தினசெய்தி – 7 1 2023
பக்கம் எண் :4
திருப்பாவை -1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
விளக்கம்:
இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள்.
அதனால் தான் “நாராயணனே பறை தருவான் என்கிறாள்.
108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம்.
108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார்.
நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும்.
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.
பொருள்:
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே!
சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வ வளமிக்க சிறுமிகளே!
மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது.
இன்று நாம் நீராடக் கிளம்புவோம்.
கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான்.
அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்..
திருவெம்பாவை
=============
பாடல் – 1
————–
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே! வளருதியோ! வன்செவியோ நின்செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள், என்னே! என்னே!
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!
விளக்கவுரை :
————————
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்
எந் நாட்டவராலும் எக் காலத்தவராலும் உவந்து ஏற்றுக் கொள்ளுமாறு என்றும் நிலைத்த பண்புகளையோ, உண்மைகளையோ நெறிகளையோ சிந்தைக்கும் செவிக்கும் இனிய செஞ்சொற்களால் உரைப்பதே சிறந்த இலக்கியமென இலக்கண வரம்பு வகுப்போமானால் மணிவாசகர் அருளிய திருவாசகம் தலைசிறந்த தமிழ் மாமறையாகத் திகழ்வதாகும்.
திருவாசகத்தில் பேசப்பெறும் செய்தி, காலம், இடம் என்னும் பாகுபாடுகளைக் கடந்த, சிந்தை செல்லாச் சேணகத்ததாய் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும் பின்னைப் புதுமையாய்ப் பிறங்குகின்ற
பேரருட் பிதுழம்பைப் பற்றியதும், அவ்வருள் ஒளியை நாடிக் கலந்த ஒரு சிற்றுயிர்க்குற்ற பலதிறப்பட்ட நிகழ்வுகளைப் பற்றியதுமாகும்.
இன்னினிய பண்ணினிமையும், பொருட்செறிவும், கலை நலமும் வாய்ந்த சொற்களால் கற்பவர் பயிற்சிக்கும் உணர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்பப் பொருள் பொலியுமாறு வளவிய பாடல்களை வழங்கிய வள்ளன்மை திருவாசகத் திறமாகும்.
திருவாசகப் பதிகங்களிடையே ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக‘ எனப் பாராட்டப் பெற்ற பகுதி திருவெம்பாவையாகும்.
மனங்கவர் திருவெம்பாவையை மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் தங்கியிருந்த காலத்தில் அருளிச் செய்ததாகக் கடவுள் மாமுனிவர் தாம் எழுதிய “திருவாதவூரர் புராணத்தில்“ குறித்துள்ளார்.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் தமது “திருப்பெருந்துறைப் புராணத்தில்“ அக் கருத்தையே ஏற்றுள்ளார். கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் திருவெம்பாவையைத் தில்லையில் அருளிச் செய்ததாகக் கருதி ஓர் ஆசிரியப்பா பாடியுள்ளார்.
இவர்களுக்கெல்லாம் காலத்தில் முற்பட்டவராகிய பெரும்பற்றப்புலியூர் நம்பி தமது “திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில்“ திருவெம்பாவையைத் திருப்பெருந்துறையிலே அருளிச் செய்ததாகக் கூறியுள்ளார்.
இவ்வாறு திருவண்ணாமலையிலும், தில்லையிலும், திருப்பெருந்துறையிலும் தெய்வ நலம் கற்பார் உள்ளத்தைக் கனிவிக்கின்றது.
பழந்தமிழ் நூல்கள் காட்டும் பாவைப்பாட்டு என்னும் வகையைச் சார்ந்தது திருவெம்பாவை.
நீர்த்துறையில் சீர்இள மகளிர் பாவையமைத்து நீராடி வணங்கும் நீர்மையைப் பொருளாகக் கொண்டது இப்பாட்டு.
பழங்காலத்தில் முழுத் திங்கள் வழியாக மாதங்கள் கணக்கிடப்பெற்றன.
அதனால் மாதத்தைத் திங்கள் என்று குறிப்பது வழக்கம்.
பழந்தமிழ் நூல்களில் மாதம் என்ற சொல் காணப்படாது திங்கள் என்றே கூறப்படும்.
நாம் இப்போது வழங்கும் மார்கழித் திங்கள் மார்கழி முழுமதியோடு முடியும்.
மறுநாள் தொடங்கும் தைத் திங்கள் தை முழுமதியோடு முடியும்.
