POST: 2023-03-13T11:07:31+05:30

தினசெய்தி – 13 3 2023
பக்கம் எண் : 4

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 95

நீதிக்கு நெஞ்சைத் தருவதே தானம் !


முனைவர்

ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்,

தமிழ்ப் பல்கலைக்கழகம்.

நாடகம், திரைப்படம், மேடைப் பேச்சு, போர்க்களம், சிறைக்கூடம், அரசியல் தலைமை என்பவைகளை அணிகலன்களாக அணிந்து அணிந்து மகிழ்ந்த தன்மானத் தனிப்பேரொளி முத்தமிழறிஞர் கலைஞர் ஆவார்.

தன்னலம் இல்லாதவர், தமிழ்நலம் போற்றியவர் கொள்கை உரம் பெற்றவர்.

நால்வகைப் பிறப்பா ?
எடடா வாளை, நறுக்கிடு நாவை!
என நெஞ்சுயர்த்திப் பகுத்தறிவுப் படைக்கலன்கள் உருவாக்கிய பாசறை அமைத்தவர்.

எல்லோரும் ஒரு தாயின் செல்வர்- இதை எண்ணாத மக்களை மாக்கள் என்போமே! என்ற பாவேந்தரின் வரிகளுக்குப் பனுவலாகத் திகழ்ந்து சாதியை மறுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆவார்.

தலையைத் தந்திடவும் தயங்காமல் தமிழைக் காத்தவர்.

ஆயிரம் இடறுகள் மோதினாலும் அஞ்சாமல் என்னோடு துணை நிற்கும் ஏந்தல் என்ற பேரறிஞர் அண்ணாவின் பாராட்டினைப் பெற்றவர்.

மடல் எழுதி மடல் எழுதி; கவி எழுதி கவி எழுதிக் கதைகளும் உரையாடல்களும் எழுதி எழுதி விரல்கள் தேய்ந்தவர்.

சங்க இலக்கியங்களில் பொங்கும் வரிகளைப் பொழுதெல்லாம் எண்ணி எண்ணி இலக்கியங்களில் தோய்ந்தவர்.

எம்மொழிக்கும் இல்லாத பெருமை என் மொழிக்கு உண்டு என்னும் புகழ் மொழியைச் செம்மொழி என்று சொல்லி ஆணையிடச் செய்தவர்.

நிதிதருவது மட்டுமல்ல தானம்! நீதிக்கு நெஞ்சைத் தருவதே தானம்! என்று வாழ்ந்து காட்டிய வள்ளல்.

முத்தமிழறிஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி நம் தமிழர்களுக்கு அறநெறிச் சாரம் ஆகும்.

முத்தமிழறிஞர் கலைஞர் வரைந்த நெஞ்சுக்கு நீதியிலிருந்து சில பகுதிகள் பின்வருமாறு;

பிறந்த ஆண்டு

“வாழ்க்கை வரலாறு எழுதுகிற அளவுக்கு நீ என்ன அவ்வளவு பெரிய மனிதனாகி விட்டாய்?

யாரோ கேட்பதல்ல; என் நெஞ்சே என்னைக் கேட்டுத்தான் முடித்தது.

ஆனால் அதற்குரிய பதிலையும் அது தன் கைவசம் வைத்துக் கொண்டிருந்தது.

பெரிய மனிதர்களுக்குத்தான் வாழ்க்கையும் வரலாறும் சொந்தமா? சின்னவர்களுக்குக் கிடையாதா?
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை வரலாறு உண்டு, அதனை அவன் எழுதி வைக்க நினைப்பதில்லை.

எழுத நேரம் இருப்பதில்லை.

அல்லது கோத்துத் தொகுத்து எழுதத் திறமை பெற்றிருப்பதில்லை.

ஆனால் இரண்டு சிறைச்சாலைக் கைதிகள் தங்களுக்குள்ளாகவே, தங்கள் வாழ்க்கைக் கதைகளைப் பேசிக் கொள்கிறார்கள். கேட்க முடிகிறது.

வயது முதிர்ந்த இரண்டு ரிக்க்ஷாக்காரக் கிழவர்கள், மரத்து நிழலில் தங்கள் வாகனங்களின்மீது ஒயிலாகச் சாய்ந்தவாறு தங்கள் வாழ்க்கையின் சுவையான கட்டங்களை ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்கள்

சத்திரத்துத் திண்ணையில், தூக்கம் வராமல் படுத்திருக்கும் இரு சாமியார்களின் உரையாடல்களை ஊன்றிக் கவனித்தால் அங்கேயும் அவர்கள் வாழ்க்கை வரலாறுதான் மரணப் படுக்கையிலே தன்னுடைய முடிவை உணர்ந்து கொண்ட நோயாளியின் மனக் கண்ணில் சப்தமின்றிச் சுற்றிச் சுழலும் வாழ்க்கை வரலாற்றை அவன் எழுதவும் முடியாமல், பேசவும் முடியாமல், தன் நெஞ்சிலேயே திரைப்படமாக ஓடவிடுகிறான் மரண முகப்பிலும் அவனையறியாத புன்னகை, பெருமூச்சு, கண்ணீர் – இவையத்தனையும் அவனது வரலாற்றின் பல்வேறு அத்தியாயங்களே யாகும்.

ஒவ்வொரு தனி மனிதனுடைய வரலாற்றிலும் பெரிய சமுதாய மாற்றம் ஏற்படக் காரணம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

அரசியல் புரட்சிக்கு அவன் வாழ்க்கை வரலாற்றில் இடமில்லாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் நாட்டில் நடைபெறுகிற மாற்றமானாலும் புரட்சியானாலும் அவனைப் போன்றவர்கள் எல்லாம் சேர்ந்ததுதான் சமுதாயம்.

அதில் அவனையறியாமல் பங்கு பெற்றிருக்கக் கூடும்.

அவன் சமுதாயத்திலே ஓர் அங்கம் – நாடு என்றே உண்மையான நிலையை யார்தான் மறுக்க முடியும்?

ஆகவே அவனுக்கு நாட்டின் மாற்றங்களில் எப்படியோ ஒரு பங்கு இருக்கிறது.

அதை அவன் வரலாற்றுக் குறிப்பாக எழுதுகிற அளவுக்கு அவ்வளவு பெரிய விஷயமாகக் கூட அவன் நினைக்காமல் இருந்திருக்கக்கூடும்.

ஒரு ஊரையே அழிக்கின்ற புயல் காற்றில் சிக்கிப் பறக்கின்ற ஒரு மரக்கிளை.

ஒரு வீட்டின் முகப்பில் விழுந்து முகப்பை இடித்துத் தள்ளுகிறது.

இதில் செயல்பட்டது புயல் காற்றா? மரக் கிளையா? எப்படியோ அந்த மரக் கிளையின் வரலாற்றில் ஒரு சம்பவம் இணைந்து விடுகிறது.

இதனை எல்லாம் சிந்தித்துப் பார்த்த பிறகுதான், என் நெஞ்சுக்கு நீதி வழங்கும் தெம்பு ஏற்பட்டது.

தீர்ப்பு கேள்வி வடிவத்திலேயே கிடைத்தது.

“பெரிய மனிதர்களுக்குத்தான் வாழ்க்கையும் வரலாறும் சொந்தமா? சின்னவர்களுக்குக் கிடையாதா?
இந்தத் தீர்ப்புக்குப் பிறகு என் எழுதுகோலின் வேலை தங்கு தடையின்றித் தொடங்கிவிட்டது.

ஜூன் மூன்றாம் தேதி எனக்குப் பிறந்த நாள் கொண்டாடினார்கள்.

பிறந்த நாளைப் பற்றிச் சிந்தனையாளன் ‘ரூசோ’ சொன்னதை நான் நினைவுகூரத் தவறவில்லை.

“என்னுடைய முதல் துன்பம் மனிதனாகப் பிறந்ததுதான்! என்றான் அவன்.

பிறவி உரிமைகளைப் பேணும் வகை பற்றி மனித குலம் முழுமைக்கும் போதித்த அந்தப் பேரறிஞன் தன் பிறந்த நாளைச் சபித்துக் கொரித்துக் கொண்டிருந்தது வேடிக்கையான ஒன்றுதான்.

அவன் பிறந்தபோது, அவன் பிறந்த வீடும், நாடும், நாட்டின் அரசியல் சமுதாயச் சூழ்நிலைகளும் இருந்த அலங்கோலங்கள் அவனைப் பெரிதும் கலக்கியிருக்கக் கூடும்.

அதனை எண்ணி ‘ஏன்தான் பிறந்தோம்?’ என்று அவன் நெடுநாட்களுக்குப் பிறகு தன்னைத் தானே நொந்து கொண்டிருக்கக் கூடும்.

