செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 50
ஒளவை நடராசன்
தகடூரான் தந்த தமிழ்க்கனி !
அதியர் என்பார் குடியிற் பிறந்து சிறந்தமை பற்றி நெடுமான் அஞ்சியை அதியமான் நெடுமான் அஞ்சியென்று
சான்றோர் கூறியுள்ளனர் என்றும் சில ஏடுகளில் காணப்படுவது பற்றி, அதியர் என்பது
அதிகையர் என்பதன் திரிபு என்றும், ஒரு காலத்தில் இவர் அதிகை யென்னும் ஊரில் வாழ்ந்திருந்து பின்னர்ச் சேரநாட்டிற் இருத்தல் வேண்டும் என்றும், இதனால் அதிகையராகிய இவர் அதியர் எனப்படுவாராயின ரென்றும் அறிஞர் கருதுகின்றனர் .
நெடுமான் அஞ்சியென்பது இவன் பெயர். இவன் ஒரு குறுநில மன்னன்;
இவனது தலைநகர் இக்காலத்தில் தருமபுரி எனப்படும் தகடூராகும்.
இவன் சேரர்கட்குரியவனாய் அவர்க் கண்ணியும் தாரும் தனக்குரியவாகக் கொண்டவன்.
மழவர் என்னும் ஒரு சார் கூட்டத்தார்க்கும் இவன் தலைவன். இதனால் இவனை ” மழவர் பெருமகன் என்றும் சான்றோர் கூறுப. இவனது ஆட்சியெல்லை நடு நாட்டுக் கோவலூரையும் தன்னகத்தே கொண்டிருந்தது.
குதிரை மலை இவன் நாட்டின்கண்ணதாகும்.
முதன் முதலாகத் தமிழகத்திற் கரும்பினை வேற்று நாடுகளினின்றும் கொணர்ந்தவர் இவனுடைய முன்னோராவர்.
பழம் புலவர்கள் இச்செய்தியை, அதியமான் முன்னோர் விண்ணவரை வழிபட்டுக் கரும்பினை இவண் கொணர்ந்தன” ரென்றும், அவ் விண்ணவர் போந்து தங்குதற் பொருட்டு இவன தூர்க்கணொரு சோலையிருந்த தென்றும் கூறுவர்.
இவன் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனியொன்றைப் பெற்றான்.
அக்கனி தன்னை யுண்டாரை நெடிது நாள் வாழச்செய்யும் வலியுடையது.
அதனைப் பெற்ற இவன் தானே யுண்டொழியாது நல்லிசைப் புலமை சான்ற ஔவையார்க் கீந்து அழியா அறப்புகழ் பெற்றான்.
இவனுக்கு ஔவையார் பால் பெரு மதிப்பும் பேரன்பும் உண்டு.
ஒருகால் தன்னோடு மாறுபட்ட தொண்டைமானிடைச்சந்து செய்வித்தற்கு ஔவையாரைத் தூது விடுத்தான்.
இறுதியில் இவன் சேரமான் தகடூரை முற்றுகையிட்டிருந்தபோது இவன் தன் பொருள், படை, துணை, முதலியன வலி குறைந்திருப்பதுணர்ந்து தன் அரணகத்தே அடைப்பட்டுக் கிடந்ததும் பின்னர்ப் போருடற்றி மாதுறந்ததும், தகடூர் யாத்திரை யென்னும் நூற்கண் விளங்கும். இநநூல் இப்போது கிடைத்திலது; சிற்சில பாட்டுக்களே காணப்படுகின்றன.
இவனைப் பாராட்டி ஒளவையார் பாடியுள்ள பாடல் பலவாகும்.
இந்த அதியமான் நெடுமான் அஞ்சிக்கு அத்தை மகள் ஒருத்தியுண்டு;அவளும் சிறந்த பாவன்மையுடையவள் .
அவள் அஞ்சியை மணந்து இன்புற்ற நாளில், ஒருநாள் இசைமலைச் சாரற் காட்சியை அஞ்சியின் அவையில் ” புதுவகையான திறங்களைப் புணர்த்துப் பாடும் நலத்தை யோதிப் பாராட்டியுள்ளாள் என்பர் .
இது ஒரு வகைக் கற்பனையாகும் .
ஒருகால் அதியமான் நெடுமான் அஞ்சி தன்னை யெதிர்த்த பகைவேந்தரொடு பொருதற்குச் சமைந்திருந்தான்.
பகைவர் தம்மிடையேயுள்ள மறவரது மறத்தை வியந்து கூறுவது பற்றி ஔவையார் கேள்வியுற்றார்.
உடனே, அவர் அஞ்சியின் நலத்தை எடுத்துரைக்கக் கருதி, “பகை வீரர்களே, போர்க்களம் புகாதீர்கள்; எம்பால் ஒரு வீரனுளன்; அவன், நாளொன்றுக்கு எட்டுத் தேர்களைச் செய்யும் பெருவன்மை படைத்த தச்சன், முப்பது நாள் அரிது முயன்று செய்ததொரு தேரையொக்கும் பெருமையும் விரைவும் பெருந் திண்மையும் உடையன் ” என்று ஒரு பாட்டால் குறித்தோதுகின்றார்.
அதியமான் ஒருகால் தன்னை யுண்டாரை நெடிது வாழச் செய்யும் நெல்லிக்கனி பெற்று அதனை இவர்க்குத் தந்து நெடிது வாழச் செய்தான்.
அவன் நெடு மனைக்கண் இனிதிருந்து அவ்வப்போது இவர் அவனைப் பல பாட்டுக்கள் பாடிச் சிறப்பித்துள்ளார்.
இப்பாடலில் திரண்ட கருத்தைத் தீந்தமிழில் முத்தமிழ்க் கலைஞர் தீட்டிய ஓவியம் இனிக் காணலாம் .
தகடூரான் தந்த தமிழ்க்கனி !
அணிலின் வால் போல மீசை கொண்ட மன்னவன்
அதியமான் நெடுமான் அஞ்சி யெனும் தென்னவன்
ஆதிநாளில் தமிழ் மண்ணில் முதன் முதலாய்
அருங் கரும்பைக் கொண்டுவந்து விளைச்சல் செய்தார்
அதன் இனிப்பைத் தமிழில் கண்ட அவனின் முன்னோர்
அதியர் குடிப்பிறந்ததாலே அதியமான் ஆனான்.
தகடூரைத் தலைநகராய்க் கொண்டு – அந்தத்
தமிழூரில் தலைநிமிர்ந்து ஆண்டான்.
திண்தோளில் வலிமைதனைத் தேக்கிக்
கண் அசைவில் பகைப்புலத்தைப் போக்கி
மண்மீது புகழ் நிலைக்க மார்பில்
புண் ஏந்தி வீழ்வதையே விரும்பி
அஞ்சியெனப் பெயர் பூண்ட போதும்
அஞ்சாத வரிப்புலியாய் மானமுடன் வாழ்ந்தான்
அவ்வையாம் கவியரசி அவனுக்காக
அணிமணிகள் தமிழால் செய்து
அகமாரப் பூட்டி மகிழ்ந்தாள் – அவன்
அறம் வியந்து திறம் புகழ்ந்தாள்.
“களம் புக எண்ணுகின்ற பகைவர் அறிக – எம்
உளம் நிறை வீரன் ஒருவன் இருக்கின்றானய்யா !
ஒரு நாளில் எட்டுத்தேர் செய்கின்ற தச்சன்
ஒரு திங்கள் உழைத்தமைத்த ஒரு தேர்க்காலுக்கொப்ப
உடல்வலிவும் உரமும் பெற்றோன்
அடலேறு அதியமான்; தெளிக ! ” என்றே,
அவ்வை பாடிய செய்யுள் இஃதே:
” களம்புக ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே ”
அவ்வீரன் அதியமான் ஒரு நாட் காலை
அடவியிற் சென்று அலைந்து திரிந்து
விலங்குகள் மீது வேல்களைப் பொழிந்து
வேட்டையை நிகழ்த்தி விரைந்து திரும்பினான்
வழியில் மலையிடைப் பிளவொன்று கண்டு
விழியினைச் செலுத்தி வியப்பாய் நோக்கினான்
தனிமையிலே நெல்லி மரமொன்றுயர்ந்து
தன் கிளையினில் சிறு இலைகளுக்கிடையே
கனியொன்றே யொன்றைத் தாங்கி நின்றது.
இனிப்பாக இருக்குமென்றும் அதனையுண்டால்
இறப்பேதும் அணுகாதென்றும் இஃதுண்மையென்றும்
தலைப்பாகைத் துறவியொருவர் புதுமையாகப் புகன்றவுடன்
இமைப் போதும் தயங்காமல் அக்கனியைப் பறித்துக்
கொண்டான்
தனைக் காக்க மன்னவனும் அக்கனியை உண்பான் என்று,
தகடூர் வீரரெல்லாம் எண்ணிக் கொண்டு
தடந்தோள் உயர்ந்திடவே தலைவன் பின் நடைபோட்டார்.
மாளிகைக்கு வந்தவுடன் நெடுமானஞ்சி
மாணிக்கத் தமிழ்பாடும் அவ்வையை அழைக்கலுற்றான்.
”மன்னவனே ஏன் அழைத்தாய் எனத் தெரியும்;
மாற்றானாம் தொண்டைமானிடம் எனைத் தூதாக
அனுப்பத்தானே?”
என்று கேட்ட அவ்வை அம்மை
சென்று வரத் தயார்தான் என்றாள் – தூதில்
வென்று வருவதற்கு முன்னே – இதைத்
தின்று சுவைத்திடுக என வேண்டி,
நெல்லிக்கனியை நீட்டினான் வேந்தன் – நிலவில்
அல்லி மலர்வது போல் முகமலர்ந்தாள் அவ்வை !
சுவையான கனிதான் என்று சுவைத்துப் பார்த்து; அரசு
அவைக் கவியான அவ்வை சொன்னாள்.
‘அருமையாய்க் கிடைத்திட்ட இக்கனியுண்டால்
ஆயுள் நீளுமென்று அடவியில் துறவி சொன்னார்
அடியேனின் உயிர் அதிக நாள் இருந்தென்ன பயன் ?
அவ்வையின் ஆயுள் வளர்ந்தால் தமிழ் வளரும்
தகடூரின் பெயர் உள்ளளவும் நான் வாழ்வேன்
தமிழ் உள்ளளவும் வாழ்க அவ்வையே ” என்றான்.
உண்மையை முன்கூட்டி உரைத்திட்டால்
உண்ணாமல் மறுத்திடுவாள் அவ்வையென்று
தான் வாழக் கருதாமல் தமிழ்த்தாய் வாழத்
தகடூரான் தந்தகனி நெல்லிக்கனி;
அதியமான் தமிழ் ஆர்வம் போற்றி
அவ்வை தந்த நன்றிக்கனி; இந்த செய்யுட்கனி !
“வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல் தொடி தடக்கை
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி !
பால் புரை பிறை நுதல் பொலிந்தசென்னி
நீலமணி மிடற்று ஒருவன்போல
மன்னுக பெரும நீயே ! தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறுயிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே ”
(புறநானூறு – பாடல் 87, 91-அவ்வையார்) பொருள் விளக்கம் : தெவ்விர் = பகைவீர். பொருநன் = வீரன். வைகல் = ஒரு நாள். வலித்த = செய்யப்பட்ட. வலம்படுவாய் வாள் = வெற்றிதரத் தவறாத வாள். ஒன்னார் = பகைவர். ஆர்கலிநறவு = ஆரவாரம் செய்கின்ற மது.
தொடர்புக்கு :thamizhavvai@gmail.com

Add a Comment