அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 116
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
மேனாள் கல்வி அமைச்சர் திரு. சி. அரங்கநாயகம் அவர்கள் 06.10.1986 அன்று வரைந்த வாழ்த்துச் செய்தி:-
“கடந்த 120 ஆண்டுகளாகத் திரைகடலோடித் தென்னாப்பிரிக்காவை வாழ்வகமாகக் கொண்டு வாழ்ந்து வரும் இந்தியத் தமிழ் மக்கள், இந்தியப் பண்பாட்டையும் குறிப்பாகத் தமிழ்க்கலை, இயல், இசை நாடகம் ஆகியவற்றைக் கண்போல் போற்றிக் கருத்தாக வளர்த்து வருகிற செய்தியை நான் அறிந்து மகிழ்கிறேன்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பொன்மொழிக்கேற்றவாறு தென்னாப்பிரிக்காவில் வாழ்கிற தமிழர்கள் அங்குள்ள மக்களோடு நன்கு பழகித் தோழமையும் நட்புறவும் வளர்த்து வருகிறார்கள்.
தமிழ்க்கல்வி பெருக, தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் வளர, தென்னாப்பிரிக்கத் தமிழ் மக்கள் ஆற்றிவரும் பணிகள் போற்றத் தக்கனவாகும்.
உலகெங்கும் வாழும் அயலகத் தமிழர்கள் தமிழ் கற்கவும் தமிழ்க்கலை, தமிழ் நாகரிகப் பண்பாடுகளைப் பேணி வளர்க்கவும் தேவைப்படும் உதவிகளையெல்லாம் தமிழக அரசு இயன்றவரை செய்து வருகிறது.
அயலகத் தமிழர்களோடு கலை பண்பாட்டு உறவு கொள்வதற்காக உலகத்தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
அச்சீரிய நோக்கம் வெற்றி பெற தென்னாப்பிரிக்காவிலுள்ள தமிழ் நிறுவனங்களும் ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
சைவமும் தமிழும் தமிழ் மக்களிடையில் தமிழ் வளர்ச்சிச் செயலாளர் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் உங்களிடையே வருவதறிந்து வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க தமிழினம்!
வளர்க தமிழ்க் கலைகள்!”
மேனாள் செய்தி-அறநிலையத் துறை அமைச்சர் திரு. இராம வீரப்பன் அவர்கள் 08.10.1986 அன்று வரைந்த வாழ்த்துச் செய்தி:
“தென்னாப்பிரிக்க இந்திய தமிழ் மக்கள் கடந்த 120 ஆண்டுகளுக்கு மேலாக சமயத்தையும் தமிழையும் பரப்புகின்ற உன்னதமான பணிகளை ஆற்றி வருவதை நான் நன்கறிவேன்.
திருவாசகமணி கே.எம்.பாலசுப்ரமணியன் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ததை நான் நினைவு கூர்கிறேன்.
எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் மொழி, கலை, சமய உணர்வைக் கட்டிக் காத்து வருவதை உலக நாடுகளில் பலவற்றில் காணலாம்.
உலகெங்கும் பரந்துபட்டு வாழ்கின்ற தமிழ் மக்கருக்கு ஊக்கமும், அவர்களில் கலை வளர்ச்சிக்கு ஆக்கமும் அளிக்க வேண்டும் எனும் கருத்தில் உருவானது தான், உலகத் தமிழ்ச் சங்கம் ஆகும்.
அந்த வகையில் எங்கள் செயலாளர் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் அங்கு வருகை தருகிறார்கள்.
பாரதத் தாயின் மக்களாகவும், தமிழ் உணர்வு வாய்ந்த பெருமக்களாகவும் திகழும் தமிழர்களின் விருப்பங்களும், வேட்கைகளும் நிறைவேற வாழ்த்துவதோடு தமிழக அரசும் தன்னாலான பணிகளைச் செய்ய முற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
தென்னாப்பிரிக்க மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலைத் தலைவர் திரு. எம்.ஆர். முதலி அவர்களின் வாழ்த்துச் செய்தி:-
“As head of the Merebank Tamil School Society and founder member and trustee, it gives me great pleasure to write this article to commemorate its Golden Anniversary.
The members of the Tamil School Society while celebrating its fifty years of existence and growth can be proud of their achievements.
Careful planning, determination, perseverance and unselfishness are factors which made it possible to reach the pre sent stage.
At the outset, with reverence, I give thanks to the Invisible Power called “Sakthi” for His constant guidance.
On this momentous occasion it is opportune to remember and pay tributes to all those members who have passed on: to those who have been members in the past, and to those who have in some measure contributed to the well-being of the Society.
I wish to place on record our sincere gratitude to the S.T. Nadasen Odayar Family for their outstanding contribution to our Society, as well as, to many other organisations in our community.
Mr S.T. Nadasen Odayar (who was a trustee at the time of his passing away) and his gracious wife Ammakanoo, both imbued with philanthropic leanings donated a valuable plot of land to the Merebank Tamil School Society in 1943.
On it, was constructed our first school building.
A commemorative Inscription to remember their magnanimous donation will be unveiled during the Golden Jubilee Celebrations.
We are also grateful to Mr and Mrs S.T. Nadasen Odayar for having left behind a legacy of goodwill in the form of their son, Athlemoolam who not only advanced the highest Interest-free loan of R40 000,00 towards the construction of the M.T.S.S. Hall, but is an active member of the Society.
Mr Athie Nadasen was bestowed with the honour of laying the foundation stone on Friday, 24 June 1977.
A suitable plaque to remember this auspicious occasion will be unveiled during the Jubilee Celebrations.
At this point wish to express my deep sense of gratitude to all those members who so kindly contributed towards the completion of this magnificent edifice.
In appreciation of their generosity an impressive plaque which will serve as a constant reminder will also be unveiled during the Golden Jubilee Celebrations.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (40)
பல்துறைப் புலமை:
சித்தாந்த கலாநிதி
சித்தாந்த கலாநிதி ஒளவையவர்கள் அரிய சமயக் கொள்கைகளையும், மெய்யியல் கோட்பாடுகளையும் தத்துவச் சிக்கல்கலையும் எல்லோர்க்கும் புரியும்படி எளிமையாக கூட்டங்களில் எடுத்துச்சொல்லும் தனியாற்றல் பெற்றவர்கள்;
தனியுரை, பேருரை, சிறப்புரை, தலைமையுரையெனச் சொற்பொழிவாற்றியவர்கள்;
நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியவர்கள்; அக்கருத்துக்களை நூல்களிலும் பதிவுசெய்திருப்பவர்கள்.
அத்தகைய ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் 47-ஐத் தேர்ந்தெடுத்து 896 -பக்கத்தில் ஔவையவர்களின் “கட்டுரைக்களஞ்சியம் சைவத்தமிழ்” எனும் தலைப்பில் காவ்யா வெளியிட்டிருக்கிறார்கள்.
அதில் நாயன்மார் / அருளாளர்கள் (ஞானசம்பந்தர்-6, திருநாவுக்கரசர்-2, சுந்தரர்-2, மாணிக்கவாசகர் 1, பட்டினத்தார் -2, குமரகுருபரர்-2) பற்றியும், காலமுறைப்படி அமைந்த சைவ இலக்கிய வரலாறு, காலங்கள்/ நூல்கள் ஆராய்ச்சி, சைவம் பற்றிய பொது / சிறப்புக் கட்டுரைகள், இடையிடையே சைவத்திற்கும் தமிழுக்கும் கேடிழைப்பார் மீதான அறச் சீற்றங்கள் பற்றியும் விரிவாகக் காணலாம்.
இவை போன்று ”தமிழ்ப்பொழில், செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி” இதழ்களிலும், ஆண்டு / மாநாடு / விழா முதலிய சிறப்பு மலர்களிலும் கட்டுரைகள் காணப்படுகின்றன
சித்தாந்த கலாநிதியின் கூற்றுக்கள் சில:
சைவர், சைவ சமயக் கொள்கையை மேற்கொண்டு ஒழுகுபவர்,
சைவம் என்பது யாது ?
சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது என்றார் திருமூலர்.
சிவவழிபாடு பண்டைநாளில் உலகில் பல இடங்களிலும் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
இந்நாளில் சுருங்கித் தமிழ்நாட்டில் நிற்கிறது.
சிவம் என்பது எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்குத் தென்னாடுடைய தமிழர் இட்டு வழங்கிய பெயர். ‘
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்ற தொடர்கள் மேற்கூறிய பொருளை வற்புறுத்தி நிற்பதைக் காணலாம்.
சைவ சித்தாந்தம் என்பது சைவருடைய சமய முடிவு என்று பொருள் தரும் சொற்றொடர்.
சைவர் யார் என்றால் சைவ சமயத்தை மேற்கொண்டு வருபவர்;
சைவக் கொள்கையுடைய அனைவரும் சைவர் என்னும் சொல் குறிக்கும்.
சாதி குலம் வேறுபாடு இன்றி யாவர் யாவர் சைவ சமயக் கொள்கையை மேற்கொள்கின்றார்களோ அவரவர்களுக்கு உரியதாகும்.
ஆகவே சைவ சித்தாந்தம் என்ற உடனே சைவர் என்று கூறிக்கொள்ளும் ஒரு சாதியாருடைய கொள்கை என்று எண்ணுவது குற்றமாகும்.
இவ்வாறு எண்ணும் படியான நிலைமை உண்டானதற்குக் காலம் தான் காரணமாகும்…..
இப்பிரிவால் சைவரிடையே சாதிச்சைவர்கள் எனவும், உண்மைச் சைவர்கள் எனவும் பிரிவு உண்டாயிற்று.
பிரிவால் உண்டான கேடுகள் பல.
சமுதாயத் துறையில் ஒற்றுமைக் குறைவும் அரசியலில் செல்வாக்கு குறைவும் ஒருபக்கம் தோன்றி வருத்துகின்றன.
சிவம்:
சிவம் எனும் செம்பொருள் உருவமுடைய பொருளன்று;
அருவம் அன்று; அரு உருவம் அன்று; அதற்கென ஒரு பெயரும் இல்லை, குணமும் இல்லை, அதற்குத் தோற்றமும் இல்லை கேடுமில்லை, கட்டுவதும் பின்பு கட்டிலிருந்து நீங்குவதான வீடுபேறும் இல்லை, அதைவிட பெருமைமிக்க பொருளும் நுண்மையான பொருளுமில்லை, எங்கும் எப்பொருட்கும் சிவமே முதன்மையும் தலைமையும் உடையது; ஒளிமயமான அருளாற்றலை உடையது இச்சிவ முதற்பொருள், அவ்வாற்றல் அழிவில்லாதது, ஓங்கி உயர்ந்து எங்கும் நிறைந்திருப்பது, சிவமும் அந்த அருள் ஆற்றலோடு நீங்காமல் கூடியிருப்பதாக முதற்பொருள் மற்ற உயிர்ப் பொருளையும் ஒரு பொருளையும் நோக்க வேறாக இருப்பினும், அவைகளோடு ஒன்றாக இருப்பினும், அவைகளோடு ஒன்றாயும் உடனாயும் இருப்பது; உயிரும் உலகமும் தத்தமக்குரிய தொழிலை ஒழுங்கு வழுவாமல் செய்வதற்கும் சிவ முதற்பொருளே காரணமாகும், உயிர்கள் வீடுபேற்றினை தத்தம் தொழிலாகிய வினைகளைச் செய்து பயன்களை நுகர்ந்து கொண்டே வந்து பக்குவப்படும் போது சிவமாகிய செம்பொருள் உண்மை அறிவை விளங்கச் செய்து வீடுபேற்றினை எய்துவிக்கும் (சிவஞான முனிவர்).
