தினசெய்தி 13.9.2022 பக்கம்
தமிழ்வளர்ச்சித்துறை ஆட்சிமொழிப் பயிற்சி தொடக்கவிழா
முனைவர் ந. அருள் பேச்சு
தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக சென்னை மாவட்டத்தில் உள்ள அரசுப் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் சுழற்சிமுறையில் ஆட்சி மொழித் திட்டப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வகையில் 61ஆம் பயிற்சி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நலவாழ்வு மையக் கூட்டரங்கில் 12.09.2022 திங்கட்கிழமை, 13.09.2022 செவ்வாய் கிழமை ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.
இத்தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் துறை இயக்குநர் மருத்துவர் ஜெ.இராஜமூர்த்தி, மேனாள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் கூ.வ.எழிலரசு, மொழியாக்க வல்லுநர், வழக்கறிஞர் அ. மதிவாணன் மற்றும் புலவர் வெற்றியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாத்தலைமையுரையில் முனைவர் ந. அருள் பேசியதாவது:
“தமிழ் வளர்ச்சித் துறை இன்றும் நாளையும் ஐம்பது அலுவலர்களுக்கு நேர்த்தியான முறையில் ஆட்சி மொழிச் செயலாக்கத்துக்கு ஊன்றுகோலாக சிறந்த வரைவுகளை எழுதுவது பற்றியும், எளிமையாக ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்வது குறித்தும் ஆட்சிமொழிச் சட்டத்தின் கூறுகளை நுட்பமாக அறிந்து கொள்வதற்கும், தமிழ் இலக்கணத்தை எளிமையாகப் புரிந்து கொள்வதற்கும் இப்பயிற்சி வரையறுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள், அயலகத் தூதரகங்கள், வணிக நிறுவன ஒப்பந்தங்கள் ஆங்கிலத்திலேயே அமைந்தாலும், பிற பொருண்மைகள் அனைத்தும் தமிழில் தான் அமைய வேண்டும் என்றும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் உயரிய எண்ணத்திற்கேற்ப இப்பயிற்சி நடைபெறுகிறது என்று வலியுறுத்தினார்.
தகவுரையாற்றிய மருத்துவமாமணி இராஜமூர்த்தி தன்னுரையில், தான் பள்ளியில் தமிழ் வழியிலேயே பயின்றாலும், மருத்துவத்தை ஆங்கிலத்தில் தான் கற்றுக் கொண்டேன்.
இன்று, இயக்குநராகப் பணியாற்றி வருகிறேன். இதே மருத்துவப் படிப்பை தமிழில் பயின்றிருந்தால், நான் இன்னும் பல மடங்கு முன்னேறியிருப்பேன்” என்றும், “ஆட்சிமொழிப் பயிலரங்கம் அலுவலர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.
பயிலரங்கில் நடத்தப்படும் பாடங்களைக் கற்றுத்தரும் அறிஞர்களைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறியதுடன், தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கிய மறைமலையடிகள், வள்ளலார் பாடல்களையும், தண்டியலங்காரப் பாடலையையும் தன்னுரையில் மேற்கோளாகப் பேசிப் பெருங் கரவொலி பெற்றார்.
தினமணி 13.9.2022 பக்கம்
சென்னையில் ஆட்சிமொழி திட்டப் பயிற்சி தொடக்கம்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னை மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான இரண்டு நாள் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசுப் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் சுழற்சிமுறையில் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது.
அந்த வகையில் 61-ஆவது பயிற்சி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நலவாழ்வு மையக் கூட்டரங்கில் செப்.12, 13 ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.
பயிற்சி தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் துறை இயக்குநர் மருத்துவர் ஜெ. இ. ராஜமூர்த்தி, தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் இயக்குநர் எழிலரசு, வழக்குரைஞர் அ. மதிவாணன் மற்றும் புலவர் வெற்றியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவுக்குத் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் தலைமை வகித்துப் பேசியது:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஐம்பது அலுவலர்களுக்கு நேர்த்தியான முறையில் ஆட்சிமொழிச் செயலாக்கத்துக்கு ஊன்றுகோலாக சிறந்த வரைவுகளை எழுதுவது பற்றியும், எளிமையாக ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்வது குறித்தும், ஆட்சிமொழிச் சட்டத்தின் கூறுகளை நுட்பமாக அறிந்து கொள்வதற்கும், தமிழ் இலக்கணத்தை எளிமையாகப் புரிந்து கொள்வதற்கும் இருநாள்கள் வழங்கப்படவுள்ளது.
நீதிமன்றங்கள், அயலகத் தூதரகங்கள், வணிக நிறுவன ஒப்பந்தங்கள் ஆங்கிலத்திலேயே அமைந்தாலும், பிற பொருண்மைகள் அனைத்தும் தமிழில் தான் அமைய வேண்டும் என்று கூறிவரும் தமிழக முதல்வரின் உயரிய எண்ணத்திற்கேற்ப இப்பயிற்சி நடைபெறுகிறது என்றார்.

Add a Comment