செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 54
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
ஒல்லையூரில் முல்லையோ ?
முல்லைக்கூட்டம் பந்தலிட்டு மணக்கும் மூதூராம்
ஓல்லையூர் என்னும் புதுக்கோட்டை ஒலியமங்கலம்
கிழார் என்ற பெருமகனுக்குப் பிறந்த திருமகனாம்
கீர்த்தியின் ” பெருஞ்சாத்தன் ” பெயருடைய மாவீரன்;
பாண்டியர்க்கும் சோழர்க்கும் நடக்கின்ற போரில் எல்லாம்
படை திரட்டிப் பாண்டியர்க்கே வெற்றிகளைக் குவித்திடுவான் !
குன்றெடுக்கும் நெடுந்தோளும் கொடை பொழியும் கையும்
கொண்டுலவும் வல்லவனை – நல்ல வள்ளல்தனை;
செந்தமிழால் மாலை கட்டிப் புகழ்ந்துரைத்தார்;
நந்தமிழ்நாட்டுச் சான்றோரும், ஆன்றோரும் !
கொடியிற் புலி அசையும் சோழனது, குடவாயிற் பிறந்த
கீரத்தனார்,
தொடித்தலை விழுத்தண்டினார்; இவ்விரு புலவர்கள் !
கொடியிற் பகையொழிக்கும் இவன் வீரத்தையும்,
மிடிமை அகற்றும் இவன் ஈகை இதயத்தையும்;
நாடே புகழ்தல் கேட்டு மனமிக மகிழ்ந்தனர் – அவன்
நட்பை நாடிப்பெற்று நண்பர்களாய்த் திகழ்ந்தனர் !
பாண்டியன் பக்கம் நின்று சோழனை எதிர்த்தாலும் – அவன்
பண்பு நலங்கண்டு பாராட்டத் தவறாதவர் கீரத்தனார் !
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற
மனம் படைத்த பெருந்தகைப் பேரறிஞர் போலும் அப்புலவர் !
மாவீரன் பெருஞ்சாத்தன் நோய்வாய்ப்பட்டொரு நாள்
மரணத்தின் மடிதனிலே துயில் கொள்ளப் போனான் என்று
மலைபிளந்து வருகின்ற வேல் போல ஒரு செய்தி
மாத்தமிழர் நாடெங்கும் பரவிற்றாங்கே !
அரண் போன்றான் வீழ்ந்தான் என்ற அதிர்ச்சியினால் தாக்குண்டு
அலை உயர்ந்தெழும்புகின்ற கடல் போலக் கொந்தளித்தார்
புலவர் !
குடவாயில் ஊர்நோக்கிச் செல்கின்ற வழியினிலே
கொடைவீரன் பெருஞ்சாத்தன் நாட்டுக்குள் நுழைந்தார் !
ஒல்லையூர்ப் பகுதி எல்லையிலே கால்பட்டதுமே – அங்கு
முல்லை மணம் கமழ்ந்தெங்கும் படர்ந்துள்ள கொடிகள் மீது
அவர் கண் பட்டதுவாம் !
” இடிமுழங்கி எதிரிகளை வெற்றிகொள்ளும் சாத்தன் மறைந்த
பின்னர்
கொடிமுல்லைக்கென்ன அவசரமோ பூத்துக்குலுங்க ?
” என்று;
புயல்தாக்கிச் சீரழிந்த பூந்தோட்ட உளத்தினராய்
புலவர்பிரான் புலம்பலுற்றார்; பூத்திருக்கும் முல்லைநோக்கி !
” இளையவராம் வீரர் உனை எடுத்துச் சூடார் – எழில்
வளையணிந்த மங்கையரும் உன்பக்கம் வாரார் !
பரிசில் பெறப்பாடும் பாணனும் பாடினியும் கூடப்
பறித்தெடுத்து உன்னை யாழ்மீது அணிந்திடார் !
வீரன் சாத்தனை இழந்துவிட்டுத் துயர்மிகுந்து;
விழிநீர் பெருக்கி, ஊரே அழுதிடும்போழ்து;
ஒல்லையூர் நாட்டில் ஒருக்கணமும் சிந்திக்காமல்
இவ்வாறு புலவர் குடவாயிற் கீரத்தனார் –
இரங்கலுரைக்கும் செய்யுள் ஒன்றை இயற்றியதால்;
மறைந்திட்ட சாத்தன் எனும் ஆற்றலாளன்,
நிறைந்திருந்தான் மக்களது நெஞ்சத்தில்;
என்ற உண்மை எல்லார்க்கும் தெரிந்ததம்மா; எனவே
நன்றென்று வாழ்த்திடுவோம் நம்தமிழர் பண்பாடு !
* ” இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்
நல்யாழ் மடுப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான்; பாடினி அணியாள் !