எனவே இம் மார்கழி நீராட்டைத் தைந் நீராடல், தையில் நீராடிய தவம் எனச் சங்கச் சான்றோர் குறித்தனர்.
இன்று ‘இவ்வூராரெல்லாம் தை நீராடுப, மருவூரார் தை நீராடினார்‘ என்னும் இலக்கணச் சொற்றொடர்களும் பாவை நோன்பு புரிந்திருந்த பாங்கைச் சுட்டிக் காட்டுகின்றன.
வெப்பம் மிகுந்த நாடுகளில் தண்புனலுக்குத் தனிச் சிறப்பு உண்டாவதும், நீராடுதலே விழாவாதலும் ஆகும்.
அவ்வகையில் பாவைப் பாட்டு நீராடுதலை அடிப்படையாகக் கொண்டிருத்தலும் இயல்பாகும்.
இப்போதைய தாய்லாந்து எனும் சயாம் நாட்டில் நடைபெறும் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை ஓதப்பெறுவது தமிழ் நாகரிகம் உலகளாவிப் பரவியிருந்த மாட்சிமைக்குச் சாட்சியாகும்.
‘ஆணவக் காரிருளில் அழுந்தி உறங்காமல் அருள் வெள்ளத்தில் நீராட வருக‘ என அழைப்பதே திருப்பாவையின் உட்பொருள் என ஆன்றோர் கூறுவர்.
நாடு மழையால் நலம் பெறவேண்டும்.
வீடு சிறந்த கணவனால் வளம் பெறவேண்டும் என, நாடும் வீடும் செழித்தோங்கப் பாடும் பாவையர் பொய்கையருகே கூடிப் பரவுகின்றனர்.
வெள்ளி முளைப்ப விடியல் வந்ததும் வீடுதோறும் நாடி ஒருவரையொருவர் சென்று எழுப்புகின்றனர்.
எம் பாவாய் என அன்போடு அழைக்கின்றனர்.
இன்னுமா இருள் உறக்கம்!
எப்போது உனக்கு அருள் பிறக்கும் ! உண்டாக வேண்டாமா உருக்கம்! அப்படியென்ன தூக்கத்தில் ஆசை ! அங்கே கேட்கவில்லையா எங்கள் பாட்டு ஓசை!
என்றொல்லாம் பேசுகிறார்கள்.
பரம்பொருளை நினைத்து மகிழ்கிறார்கள்.
திருவருளின் பெருங்கருணைக்கு நெகிழ்கிறார்கள்.
இப்படி மகளிர், தமக்குள் பேசிக்கொள்வது இளமைக்குரிய ஏச்சா! வெறும் பேச்சா? இல்லை பெரும் மூச்சு – ஞான உரை வீச்சு எனக் காட்டப் பெறுகிறது.
இவ்வண்ணம் எழுந்த பாவைப்பாட்டு இதோ வீதி வாய்க் கேட்கிறது.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை அவர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள்.
உலகின் எல்லாப் பொருளுக்கும் முதலும் முடிவும் உண்டு.
தோற்றமும் இறுதியும் உண்டு.
எல்லாப் பொருளும் தோன்றவும் மறையவும் இடந்தருகின்ற – காண்பதற்கு அருமையும் உரைப்பதற்குச் சொல்லி முடியாத பெருமையும் பூண்ட பொருளாகிய – இருள் நீக்கித் தெளிவும் ஒளியும் ஊட்டுகின்ற பேரொளிப் பிழம்பாகிய சோதியின் நலங்களை உன் தோழியராகிய நாங்கள் பாடிப் பாவுகின்றோம்.
எங்கள் பாட்டொலி கேட்டும் விழித்து எழவில்லையே நீ !
நீண்ட ஒளியும் நெறியான அளவும் பொலிவான அழகும் பொங்கி மிளிர்கின்ற விழியழகி நீ !
உன் காதென்ன கேட்காத காதா? மற்றொரு தோழியோ பெருந் தேவனாகிய பரம்பொருளின் திருவடிகளை வணங்கிப் பரவும் எங்கள் குரலொலியைத் தெருமுனையில் கேட்ட அளவிலேயே உணர்வு மிகுந்து, உள்ளம் நெகிழ்ந்து மனங்கரைந்து தேம்பித் திகைத்துத் தன்னை மறந்து செயலற்று மெத்தென்ற அமளியிலிருந்து பொத்தென்று வீழ்ந்து புரண்டு செயல் மறந்து கிடக்கின்றாள்.
இத் தோழியின் உருக்கவியல்பு இப்படி உள்ளதே !
இதனை எண்ணிப் பாராய் !
எம் பாவாயே !
ஒன்பது சக்திகள் ஒருவரை ஒருவர் எழுப்பும் வகையில் மனோன்மணியாகிய சக்தி சர்வபூத தமனியை எழுப்புவதாகத் துயில் எழுப்பும் எட்டுப் பாக்களுக்கும் நுண்பொருள் கூறுபவருண்டு.
உயிர்கள் விழிப்புற்றுத் திருவருள் நலத்தில் மூழ்கி எழுந்து தெளிவு பெறுவது என்றும், அடியவர்கள் பலராகச் சேர்ந்து அருள் வழிபாடியற்றுவது என்றும் இப் பகுதிக்குப் பொருள் கூறலாம்.
இத் திருப்பாட்டில் கேவல நிலையிலுள்ள உயிர், பாடிக் கேட்டும் துயிலெழாமல் ஆணவத்தால் கட்டுண்டு இருண்முடி இறைவனை நினையாது வாளா கிடக்குமெனவும், சுத்த நிலையிலுள்ள உயிரோ இறையருட் பாடலைக் கேட்ட போதே அன்பின் பெருக்கினால் தன்னுடலை மறந்து உலகுநெறி விட்டுச் சிவநெறி புகுந்து சிவானந்தத்தில் மூழ்கித் திளைத்து நிற்கும் இயல்புடையதெனவும், இடைப்பட்ட சகல நிலையிலுள்ள உயிரோ விரதங் காப்பதோடு ஆண்டவனை அருட் பாடல்களால் துதித்தும் வழிபாடு செய்தும் புண்ணியப் பேற்றினையடைதற்கு முயலுஞ் சிறப்புடையதெனவும் உணர்த்தப்படுவதாகவும் நலம் உய்த்தறியலாம் என மூவகை இயல்பும் இப் பாடலில் குறிக்கப்பட்டன.
திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 1
========
“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே! நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!”
– திருப்பாவை செய்.1)
நல்ல சர்க்கரை இட்டுச் செய்த பொங்கல் முழுவதும் பாலிலே வெந்தது. சோறு மூடும்படிக்கு நெய் பெய்தது. எடுத்தாலோ, முழங்கை வழி வழியும்.
“பாற்சோறு மூட செய் பெய்து முழங்கை வழி வார“ – என்றாளே, ஆண்டாள். அப்படிப் போல ! நமக்குக் கிடைத்தால் என்ன செய்வோம்? மூலை முடுக்குகள் தேடி ஒளிப்போம்.
தனிமையில் இருந்து உண்டு மகிழுவோம்.
நாம் மட்டும் இல்லை. நம்மில் பலரும் இப்படித்தான். “
க்ஷருத்ர விஷயம்“ என்றால், தாழ்வான பொருள்.
“க்ஷருத்ரவிஷயாநுபவத்துக்குத் தனிமையே தேட்டம்“ – என்பர் மேலோர்.
ஆனால், “பகவத்விஷயத்துக்கு“ மட்டும் தனிமை ஆகாது.
துணை தேடுவதே தேட்டம்.
இறை அநுபவ நுகர்வுகளுக்கு பகவத்விஷயம் என்று பெயர்.
அதில் ஈடுபட்டவர்கள் பாகவதர்கள் எனப்படுவர்.
“உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்.
என்னையும் உன்னில் இட்டேன்“ – என்கிறபடி, எப்போது பகவத்தியானபரராகவே இருப்பர்.
இறைவனைப் பற்றித் தெரிந்தும் எழுதியும் வாசித்தும், கேட்டும் வணங்கியும், வழிபட்டும், பூசித்தும் அவர் பொழுது போகும். இதனால், அவர்கட்கு “நிரதிசயப் பேரின்பம்“ கிட்டும்.
அதனைத் தடங்களாக அனுபவிக்க விரும்பமாட்டார்கள்.
தான் பெற்ற இன்பம் மற்றையோரும் பெற வேண்டும் என்பதில் விருப்பம் அதிகம்.
அதனால், அனைவரையும் “சேரவாரும்“ என கூப்பிட்டு அழைப்பது அவர்தம் இயல்பு,
திவ்யநாம பஜனை, வேத பாராயணம், இவை கோஷ்டி சேர்ந்தே நடைபெறுவது கண்கூடு.
ஆழ்வார்கள் பக்திப் பெருவெள்ளத்தில் கரைந்து மூழ்கியவர்கள். இறைவனால் மதிநலம் அருளப்பெற்றவரும் கூட. ஊரும் நாடும் தம்மைப் போல ஆகி, இறைநலம் துய்த்துப் பேரின்பம் பெறவேண்டும் என்கிற உயரிய கோட்பாடு உடையவர்கள். “
அயர்ந்து வீழ்ந்து அளிய மாந்தர் கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே“ – மனிதர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர்.
ஆகில் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே“ – திருமால் திருநாமம் நானும் சொன்னேன்.
நமரும் அழைமி – கூடும் மனம் உடையீர் வந்து கூடுமினோ“ – “பாடும் மனம் உடையீர் வந்து பல்லாண்டு பாடுமினோ“ துஞ்சும் போது அழைமின், துயர்வரில் நினைமின், துயர் இவீர் சொல்லினும் நன்றாம்“ – நஞ்சு தான் கண்டீர்.
நம்முடை வினைக்கு நாராயணா எனும் நாமம்‘ – என்று எல்லாம், ஆழ்வார் திருவாக்குகள் சிறந்த மனிதாபிமானம் விரிந்த மனம், பரந்த நோக்கு, விழுமிய கோட்பாடு பிறர் நலம் போற்றும் பேருறவு – ஆகியவற்றை இவைகொண்டு உணரலாம் இல்லையா?
இவ் ஆழ்வார்களுள் தலைசிறந்தவள் ஸ்ரீ ஆண்டாள். “ஆழ்வார்கள் தம் செயல் விஞ்சிய தன்மையள்“ என்பர் மணவாள மாமுனிகள்.
“பறவை ஏறும் பரம புருஷன்“ திருமால்.
அவனையே மணவாளனாகக் கொள்ள விரும்பினாள் ஆண்டாள்.
“மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழ கில்லேன்“ என்று அவள் முடிவு. விரும்பிய கணவனை அடைய கன்னியர் நோற்கும் நோன்பு மார்கழி நோன்பு.
தோழியரோடு கூடி அதனை நோற்கத் தொடங்கினாள்.
அதற்குச் செய்யும் கிரிசைகள் பலவுண்டு.
அவற்றுள் முதலாவது நாட்காலே நீராடுதல் ஆகும்.
முந்துற எழுந்த அவள் நீராட மற்றையோரை அழைக்கிறாள்.
“நீராடப் போதுவீர் போதுமினோ“ என்று! நோன்புக்காக ஆறுகுளங்களில் குளிக்கப் போகிறவர்கள் எல்லாம் போகுங்கள்“ என்பது இதன் பொருள்.
“நீராட வருகிறவர்கள் எல்லோரும் வாருங்கள்“ என்று சொல்லி, தான் தலைமை தாங்கி உடன் புறப்படுவது அல்லவா நல்லது.
விட்டேத்தியாக ஆண்டாள், ‘போகிறவர்கள் போங்கள்“ என்கிறாளே என்று தோற்றும் உண்மை அப்படி இல்லை.
முந்துற எழுந்து வந்தவர்களை நோக்கிக் கூறும் பாசுரம் இது.
மேலும், பலரைச் சென்று எழுப்பி வர வேண்டியிருக்கிறது.
ஆகவே “போகிறவர் போங்கள்“ நான் பிறரையும் எழுப்பி அழைத்து வருகிறேன் என்ற கருத்திலே சொல்லுவது இது.
அன்புடைமைக்கோ அன்றி உறவு முறைக்கோ குறைவு வராது.
“நீராடப் போதுவீர் போதுமினோ“ என்பது போல – பாவையுள் “நாட்காலே நீராடி“ – நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்“ – நாங்களும் மகிழ்ந்து நீராட – “நீராடேதே கிடத்திரீயா“ – இப்போதே எம்மை நீராட்டு“ என ஆண்டாள்.
பல இடங்களில் நீராட்டம் பற்றிப் பேசியுள்ளாள் அவள்.
ஆனால், ஆற்றிலோ குளத்திலோ சென்று நீராடியதாகப் பாசுரம் கிடையாது.
திருவெம்பாவையில் – “எம்பிரானும் பிராட்டியும் போன்றிலங்கும் பொங்கும் மடு.
அதில் புகுந்து ஆடுவோம்“ – என்று மணிவாசகர் கூறுகிறார்.
திருப்பாவையுள் நீராட்டம் பற்றிப் பேச்சே கிடையாது.
இதன் காரணம் என்ன? ஆண்டாளுக்கு, நீராட்டம் நோன்பு எல்லாம் ஒரு வியாஜமே தவிர வேறில்லை.
வெளிப்பட்டுத் தோன்றும் காரணம்“ வியாஜம்“ எனப்படும். அவள் கருதிய உள்ளுரைப் பொருள் வேறு.
அதனால், நோன்புக்காகக் குளித்தல் வாக்யார்த்தம்.
கண்ணனைக் கூடிமகிழுதல் த்வன்யார்த்தம்.
“கிருஷ்ண ஸம்ஸ்லேஷம் தான் அவளுக்குப் புருஷார்தம்.
கண்ணனோடு கூடி மகிழுவதே அவளுக்கு நீராட்டம் என்பது!
குளத்திலோ குட்டையிலோ படிந்து நீராடுகிறோம்.
அதனால் பெறும் பயன் என்ன?
வெப்பத்தால் வந்த உடற்சூடு குறைகிறது.
உடலில் உள்ள இழுக்கும் அழுக்கும் கழிகிறது.
உடல் தூய்மை பெற்று உள்ளம் குளிருகிறது.
நாமும் மலர்ச்சியும் கிளர்ச்சியும் பெற்று புத்துயிர் பெறுகிறோம்.
பகவத் குணாநுபவமும் இது போலத்தான் !
விரகதாபம் தணிந்து, நம்மீதுள்ள பாபமும் சாபமும் போய், தூயவராகி உள்ளம் குளிருகிறோம் இல்லையா?
இதனால் இறைவனைப் பொய்கையாகவும், அவனது கூட்டுறவை நீராடலாகவும் பேசுவது தமிழ் வழக்கு“ வாசத்தடம்போல் வருவானை“ – தயரதன் பெற்ற மரகத மணித்தடம்“ என்று ஆழ்வார் பாசுரம்“ முற்குணத்தவரே முதல்வர்.
அவர் நற்குணக்கடல் ஆடுதல் நன்று“ என்று கம்பன் பேச்சு. “
பொங்கும் மல இருள் உற்று உறங்காமல் இறைவன் அருட்சவத்தில் மூழ்க வருக எனல்“ என்று, சைவமும் பேசும்.
நீராடிய மகளிர் தோற்றத்தில் ஒரு மாறுதல் உண்டு.
கொவ்வை வாய் வளர்க்கும். மைக்கருங்கண் சிவக்கும்.
இதே மாறுதல் ஆடவரோடு கூடிய மகளிர்க்கும் ஏற்படும் “கொவ்வை வாய் வளர்க்க மைக்கருங்கண்ணும் சிவப்பவே, நும் அன்னைமார்கள் சந்தையப்படில் வீணில் நீவிர் பரிகரித்தல் பாவமே“ – நீராடும் பெண்ணை விரைவில் கரையேற வேண்டும்.
தலைவன் பேச்சிது. இறைவனோடு கூடி மகிழ்வோருக்கும் உரிய அடையாளம் இதுவே.
“காலாழும் நெஞ்சு அழியும் கண் கூழலும்“ என்றுமாறு வரும் பரவச நிலையில் இங்ஙனம் ஏற்படும்.
கல்வியைப் பழந்தமிழ் இலக்கியங்கள் சுனையாடல்“ என்றே பேசும்.
மலையில் உள்ள அருவி நீரில் ஆணும் பெண்ணும் மறைந்து குளித்தலுக்குச் சுனையாடல் என்று பேர்.
வடமொழியாளரும் இக்கருத்தினை உடன்படுவர்.
“ஏஷப்ரஹ்மப் பிரவிஷ்டோஸ்மி க்ரீஷமே சீதமிவஹ்ரதம்“ – என்று பகவத் ஸம்ச்வேஷத்துக்கு குளிர்ந்த மருவைத் திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று.
இதனால் ஆண்டாள் – நோன்பு, நீராட்டம், பறைபெறுதல் என்பது எல்லாமுமே வெறும் வியாஜமாத்திரமேயாம்.
பகவத்சம்ஸ்வேஷம் என்பதே இதன் உள்ளுறை.
நோன்பு என்று நாட்டிருக்கு இசையும்படி ஒரு வெளிக்காரணம் கொள்ளுகிறாள்.
எம்பெருமான் பக்கலிலே அணுகி, இற்றைப் பறைகொள்வாள் அன்று. யாம் வந்த காரணம் ஆராய்ந்து அருள், என்று பேசுகிறாள்.
யாம் போற்றும் பொருள் கேளாய் என்று விண்ணப்பிக்கிறாள்.
இறுதியில், இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நாம் உற்றோமே ஆவோம்.
உனக்கே நாம் ஆட் செய்வோம்.
மற்றை நம் காமங்கள் மாற்று – என்று உட்கருத்தை வெளியிட்டு நிற்கிறாள்.
உனக்கு என்றும் அடிமைப்பட்டது இவ்வாத்மா.
அதன் சேஷத்வம் அழியாதபடி அதற்கு இயைந்ததான கைங்கரியமாகிற குற்றேவல் தந்து ஆத்மரக்ஷணம் செய்தருளுக“ என்பதே திருப்பாவைக்கு உள்ளுறை.
இறைவனது திருநாமங்கள் மிகப்பல.
அவை அனைத்தும் அவனது கல்யாண குணங்களையே குறிக்கும்.
குணாநுபவம் அவன்பால் நம்மை ஈடுபடுத்தி, ஆசையைப் பெருக்கும்.
ஆசைப் பெருக்கம் நிற்கின்றது எல்லாம் அவனுருவாகத் தோற்றம் அளிக்கும்.
இது பெருகப்பெருக நினைவு முதிர்ச்சியாகிய பாவனாப் பிரகர்ஷம் வரும்.
இதன் பிறகு உருஸளித் தோற்றமாக இறைக்காட்சி புலப்படும்.
இறுதியில், அவனோடு ஆடுவதும் கூடுவதுமாகி கல்வியும் புலவியும் தந்து பேரின்பம் அளிக்கும் இதன் சுவை கண்டோர், “இச்சுவை தவிர- அச்சுவை பெறிலும் வேண்டேன்“ என்பர்.
இப்படி பாடல் அடியாக இறைவனோடு கூடி மகிழும் பேற்றினை – “பிரத்யக்ஷஸாம்யம்“ என சாத்திரங்கள் கூறும் “பாவனை அதனைக்கூடில் அவனை நாம் கூடலாமே“ – பாவித்தால் போதும் பரமநிலை எய்துதற்கே‘ என அநுபவனாளிகள் பேசுவர்.
ஆண்டாள் பாவைகாட்டும் பாதையாக இதனையே சுட்டினாள்.
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிவு உரைப்பார்.
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்“ – என்று!
திருப்பாவை அநுசந்தான யாத்திரமே போதும் என்று கருத்து, பாடல் நெறி‘ எனப் பழைய தமிழ் நூல்கள் போற்றியதும் இதுவே‘
எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் படித்துப் பயன்பெறக்கூடியது இது.
அதனாலேயே ‘போதுவீர் போதுமினோ“ என்று அனைவருக்கும் பொதுவாகப் பேசினாள்.
நீராட்டம் என்பது கண்ணனோடு கூடுதல் என்று ஆகிறது. ஆண்டாளோ, அவனை மணவாளனாக அடைய விரும்பினவள்.
அப்படியானால், தோழிமார்கள் எல்லோரையும் அவனோடு கூட நீராட அழைக்கலாமா? அழைப்பாளா? என்று கேட்க தோன்றும்.
இது உலகியல் கண்ணோட்டத்தோடு கூடிய கேள்வி.
பரமார்தீக விஷயத்துக்கு இது சரியில்லை.
உலகியலில் கல்வி என்பதே மெய்யுறு புணர்ச்சி பற்றியதே.
ஆன்மீகத்தில் அவ்வண்ணமில்லை.
ஏகதாரவிரதம் என்பது அதற்குக் கட்டில்லை“.
இறைவன் ஒருவனே எல்லா ஜீவாத்மாக்களுக்கும் பரமபுருஷன்.
அவனை நோக்க ஜீவாத்மாக்கள் எல்லாமுமே நாயகியர்கள்“ என்கிறது சாஸ்திரம்.
நாயக நாயகுபாவம் என்கிற உறவுமுறை இதன் அடியாக வந்ததே ஆகும்.
பாவனை முதிர்ச்சியால் விளையும் மானஸீக உறவே இது.
ஜீவாத்மாக்கள் அனைவருக்கும் பொதுவாகையால் தான் போதுவீர் போதுமினோ என்று அழைத்தாள் ஆண்டாள்.
‘போதுமினோ‘ என்ற சொல்லுக்கு, எல்லோரும் போகுங்கள் என்று பொதுப்படப் பேசுவதாகவே பொருள்.
இன்னார் இனியார் என வேறுபடுத்தாது பகைவரையும் உட்படுத்திப் பேசும் பேச்சு..
பகைவரையும் அகப்படுத்திப் பேசல் ஆகுமா? இவர்கட்கு பகைவர் ஆகுவார் பகவத் விரோதிகள்.
தவிர தமக்கு என்று தனி
விரோதிகள் கிடையாது.
விரோதிகள் உட்பட அனைவரையும் திருத்திப் பணிகொள்ளுவது – என்பது வைஷ்ணவ தர்மம்.
‘பயன் அன்று ஆகிலும் பாங்கு அவர் ஆயிலும். செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்‘ என்று பாசுரம் “தேநமைத்ரீ பவதுநே யதி ஜீவது மிச்சஸி“ உனக்குப் பிழைக்க வழிவேண்டுமானால் இராமபிரானது நட்பு உண்டாகக் கடவது – என்று சீதாபிராட்டி கூறினாள் இல்லையா?
அது போல ஆண்டாளும் பகவத் விரோதிகளையும் திருத்தும் நோக்குடனேயே ‘போதுவீர் போதுமின்‘ என்கிறாள்.
‘ஆய்ச்சியர் சிறுமியரோய்‘ – என்னும் அளவுக்கு ஆண்டாள் இடைப் பெண்ணாக மாறினாள்.
‘நெய்யுண்ணோம், பாலுண்ணோம்‘ என்று இடையர் பேச்சும் கைவந்தது.
எழுப்பும் தோழியரோ தன்னோடு சமநிலையுடையவர்களாய் ஒத்த பருவத்தினர்.
தாங்கள் ஒருவரை ஒருவர் நினைத்தபடி சொல்லுகைக்கு ஈடான முறைமையும் உண்டு.
அப்படி இருக்க, குளிக்கப் போங்கள் என்னாமல் நீராட என்று சொல்ல வேண்டியதில்லை.
இங்கு, பொதிந்துள்ள சாஸ்திரார்த்தம் பிறிது ஒன்றுண்டு.
‘பெற்ற பிள்ளைகளாயிருந்தாலும் பகவத் ஸம்பந்தம் உடையவர்கள், ஆனால் அவர்கள் மிகவும் கௌரவிக்கத் தக்கவர்கள் – என்பது அது.
“கணபுரம் கைதொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரோ – என்று பாசுரம்.
“பொற்றாமரைக் கயம் நீராடப் போளுள்“ – எனத் தாய்மகளைக் குறித்துப் பேசும் பேச்சு.
இப்பேருண்மை துலங்கும்படி நீராடப் போதுவீர்“ எனப்பட்டது.
நீராட வாருங்கள் ‘என்னாமல் போதுமின்‘ என்றதிலும் பிறிதொரு கருத்து உண்டு.
பரம பாகவதருடைய உடையும் நடையும்கூட வைணவர்கட்கு இன்பம் தரும்.
அது மட்டும் இன்றி, அவர்கட்கு வளர்ச்சியும் மலர்ச்சியும் அதுவே“ என்பது திருமாலடியார்களது கோட்பாடு.
எனவே, அவர்கள் தன் சொற்கேட்டு போகும் வழிப்போக்கே இவர்கட்கு தன்பேறு ஆக இருக்கும் இல்லையா?
அவர்கள் முன்னே போக, அந்த நடையழகு கண்டு களித்து தாங்கள் பின்னே போக நினைக்கிறாள் ஆண்டாள் !‘
நாங்கள் வாழும்படி புறப்பட்டு இங்ஙன் நடத்தல் ஆகாதோ? எங்கட்கு முன்னர் நடந்துபோய் எங்களை வாழ்வியுள்கோள்“ – என்றது கருத்து“. “போதுவீர் போதுமினோ“ என்றதில் இந்த நயமுண்டு.
நம்மைப் படைத்தவன் இறைவன். ரக்ஷிப்பவனும் அவனே ! அவனை அடைந்து தொண்டு பூண்டு ஒழுகுவதே நமது கடன்“- என்பது நமக்கு வகுத்த விஷயம்.
அவர்க்காநுபவம் போன்றவை வகுத்த தல்லாதது.
அதற்குப் பல தகுதிகள் தேவை.
வகுத்த விஷயத்தில் இச்சை ஒன்றே போதுமானது.
இதில்லாமையாலே, பகவத் லாபத்தை இதுவரை நாம் இழந்தோம்.
‘அல்லோம்‘ என்னாதார் அனைவரும் இதற்கு அதிகாரிகள். ஆசை உடையோர்க்கு எல்லாம் – ஆரியர்காள்! கூறுமின்“ என்றார் இராமாநுசரும். அப்படியே அவர் ஆனுயுடையோரை எல்லாம் “போதுவீர் போதுமின்“ என்று அழைத்து தரு மந்திரோபதேசமும்செய்தார்.
அவ்வண்ணமே ஆண்டாளும், “இச்சை தவிர வேறு தகுதி வேண்டியதில்லை.
ஆனுயுடையோர் அனைவரும் நீராடப் போகலாம்“ என்கிறாள் “போகிறவர்கள் எல்லாம் போகலாம்‘ – என்ற கருத்திலே தான் ‘போதுவீர் போதுமினோ“ என்ற திருவாக்கு எழுந்தது
திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 2
========
2. வையத்து வாழ்வீர்காள்!
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
– திருப்பாவை செய்யுள்.2
எதைச் செய்தாலுமே நல்ல முறையில் திருத்தம் உறச் செய்ய வேண்டும்.
“செய்வன திருந்தச் செய்“ என்ற பழமொழி எதைச் செய்யவேண்டும். எப்படிச் செய்யவேண்டும்? எனக் கருதுதல் நல்லது. “
செய்தக்க அல்ல செயக்கெடும். செய்தக்க செய்யாமையானும் கெடும்“ என்பர் திருவள்ளுவர்.
கொள்ளுவன, தவறுவன, அறிந்து, தெரிந்து செய்வோரே வெற்றி பெறுவர்.
இங்ஙனம் விதிவிலக்கு அறிந்து செய்வது “செய்யும்முறை ஞானம்“ இதனையே “கிருத்யாகிருத்ய விவேகம்‘ஹ‘ என்பர் வடநூலார்.
ஆண்டாள், “நீராட ஆசை ஒன்றே போதுமானது. வருகிறவர்கள் அனைவரும் வாருங்கள்“ – என்று அழைத்தாள் அல்லவா? அப்ப வந்தவர்களைப் பார்த்து – நமது நோன்புக்குச் செய்யத்தக்கவை என்ன? செய்யத் தகாதவை என்ன? என்று சொல்லுகிறாள்“.
நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ“ என்று ஆண்டாள், “நீராடப் போதுமின்“ என்று தோழியரை அழைத்தாள். கேட்ட தோழியருக்கு “கிருஷ்ணாநுபவமே“ அதன் உள்ளுரை என்று பட்டது.
அதில், ருசியும் ஆசையும் உடையார் பலரும் ஓரூராய்த் திரண்டு வந்தனர்.
அதுகண்டு, அவளுக்குப் பெருவியப்பும் மகிழ்ச்சியும் உண்டாயிற்று.
அதற்கு உரிய காரணங்கள் பலவுண்டு.
பொதுவாக, நல்லது சொல்லாரும் கேட்பாரும் உலகில் மிகவும் அரியர். இலங்கை அகப்பட விபிஷணன் ஒருவனே அப்படி இருந்தார்.
ஆனால், அதன்படி கேட்டவர் எவருமே இல்லை.
“சீதையை விடுவது உண்டோ ! இருபது நிலத்தோள் உண்டால்“- என்று மறுத்தாள் இராவணன்.
ஆனால், இங்கு தன்னூல் கேட்டு, ஊராய்த் திரண்டது வியப்பிற்கு உரியது தானே ! நல்லதுக்கு நாலுபேர் என்பர்.
இங்கோ தோழியர் திரள் முழுவதுமே வந்து கூடிற்று.
இவர்களை, நோக்கி ஆண்டாள் “வாழ்வீர்கான்“ என்கிறாள்.
வாழப்பிறந்தவர்களே- என்று கருத்து.
இவ்வுலகினை, இருள் தருமா ஞாலம்“ – கொடுவுலகம்“ என்றெல்லாம் கூறுவர் ஞானிகள் தன்னுள் அகப்பட்டோரை மதிமயக்கி இழிநிலைக்கு ஆட்படுத்தி அழியச்செய்யும்.
இதில் இருந்து தப்பி, பகவத் விஷயத்தில் ஈடுபடுவது – பாலை நிலத்தில், நீரூற்றுப் போலே அல்லவா? மானிடம் அறிந்து மடிவுருவண்ணம், ‘போதுமின்“ என்ற உடன் வந்தவர்கள் – “வாழப்பிறந்தவர்கள் தாமே!“ தேகமே ஆத்மா, போகமே புதுஷார்த்தம்“ என மருண்டு திரிவோரை “இறப்பதற்கே இருக்கின்றாரே“ என்றது ஒரு தமிழ்க்கவி.
அவர்களோடு இவர்கட்கு உள்ள வாசி தெரியும்போது இவர்களை “வாழ்வீர்கான்“ என்று விளித்தது பொருந்தும்.
வெறும் வியப்பில் வந்த பேச்சில்லை. இனி, மற்றொன்றும் உண்டு.

Add a Comment