POST: 2022-06-27T09:53:16+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 59

ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

கலைஞரின் காலப்பேழையும் – கவிதைச் சாவியும் !

புது வரலாற்றியம் ( New Historicism ) என்பது மேலைக் கல்வியாளர்களால் கடந்த இருபது முப்பதாண்டுகளாக எழுதப்பட்டுவரும் வரவேற்புப்பெற்ற ‘ இலக்கியத்திறனாய்வு அணுகு முறையாகும்.

இது வரலாற்றுக்கும் இலக்கியத்திற்குமுள்ள இடைவெளியைப் பெரிதும் இணைத்துள்ளது ;

ஒரே காலத்தில் தோன்றிய இலக்கியத்தையும் வரலாற்று ஆவணத்தையும் அருகருகு வைத்து ஒப்பிட்டுப் பார்த்து அக்காலச் சமுதாயம், பண்பாடு பற்றி அறிந்து கொள்ள இவ்வணுகுமுறை துணை செய்கிறது என்பது பேராசிரியர் மருதநாயகம் அவர்களின் கருத்துரையாகும் .

வரலாற்று ஆவணத்துக்கும் – இலக்கியத்திற்குத் தருகின்ற மதிப்பையும் கவனத்தையும் . இவ்வணுகுமுறை நல்குவது குறிப்பிடத்தக்கது.

இவ்வணுகுமுறைக்குத் தந்தையான கிரீன் பிளாட் ( Green blatt ) என்பார் இவ்வணுகுமுறை என்னை இறந்த காலத்திற்கு இழுத்துச் செல்கிறது, இறந்த மாந்தரொடு நான் உரையாடி மகிழ வாய்ப்பளிக்கிறது” என்று கூறுவார்.

இந்த நெறியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் படைத்த காலப்பேழையும் கவிதைச் சாவியும் எனும் தொகுதியிலுள்ள கவிதைகள் இலக்கியத்தையும் வரலாற்றையும் இணைக்கின்றன.

இந்நூல் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து தமிழக வரலாற்றை முடிந்தவரையில் பிற ஆவணச் சான்றுகளோடு அறிய முனைகிறது.

அவ்வாறு பெறப்பட்ட வரலாற்றைக் கவிதைகளின்
மூலம் இலக்கியமாக உருமாற்றம் செய்கிறது.

முதல் நிலையில் இலக்கியத்திலிருந்து வரலாறு பெறப்படுகிறது;

இரண்டாம் நிலையில் வரலாறு இலக்கியமாகிறது.

அதனால் புது வரலாற்றியத்தாரினும் ஒரு படி மேலே சென்று இலக்கியத்திற்கும் வரலாற்றிற்கும் உள்ள இடைவெளியை மேலும் குறைக்கிறது.

தமிழினத்தின் அரசியல், சமுதாய, பண்பாட்டு வரலாறு கூறுவதன்றி, கவிதையாக்கத்தால், பழங்கவிதை களை விளக்கத்தோடு இன்றைய கவிதை நடையில் தந்து இலக்கிய இன்பத்தின் ஊற்றாகவும் செயற்படுகிறது.

தமிழ் மொழி செம்மொழி என்று அறிவிக்கப்பட்டவுடன், அரிவையர் ஆடவர் அருங்கவிஞர்களாகி அருவித்தமிழால் ஆக்கிய இலக்கியங்களே – தமிழர் ஆதிவரலாறு போதிக்கின்ற ஆதாரங்களாம்,

அற்றைநாள்
கல்லில் செதுக்கிய எழுத்துக்களே, நமது அறிவு, ஆற்றல், காதல், வீரம், பண்பாடு அனைத்துக்கும் அழிக்க வொண்ணாச் சான்றுகளாம்; விரிவாக்குவோம், அப்பணியை வாரீர்;

விழித்தெழுவதற்கு; இதோ செம்மொழி விடியல்! என்று தமிழ் அறிஞர்களைத் தட்டியெழுப்பி அழைப்பு விடுத்த நம் கலைஞர் தாமே களத்தில் இறங்கி, அதனாலே வரலாறு எழுதத் தொடங்கிடுவோர் அங்கு இங்கு என அலைந்து திரியாமல் – பன நுங்குபோல் பல ஆதாரங்கள் அகழ்ந்து தருவதற்கு, சங்க இலக்கியங்களும் உண்டு; எனவே அதற்குப் பங்களிக்கும் பெரும் பொறுப்பும் நமக்கு உண்டு ! என்று தாம் கூறிய அறிவுரையைச் செயற்படுத்திக் காட்டியுள்ளார் இந்நூலில் !

கவிதைச் சாவியிட்டுக் காலப் பேழையினைக் கவனமாகத் திறந்து தமிழக வரலாற்றை நோக்க வேண்டியதன் இன்றியமையாமையை நூல் முழுதும் ஆங்காங்கே அழுத்தமாக எடுத்துச் சொல்கிறார் கலைஞர் மு. கருணாநிதி.

பழங்கதையைப் பேசுவதால் பயனில்லை என்பார்க்குக் கடந்த கால நிகழ்வுகளை அறிந்தால் தான் அவற்றுள் நல்லவை உணர்ந்து மேலும் முன்னேறலாம், தீயவை கண்டு திருந்தலாம் என்பார். ”

வாளும் கேடயமுமாய் வரலாறு கையில் இருந்தால் தான் வந்து மோதும் பகைப் புலத்தைச் சந்திக்க இயலும் ” என்று எச்சரித்துள்ளார் .

குமரிக்கண்டம், சிந்துவெளி, எகிப்து, சுமேரியா ஆகிய இடங்களில் எல்லாம் பரவியது தமிழர் பண்பாடே என்று வரலாற்று அறிஞர் இராமச்சந்திர தீட்சிதர் கூறியிருந்தும் அதற்கான தெளிவு மிக்க சான்றுகள் இருப்பினும்,

” தேய்த் தரைத்த சந்தனத்தை யாரோ பூசிக்கொண்டு, திருவிழாக் கொண்டாடுவதால், தேய்ப்பதற்குப் பயன்பட்ட சந்தனக்கட்டையில் தேய்ந்தது போக மிச்சத்தையாவது ”

நம் தமிழர் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் தூண்டிய தேடலே இக்காலப் பேழை எனும் நூல் என்ற விளக்கமும் தரப்படுகிறது.

” நாம் வரலாறு இல்லாமல் வாழ்ந்தால் நமக்கும் நாட்டுக்கும் என்ன கேடுவந்து விடும் ? ”

என்று கேட்பார்க்குத் ” தலையில்லாமல், கழுத்தில்லாமல், பல்லில்லாமல், நாவில்லாமல் மாந்தர் வாழ்வது சரியென்றால் தமிழனும் வரலாறு இல்லாமல் வாழ்வது பொருத்தமாகும் என்றும் தமிழிரினம் இத்தன் மானமற்ற வாழ்வை ஏற்றுக் கொண்டதில்லை ” என்றும் எழுதியுள்ளார் .

திராவிட இனத்தின் தொன்மையும் பெருமையும் பேசியதைக் கேட்கப் பொறுக்காத சிலர் ,’ ஆரியம் ,திராவிடம் என்று ஆறிப்போன தேநீரை இப்பொழுது அடுப்பில் வைத்து என் சூடேற்ற வேண்டும் ? என்ற கேள்வியை எழுப்பிய போது இவ்விரண்டு இனங்களையும் ஒப்பிட்டு அறிஞர்கள் பி.டி. சீனிவாச அய்யங்கார், சேஷ அய்யங்கார், சூரிய நாராயண சாஸ்திரியார் ஆகிய மூவரும் எழுதியிருப்பதை எண்ணிப்பாருங்கள் ” என்று காட்டினார் .

விந்தியத்திற்குத் தெற்கே 57 இடங்களில் அகழ்ந்து கண்டு பிடிக்கப்பெற்ற ரோமாபுரித் தங்க நாணயங்கள் போன்ற அக்கால வரலாற்றுச் சான்றுகள் இகழ்ந்து தள்ளுதற்கு உரியவையாய இருட்டடிப்புச் செய்வோர்க்குத் தெரியலாம்;

அவை புகழ்ந்து போற்றுதற்கும் மகிழ்ந்து உலக அரங்கில் ஏற்றுதற்கும் உரியவை ” என்பது அவர் நம்பிக்கை . ‘

எதிர்காலத் தமிழ் இளைஞர் சிறந்து விளங்க வேண்டுமானால் எருவாக நம் வரலாறு பயன்படும்.