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே ? ”
( புறநானூறு : பாடல் : 242
பாடியவர் :
குடவாயில் கீரத்தனார்)
பொருள் விளக்கம் :
ஆடவர்க் கடந்த = வீரர்களை வென்ற. வல்வேல் = வலிமையான வேல். பின்றை = பிறகு.
மிடிமை = வறுமை.
ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் ஒல்லையூர் என்பது புதுக்கோட்டைத் தனியரசின் கீழிருந்து ஊர்களுள் ஒன்று.
இப்போது அதற்கு ஒலியமங்கலம் என்ற பெயர் வழங்குகிறது.
இதனைச் சூழவுள்ள பகுதி ஒல்லையூர் நாடெனப்படும் சோழ நாட்டிற்கும் பாண்டிநாட்டிற்கும் எல்லையாக ஒடும் தென்வெள்ளாற்றின் தென்கரை தென்கோனாடு என்றும் வடகரை வடகோனாடு என்றும் வழங்கின.
தென் கோனாட்டின் மேலைப்பகுதி ஒல்லையூர் நாடு, இந்த ஒல்லையூரில் வாழ்ந்து கிழானுக்குப் பெருஞ்சாத்தன் இனிய மகனாய்ப் பாண்டிநாட்டின் வடகோடியில் இருந்து சோழர்க்கும் பாண்டியர்க்கும் அடிக்கடி நிகழ்ந்த போரில் ஈடுபட்டுப்பாண்டியர்க்கு வெற்றி பயந்து வந்தான்,
சாத்தனது பெருமை முற்றும் அவனுடைய போராண்மையிலும் தாளாண்மையிலும் கொடையாண்மையிலும் ஊன்றி நின்றது.
இந் நலமுடைமை கண்ட நல்லிசைச் சான்றோர் இவனை நயந்து பாடிச் சிறப்பித்தனர்.
பெருஞ்சாத்தன் நல்வாழ்வு வாழ்ந்து முடிவில் மறைந்தான் .
அப்போது அவன் பிரிவாற்றாது வருந்திய சான்றோருள் குட வாயில் கீரத்தனார் என்பாரும் ஒருவர்.
குடவாயில் சோழநாட்டில் உள்ளதோர் ஊர். கீரத்தனார் அவ்வூரினராயினும் அவர்க்கு ” யாதும் ஊரே யாவரும் கேளிரே.” அதனால் அவர் மனத்தின்கண் பெருஞ்சாத்தன் பிரிவு பெரு வருத்தத்தை யுண்டாக்கியது.
பெருஞ்சாத்தன் இறந்தபின் கீரத்தனார் குடவாயில் நோக்கிச் செல்வாராயினர்.
அக்காலையில் ஒல்லையூர் நாட்டைக் கடந்து வருபவர் வழியில் முல்லைக் கொடி பூத்திருப்பக் கண்டார்.
அதன் அழகும் மணமும் கீரத்தனார் உள்ளத்தில் பல எண்ணங்களை எழுப்பின.
இன்பக் காலத்தில் முல்லைப் பூவை இளையர் பலரும், மகளிரும் வரைவின்றிச் சூடிக் கொள்வர்; பாணருள்ளும் பாண்மகன் அதனைத் தன் யாழ்க் கோட்டால் வாங்கிச் சூடிக் கொள்வான்; பாண்மகளும் தன் கூந்தலிற் சூடி இன்புறுவாள்.
பெருஞ்சாத்தன் இறந்தபின் இவர்கள் அனைவரும் ஆற்றொணாத துயருறுகின்றனர்.
இன்பக் காட்சியும் துன்பக் காட்சியும் கீரத்தனார் கண்களில் மாறி மாறித் தோன்றின.
முல்லைக்கொடி நோக்கினார்; ” முல்லையே, பெருஞ்சாத்தன் இறந்தபின் துன்பக் காலத்தில் நின்னை இளையரும் சூடார்; வளையணி பருவ மகளிரும் கொய்து குழலிற் சூடார்; பாணனும் சூடான் பாடினியும் அணியாள், இந்த ஒல்லையூர் நாட்டில் நீ ஏனோ பூத்துள்ளாய் ” என்பாராய்
இப்பாட்டைப் பாடினார் என்று உரைவேந்தர் ஒளவை தம் புறநானூற்றுஉரையில் குறித்துள்ளார் .
இப்பாடலின் நலங்கண்டு நெகிழ்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் இப்பாடலைத்தம் உரைப்பாட்டு ஓவியமாக வரைந்ததே முகப்பில் இடம்பெற்ற பாடல் .
இப்பாடலில் பிரிவின் துயரை ஆயிரக்கணக்கான நிகழ்வுகளில் இணைத்துக் காண்பது புலவர்களின் புலமைத் திறமையாகும்
.பறிப்பாரும் – அணிவாரும் இயலாத நிலையில் பூத்த முல்லையை நீ என் பூத்தாய் என்று வினவுகிற நலம் நயப்பிற்குரியது .
தொடர்புக்கு :
thamizhavvai@gmail.com

Add a Comment