POST: 2022-12-30T12:48:49+05:30

சுடரொளி அணைந்ததே !

சங்கம் வைத்த தமிழுக்கு அணி சேர்ப்பதற்காக ஓங்கி வளர்ந்துள்ள திருப்பூர் தமிழ்ச் சங்கத்தை எவரும் மறக்க முடியாது .

வணிகம் செழித்துள்ள திருப்பூரில் அனைவரையும் ஒருங்குத் திரட்டி பள்ளி மாணவர்களுக்குப் பாடங்களையும், இசை, நாடக, நடனப் பயிற்சிகளையும் வழங்கி வருகின்ற சங்கத்தின் அரும்பணிகளை நாடு நன்கறியும் .

புகழ் வாய்ந்த கணக்குத் தணிக்கையாளராகவும் –
கலைமனம் கொண்டவராகவும் திகழும் ”
திருப்பூர்த் திலகம் ” லோகநாதன்

( 10 4 1948 – 29 12 2022 )

அவர்களால்தான் திங்களுக்கு ஒருமுறையேனும் தமிழ் முழக்கம் திருப்பூரில் ஒலித்து வந்தது.

திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக 25 ஆண்டுகளுக்கும் மேல் அவர் ஆற்றிய அரும்பணிகள் எண்ணிலடங்காதவை .

ஆண்டுதோறும் எழுத்தாளர்களைப் போற்றி அரவணைத்துப் பரிசளித்து வரும் பாங்கினை எழுத்துலகம் பாராட்டாத நாளில்லை .

அறிவும் – ஆற்றலும் – பரிவும் – பண்பாடும் அவர் நெஞ்சச் சோலையில் எப்போதும் செழித்துக் குலுங்குகியது.

உயரிய தகுதியால் தாமே தமிழ் வல்லவராக இருந்தும் பிறரை ஊக்குவித்துத் தமிழ் வளர்க்கும் நன்மனச்செம்மல் அவராவார்..

தமிழக அரசின் சமூக நலத்திட்டங்களை திருப்பூர் வளாகத்தில் செயற்படுத்தியதில் திரு.லோகநாதன் பணி ஒப்பில்லாதது.

தேன்மழையாக தமிழ் வளர்க்கும் மனம் கொண்டவருக்குத் ” தமிழ்ச்செம்மல் ” விருது அண்மையில் (21 12 2022 ) தான் அலங்காரம் செய்தது.

ஆடிட்டர் ஆடிட்டர் என்று வாய் நிறைய அப்பா எப்போதும் அவரை அழைப்பார் .

அந்தோ ! தமிழ்ச்சங்கம்,தமிழ் ஆர்வலர்களுக்கு தேனாய் அமுதாய் பழகிய பண்பின் பெட்டகமாக இருந்தவர் இல்லையே என்றால் என்னாவது இனி என்று ஏங்க வைக்கிறது…

கடந்த 40 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தோடு நெருங்கிய உறவு உடைய தமிழ்ச்செம்மலை இனி எங்கே காண்போம் ?

எங்கள் மூவர் திருமண நிகழ்வுகளில் பெற்றோர் அருகில் இருந்து வாழ்த்திய பெருமிதமும்
அண்ணன் கண்ணன் ,
தம்பி பரதன் இருக்கும் நாடுகளுக்கு சென்று பார்த்து வாழ்த்திய அருங்குணமும் பசுமையாக உள்ளது.

நுட்பமாய் – திட்பமாய் திட்டமிட்டு வகுத்து தொகுத்து வாழ்ந்த அறநெறியின் உறைவிடம்,

அப்பா பேசிய பல தொலைக்காட்சி உரைகளை பதிவு செய்ததை நான் நன்கறிவேன்.

நடைப்பயிற்சி, யோகக்கலையார்வம், சிறந்த உணவை தெரிந்து உண்ணும் பயில் முறை என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

எந்தையாரவர்கள் இயற்கை எய்தியபோது எம்முடன் தோளோடு தோள் நின்று துயரத்தில் பங்கு கொண்டது எம் மனத்தை உருக்குகிறது.

ஒப்பரிய இலக்கிய ஏந்தல் லோகநாதன் அவர்கள் ( நேற்று ) 29.12.2022 வியாழக்கிழமை நள்ளிரவு 12.45 மணிக்கு திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் விண் புகுந்தார் என்ற செய்தியறிந்து மீளாத் துயருக்கு ஆளானேன்.

அடுக்கடுக்காக அடுத்தவர்களுக்கு உதவிய உயர் உள்ளத்தை இழந்து தவிக்கும் திருமகன்கள் சிவசங்கரன், பரணி, அம்மா வள்ளி ,இல்லத்தரசி வசந்தா அம்மாவிடம் என்ன ஆறுதல் சொல்வேன்?

துயரத்தோடு

ஔவை அருள்.
30 12 2022

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *