பாவேந்தர் பாரதிதாசன் 131-வது பிறந்த நாள் விழா (29.04.2022)
வரவேற்புரை
‘பாவேந்தர்’ புரட்சிக் கவிஞரின் பிறந்தநாளைப் போற்றும் இந்நாள் பொன்னாளாகும்.
முத்தமிழ்க் கலைஞர் எங்கே எப்பொழுது பேசினாலும் புரட்சிக் கவிஞரின் பொன் வரிகள் ஒலித்துக் கொண்டிருக்கும்.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
என்பது தமிழ் வளர்ச்சித் துறையின் சங்க நாதமாகும்.
மொழிக்காதல், மொழியுணர்ச்சி, மொழி மானம் முதலியவற்றின் மொத்த வடிவம் தான் புரட்சிக் கவிஞர்.
‘தமிழுக்கு எங்கே இன்னல் வருமோ? துன்பம் வருமோ?’ என்ற தாயின் மனத்தோடு துடித்த கவி வரிகள் தான் பாவேந்தரின் ‘தமிழியக்கம்’ ஆகும்.
பேரறிஞர் அண்ணா பாவேந்தரைத் தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் என்றார்.
புது நூல்கள், சிந்தனைக் கருவூலங்கள், அருவியைப்போல் பெருக வேண்டும் என்று பாவேந்தர் அறிவுறுத்தினார்.
இன்று, அவ்வாறே பாவேந்தர் பாரதிதாசனின் 131-வது பிறந்தநாளைத் தமிழ் கவிஞர்கள் திருநாளாகப் போற்றி, எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்க நமது மாண்புமிகு அமைச்சர் பெருந்தகை மனமுவந்து வந்துள்ளார்.
பொது நூலகச் சட்டத் திருத்தக் குழுவின் தலைவர்,
மேனாள் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம. இராஜேந்திரன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.
அண்மையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கரங்களால், ‘செம்மொழித் தமிழ்’ விருது பெற்ற மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பனின் வருகை தமிழ் வளர்ச்சித் துறைக்குப் பேருவகையாகும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற தமிழ் மொழித் துறைத் தலைவரும், தமிழ் வளர்ச்சித் துறை ஆற்றிவரும் பணிகளுக்குப் பல நிலைகளில் அறிவுரைஞராகவும் திகழும் முனைவர் வ. ஜெயதேவன் அவர்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
மே திங்களில் பவளவிழா பிறந்த நாளைக் கொண்டாடி மகிழவிருக்கும், ஓய்வுபெற்ற வங்கி உயரலுவலர் கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணனையும், கவிஞர் கருமலைத் தமிழாழன் அவர்கள் இருவரையும் இணைந்து வரவேற்பதில் பெருமிதமடைகிறேன்.
இளமைக்கு இளமையும், திறமைக்குத் திறமையுமாக மிளிரும், தமிழ் வழியில் இ.ஆ.ப. தேர்வெழுதி வெற்றி பெற்று, ஊரக வளர்ச்சித் துறையில் களம் பல கண்டாலும், கடந்த ஓராண்டாகத் தமிழ் வளர்ச்சித் துறையில் சாதனைகள் பல படைத்த இயக்குநர் திரு. சரவணன் அவர்களையும் வரவேற்பதில் பூரிப்படைகிறேன்.
தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுகளைப் பெற வருகை புரிந்திருக்கும் எழுத்தாளர் பெருமக்கள், பதிப்பாளர் நண்பர்கள், விழாவில் கலந்து கொண்டிருக்கும் ஆன்றோர்கள், சான்றோர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக நண்பர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்று அமைகிறேன்.

Add a Comment