என் பிறந்த நாள் அத்தகு சூழ்நிலையில் பிறக்கவில்லை.

நான் பிறந்தபோது எண் குடும்பம் செல்வச் சூழ்நிலையில் தோய்ந்திருக்கவில்லை என்றாலும், என் பெற்றோர் வறுமையின் இருட்குழியில் கழுத்து முட்ட அமிழ்ந்திருக்கவில்லை.

அதேபோல, என் அன்னை பூமி அடிமை விலங்கிற்கு ஆட்பட்டிருந்தது

எனினும், ரூசோ பிறந்த நாள் பிரான்சினைப்போல், நிலைகுலைந்து நெறி தவறி அழிவினை நோக்கி ‘அசுர’ வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கவில்லை.

ஆகவே, மனிதன் பிறக்கும் போதே அழுதுகொண்டு பிறப்பதைப்போல வாழ்நாள் முழுதும் பயனற்றுத் தேம்பித் தேய்ந்து விடுவதாக ரூசோ கருதியதைத் தவறு எனச் சுட்டிக் காட்டிய வால்டேரைப் போல் நானும் பிறந்த நாள் பற்றி ரூசோ கொண்ட கருத்துக்கு மாறுபடுகிறேன்.

நினைத்து நினைத்துக் குமுறிக் கதற வேண்டிய நாட்கள், மனித வாழ்க்கையில் எத்தனையோ இருப்பதுண்டு. அதற்கு நான் விதி விலக்கு அல்ல.

எனினும் நான் பிறந்த நாள். என் திருமணம் நடைபெற்ற நாள். நான் முதன் முதலாக அன்புத் தெய்வத்தை-என் அருமைத் தலைவனைச் சந்தித்த நாள். மொழி காக்கும் போரில் முதன் முறையாகச் சிறையேகிய நாள் – அத்தனையும் எனக்கு இன்பம் தருபவை.

நினைத்து மகிழத் தக்கவை.

பிறந்த நாள் நட்சத்திரத்தைப் பற்றி ஆருடங் கணித்து நல்லது கெட்டது சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும், நான் பிறந்த ஆண்டு இருக்கிறதே.

அது உலகத்தில் நல்லது கெட்டதுகளை வெகு துல்லியமாகக் கணித்த ஆண்டுகளில் ஒன்றாகும்.

நான் பிறந்ததன் பயனாய் நாட்டுக்கு ஏற்பட்ட நன்மை தீமைகள் பற்றியும், என் தாய் நாட்டுக்கு நான் ஆற்றியுள்ள தொண்டுகளின் மதிப்பீடு பற்றியும் பின்னால் வரும் குறிப்புகள் கணிக்கப்படும்.

ஆனால் நான் பிறந்த ஆண்டு இருக்கிறதே.

அந்த ஆண்டின் நாட்டு நடப்பும், அகில உலக அரசியல் நடப்பும் எப்படிப்பட்டதாக இருந்தன என்பதைப் பின்னால் படித்து நினைவு கூரும்போது எனக்கு மகிழ்ச்சியே பிறந்தது.

1924- இருபதாம் நூற்றாண்டு எப்படி யிருக்கும் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் ஓரளவு தெளிவு பெற்ற காலம். உலக சரித்திரமே காணாத அளவுக்கு அழிவையும் தேக்கத்தையும் ஏற்படுத்திய முதலாம் உலகப் போர் நடந்து உலகத்து வல்லரசுகள் அனைத்தும் களைத்துச் அனைத்துக் கிடந்த காலம்.

அதே நேரத்தில் ‘காலனி’ மக்களிடம் ஏறக்குறைய எல்லா வல்லரசுகளும் கெடுபிடிகளையும் ஆகாத சட்டங்களையும் அமல்படுத்தி ஆழம் பார்க்கத் திரிந்து கொண்டிருந்த காலம்.

உலகப் போரில் ஈக்கள் எறும்புகளைப்போல மனிதர்கள் செத்து மடிந்ததை நேரில் கண்ட சாகாத காலனி மக்கள்.

‘உயிர் எமக்கு வெல்லமல்ல!’ என்று துணிந்து ஏகாதிபத்திய வெறியர்களை எதிர்க்கக் கிளம்பிய காலம். பழைமைக்கும் புதுமைக்கும் இடையே இருந்த வெட்டவெளி வெகுவாகக் குறைந்து இரண்டும் நேருக்கு நேராக ஒவ்வொரு துறையிலும் மோதிக் கொண்டிருந்த காலம்.

தொழிலாளர்கள் தங்கள் அடிமைத்தனத்தைத் துறந்து உரிமைகளைப் பெறப் பட்டியல் போட்டுக் கொண்டிருந்த காலம்.

நிலப் பிரபுத்துவமும், ஜமீன்தாரி முறையும் தனது கடைசி மூச்சை வெளியிட்டுக் கொண்டிருந்த காலம். இந்தியாவில் தெற்குப் பகுதியில் சமுதாய நீதிக்கும்.

சமூகப் புரட்சிக்கும் ஏறக்குறையக் கால்கோள் விழா நடத்திய நேரம், வடக்கில் வகுப்புக் கலவரங்கள் வளர்வதற்கான ‘அடிப்படைகள் உருவான காலம்’.

இந்தியா, ஆங்கிலேயரிடம் அடிமையாக இருக்கக் கூடாது என்பதில் ஒற்றுமையும், அடிமை ஆட்சியிலிருந்து விடுபட வழி முறைகள் யாவை என்பதில் பலமான கருத்து வேறுபாடும், அவிழ்க்க முடியாத சிக்கல்களும் உருவாகி விட்டிருந்த காலம்.

ஏதாவதொன்று நிகழவேண்டும் என்பதை யாராவது தெளிவாகச் சொல்ல மாட்டார்களா என்று ஏங்குவதும் மக்களின் அன்றாட வாடிக்கையாகிவிட்டிருந்த காலம்.

1924-தமிழகத்தின் ஆயிரமாண்டு இருட்படலத்தையும் விலக்கி நாட்டில் எல்லாத் துறைகளையும் புதுமைக்கு ஏற்ப ஒரேயடியாகப் புரட்டிப் போட்ட மேதை – என் ஆசான் அறிஞர் அண்ணா அவர்கள் அப்போது பதினைந்து வயது இளைஞனாக உயர்நிலைப் பள்ளியில் ஒரு பெரிய சரித்திரத்தின் கதாநாயகனாகத் தன்னை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

இந்தியா, நீண்ட உறக்கத்தைக் களைந்து, சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்ற நேரம் அது.

காந்தியடிகளின் வருகையும் அவர்தம் அரசியல் ஈடுபாடும் புது வகையான எழுச்சியை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

‘பூரண சுயராஜ்யமா? கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சுயாட்சியா?’ என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் இரண்டு பட்டுக் குழம்பிக் கொண்டிருந்தார்கள்.

லஜபதிராய், சுபாஷ் சந்திரபோஸ், சத்தியமூர்த்தி, சீனிவாச அய்யர், சி.ஆர். தாஸ், மோதிலால் போன்றவர்கள் காந்தியாருடன் அவ்வப்போது பிணக்குக் கொண்டு வாதப் பிரதிவாதங்கள் ஓயாது நடத்திக் கொண்டிருந்த வேளை அது.

காங்கிரஸ் பேரவையின் தலைவராக அதிகாரப்பூர்வமாகக் காந்தியடிகள் தலைமையேற்ற சிறப்பு 1924-க்கு மட்டுமே உண்டு.

அதற்கு முன்பும் அதற்குப் பின்னாலும் அதிகார பூர்வமான தலைவராகக் காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்ததில்லை.

1924-இல் பெல்காம் பேரவையில் உருவான திட்டங்களே இன்றுவரை காங்கிரஸ் கட்சியில் பூரணத்துவம் பெற்றுள்ளன.

1924-இல் உருவான திட்டந்தான் இன்று தந்தை பெரியார் என நாடு போற்றுகின்ற ஈ.வெ.ராமசாமி அவர்களை வைக்கம் வீரராக மாற்றியது.

தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் ஏகாதிபத்தியத்திற்குச் சண்டமாருதமாக மாறியது இந்தக் காலத்தில்தான்.

தொழிலாளர் இயக்கம் தமிழகத்தில் வேரூன்றத் தலைப்பட்டதும் இந்த நாட்களில்தான்.

காந்தியின் அகிம்சைப் போதனைகள் ஆழமாகப் பதிந்தது இந்த ஆண்டில்தான்.

அதேபோல் ‘சௌரிசௌரா’ நிகழ்ச்சிகள் போன்ற கொடிய பலாத்காரம் தலை விரித்தாடியதும் இந்த ஆண்டில்தான்.

இந்து முஸ்லிம் வேற்றுமை வட பகுதியிலும் காலூன்றியதும் இந்த ஆண்டில்தான்.

1924-ஐப் போல் கேள்விக் குறியாக இருபதாம் நூற்றாண்டின் எந்த ஆண்டும் இருக்கவில்லை.

அந்த ஆண்டில் பிறந்த காரணந்தான்போலும் நானும் வாழ்நாள் முழுதும் பலருக்குக் கேள்விக் குறியாக இருந்து வருகிறேன்.

ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை யேற்று இடையில் இரண்டே ஆண்டுகளில் உடல் நிலையின் சீர்கேடு காரணமாக வைசிராய் ரீடிங் பிரபுவினால் காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்டது 1924 பிப்ரவரியில்தான்.

முற்றிலும் புதியவராக, இந்திய அரசியலை ஆன்மீக வாதிக்கும் புரட்சிவாதிக்கும் இடையில் மிக லாவகமாக நடத்திச் செல்லும் ‘உத்திகளைக் கற்றவராக அப்போது அவர் சிறையிலிருந்து வெளி வந்தார் இரண்டாண்டுச் சிறை வாசத்தில் காந்தியடிகள்.

கீதையை மனப்பாடம் செய்தாராம். குரானைப் படித்தாராம் தமிழ் கற்க முயன்றாராம்.

அனைத்துக்கும் மேலாக இந்தியாவின் கிராமப்புறங்களில் இருந்துதான் விடுதலைக்கான ‘கனல்’ கிடைக்க முடியும் என்று சிந்தித்துத் தெளிந்தாராம்.

இளைஞர் ஜவஹர்லால் நேரு. தமது 35-ஆவது வயதில் காங்கிரஸ் மகாசபையின் பொதுச் செயலாளராக முதன் முதலாக அவருடைய விருப்பத்திற்கு மாறாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஆண்டு அது.

அகிம்சை, சத்தியம், உழைப்பு, சிறைவாசம், சுதந்திரம், தீண்டாமை ஒழிப்பு என்று வீட்டுக்கு வீடு, மனிதாக்கு மனிதர் மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்த சூழ்நிலையிலான 1924-இல் தான் நான் பிறந்தேன் என்பதை எவ்வளவு பெருமையோடு சொல்லிக் கொள்ள முடிகிறது !

அது மட்டுமல்ல! பிற்காலத்தில் எனது அரசியல் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் நான் ஓயாது சொல்லி மகிழ்ந்த கமால் பாட்சாவின் சீர்திருத்தம் 1924-இல்தான் உருவானது – செயல்படத் தொடங்கியது.

இந்த ஆண்டில்தான் புரட்சி வீரன் லெனின் மறைந்தார்.

உலகத்தின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து, இன்னொரு சகாப்தம் இந்த ஆண்டில் தோன்றியது.

உலகமெங்கும் ஒரே நேரத்தில் ரத்தப் புரட்சி என்கிற ‘ட்ராட்ஸ்கிய’ச் சித்தாந்தம் அடிபட்டுப் போய், அந்தந்த நாடுகளுக்குற்ற சூழ்நிலைக்கேற்பப் புரட்சி என்று கம்யூனிச இயக்கம் இறங்கி வந்த காலமும் அதுவே.

என் தலைவர் அண்ணா அவர்களிடத்தில் எனக்கிருக்கும் வெறித்தனமான பக்திக்கீடாகத் தன் தலைவன் லெனினிடம் வெறி கொண்ட ஸ்டாலின் பதவிக்கு வந்த நேரம் அது! டிராட்ஸ்கீய வாதம் – மெத்தப் படிப்பு – தன்னிடத்தில் தானே நம்பிக்கை கொள்ளாத ராஜதந்திரம் அனைத்தும் அந்த ஆண்டில் அடிபட்டுப் போய், உழைப்பின் ஆற்றல், தலைவனிடத்தில் தளராத பற்று. மக்களுக்குச் சேவை செய்வதில் தன்னலமற்ற ஊக்கம்-ஆகியவைதான் உறுதியான தலைமைக்கு அழகு என்று அறுதியிட்டுக் கூறுவது போல் ஸ்டாலின் அந்த ஆண்டில்தான் உலகத்தின் மூன்றில் ஒரு பங்கு இயக்கத்தின் தலைவனாகவும் பொறுப்பேற்றான்.

1924-இல்தான் பவேரியாச் சிறைக் கோட்டத்தில் ‘மெயின் காம்ப்’ என்ற தனது சுயசரிதையை எழுதிக் கொண்டிருந்தான் அடால்ப் ஹிட்லர்.

அந்தச் சுயசரிதை பிற்காலத்தில் எத்தனை நாடுகளின் சமுதாயங்களின் பழஞ் சரிதையைத் தலைகீழாக மாற்றிப் போட்டு விட்டது என்பதை உலகம் அறியும்.

நாசிசம், பாசிசம், கம்யூனிசம் போன்ற தத்துவங்கள் ஓங்கி வளர்ந்த 1924-இல்தான் இந்தியாவில் காந்தியடிகள் காட்டிய – அன்பின் காரணமாகத் தனி மனிதருக்குச் சமுதாயம் காண்பிக்க வேண்டிய தனி மரியாதையை, மகத்தான அன்புணர்வை மக்கள் கூட்டம் வெளிப்படுத்திக் காட்டிற்று.

மொத்த இந்தியாவில், காந்தியடிகளைப் போல், அந்தந்த மாநிலங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த தலைவர்கள் அறிமுகமானால்தான் இந்தியாவின் அரசியலை ஜனநாயக ரீதியில் நடத்த முடியும் என்ற கருத்தும் முளைவிடத் தொடங்கிய காலம் இதுவெனக் கூறலாம்.

இத்தகு கலவையான சூழ்நிலைகளுடே வழி நடந்த 1924-இல் நான் பிறந்தேன்.

நான் பிறந்த 1924-இல்தான் மைசூருக்கும் நம்முடைய மாநிலத்திற்கும் காவிரி நீர் ஒப்பந்தம் ஏற்பட்டது,

அந்த ஒப்பந்தம் ஐம்பது ஆண்டு காலத்திற்குச் செய்து கொள்ளப்பட்டது.

1974-இல் மீண்டும் அந்த ஒப்பந்தம் மறு பரிசீலனை செய்யப்படும் நிலையில் இருக்கிறது.

அதில் தமிழ் நாட்டின் உரிமையைப் பாதிக்காத நிலையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமென்பதில் தமிழர்கள் கவலை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

அதற்கிடையே இப்போது மைசூர் முதல்வர் ஹேமாவதித் திட்டத்தைத் தமிழக அரசின் எதிர்ப்பிற்கிடையே அமைக்கத் துணிந்துள்ளார். தமிழக அரசு தன்னுடைய வன்மையான எதிர்ப்பை மத்திய அரசிற்குத் தெரிவித்திருக்கிறது.

மைசூர் – தமிழ்நாடு ஒப்பந்தம் நடந்த 1924-ஆம் ஆண்டு நான் பிறந்த போது, அந்த ஒப்பந்தத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்படும் ஹேமாவதி அணைக்கட்டுத் திட்டத்தை எதிர்த்து நிற்கும் தமிழகத்தின் முதலமைச்சராக ஆவேன் என்று யார்தான் எண்ணியிருப்பார்கள்?

என்னைப் பெற்றவர்களே கூட என்னை ‘ராஜா’ என்றுதான் அழைத்திருப்பார்களே தவிர, ‘மந்திரி’ என்றா அழைத்திருப்பார்கள்?
என்னைப் பற்றி எழுதுவதற்கு முன்பு என் பெற்றோர்களைப் பற்றிய சிறு குறிப்பாவது தர வேண்டாமா?

தஞ்சை மாவட்டத்தில் அழகான சிற்றூர்களில் ஒன்று திருக்கோளிலி! திருக்குவளை என்றும் அதனை அழைப்பார்கள்.

திருவாரூரிலிருந்து பதினைந்தாவது மைலில் உள்ள கிராமம்.

அங்கேதான் எங்கள் குடும்பம். எழில் நிறைந்த திருக்குளம். குளத்தைச் சுற்றிச் சோலை! எதிரே சிவன் கோயில்! மேற்கு எல்லையில் முனியன் கோயில்! தெற்கெல்லையில் ஐயனார் கோயில், இவையெல்லாம் நான் கண்ட திருக்குவளை.

இப்போது அந்த அழகில் முக்கால் பகுதி குறைந்து விட்டது.

என் தந்தையார் காலத்திலே மிகச் சிங்காரமாக இருந்த ஊர் அது.

– தொடர்புக்கு: “thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *