POST: 2022-10-10T12:29:16+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 74
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

நம்பிக்குப் பிசிராந்தையார் நல்லுரை !

குளத்து மீனைக் கொடிதனில் நீந்தச் செய்து களத்தினிலே வெற்றிகளைக் குவித்திட்ட பாண்டி நாட்டு
மக்களுக்கு உளத்திலொரு வருத்தமுண்டு; அஃதென்னவெனில் வளத்தைப் பெருக்காமல் வரி பெருக்கி வருமானம் பெருக்க முனையும் வாள் மீசைக்காரன் அறிவுடை நம்பிப் பாண்டியனின் வளைந்திட்ட ஆட்சிக்கோலை நிமிர்த்திட வேண்டுமென்பதேயாகும் !

நாட்டு நிலையை எடுத்துரைத்துப் பாண்டிமன்னன் திருந்திடவே நீட்டோலை கொண்டு பலர் அவனைச் சந்திக்கச் சென்று கால் வலித்துத் திரும்பிவிட்டார் ! ஆடலரங்கம், இசையரங்கம்; அத்தாணிமண்டபத்தில் ! அரசியுடன் ஊடலரங்கம், கூடலரங்கம்; அனிச்சமலர் மஞ்சத்தில் !

ஏடு கொள்ளா இன்பத்தில் திளைத்திடலே நாடு காக்கும் முறையென்று; நாலைந்து பேர்வழிகள் அரசுத்துறையோர் அமர்ந்து கொண்டு அறிவுடைநம்பியினை அடுத்தடுத்துக் கெடுக்கலானார் ! அரசன் எதைச்சொன்னாலும் ஆமாம் என்று அவசரமாய்த் தலையாட்டி; அடடா! அருமை அருமையென பாராட்டிப் போற்றிப்புகழ்ந்து அவனை இன்பச்சேற்றில் தேரோட்ட வைத்து ஆட்சியினை வசமாய்ச் சிக்கவைத்தார் !

அற்ற குளத்து அறுநீர்ப்பறவை போன்றார் – சில உற்றார் உறவினரும் அதுதான் சமயமென்று; தாம் கற்ற வித்தை அனைத்தும் காட்டி நாட்டோரை வஞ்சிக்கும் குற்றங்கள் கணக்கின்றிப் பெருக்கலானார் ! சோலைவனப் பாண்டிநாடு சொந்த நலம் நாடுவோரால் பாலைவனப் பூமியாகும் எனப்பயந்த சான்றோர் பலர்;

காலைக்கதிர் உதித்தெழுந்து காரிருளும் தொலைவதற்கே கடமையாற்ற முனைந்திடுவீர் எனக் கவிஞர் ஒருவரிடம் வேண்டி நின்றார் ! பிசிர் எனும் பாண்டிய நாட்டுச் சிற்றூரில் பிறந்திட்ட ஆந்தை எனும் பெயருடையார் அக்கவிஞர் ! பிசிராந்தையார் என்று பெருமைமிகு வரலாற்றேட்டில் பீடுநடைபோட்டு நட்புக்கோர் இலக்கணமாய் வாய்த்தவராம் ! கோப்பெருஞ்சோழன் எனும் மன்னனை நேரில் பாராமலே
அவன் மாப்புகழ் கேள்வியுற்றுத் தன்னையவனுக்கு நண்பராய் வரித்துக் கொண்டவராம் !

சொந்தநாடாம் பாண்டிநாட்டில் சோர்வுற்று மக்கள் எலாம் நொந்துமிக இன்னலுற்றுத் தள்ளாடும் நிலைமாற்றத் தன்னால் முடியுமென நம்பிக்கை தெரிவித்துத் துணிந்து மண்ணாளும் அறிவுடைநம்பியினைச் சந்திக்கப் புறப்பட்டார் ! பார்வேந்தனாம் நம்பி; பாவாணர் பிசிராந்தை வரும் செய்தி
கேட்டுப் பாவேந்தரை மனம் கோணச் செய்தல் பெருங்கேடாய் முடியுமென அஞ்சி, தமிழுக்கு மரியாதை செய்கின்ற பண்பாடு குன்றாத காரணத்தால் தமிழ்க்கவியைத் தகுதியுடன் வரவேற்றுத் தலைதாழ்த்தி வணக்கம் செய்தான் !

செந்தமிழுக்கு நீ செய்கின்ற சிறப்புக்கு மகிழ்ச்சியெனினும் செங்கோலைக் கொடுங்கோலாய் மாற்றுதல் நன்றோ மன்னா ? பந்தங்கள், சொந்தங்கள் எனச் சொல்லிக்கொண்டு – தீப் பந்தங்களாய்ச் சுடுகின்றார் உன்பக்கமிருப்போர்; நாட்டோரை ! நல்லோரை !

அரசனை அன்றாடம் இன்பப்பொழுது கழிக்கச் செய்துவிட்டு அரசியலைத் தமதாக்கி விளையாடும் அரசுத்துறையோர் தம்மை; அடையாளம் தெரிந்துகொளல் வேண்டும் வேந்தே ! உன் அழிவுதனைத் தடுத்திடவும் அதனினும் மேலாக அழியாமல் என்றும் நமதுநாட்டு நற்பெயரைக் காத்திடவும் அறிவுரை சில கூறிடவே வந்துள்ளேன்; ஏற்பாயோ ? ” எனக்கேட்டு,

காற்றடிக்கும் திசையினிலே கவிப்பாய் விரித்துப் படகோட்டி போற்றிப் புகழ்ந்துகொண்டே தீங்குகளை மறைத்துச் சிலர் போதுமான பரிசுகளைப் புவியாள்வோர்பால் பெற்றுச்செல்வர் !

– நானோ; உன்பால் வாது செய்து நின்னாட்சிதனை வகைப்படுத்த வந்துள்ளேன்;
சீறிடாதே ! ” என்றுரைத்தார். ” கல்லும் கசிந்துருகத் தமிழ்பாடும் கவியரசே ! அல்லும் பகலும் எனைச் சூழ்ந்திருப்போர்; அறிவுரை எதுவும் கூறித் திருத்துவதற்குத் தகுதியின்றி ‘ஆம் ‘ என்றே அனைத்துக்கும் தலையசைத்துத் தரமிழந்து

போனார் ! செறிவுநிறைத் திறம் வாய்ந்த பெரியீர் நீவிர்; இந்தச் செந்தமிழ்ப் பாண்டிநாட்டின் செம்மைகாக்க வந்துள்ளீர் ! அறிவுடைநம்பியென எனக்குப் பெயர்மட்டும் இருந்தென்ன
பயன் ! அரசுக்குத் தேவை; இயற்றலும் ஈட்டலும் காத்து

வகுத்தலுமன்றோ ? இதனை மறந்து நடக்கின்ற ஆட்சிதனைக் கடிந்து இடிப்பாரையில்லாத ஏமரா மன்னனாக இருந்துவிட்டேன் ! எடுத்துரைப்பீர்; என்ன செய்யவேண்டும் நான் ? நீவிர் தொடுத்துவைக்கும் அறிவுரையைத் தொழுதேற்றுச் சூடிக்கொள்வேன் ” என்றான்.

” மன்னா கேள் !! ஒரு மாவுக்குக் குறைந்த நிலமாயினும் மகசூல் கண்டு நெல்லை அறுவடை செய்து வந்து; அதனைக் கவளம் கவளமாக யானைக்கே தருவதாயினும்; நல்ல கவனமுடன் செயல்பட்டால் அவ்வுணவு பலநாளைக்கு ஆகிவரும் !

அஃதன்றி; நிலத்துக்குள் நீயே சென்று மேய்ந்து கொள்க என நீள் துதிக்கை யானைக்கு உரிமை தந்தால் – பெருங் கழனியின் நெல்மணிகள் யானையின் வாய்க்கு மட்டுமன்றி காலுக்கும் தலைநாணி; மிதிபட்டுக் கழனியே படுபாழாகும் ! இரை கொள்ளும் யானைக்கே இவ்விலக்கணம் பொருந்துமென்றால் இறை கொள்ளும் அரசுக்கும் இதுவே பொருத்தமன்றோ ?

தரையிலும் மீன் வாழுமென்று தண்ணீரை விட்டு நீ எடுக்கச் சொன்னால்; தடுத்துரைக்க வலுவின்றித் தலையாட்டும் பதுமைகளாய்; அமைச்சர்களும், அரசுத்துறைப் பொறுப்பாளர்களும் அமைந்துவிட்ட காரணத்தால் – அறிவில் நீ மெலிந்துவிட்டாய் மன்னா ! தொடர் கதையாய் இக்கதையே நீண்டுவிட்டால் – துன்பம் படர்கதையாகித் தொன்மைமிகு சீர்வாய்ந்த சங்கத்திருநாடு

தாழ்ந்து போகும் ! மக்களை வாட்டி வருத்தி வாங்குகின்ற வரிப்பொருள் தான் ஆட்சியின் குறியென்றால் மதயானை புகுந்த வயல்போல யாருக்கும் நலமின்றி -மண்மேடாகும் நாடு ! அறிக ! ” என்றார் ! ” விருந்தெனக் கவிபாடி எனை மேலும் கேளிக்கையில் வீழ்த்துகின்ற பரிசில் கவிஞர் சிலர் போலன்றி – நீவிர் மருந்தெனக் கவிதந்து என் மனம் மாற்றிப் போட்டுவிட்டீர் ! திருந்தினேன் இன்று முதல்; உமது திருவடிகள் அரண்மனையில்
பட்டதாலே ! ” என்றான் மன்னன்; வென்றார் புலவர் !

” காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே, மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்; நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே, வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின், யானை புக்க புலம் போலத், தானும் உண்ணான், உலகமும் கெடுமே ! ”

( புறநானூறு :பாடல் : 184 பாடியவர் : பிசிராந்தையார் )

பொருள் விளக்கம் : காய்நெல் = காய்த்த நெல். மா = நிலத்தின் அளவுகளில் ஒருவகை. செறு = கழனி. தமித்து = தனியாக. நந்தும் = தழைக்கும். மெல்லியன் கிழவனாகி = அறிவால் வேந்தன் மெலிந்து. வரிசை அறியாக் கல்லென் சுற்றம் = தரமறியாமல் ( அரசன் ) விரும்புவதையே தாமும் கூறுகிற ஆரவாரமிகுந்த சுற்றத்தார். பரிவுதப் = அன்புகெட. பிண்டம் நச்சின் = பொருளை விரும்பினால். இறை = வரி.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் காட்டும் இந்தக் காட்சி கற்பனை மெருகும் கவினார்ந்த தமிழும் கலந்த நடையில் நம் உள்ளத்தில் களிப்பூட்டும் புறநானூற்றுப் பழைய உரையில் இந்த நிகழ்ச்சியை அன்று காட்டிய உரை :

பாண்டியன் அறிவுடை நம்பி பாண்டிநாட்டை யாண்டு வருகையில் சோழநாட்டு உறையூரில் கோப்பெருஞ் சோழனிருந்து ஆட்சி புரிந்தான். பாண்டிநாட்டுப் பிசிர் என்னும் ஊரிலிருந்து சான்றோரான ஆந்தையார் கோப்பெருஞ் சோழனைக் காணாமலே அவனுடைய குண நலனும் ஆட்சி நலமும் சான்றோராற் கேள்வியுற்று, அவன்பால் பெருநட்புப் பூண்டனர். அந்நட்பு ” உயிர்கலந் தொன்றிய செயிர்தீர் நட்பாய் ”க் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர்விட்டவழி இவரும் உயிர் விடுதற் கேதுவாயிற்று.

பாண்டிநாட்டுச் சான்றோராகிய பிசிராந்தையார்க்குத் தம் நாட்டு வேந்தனான பாண்டியன் அறிவுடைநம்பிபால் பிறவாமல், சோழநாட்டுக் கோப்பெருஞ் சோழன் பால் பெருநட்புள தாயிற்றெனின், இச் சான்றோருடைய அன்பைப் பெறுதற்குரிய நலம் இப்பாண்டியன்பால் இல்லை யென்பது தானே பெறப்படும்.

இப்பாண்டியன் தன் குடிகளிடத்து இறை வாங்கும் நெறியிற் பெருந்தவறு செய்தான். இவன்பால் சூழ்ந்த அரசியற் சுற்றத்தார் இவனை இடித்துரைத்து நெறிப்படுத்தும் நேர்மையின்றி, நீர் போகும் வழிப் புல் சாய்ந்து கொடுப்பதுபோல, இவன் விழைந்த வழியெல்லாம் நுழைந்து கொடுத்து அரசியலில் வாழும் மக்கட்குத் துன்பமுண்டாக்கினர். மக்கள் பால் வேந்தனுக்கு அன்பு சுருங்கியதாயிற்று. குடிகளை மிக வருத்தி இறை வாங்குவதில் அவ்வேந்தன் விருப்புடையனாயினான்.

இதனைக் காணப் பொறாத சான்றோர் பிசிராந்தையாரை அரசன்பால் விடுத்து நல்லறிவு கொளுத்துமாறு வேண்டினர். அவரும் அரசன் செயல் வகைகளைத் தாமே ஆராய்ந்தார். குற்றம் அரசனது இறை வாங்குந் திறத்திலும் அதற்குத் துணைசெய்யும் அரசியற் சுற்றத்தார் இதிலும் இருப்பது கண்டார். அரசன் ஆடல் பாடல் முதலிய இன்பத் துறைகளில் எளியனாயிருப்பதும் தெரிந்தது.

இக்குறைகளை அரசற் கெடுத்துரைத்து நெறிப்படுத்துவது நாட்டுக்கு இன்றியமையாத பணியும் சான்றோர்க்குத் தாம் செய்யக்கடவ கடனு மாதலை யுணர்ந்தார்; பாண்டியனைச் சென்று கண்டார். கோப்பெருஞ் சோழன் முதலிய பெருவேந்தர் பாராட்டிக் கேண்மை கொள்ளும் புலமை நலம் சிறந்திருப்பதை நன்கறிந்தவனாகலின், வேந்தனும் அவரை விருப்போடு வரவேற்றான் .

அக்காலை, இப் பாட்டினைப் பாடிக் காட்டி அப்பாண்டியனை நெறிப்படுத்தினார். இதன்கண், ” களிற்றியானைக்கு உணவாகும் நெல், அது விளையும் நிலத்திலிருந்து கொணரப் பட்டுங் கவளங் கவளமாகக் கொள்ளப்படுமாயின், விளை நிலம் ஒருமா அளவினும் குறைந்த தாயினும் பல நாள்கள் அக்களிற்றுக்கு உணவு தரவல்லதாம். யானைக்கென்று நூறுமா நிலத்தை விட்டு நெல் விதைப்ப, அது விளைந்து சாய்ந்து கிடக்கையில் அதனைத் தனியே மேயவிடின், அதன் வாய் புகுமளவினும் கால்களால் கெடுவது மிகுதியாகும்;

இவ்வாறே வேந்தனும் தான் பெறுதற்குரிய அரசிறையை நெறியறிந்து முறையே கொள்வானாயின், நாடு பெரும் வளம் படைத்துச் செல்வத்தாற் புகழ் பெறும்; அவ்வேந்தன் நாடோறும் வரிசை யறியுந் திறமில்லாச் சுற்றம் சூழத்தானும் மெல்லியனாய்க் குடிகள் பால் அன்பின்றி மிக்க இறையை வாங்கலுறுவானாயின், யானை புக்க விளை நிலம் போல, அவற்கும் பொருள் சேராது; நாடு கெட்டழியும் ” என்று செவியறியுறுத்துள்ளார்.

இப்பாடல் ( 184 ) திணை: பாடாண்டிணை; துறை: செவியறிவுறூஉ பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது.

உரை :

காய் நெல் அறுத்துக் கவளங் கொளின் – காய்த்த நெல்லை யறுத்துக் கவளமாகக் கொள்ளின்; மா நிறை வில்லதும் – ஒரு மாவிற் குறைந்த நிலத்திற் கதிரும்; பல்நாட் காகும் – பல நாளைக்காகும்; நூறு செறு வாயினும் – நூறு செய்யாயினும்; தமித்துப் புக்கு உணின் – யானை தனித்துப் புக்கு உண்ணுமாயின்; வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் – அதனது வாயின்கட் புகுந்த நெல்லினும் கால் மிகவும் கெடுக்கும்; அறிவுடை வேந்தன் – அப்பெற்றியே அறிவுடைய அரசன்; நெறி அறிந்து கொளின் – இறை கொள்ளும் நெறியை அறிந்து கொள்ளின்; நாடு கோடியாத்துப் பெரிது நத்தும் – அவன் நாடு கோடிப் பொருளினை யீட்டிக்கொடுத்துத் தானும் மிகவும் தழைக்கும் .

வேந்தன் வைகலும் – நாடோறும்; வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு – தரமறியாத உறுதி கூறாது அவன் விரும்புவதனையே தானும் கூறும் ஆரவாரத்தையுடையவர் . சுற்றத்தோடு கூடி; பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின் – அன்பு கெடக் கொள்ளும் பொருட் டொகுதியை விரும்பின்; தானும் உண்ணான் உலகமும் கெடும் – தானும் உண்ணப்பெறான் உலகமும் கெடும் எ-று

பரிவு தப என்றோதி, அக்குடிகட்கு வருந்த மிக வென்று உரைப்பாரு முளர்.

விளக்கம் :

மா, குழி, வேலி யென்பன நிலவளவை வகை. இருபது மா கொண்டது ஒரு குழி; நூறு குழி கொண்டது ஒரு வேலி. செய்யென்பது ஒரு தளை, கோடி,மிக்கதோர் அளவினைக் குறிப்பது. நந்தும் – தழைக்கும்; நந்துதல் இப்பொருட்டாதல், “ நத்தம்போற் கேடு முளதாகும் சாக்காடும் ” ( திருக்குறள். 235 ) என்பதனாலு மறியப்படும். மெல்லியன், அறிவால் வன்மையில்லாதவன்; “ வெள்வே லண்ணல் மெல்லியன் போன்ம் ” ( பதிற். 51 )

வரிசையா நோக்கின், அதுநோக்கி வாழ்வார் பலர் ” ( திருக்குறள். 528 ) என்பதனால் வரிசையறிதல் இன்றியமையாமை யறிக. இப்பாட்டின் கருத்தையே, “ வாய்ப்படுங் கேடுமின்றாம் வரிசையி னரிந்து நாளும், காய்த்தநெற் கவளந் தீற்றின் களிறுதான் கழனி மேயின், வாய்ப்பட லின்றிப் பொன்றும் வல்லனாய் மன்னன் கொள்ளின், நீத்தநீர் ஞாலமெல்லா நிதிநின்று சுரக்கும் மன்றே ” ( சீவக. 2907 ) என்று திருத்தக்கதேவர் கூறுதல் காண்க. ( 184 )

தொடர்புக்கு :thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *