என்னும் பனி மூட்டத்தை விலக்க பகுத்தறிவுச் சுடரொளிக் கதிராய்ச் சிலர் வந்து பிறந்தார்கள்.

அறியாமை இருளை விரட்டி அடிக்க அவ்வாறு தோன்றிய பெருமை இங்கர்சாலைச் சாரும் .

அவர்கள் மட்டும் வந்திராவிடில் சமுதாயம் ஒரு திருந்திய விளைநிலமாக மாறியிருக்க முடியாது, மக்களும் நாகரிகத்தின் உயர்நிலையை அடைந்திருக்க மாட்டார்கள்.

பைபிளின் சட்டதிட்டங்களுக்கேற்ப அவர் தந்தையார் ஒரு சபை போதகராக வாழ்க்கையை நடத்த முற்பட்டவர்.

தம்முடைய குழந்தைகளின் கல்வியிலும் அவருக்கு அக்கறையிருந்தது.

தந்தையின் கடுமையான ஒழுக்க முறைகள் இங்கர்சால் இடமும் படிந்திருந்தன.

அதுவே அவருடைய கட்டுப் பாடான வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது.

தந்தையின் நூல் தொகுப்பிலிருந்த மத நூல்கள் பலவற்றை இங்கர்சால் தமது சிறு வயதிலேயே படித்து முடித்துவிட்டார்.

இங்கர்சால் மதத்தின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கை அவருடைய கல்வியாழத்தால் பிறந்தது .

அவருக்குள் மதம் பற்றிய கேள்விகள் எழுந்தன.

மதவாதிகள் மக்களை அச்சுறுத்துவதாய் அவருக்குத் தோன்றியது.

‘ஒரு போதும் அவர்களுடைய கருத்துகளையும் – புரட்டுகளையும் நான் நம்பப் போகிறதில்லை’ என்று அவர் தமக்குள் சொல்லிக் கொள்வார்.

தந்தையின் போக்கு பழமை பழந்ததாய இருந்த நிலையில் இறுதிக் சுற்றில் மகனது
பகுத் தறிவுக் கோட்பாடுகள் அவருக்குப் புரிய வந்தன.

மகனுடைய கோணங்களிலேயே அவரும் எந்தக் கருத்தையும் ஏற்கத் தொடங்கினார்.

ஆனால், தெளிவு பிறந்த நிலையில் அவர் வெகுவிரைவில் மறைந்தார் .

தந்தையார் தன் முடிந்த நிலையில் தவித்த போது அவர் மகனைப் படிக்கச் சொன்னது பிளேட்டோவின் எழுத்துக்களை.

அதைப் படிக்கக் கேட்டபடி உயிர் நீத்தார் அவர். இங்கர்சாலுக்கு அப்போது வயது பதினெட்டு.

கிரீன்வில் என்ற ஊரில் ஸ்மித் என்பார் நடத்திய கல்விக் கூடத்தில் சேர்ந்து படித்தார்.

அவர் எதையும் எளிதில் புரிந்து கொண்டு விடுவேன்.

மத சம்பந்தமான கேள்விகளை இங்கர்சால் சரமாரியாய் தொடுக்க, ஆசிரியர் அவற்றுக்குப் பதில் கூற முடியாமல் திணறியதுண்டு.

இளமையிலேயே அவருக்கு ‘ நாத்திகன் ‘ என்ற பட்டம் சூட்டி பள்ளிக் கூடத்திலிருந்து வெளியேற்றினர் .

இங்கர்சால் மவுண்ட் வெர்னன் ( இல்லினாய்ஸ் ) என்ற ஊரில் ஆசிரியராய் வேலை பார்த்த போதும் அதே நிலைதான் ஏற்பட்டது. அதன்பிறகு அவர் சட்டம் படித்து வழக்கறிஞர் தொழில் நடத்தினார்.

அமெரிக்காவின் மிகச்சிறந்த வழக்கறிஞர் என்ற பெயரும் புகழும் அவருக்கு வந்து சேர்ந்தன.

பிளேட்டோவில் ஜினோவரை தத்துவ நூல்களையும், புத்தர் முதலானோரின் நீதிநூல்களையும், கலிலியோ நியூட்டன் ஆகிய அறிவியல் பேரறிஞர்களின் கண்டுபிடிப்புகளையும், விக்டர் ஹ்யூகோ முதல் தாமஸ் எலியட் வரை இலக்கியங்களையும் அவர் கற்றார்.

சிந்தனை விரிவான தளத்தை எட்டியது. மக்கள் எப்படித் தடைகளை உடைத்துக் கொண்டு முன்னேறுவது என்பது குறித்து நிறையவே எழுதினார், பேசினார்.

‘நான் உண்மைக்காகப் போராடுகிறவன், மனித நேயம் உள்ளவன், சீர்திருத்தவாதி. என்னை உலகம் ‘நாத்திகன் என்றால் இருந்து விட்டுப் போகிறேன் என்பார் அவர்.

மதவெறியர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றவும் மதவாதத்தைத் தகர்க்கவும் தமது வாழ்க்கை நெடுகிலும் அவர் போராடியிருக்கிறார்.

1860-ல் இங்கர்சால் ஆற்றிய முன்னேற்றம்’, ‘கடவுள்கள்’ ஆகிய சொற்பொழிவுகள் அவருக்கு வரலாற்றில் இடம் பெற்றுத் தந்தவையாகும்.

அமெரிக்க அதிபரின் வருமானத்தைப் போல் இரண்டு மடங்கு வருமானத்தைத் தம் பகுத்தறிவுச் சொற்பொழிவுகளின் மூலம் அவர் பெற்றார் .

அவருடைய குறிக்கோள் நாத்திகவாதியாய் தம்மை அடையாளம் காட்டிக் கொள்வதல்ல, மக்களின் மூட நம்பிக்கைகளை அகற்றி அறிவியல் உண்மைகளை அவர்கள் ஏற்கும்படிச் செய்வதுதான்.

24.8.2005

தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *