நக்கீரன் – இனிய உதயம் –
ஜூன் மாத இதழ் – 2022
கலைஞர் 98
அலைமோதும் நினைவுகள் !
இப்போது நம் ஒப்பற்ற முதல்வர் ஸ்டாலின், கலைஞரின் நிர்வாகத்திறன் நிரம்பப் பெற்றவராக ஆட்சி நிர்வாகத்தை நாளுக்கு ஒரு வளர்ச்சியாக நடத்தி வருகிறார்.
கலைஞரின் நூற்றாண்டு நெருங்குகிறது.
இந்த ஜூன் 3 – ல் கலைஞரின் 98 ஆவது பிறந்தநாள் அமைகிறது.
அதையொட்டி எண்ணரிய நினைவுகள் அணிவகுத்து வருகின்றன.
ஆனால் அவரைத்தான் காணவில்லை.
அவரை நாம் பிரிந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன.
நான்கு நூற்றாண்டுகள் ஆனாலும் அவர் விட்டுச்சென்ற சாதனைகளுக்கு முடிவில்லை – அவரது நூற்றாண்டு விழாவில் திளைக்க இப்போதில் இருந்தே மனம் ஆயத்தமாகிறது.
தமிழ் முழுதறிந்த தன்மையாளராகத் திகழ்ந்த அந்தத் தனிப்பெரும் தலைவர் கலைஞரின் நெடும் புகழ் எப்போதும் எங்கும் நிலைத்திருக்கும்.
கலைஞர் அறியாத தமிழ் இல்லை .
அவருக்குத் தெரியாத சங்கப்பாடலோ இலக்கியமோ இல்லை.
அவர் எழுதாத உரை விளக்கம் இல்லை.
அவர் தீட்டாத உரையாடல்கள் இல்லை .
அரசு ஆட்சித் திறனிலும் கோப்புகளைக் கூர்ந்து கவனிப்பதிலும் அவருக்கு நிகர் அவர்தான்.
நான் அடிக்கடி சுட்டிக்காட்டும் சம்பவம் ஒன்று இப்போதும் என் நினைவுக்கு வருகிறது.
ஒரு திட்டம் குறித்த கோப்பில் ” விதி இதற்கு இடம் தரவில்லை ‘ என்று நான் எழுதி அனுப்பியிருந்தேன்.
அடுத்த நாள் காலை அந்தக் கோப்பை நான் பார்த்தேன்.
அதில் கலைஞர், ” விதியை மதியால் வெல்லத் தெரியாதா ? என்று எழுதியிருந்தார்.
இதைவிட நாட்டு மக்களுக்கு நலம் செய்கிற ஒரு சொற்றொடர் இருக்கமுடியுமா ?
அவர் தான் கலைஞர்.
மக்கள் நலத்திற்காக எதையும் எப்போதும் நிறைவேற்றுபவர் .
இன்னுமொன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.
திண்டுக்கல் அருகே குஜிலிபாளையம் என்று ஒரு பகுதி இருக்கிறது.
குஜிலிபாளையம் என்ற சொல்லை மாற்றவேண்டும், அது என்ன பொருள் என்று விளங்கவில்லை என்று கலைஞரிடம் இருந்து அந்தக் கோப்பு வந்தது.
குஜிலி என்பதற்கான பொருள் என்ன என்ற கேள்வியும், பொருளற்ற ஒன்று எதற்கு ? என்ற ஐயமும் அவருக்குள் எழுந்ததால், அப்படி ஒரு குறிப்பை அவர் எழுதியிருந்தார்.
அதற்கான பொருள் என்ன என்று நானும் என்னால் முயன்ற வரையிலும் பார்த்து குஜிலி என்று சொன்னால் குஜராத்தியர்கள் குடியேறிக் கடைகள் வைத்திருந்த இடம் என்பதானால் அந்தக் கடைப்பகுதிக்குப் பெயர் குஜிலிபாளையம் என்று பெயர் வந்திருக்கிறது.
இதனை மாற்றுவது என்று சொன்னால் திண்டுக்கல் பகுதியைச் சார்ந்தது என்பதற்காக குறிஞ்சிப்பாளையம் என்று மாற்றலாம் என்று குறிப்பெழுதி அனுப்பி வைத்தேன்.
உடனே, அதற்குப் பதில் குறிப்பை கலைஞரின் மதிநுட்பம் ஒளிவீச இப்படி எழுதினார்.
குறிஞ்சிப்பாளையம் என்று மாற்றுவதில் குற்றமில்லை.
ஆனால் குஜிலி என்ற சொல் வருகிறபோது அதற்கு பங்கஜம் என்பதைப் பங்கயம் என்று மாற்றுவது போல குயிலம் என்றும் குயிலம்பாளையம் என்றும் மாற்றவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சிலப்பதிகாரச் சிந்தனையும் அதைத்தான் சொல்கிறது.
இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றிச் சொல்வார்கள்.
அவர் தலைமை அமைச்சராக இருந்தது பெரிதில்லை.
அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் ஆறு தொகுதிகள் தான் அவருக்கு ஆங்கில இலக்கியத்திலேயே நோபல் பரிசு பெற்றுத்தந்தது.
அதேபோல் உலகத்தில் சர்ச்சிலுக்கு அடுத்து மாசேதுங்கைச் சொல்வார்கள்.
இவர்களுக்கு இணையான இலக்கிய உள்ளமும் எழுத்தாற்றலும் கொண்டவர் நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் –
இன்னும் சொல்வதானால், இந்த இரண்டு பேரிடத்தும் காணாத ஒரு திறன், நம் கலைஞரிடம் இருந்தது.
ஒரு சான்று சொல்வது என்றால், அவருக்கு அரசியல் தெரியும். இலக்கியம் தெரியும். கலை தெரியும், சிந்தனைப் புதுமை தெரியும் , எண்ணுகிற எண்ணங்களை எல்லாம் எப்படி என்று எழில்பட எடுத்துக்காட்டவும் தெரியும்.
அவர் சிந்திய எழுத்தினுடைய துளிதான் என்னைப் போன்றவர்களைத் துணைவேந்தராக ஆக்கியது.
* ஒருநாள் இரவு 12 மணிக்குக் கலைஞரின் செயலாளரான அருமை நண்பர் சண்முகநாதன் தொலைபேசியில் கேட்டார் ” பொருதடக்கை வாள் எங்கே ? ‘ என்ற தொடர் எங்கே வருகிறது ?
என்று.
எனக்குத் திடுமெனக் கேட்டால் எதுவும் நினைவுக்கு வராது.
நான் அவரிடத்தில் சொன்னேன். “ பொருதடக்கை வாள் எங்கே ? ‘ என்று பொதுவாகப் போட்டுவிட்டால் போகிறது.
யார் அதைக் கவனிக்கப் போகிறார்கள் என்றேன்.
சண்முகநாதன் சொன்னார், ” உங்களுக்கு வேண்டுமென்றால் தூக்கம் வரும்.
இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் கலைஞருக்கு விடியல் வரையில் தூக்கம் வராது.
அந்தத் தொடரைக் கண்டுபிடித்தால்தான் அமைதி கொள்வார் .
புறநானூற்றில் அவருக்குப் பிடித்த ஒரு பாடலைச் சொல்லி நான் முடிக்க விரும்புகிறேன்.
ஒரு மாமன்னன் மறைந்தபோது அந்தச் சங்கப் புலவன் எப்படிப் புலம்பினான் என்றால்… வேந்தன் என்று சொல்வதா ?
மக்களினுடைய உயிர் என்று சொல்வதா ?
நாட்டு மக்களினுடைய நாயகன் என்று சொல்வதா ?
எவ்வாறு சொல்வேன் ?
என்று புலம்பினார்.
நாடன் என்கோ ஊரன் என்கோ பாடு இமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ யாங்ஙனம் மொழிகோ ஓங்குவாள் கோதையை
-என்று அந்தப் புறநானூற்றுப் புலவன் புலம்பியது போலத்தான் கலைஞர் மறைந்ததை எண்ணி உள்ளம் புலம்பியது.
இப்போது கலைஞரின் வடிவமாக, இதயமாக, செயலாக, ஆற்றலாக, அவர் திருமகன் – திறமைத் திலகமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார்.
அவரைப் போலவே சீர்பெற சிறப்போடு ஆள்கிறார்.
அந்த ஆறுதல் நம் மனதை இளைப்பாற்றுகிறது.
– தமிழறிஞர் ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

Add a Comment