எனவே கல்லான பூமியில் கடப்பாறை போட்டுக் கெல்லி நம்மவர் வரலாற்றை வெளிப்படுத்துவதில் நாட்டம் செலுத்த வேண்டும்.

திரும்பத் திரும்ப திராவிட இனத் தொன்மை பற்றிச் சொன்னால் தான் தென்னங்கன்றுகள் தேக்கு மரங்களாக உயரும்;

வாழைக்கன்றுகள் வாகை மரங்களாக வளரும் ”

என்று தம் பேரவாவினை உணர்வோடு வரைந்துள்ளார் .

இதுவரை எழுதப்பெற்ற இந்திய வரலாறுகள் எல்லாம் தமிழகத்தில் தொடங்காததால் ஏற்பட்ட விளைவுகளும் நூலில் ஆங்காங்கே எடுத்துச் சொல்லப்பெறுகின்றன.

இந்திய நாட்டு வரலாற்றைக் கங்கைக்கரையிலிருந்து எழுதாமல் காவிரிக் கரையில் தொடங்குவதே பொருத்தமென வின்சென்ட் ஸ்மித் சொல்லியிருந்தும் வரலாற்றாசிரியர்கள் தமிழகத்துக்கு உரிய இடம் தராமலேயே தங்கள் நூல்களை எழுதிக் கொண்டிருந்தனர்.

இதனால் தண்டிலும் வேரிலும் படாமல், மரத்தின் கிளை நுனியில் தண்ணீர் ஊற்றி வளர்த்திடக் கருதிய கதையாய்ப் போயிற்று அல்லது வெந்நீர் விட்டு வேரினை வேக வைத்த நிகழ்வாகவும் ஆயிற்று ” .

தமிழகத்துச் சேர, சோழ, பாண்டியர் வரலாற்றை யாரும் கண்டுகொள்ளவில்லையே என்ற உள்ளக்குமுறலை அவர் 1945 ஆம் ஆண்டிலேயே ஒரு கவிதையில் வெளிப்படுத்தினார்.

காவிரியின் கரையினிலே
பெண்ணையின் பாய்ச்சலிலே சரிதமில்லை ; சரிதமில்லை !
அய்யகோ தமிழ் நாடே; ஆரம்பம் கங்கையிலாம் !
பாண்டியர் ஆண்டதை யார் கண்டார் ?
சேரர் செழிப்பைச் செதுக்கிய தெவர் ?
சோழர் வளப்பம் சொன்னதும் உண்டோ ?
சேரர் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே ?
வீரர் பாண்டியர் அரசேன் கவிழ்ந்தது ?
சோழர் உலாவிய சோர்விலா நாட்டில் கோழைக் கொள்கை குவிந்தது எவ்விதம் ?
வெடித்தன வினாக்கள் —-வெதும்பிய மனத்தில் ——- நாட்டுவெறி பிடித்த காளைகளே !
கிலி பிடித்த மனிதர்களைக் கீழே தள்ளுங்கள் !
புலிவாழ்வின் உச்சியிலே புதுமைதனைப் பொறித்திடுவோம் !

தம் கவிதை நூலுக்காகக் கலைஞர் கையாண்டுள்ள துணை நூல்கள் மிகப்பல.

தொல்காப்பியமும், திருக்குறளும், சங்க இலக்கியங்களும் அவர் ஆழங்கால் பட்ட இலக்கியங்கள். சங்க இலக்க்கியத்தில் இவ்வளவு நூல்களையும் கட்டுரைகளையும் ஆவணங்களையும் ஆழ்ந்து படித்துத் தகவல்களைத் திரட்டித் தமது நூலுக்கான கவிதைகளைக் கலைஞர் படைத்துள்ளமை பெரும் பாராட்டுக்கும் தமிழினத்தின் நன்றிக்கு என்றும் நிலைநிற்கும் உரிய செயலாகும்.

தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *