அருந்தமிழும் அன்றாட வழக்கும் -140
உரைவேந்தரின் நுண்மாண் நுழைபுலம்
முனைவர் ஔவை அருள்
கி.பி. 1882 முதல் 1901 வரையும் பிரித்தானிய சக்கராதிபத்தியத்தினை ஆளுகை புரிந்த விக்டோரியா ராணியாரின் காலம் ஆங்கில நாடு பல துறையிலும் சிறப்பெய்திய காலமாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே தோன்றிய
உவால்டர் ஸ்கொட் (1771–1832), உவேட்சுவேத் (1770-1850) என்னுங் கவிவாணர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தார்கள்.
பைரன் (1788-1824),
ஷெல்லி (1792- 1822),
கீத்சு (1795-1821),
தெனிசன் (1809- 1892)
றபர்ட் பிறௌனிங் (1812-1898)
எனப்பெயரிய அழியாப் புகழ்படைத்த அகலக்கவிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே திகழ்ந்தார்கள்.
மேற்குறித்த எழுவரும் இயற்றிய காப்பியங்களும் தனிப்பாடல்களும் எத்தனையோ பல எண்ணிறந்த புலவர்கள் சிறந்த வசனகாவியங்கள் இயற்றினார்கள்.
சையன்ஸ் என்னும் அறிவியல் நூல் கணிதநூல், வானநூல், இதிகாசநூல், தத்துவநூல் முதலிய கல்வித்துறைகள் பலவற்றிலும் எத்தனையோ பல நூல்கள் எழுந்தன.
ஆக்ஸ்பர்ட், கேம்பிறிட்ஜ் என்னும் நகரங்களிலுள்ள பழைய பல்கலைக்கழகங்களும், லண்டன் மான்செஸ்டர், முதலிய நகரங்களிலுள்ள புதிய பல்கலைக்கழகங்களும் கலைத்துறைகள் பலவற்றையும் போற்றி ஆதரித்துவந்தன; இன்னும் ஆதரித்து வருகின்றன.
மேலே நாம் குறிப்பிட்ட எழுவருள்ளே உவால்டர்ஸ்கொட் எத்தனையோ சிறந்த வசன காவியங்களைச் செய்திருக்கிறார் இவர் ஆக்கிய செய்யுள் வடிவ நூல்கள் அத்துணை உயர்வுடையவல்லவாயினும், கதை பொதித்த பனுவல்களாதலின், இளைஞர்க்கு உவகை பயப்பன.
இவர் ஸ்கொட்லாந்திலே பிறந்தவர்; தேசாபிமானம் நிறைந்தவர்.
பழைய காலத்திலே தமது நாட்டிலே வாழ்ந்த குறுநில மன்னரது வீரச் செயல்களையும் அவர்களது மன்றங்களிலே யாழிசைத்த பாணர் திறத்தினையும் சிறப்புறக்கூறுவார்.
இவரது பாடல்களைப் படிக்கும் போது. பழந்தமிழ் நாட்டின் நினைவு உள்ளத்திலே இயல்பாக எழும்.
மன்னனுயிர்காக்கத் தம்முயிரையீயும் மறவர் செயலும், அடுகளத்திலே தம் மைந்தர் பொருது வீழ்ந்த செய்திகேட்டு உவகைக் கண்ணீர் உகுத்த வீரத்தாயர் செயலும், ஆண்மைசான்ற ஆடவரும் அழகுவாய்ந்த அரிவையரும் கேட்டு உளமுருகுமாறு வீரஞ்செறிந்த பாடல்களை யாழிசையோடு பாடும் பாணர் செயலும் பழந்தமிழ்நாட்டுக்கு உரியனவன்றோ?
இத்தகைய செயல்கள் உவால்டர் ஸ்கொட் என்னும் கவிஞரது தாய்நாட்டுக்கும் உரியன
இவர் பாடிய பாணன் பாட்டு என்னும் பனுவலின் தொடக்கத்திலே பாணனது பழைமை கூறுமிடத்துத்
“தாவுகின்ற பரிமாவின் மீதிவர்ந்து சென்று
தரணிபரும் அரிவையரும் உருகவிசை பொழிவோன்”
எனப் பாணனைப் பாராட்டுகிறார்.
கால வேறுபாட்டினாலே வேற்று மன்னன் மணியாசனத்தமரப், பாணன் ஆக்கமிழந்து, பசிப் பிணியையாற்றுதற்கு ஒருபிடியுணவுதேடி, ஏழைகளுடைய மலையினை நாடி, அலைகின்ற நீர்மையினை உருக்கத்தோடு கூறுகிறார்.
மேலும் ‘நீர்நிலைக் கன்னிகையென்னும்’ அழகிய பனுவலின் தொடக்கத்திலே. கவி தன்னையே பாணனாகக் கற்பித்துத் தேடு வாரின்றிப் பலநாள் மரக்கிளைமீது கிடத்தலிற் பசுங்கொடிபடர்ந்த யாழ்க்கருவியினை முன்னிலைப் படுத்திக் கூறுகிறார்; ‘வடபுலத்து நல்யாழே நீருற்றினுக்கு நிழலளிக்கும் இம்மரக்கிளைமீது நெடிது தங்கினை.
இலையொலியும் அருவி நீரொலியும் இசையியம்ப, நின்னரம்புகள் இசையின்றித் துயிலுதல் முறையாகுமா?
முன்னாளிலே வீசுகின்ற காற்றிலே இசையமிழ்தத்தையுகுத்தனையே! நின்பாற் பொறாமையுற்ற பசுங்கொடி படர்ந்து, நின் நரம்புகளை ஒவ்வொன்றாகக் கட்டிவிட்டமையினாலே பேசாதிருக்கின்றனையா?-
வீரர் முகத்திலே புன்னகை தவழவும், அரிவையர் நாட்டங்களிலிருந்து உவகைக் கண்ணீர் கலுழவும் நினது இனிய குரலினாலே பேசலாகாதா?
முன்னாளிலே, கலிடோனியாவிலே. விழாக்கொண்டாடுவார் மத்தியிலே, நீ மௌனஞ் சாதித்ததில்லையே?
காதலையும் வெற்றியையும் பாடி, அச்சத்தையும் பெருமிதத்தையும் அளவு படுத்தினையே.
நினது இசை கேட்டுருகும் வண்ணம் காவலரும் காரிகை நல்லாரும் சூழந்து நின்றனரன்றோ?
வீரரது தீரச்செயலும் காரிகையாரது ஒப்பற்ற கண்ணிணைகளுமே நினது பாடற் பொருளாக அமைந்தன.
‘நல்யாழே’ துயிலொழிந் தெழுவாயாக, நினது நரம்புகளிற் படருங்கையானது பயிற்சியற்ற கையெனினும், செழியபழம் பாடல்களின் இன்னொளியை ஓரளவிற்காவது இசைத்தலாகாதா?.
நின்னிசைக்கு ஓர் இதயமாவது துடிப்புறுமெனின், நின்செயல் வீண்செயலாகாதல்லவா ?
நீ இன்னும் வாய்திறவாதிருத்தல் தகுதி அன்று.
சித்தத்தைக் கவரும் வனமோகினியே!
எழுந்திரு, இன்னும் ஒருமுறை எழுந்திரு”.
உவேட்சுவேத் எளிய நடையிலே, பொதுமக்களுடைய இன்ப துன்பங்களையும், இயற்கை வளப்பையும் பொருளாக வைத்துக் கவியியற்றியவர்.
முதுவேனிற்காலம்: நண்பகல்; பரந்த வெளியிடத்திலே சிதைந்த குரம்பையொன்று காணப்படுகிறது.
அதனை நோக்கிக்கவிஞர் நடந்து செல்கிறார்.
செல்லும் வழி சேற்று நிலம் ஆதலினாலே கால்கள் துன்புறுகின்றன.
சேற்றிலிருந்து ஈக்கள் எழுந்து முகத்தைச்சூழ, இருகைகளாலும் ஓய்வின்றி அவற்றை ஓட்டுகிறார்.
இதனால் கைகள் சோர்கின்றன. இத்தனை அழகினிடையே கவிதை சுரக்கின்றது.
முதுவேனிற் பெரும்பொழுதின் முனைத்தெழுந்த பரிதி
முன்னேறி ஒளிபரப்பு மென்னீர அருவி
மதுவாரும் பொழிலகத்துத் தென்றிசையிற் றோன்ற,
வடதிசையின் மிகத்தெளிந்த வளிவழங்கும் வெளியில்,
வானகத்தில் அசைவின்றி வதியுமுகிற் குலங்கள்
மன்னியநன் னிழல்பரப்ப, அந்நிழலி னிடையே
வேனில்வெயில் கதிர்சொரிய, உளமகிழ்வு விரிய
மெத்தென்ற பசும்புல்லில் எத்தொழிலும் இன்றி,
அஞ்சிறைய புள்ளிசைக்கும் செழும்பாடல் செவிவாய்
அகநுழைய, இருள்விரவு மலைமுழையில், அயர்ந்து
துஞ்சுதல்போற் றுயிலாது கடைக்கண்ணால் அழகு
சுவைத்திடுவான் ஒருவன்; அவன் சுகத்தினையென் னென்போம்?
நோக்கினிய அவ்வெளியில், இருகாலும் சேற்றில்
நொந்தலைய, முகத்தினைச்சூழ்ந்து அந்தரமே பெயரும்
ஈக்குலங்கள் தமையோட்டும் இருகரமுஞ் சோர,
இளைப்புடனே வழிநடந்தேன் யானுமந்தப் பொழுதில்,
நீண்டுயர்ந்த மரம்பலவும் உடன்பிறந்தார் போன்று
நிலைத்தொன்றுஞ் சோலையிலே, இலைக்கூரை சிதைய,
ஈண்டிதின்ற சுவர்நான்கா யியைந்ததொரு குரம்பை;
இக்குரம்பை தனையடைந்தேன்; இளைப்பொழித்தேன்; ஆங்கு
நல்லிரும்புப் பூண்செறிந்த தண்டொருபாற் கிடக்க
நன்னிழலிற் பலகையின்மேல் என்னரிய நண்பன்
அல்லலறப் படுத்திருந்தான், திணியநல் லுடலம்,
அருஞ்சுரங்கள் பலகடந்தும் அசையாத நிலையான்
தீர்க்காயுளாக எண்பது ஆண்டு வாழ்ந்து ஓய்வின்றிக் கவிதை புனைந்தளித்த உவேட்சுவேத் கிழவர் இயற்றிய பாடல்கள் மிகப்பல.
உயர்ந்த நோக்கமும் வேதாந்தக்கருத்தும் அமைய எளிய நடையிலே செய்யுள் செய்தார்.
இவரும் வேறு சில புலவர்களும் வடபாலிலே ஸ்கொட்லாந்திலே வாவிகளிடையே வாழ்ந்து கவி இயற்றினமையின் வாவிக் கவிஞர் என்னும் பெயருக்குரியராயினர்.
———————–
சென்னை, தரமணியில் உள்ள, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்,
‘உரைவேந்தர் ஒளவை துரைசாமி அறக்கட்டளை சொற்பொழிவில்
இராமேசுவரம், பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் கலை, அறிவியல் கல்லுாரியின் முதல்வர் ராமன், ஒளவை துரைசாமியின் உரைவீச்சு என்ற தலைப்பில் 16.02.2021 அன்று பேசிய உரைக்குறிப்பு
பகுதி – 3
நமது உரைவேந்தரின் உரைகள், ஆழ்ந்த தமிழ்ப் புலமையுடன் வெளிப்பட்ட கருத்துக் கருவூலங்களாக உள்ளன.
தாம் உரையெழுத எடுத்துக்கொண்ட நூலின் சிறப்புகளைச் செறிவாகத் தொகுத்தளிப்பதில் ஒளவைக்கு நிகர் ஒளவையே தான் என்று சொல்லவேண்டும்.
சூளாமணி உரையில், ஒளவை என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
அதை நான் படித்துவிட்டு அசந்துபோய்விட்டேன்.
சீவகசிந்தாமணிதான் சிறந்த இலக்கியம் என்று தாம் நம்பியிருந்ததாகவும், யாராவது சீவகசிந்தாமணியைத் தவறாகப் பேசிவிட்டால் தம் மனம் புண்பட்டுப் போகும் என்றும் எழுதியிருக்கிறார்.
காரணமென்ன? நச்சினார்க்கினியர் உரை இருக்கிறது, சீவக சிந்தாமணிக்கு! அதைப் படித்துப் படித்தே உரையாசிரியராக மலர்ந்தவர் உரைவேந்தர்.
நச்சினார்க்கினியரும் பரிமேலழகரும் எழுதிய உரைவழி மரபைத்தான், இவரும்கூடப் பின்பற்றினார்.
ஆகவே, சிந்தாமணிதான் சிறந்த இலக்கியம் என்று அவர் நினைத்திருந்தபோது, எதிர்பாராத விதமாகச் சூளாமணியைப் படிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது அவருக்கு.
அது “1933ஆம் ஆண்டு, செப்டம்பர்த் திங்கள் 14ஆம் நாள்” என்று ஆண்டையும் மாதத்தையும் நாளையும்கூடத் துல்லியமாகக் குறிப்பிடுகிறார்.
ஆனால், நான்கே மாதங்களில், சிந்தாமணியைவிடச் சூளாமணியே சிறப்பாக இருக்கிறது என்ற முடிவுக்கு ஔவை வந்துவிடுகிறார்.
அப்படியிருந்தும், சூளாமணி ஏன் தமிழ்நாட்டில் பேசப்படவில்லை என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்கிற உரைவேந்தர், அதற்குப் பின்வரும் அருமையான பதிலையும் சொல்லுகிறார்.
அவர் சொல்லும் விரிவான விளக்கத்தை, அப்படியே, அவர் சொற்களிலேயே தருகிறேன். நீங்களே படித்துப் பாருங்கள்.
“திருத்தக்க தேவர் பாடிய சீவக சிந்தாமணியினும் இச்சூளாமணி உயர்வு பெரிதுடையது என்று தமிழறிஞர் கருதுவதும் வாய்த்தவிடத்து எழுதிவிடுவதும் சொல்லிவிடுவதுமுண்டு.
சிந்தாமணிபால் உண்டாகியிருந்த விருப்ப மிகுதியால், எனக்கு அத்தமிழறிஞர் கருத்தும் எழுத்தும் சொல்லும் வாட்டத்தைத் தந்ததுண்டு.
1933-ஆம் ஆண்டு, செப்டம்பர்த் திங்கள், பதினான்காம் நாள் யான் என் நண்பர் சிலருடன் இந்நூலைப் படிக்கத் தொடங்கினேன்.
இந்நூல் முற்றும் நன்கு படித்து முடித்ததற்கு நான்கு திங்கள் சென்றன.
படித்ததற்கு வேண்டும் வசதிகளை என் நண்பர், திருவோத்தூர், திருகுட்டையம், ஆறுமுக முதலியார் அவர்கள் உதவினார்கள்.
அதன்பின், சூளாமணியைப் பற்றிய என் கருத்து மாறுவதாயிற்று.
சிந்தாமணிக்குப் போல இச்சூளாமணிக்கும் உச்சிமேற் புலவர் கொள்ளும் நச்சினார்க்கினியர் ஓர் உரையெழுதியிருப்பாராயின், இச்சூளாமணி தமிழ்ப் புலவர் அனைவர்க்கும் சூளாமணியாய் மிக விளங்கியிருக்கும் என்று இனிது எடுத்து மொழியலாம்” (சூளாமணிச் சுருக்கம்) என்கிறார் ஒளவை.
இக்கூற்றால், இரண்டு செய்திகளை நாம் அறிந்துகொள்கிறோம்.
1. சிந்தாமணியை விடவும் சூளாமணியையே ஒளவை பெரிதும் நேசித்தார்.
2. உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் மீது ஔவை அவர்களுக்கிருந்த உயர்தனி மதிப்பையும் அறிகிறோம்.
நமது ஒளவை என்ன சொல்கிறார்?
உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் உரை சிந்தாமணிக்குக் கிடைத்ததால், அது பேசப்பட்டது.
சூளாமணிக்கு நச்சினார்க்கினியர் உரை வரையாததால், அது பேசப்படவில்லை என்கிறார்.
மேலும், இதிலிருந்து அவர், ஒரு பாடத்தையும் கற்றுக்கொள்கிறார்.
எதற்குச் சிறப்பான உரை இல்லையோ, அந்த நூலுக்குத்தான் தாம் உரையெழுத வேண்டும் என்று ஒளவை தீர்மானிக்கிறார்.
திருக்குறளுக்குப் பார்த்தீர்களென்றால், கணக்கற்றவர்கள் உரையெழுதியிருப்பார்கள்.
இன்றளவிலும், திருக்குறளுக்கு உரையெழுதுகிறவர்கள் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.
வழிவழியாக வரும் திருக்குறள் விளக்கத்தில், இன்று நாம் போய் ஒரு புதுக்கருத்தைக் கூறிவிட முடியுமா?
மாபெரும் மேதைகள் வேண்டுமானால், அவ்வாறு செய்யலாம்.
அதை நான் மறுக்கவில்லை.
ஆனால், மிகப் பல மேதைகள் உரையெழுதியுள்ள திருக்குறளில் சென்று நாமும் அலைமோதுவதைவிட, உரையே இல்லாத வேறு சிறந்த நூல்களுக்கு உரையெழுதப் புகுவதுதான் தமிழுக்குச் செய்யும் அருந்தொண்டு என்று ஒளவை நினைத்திருக்க வேண்டும்.
(‘திருக்குறள் தெளிவு’ என்று ஔவை தனிநூல் எழுதியுள்ளார்.
அனைத்தையும் செய்துமுடிக்க வல்ல செயற்கரியன செய்பவர் நம் ஒளவை என்பதற்குச் சான்று அது).
எனவேதான் ஒளவை, பலரும் தொடாத யசோதர காவியத்திற்குத் தாம் உரையெழுத வேண்டுமெனத் தீர்மானித்தார்.
பெரிதாகப் பலரும் கண்டுகொள்ளாத சூளாமணிக்கு, ஆய்வு நுட்பம் கூடிய உரைக் குறிப்புகளுடன் ‘சூளாமணிச் சுருக்கம்’ என்று ஒளவை எழுதியதையும் அவ்வாறேதான் நாம் காணவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.
இப்பொழுது நான், இந்த உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், இக்கருத்தரங்க அறையில் அமர்ந்திருக்கும் தமிழ் படிக்கும் நமது மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்.
ஏன்? தமிழ்ப் பேராசிரியர்கள் நூறு பேரைக் கூப்பிட்டுத்தான் கேளுங்களேன்.
யசோதர காவியத்திலிருந்து ஓர் அருங்கருத்து அல்லது ஒரு பாத்திரத்தின் பெயர், சரி, அதுகூட வேண்டாம், யசோதர காவியத்தின் மேலோட்டமான கதையாவது, நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்டுப் பாருங்களேன். ஒரு பத்துப் பேருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்.
அதையும்கூட, இங்கே நான் மறுக்கவில்லை.
ஆனால், நான் சுட்டிக்காட்ட விரும்புவது வேறொன்று.
எத்தனையோ மேடைப் பேச்சாளர்கள், எத்தனையோ இலக்கியங்களிலிருந்து, மூச்சுமுட்ட மனப்பாடமாக எத்தனையோ பாடல்களைக் கூறுகிறார்களே!
அவர்களைக் கூப்பிட்டுக் கேளுங்களேன்.
அவர்கள் நூறு பாடல்களைக்கூடத் தங்குதடையின்றி ஒப்பிப்பார்கள்.
எனினும், அவர்களில் எத்தனை பேரால், யசோதர காவியத்திலிருந்து ஒரு பாடலை மனப்பாடமாகச் சொல்ல முடியும் என்று கேட்டுப் பாருங்களேன்.
தெரியாது; அல்லது முடியாது!
இந்த இடைவெளியை நன்கு புரிந்துகொண்டவர் என்பதால்தான், நமது ஒளவையவர்கள், எங்குப் புலமை தேவையோ அங்குத் தம் புலமையைச் செலுத்தி, யசோதர காவியத்திற்குச் சிறப்பாக உரையெழுதியிருக்கிறார்.
இதுதான் அவர் பின்பற்றும் முறை.
எந்த நூலுக்கு உரை மிகவும் தேவைப்படுகிறதோ, அதற்கு முன்னுரிமை தந்து உரையெழுதுவது என்பதுதான் ஒளவையின் தமிழ்ப் பணி.
ஒளவை எவ்வளவு நுண்மாண் நுழைபுலமுடைய உரையாசிரியர் என்பதற்குச் சில சான்றுகளை இங்குக் காட்ட விரும்புகிறேன்.
1. “முழங்குதிரைப் பனிக்கடன் மறுத்திசினோரே” (பதிற்றுப்பத்து : ஐந்தாம் பத்து : ‘ஊன்றுவையடிசில்’ ) என்பது,
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமமைந்த காசறு செய்யுட் பரணர் பாடிய ஐந்தாம் பத்தின் ஐந்தாம் பாடலான ‘ஊன்றுவையடிசில்’ என்ற பாடலின் இறுதி அடி.
இதற்குப் பழைய உரையின் நீட்சியாக, ஒரு நுட்பவுரை கண்டிருக்கிறார் ஒளவை.
‘கடலில் சென்று ஒரு வினையைச் செய்து முடித்துத் திரும்பி வருவது என்பது மிகவும் அரிது என்று கூறப்படுகிற அக்கூற்றை மறுத்து வென்று வந்த மன்னன், நினக்கு முன்னும் இல்லை;
இனியும் யார் உளரோ? எனில், யாருமில்லை’ எனப் பழைய உரையில் கூறப்பட்டுள்ளது.
“கடல் மறுத்தலென்றது, கடலிற் புக்கு ஒரு வினை செய்தல் அரிது என்பதனை மறுத்தலை” எனப் பழைய உரைகாரர் குறிப்பிடுகிறார்.
இது கடல் பிறக்கோட்டிய குட்டுவனைச் சிறப்பித்துப் பரணர் பாடும் பாட்டு என்பதை மனங்கொண்டு, நமது ஒளவை, இதற்கோர் அருமையான உரை கண்டுள்ளார்.
பழைய உரையில், ‘கடலிற் புக்கு ஒரு வினை செய்தல் அரிது என்பதனை மறுத்தவன்’ என்றுதான் குட்டுவன் பாராட்டப்பட்டான்.
நமது ஒளவையோ, அதனை மேலும் விரித்து, “மிக நிறைந்த நீரையுடைய முழங்குகின்ற அலைகளோடு கூடிய குளிர்ந்த கடலிடத்தே, வேற்படையைச் செலுத்தி அக்கடலிடத்தே எதிர்ந்த பகைவரை எதிர்த்துப் பொருதழித்த வேந்தர் நின் முன்னோருள் ஒருவரும் இலர்; இப்போதும் நினக்கு ஒப்பானவர் யாருமில்லை” –
என்றெழுதிச் செங்குட்டுவன் கடற்கொள்ளையரை அழித்த வீரச் செயலுக்குப் பெரும் பெருமை சேர்த்துவிடுகிறார்.
கடற்கொள்ளையரைக் கடலிலேயே எதிர்த்தடித்துத் துரத்திவிட்ட மன்னன் எனக் குட்டுவனைப் போற்றுகிறார் ஒளவை.
கடற்பகைவரை வென்று மீண்ட முதல் தமிழ் மன்னன் இவனாகத்தான் இருக்கவேண்டும் என்றும் நாம் கருதலாம்.
2. புறநானூற்றில் 64ஆம் பாடல் (திணை : பாடாண் திணை; துறை : விறலியாற்றுப்படை) –
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.
இப்பாடலை இயற்றிய புலவரை, ‘நெடும்பல்லியத்தனார்’ என்று ஆண்பாற்புலவராகவே கருதுவர்.
இதை ஒளவையும் அப்படியே பதிவுசெய்தாலும், ஒரு நுண்ணிய கருத்தையும் அவர் தம் புறநானூற்று உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அது என்ன தெரியுமா?
“நெடும்பல்லியத்தன் என்னும் பெயர் ஆண்பாற்கும் நெடும்பல்லியத்தையென்பது பெண்பாற்கும் வழங்கும்.
இப்பாட்டின் முதலடியில் யாழ், ஆகுளி, பதலையெனப் பல்லியங்களைத் தொகுத்தோதுதலின் இவர் நெடும்பல்லியத்தனாராயினாரெனக் கருதுவோரும் உளர்.
நெடும்பல்லியத்தையென வருதலை நோக்கின், இக்கருத்துச் சிறப்புடையதாகத் தோன்றவில்லை. முதுகுடுமிப் பெருவழுதி தனக்குரிய கூடலினீங்கிப் போர்க்களத்தே அமர்ந்திருப்பதை யறிந்துவைத்தும், அங்கே அவன்பாற் செல்லக் கருதுவது அவனது வன்மையும் இவரது வறுமைக் கொடுமையும் புலப்படுத்துகிறது.
இவரைப் பற்றி வேறே குறிப்பொன்றும் காணப்படவில்லை” என்று விரிவாகப் பதிவுசெய்துள்ளார்.
மேலும் அவர், “இப்பாட்டின்கண் ஆசிரியர் நெடும்பல்லியத்தனார், வறுமையெய்தி வாடும் விறலியைக் கண்டு, இக்காலத்தே புற்கையுண்டு வருந்தும் நாம் முதுகுடுமிப் பெருவழுதியைக் கண்டு வருவோமாயின், புற்கையுணவு நீங்கி இனியவுணவு கொள்ளும் செல்வம் பெறலாம்; வருக செல்வோம் என்று பாடியுள்ளார்” என்றுமெழுதியுள்ளார்.
இங்கு விறலியிடம், தானும் ஒரு பெண் என்பதால், இயல்பாக நெடும்பல்லியத்தை இவ்வாறு கூறியதாக ஏன் நாம் பொருள் கொள்ளக்கூடாது?
இத்தகையதொரு கருத்தும் நம் சிந்தையில் எழலாமல்லவா? எனவே இப்பாடலை,
‘நெடும்பல்லியத்தை’ என்ற பெண்பாற்புலவர் இயற்றியிருக்கலாம் என்று நாம் நினைக்கவும் இடமுண்டுதானே!
இவ்வாறு நாம் கருதுவதற்கும், “நெடும்பல்லியத்தன் என்னும் பெயர் ஆண்பாற்கும் நெடும்பல்லியத்தை என்பது பெண்பாற்கும் வழங்கும்” என்று ஔவையவர்கள் எழுதிய உரைக் குறிப்பே காரணமெனலாம்.
(சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கையில், உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை, ராகவையங்கார், ஒளவை துரைசாமிப்பிள்ளை, சாமி. சிதம்பரனார் என அறிஞர்கள் பலரும் தம்முள் கருத்து முரண்பட்டவர்களே).
3. ‘தும்பி சொகினனார்’ எனப்பட்ட சங்கப் புலவரின் பெயரை –
‘தும்பைச் சொகினனார்’ என்றும், ‘நெடுங்கழுத்துப் பரணரை’ – ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றும், ‘மாற்பித்தியாரை’ – ‘மாரிப்பித்தியார்’ என்றும், ‘வெறிபாடிய காமக்கண்ணியாரை’ – ‘வெறிபாடிய காமக்காணியார்’ என்றும் செம்மைப்படுத்திய பெருமை, நம் ஒளவையவர்களுக்குண்டு.
4. இத்தகைய பெயர் மாற்றங்களைப் பொருத்தமான வாதங்களின் அடிப்படையில் நாம் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.
அது வேறு. ஆனால், ஒரு புலவரின் பெயரைப் பார்த்தவுடனேயே, ஒளவையின் மூளை, இப்பெயர் அவருக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்று சிந்திக்கத் தொடங்கிவிடும்.
உரையெழுதுவோருக்கு இருக்க வேண்டிய – அனைத்தையும் பகுத்தறியும் – இந்த அரும்பண்பு, ஒளவையிடம் பெரிதும் பொருந்தியிருந்ததை விளக்குவற்காகவே, இதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
இன்று நாம் என்ன நினைப்போம் என்றால், அச்சில் வந்துவிட்டால் அனைத்தும் உண்மை என்று நினைத்துவிடுவோம்.
ஆனால், சங்க இலக்கியங்களில் வருகின்ற புலவர்களின் பெயர்களைத் தம் வரலாற்று மற்றும் பண்பாட்டுப் புரிதலுக்கேற்பத் திரும்பத் திரும்பப் பரிசோதித்துப் பார்த்துள்ளார் ஒளவை என்பதுதான், நாம் அறிந்து கொள்ள வேண்டியதாகும்
வளரும் . . . .
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Add a Comment