POST: 2022-09-05T10:38:15+05:30

ஆசிரியர் என்றால் முருகனுக்கும் ஒரு பெயர் என்பார்கள்
இன்று உரைவேந்தர் சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமியின் 120ஆம் பிறந்த நாளாகும்…

ஆசிரியர் குலம் வாழ்க!
எழுது குலம் வெல்க!!

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 69

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

அன்னை கூறிய புன்னையின் உறவு !

கண்கவர் வனப்பும், கற்புச் சிறப்பும், பொற்புற அமைந்த தலைவியைக் கண்டு காதலுறவு கொண்டான் தலைமைநலம் பெற்ற தமிழ்க் காளை.

ஒருமுறைக்கிருமுறை அவளைத் தனித்துக்கண்டு காதலுறுதி பெற்றவன்,

அவளுடைய உயிர்த்தோழியை அறிந்து அவளுடைய நட்புப் பெற்றாலன்றித் தலைமகள் பால் கொண்ட காதலுறவு வளர்ந்து, சிறந்து வாழ்க்கைத்துணையாகும் வளம் பயவாது என்பதை நன்கு உணர்ந்தவ னாகலின்; பன்முறையும் விடாது முயன்று தோழியை மதியுடம்படுத்து, அவள் வாயிலாகத் தலைமகளைக் காணும் நலம் பெற்றான்.

பின்னர்த் தன்னைப் பகற்போதில் காண்டற்கெனத் தனித்ததோர் இடம் குறிக்குமாறு அவன் தலைமகளை வேண்டினான்.

சிறந்த இடமொன்று தோழியால் சுட்டிக் காட்டப்பட்டது.

அப்பகற்குறிக்கண் அவன் நாடோறும் போந்து தலைமகளைத் தலைப்பெய்து அளவளாவி இன்புற்றொழுகினான்.

இதனை இவ்வண்ணம் நீளவிடின், பிறர் அறிந்து ஏதம் விளைப்பர் என்று தோழி அஞ்சினாள்.

தன்னைப் போலவே தலைமகனும் எண்ணுவானாகலின், அவனுக்குத் தான் முற்பட்டு வரைந்து கொள்ளுமாறு வெளிப்படையாக வுரைப்பது முறையன்று, என அவள் எண்ணிக் குறிப்பாக அவனே உய்த்துணர்ந்து கொள்ளும் வகையில் உரையாடலுற்றாள்.

அதனால், அவன் பெரிதும் விரும்பி வந்து கொண்டிருக்கும் பகற்குறி வரவை மறுக்கத் தலைப்பட்டாள்.

இன்பம் நிலைபேறின்றிச் சிறிது போதில் கழியும் இயல்பிற் றாகலின், அதனை நுகர்பவர் அதன் பெருக்கத்தையே பெரிதும் விழைவதும் முயல்வதும் செய்வர்.

தலைமகனும் தான் நுகரும் இன்பம் இடையீடும், இடையறவும் எய்தி அழிவுறாது, பெருகுவதையே விரும்பி நிற்கின்றமையின்; தோழி கூற்று அதற்குத் தடையாதலின், அவன் அழிவில் இன்பம் வேண்டி வரைதலைத் தெருண்டு மேற்கொள்வன் என்பது கருத்து.

பகற்குறிக்கண் தலைமகன் வரவு கண்ட தோழி, ஒருநாள், அவனை நேர்பட்டு. ” துறைவ, நாம் கூடும் இப் புன்னைப் பொதும்பரில் இப்புன்னையின் நீழலில் நும்மொடு கூடி மகிழ்வது எமக்கு நாணுத் தருகின்றது;

நாங்கள் சிறுமிகளாக இங்கே விளையாடிய போது புன்னையின் விதையொன்றை இம்மணற்கண் புதைத்துச் சென்றேம்;

சின்னாட்களில் அது முளைத்து வரவே, அதற்கு நீரும் பாலும் பெய்து நாங்கள் வளர்த்து தம்; அதனைக் கண்ட எம் அன்னை , இது நும்போற் சிறந்தது; நுமக்குத் தங்கையா மென மொழிந்தனள்; இதன் நீழலிலே யிருந்து நும்மைக் காண்பது நன்றன்று; நீ எம்மைத் தலைப்பெய்து தலையளி செய்வதாயின் அதற்கு நீழலிடங்கள் வேறு எத்துணையோ உளவே; ஆங்குச் செல்லலா மன்றோ ” என்றாள்.

தோழியின் இக்கூற்றுத் தான் தடை – சிறிதும் இன்றி, நேரிற் போந்து கண்டு பெறும் இன்பத்துக்கு இடையூறு செய்தலையும், வேற்றிடம் தேடிக் காணினும், அதுவும் ஒருகால் இடையூறா மாகலின், வரைந்து கோட லொன்றே அழிவில் கூட்டத்துக்கு அமைவதையும் தலைமகன் தெருளுமாறு உணர்த்துவதையும் கண்ட நக்கீரனார், இப்பாட்டின்கண் அவற்றைத் தொடுத்துப் பாடுகின்றார்.

இது உரைவேந்தர் ஒளவை அவர்கள் எழுதிய முகப்புரை .

இது நாம் படிக்கும் போது ஒளவையின் 120 ஆம் ஆண்டு (5.9.2022) என்பதை நினைவு கூர்ந்து நெகிழலாம் .

இதற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய விளக்கம் இன்பம் தருகிறது .:

வெள்ளரிக்காய் விதைபோலச் சிரிக்கும் பல்லழகும் – பூவின் கள் இனிக்கும் விதம் போல மழலைச் சொல்லழகும் கொண்டு வெண்மணற் பரப்பில் ஒரு செந்தமிழ்ச் செல்வி கண் மலர் மூடிக் கைமலர் கொண்டு, புன்னைக் காய்களைப் புதைத்து விளையாடி; அவற்றில் ஒன்றை மறந்து ஆங்கு விட்டுச் சென்றிட – அது கன்றாய் வளர்ந்து இள மரமாய்ச் செழித்தது !

நெய்யும் பாலும் அப்புன்னையின் வேரில் பெய்து வளர்த்தாள் பேரழகுப் பதுமை !

அன்னை வளர்த்ததோ, அழகு மகளை !

மகளோ; புன்னை வளர்த்துப் பூரிப்பு கொண்டாள்.

ஒரு நாள் அன்னை; ஓவிய மகளை அன்புடன் நோக்கி; ”

திருநாள் போலத் தினமும் புன்னையைச் சீராட்டும் புதல்வியே !

உன்னுடன் சேர்ந்து வளர்ந்து உயர்ந்து நிழல்தரு புன்னை; உந்தன் இளைய உடன்பிறப்புப் போன்றதாம் !

உரைத்தேன் இதனை உவப்புடன் ” என்றாள்.

சுவைத்தேன் அருந்திய இன்பம் பெற்று, செந்தமிழ்ச் செல்வி சிந்தை அணு ஒவ்வொன்றும் சிலிர்த்திடக் குதித்து; அன்புப் புன்னையை ஆரத் தழுவி ” தங்கை இனிமேல் நீதான் எனக்கு – என் தாயே இதனைச் சொன்னாள் ” என்றாள் !

சொக்கி நின்றாள் !

மங்கை இவ்விதம் மலராய் விரிந்த முகத்துடன் நிற்க; அங்கேயொரு கை அவள் கண்களைப் பொத்தித் திடுக்கிட வைக்க வலம்புரிச் சங்கம் இசையொலி எழுப்பும் வளமிகு நெய்தல் நிலத்தின் தலைவனே; குலக்கொடி இமைகளை மூடித் தழுவினான் என்று, அந்த விளக்கொளி விழியாள் ஒரு விநாடியில் உணர்ந்தாள் !

” வந்தாயோ கண்ணா ” என்றாள்; ” வரவில்லையென நொந்தாயோ கண்ணே ” என்றான் !

தந்தானே முத்தங்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக – இரு பந்தாடும் மார்பகத்தை; பாவை, அவன் மீது சாய்த்து, ” இங்கு வேறெதுவும் நடத்த வேண்டாம் அத்தான்; என் தங்கையொருத்தி பார்த்துக்கொண்டிருக்கிறாள் ” – என்றாள் !

” எங்கு ஒளிந்துள்ளாள் உன் தங்கை ? என்னேடி இது வியப்பு எப்போது அவள் பிறந்தாள் ? ”
எனக் கேட்டான் தலைவன் ! புன்னையிளம் மரமிதனை நான் வளர்த்ததாலே; என்னோடு சேர்ந்து வளர்ந்த இந்தப் புன்னையினை – என் தங்கையைப் போல் நினைக்குமாறு – என் தாய் எனக்குக் கூறியுள்ளாள்; அதனாலே, தட்டாதீர் என் பேச்சை – தழுவாதீர் இங்கென்னை !

கட்டாணி முத்தேயென்று கற்கண்டுப் பொடி தூவாதீர் !

கன்னத்தைப் பழமாகச் சுவைப்பதற்கும் – இன்னும் என்னத்தை நான் சொல்ல; அவை அனைத்துக்கும் நான் வளர்த்த இத்தங்கையின் முன்னே – எனை நாணம் வந்து தடுப்பதாலே, வான் பொழியும் ஒளி மழையில் – இன்பத் தேன் பொழியும் திருவிழா நாம் நடத்துதற்கு வேறு மரநிழலொன்றைத் தேடிச் செல்லலா ‘ மென ஏறு போன்றான் தோளைப்பற்றி வீணையிசைப் பேச்சுக்காரி இழுத்துச் சென்றாள் – ” உன் ஆணையதுவானால் அட்டியுண்டோ எனக்கு ? ”

என்று கொஞ்சிக் குலவியவள் கொடி இடை பற்றித் தன் நெஞ்சகத்தில் அவள் முகத்தை அழுத்திக் கொண்டான் !

” வினையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ்முளை அகைய ஐநெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்த்தது நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும் ‘ என்று அன்னை கூறினள் புன்னையது நலனே அம்ம ! நாணுதும், நும்மொடு நகையே விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த் துறைகெழு கொண்க ! நீ நல்கின், இறைபடு நீழல் பிறவுமார் உளவே.”
( நற்றிணை பாடல் : 172

பாடியவர் : ( பெயர் தெரியவில்லை ) பின்னாளில் நக்கீரனார் என்று ஒளவை எழுதிய உரையில் காணலாம் .
பொருள் விளக்கம் : ஆயம் = தோழியர் கூட்டம். காழ்முளை = முற்றிய விதை. அகைய = விட்டுச் செல்ல. நுவ்வை = உன் தங்கை. விளரிசை = மெல்லிசை. கடுப்ப = ஒப்ப. கோடு = சங்கு. நரல் = ஒலி.

தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *