செந்தமிழ் மாமணி மறைந்தாரே !
(1.8.1932 -12.8.2022)
என் அருமைத் தந்தையார் கரந்தையில் தன் தமிழ் வாழ்வைத் தொடங்கினார் .
அவருடைய அண்ணனாக நெருங்கிப்பழகிய பெருந்தகை தான் அறிஞர் சிவ குப்புசாமிப்பிள்ளை ஆவார் .
என் தந்தையாரும் அவரும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிப் பழகியவர்கள் .
உயிரோடு ஒட்டியவர்கள்.
நான் பெரியப்பா என்று அவரை அன்போடு அழைப்பேன் .
அண்ணாமலை நகரிலும் பிறகு மதுரையிலும் பலமுறை எங்கள் இல்லத்துக்கு வந்து தங்கியிருக்கிறார்கள் .
நான் தஞ்சையில் சரபோசி மன்னர் கல்லூரியில் பணியில் சேர்ந்த போது என்னை அழைத்துப்போய் என்னைக் கல்லூரியில் அறிமுகப்படுத்தியவர் தான் அண்ணன் கு சிவமணி அவர்கள் .
செல்வாக்கும் புகழும் வாய்ந்த அவர் கரந்தைக் கல்லூரியில் முதல்வராகத் திகழ்ந்தார் .
பிறகு பல்லாண்டுகள் பல்வேறு பணிகளில் கழிந்தன .
அண்ணன் சிவமணி அவர்கள் பல்வேறு இடங்களில் தலைமைப் பணியாற்றினார் .
சிவந்த மேனியும் – சிரித்த பொலிவும் கொண்ட அவர் விசையுந்தில் செல்வதே தனி அழகாக இருந்தது .
திராவிடக்கழகப் பேராசிரியர் என்று அவர் அழைக்கப்பட்டார் .
செம்மொழி நிறுவனத்தில் ஆய்வுப் பேராசிரியராகச் சென்னைக்கு வந்தார் .
புதுவை அரசில் பணியாற்றிய அவர் அங்கிருந்தே சென்னைக்கு வந்து செல்லலானார் .
தலைமைச் செயலகத்தில் செம்மொழி நிறுவனத்தின் தலைமை நூலகராகவும் பணியாற்றினார் .
நான் அண்ணன் என்று அழைத்த உறவு தொடர்ந்து
என் மகன் அருளும் பெரியப்பா என்று அழைக்கலானார் .
அறிஞர் சிவமணி அருள் மீது எல்லையில்லாத பரிவு காட்டினார் .
நேற்று வரை அவரோடு புதுவைக்கு அடிக்கடி அருள் பேசுவார் .
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்
” ஒளவையும் – புலமையும் ”
என்ற தலைப்பில் அவர் உரையாற்றியதை எவராலும் மறக்கமுடியாது .
பல்லாண்டுகளுக்கு முன்பு நினைவுக்கு வராத பல்வேறு குறிப்புக்கள் அந்த பொழிவில் இடம்பெற்றன .
புதுவை அரசில் அவர் வெளியிட்ட சட்டச் சொல் அகராதி அரிய கருவூலமாகும் .
90 வயதைக் கடந்த நிலையில் அவர் மறைவு தாங்க முடியாத துயரத்தைத் தருகிறது .
துயரத்தோடு
ஒளவை நடராசன்

Add a Comment