ஞானம்:
சிவம், உயிர், கட்டு எனப்படும் இம்மூன்றினையும் சிறப்புற அறியும் அறிவு.
இந்த ஞானம் வாய்க்கப் பெற்றவர்கள் மலக்கட்டு நீங்கிச் சிவானந்தப் பேரின்பத்தை உணர்வார்கள்.
திருமுருகாற்றுப்படையும் கந்தர் கலிவெண்பாவும்
நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படைக்குக் குமரகுருபரர் கந்தர் கலிவெண்பாவில் பொருள் காணலாம்.
சித்தாந்த உண்மைகள் நிறைந்த தத்துவ நூல் கந்தர் கலிவெண்பா.
சைவாகமங்களில் பேசப்படும் அத்துவா பகுதிகள் மிக மிக அருமை வாய்ந்தன, எளிதில் எட்ட முடியாத அத்துவாக்களைப் பற்றிக் கேட்டால் சொல்ல அறியார் அத்தகைய அத்துவாக்களின் இயல்பைக் கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபரர் கூறுகிறார்.
தென்பாண்டி நாட்டில் தான் முதன் முதலில் கிறித்தவ மதத்தைப் பரப்ப முற்பட்டனர்.
இத்தாலிய நாட்டினின்றும் நம்நாடுபோந்த வீரமாமுனிவர் கிறித்தவம் பரவப் பணியாற்றத் தொடங்கிய காலம், அவர் நம் குமரகுருபர அடிகளாரிடம் மாணவராக இருந்து தமிழ் பயின்றார் என்றும் கூறுவ.
வடவெல்லையில் கோயில் இல்லை
சங்க இலக்கியங்களில் தமிழகத்தின் வட எல்லையாகக் கூறப்படும் இடத்தில் திருமாலுக்குக் கோயில் கிடையாது;
இப்போது கோயில் உள்ள இடத்தில் வேந்தன் ஒருவன் இருந்தான்.
அவனது ஆட்சி வேங்கடமலையில் சித்தூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் பரவியிருந்தது…
அதுபோலக் காவிரியின் ஆற்றிடைக்குறை ஆகிய திருவரங்கத்தில் திருமாலுக்கும் சிவனுக்கும் திருக்கோயில் இருந்ததாகச் சங்க இலக்கியம் கூறவில்லை; எனினும் சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்த இளங்கோவடிகள் காலத்தில் திருவரங்கத்தில் திருமாலுக்குக் கோயில்கள் தோன்றிவிட்டன.
சிவபுராணம்:
இக்காலத்தே நிலவும் புராணங்கள் பல இக்கால மக்களின் கருத்துக்கு ஒவ்வாத நிலையில் இருப்பது கொண்டு இக்காலத்திற்குப் புராணம் என்ற சொல்லே அருவருப்பைப் பயந்து நிற்கின்றது.
அதனால் சிலர் சிவபுராணம் என்பதும் புராணங்களில் ஒன்றே எனக் கருதித் தவறு கூறுகின்றனர்.
அவர்கள் இதனை ஒருமுறை கருத்தூன்றிப் படிப்பரேல் தம் தவற்றுக்கு வருந்துவர்.
எதிர்காலத்தில் இவ்வாறு கூறுவோரும் உளராவர் என்று கருதியோ என்னவோ அடிகளார் சிவபுராணத்தின் முடிவுரையில் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் உளராதல் வேண்டும் என வற்புறுத்தியுள்ளார் என நினைக்க வேண்டியிருக்கிறது.
மாதவச் சிவஞான சுவாமிகளின் சிவஞான மாபாடியம் என்னும் பேருரை கற்று வல்ல புலவர்க்கே படித்துப் பொருள் காண்பது கடினம்.
ஆயினும் உரைவேந்தர் துணிந்து இப்பணியைச் செய்து முடித்தார்.
1953-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவரது சிற்றுரை நூலை வெளியிட்டது.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment