POST: 2023-03-20T09:40:55+05:30

தினசெய்தி – 20 3 2023
பக்கம் எண் : 4

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 96

எங்கெங்கிலும் முத்தமிழறிஞர் கலைஞர் !

– முனைவர் ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்.

முத்தமிழறிஞர் கலைஞர் வரைந்த நெஞ்சுக்கு நீதியிலிருந்து சில பகுதிகள் பின்வருமாறு;

தந்தையின் துணிவு
அய்யாத்துரை – பெரியநாயகத்தம்மாள் இருவரின் இல்வாழ்க்கை அன்புச் சின்னமாகஅம்மையார் கர்ப்பவதியானார்.

துணைவி ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகிறாள்.

நாம் தந்தையாகப் போகிறோம் என்ற பூரிப்பில் அய்யாத்துரை அந்த வட்டாரத்தில் உள்ள பெரிய கோவில்கள். குட்டித் தேவதைகள் எல்லாவற்றிற்கும் பூஜை செய்வித்தார்.

அர்ச்சனைகள் நடத்தினார். படையல்கள் பள்ளயங்கள் போட்டார்.

ஊர் மக்கள் அந்த இன்பச் செய்தி கேட்டு மகிழ்ந்தனர்.

எதிர்பார்த்தவாறு குழந்தை பிறந்தது. மிக அழகான குழந்தை.

குழந்தை பிறந்த ஏழாம் நாள் அதன் தாயார் பெரியநாயகத்தம்மாளை இயற்கை இரையாக்கிக் கொண்டது.

துணைவியை இழந்த வேதனை தாங்காமல் கவலையால் துவண்ட இரண்டாம் மாதம் தந்தையும் கண்ணை மூடிவிட்டார்.

இருவரையும் இழந்து விட்டு எதைப்பற்றியும் கவலைப் படாமல் அந்தப் பச்சைச் சிசு படுத்துக் கிடந்தது.

வயிறு காய்கிற நேரத்தில் மட்டும் அழும்.

அதன் வயிற்றுப் பசியை யார் போக்குவது? எப்படிப் போக்குவது? குளக் கரையில் அழுதுகொண்டிருந்த திருஞான சம்பந்தருக்குப் பார்வதி வந்து பால் கொடுத்துப் பசி தீர்த்தாள் என்பது கதைதானே தவிர, நடைமுறை அல்ல.

அன்புக்கு அப்போதெல்லாம் திருக்குவளையில் குறைவேயில்லை.
தில்லையம்மாள் – மீனாட்சி என்ற மங்கையர் திலகங்கள் இருவர் அந்தக்குழந்தையை வளர்க்கும் பொறுப்பை மேற்கொண்டனர்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது என்பார்களே.

அப்படியே அந்தக் குழந்தை அவர்கள் மடியிலும் தோளிலும் வளர்ந்தது.

முத்து ஒன்றை எடுத்தது போன்ற மகிழ்ச்சியோ அல்லது சிப்பியின் அழிவிற்கு முத்து காரணமாய் இருக்கிறது என்பதாலோ தெரியவில்லை.

குழந்தைக்கு முத்துவேல் என்று பெயரிட்டார்கள்.

அந்தக் குழந்தைதான் என் தந்தை யென்று உங்களுக்குக் கூறி, ஒரு பெருமூச்சுவிட்டுக் கொள்கிறேன்.

என் தந்தை நல்ல விவசாயி; சிறந்த வித்வான்; கவி எழுதும் ஆற்றல் பெற்ற புலவர்;வட மொழிக் கிரந்தங்களில் தனித் தேர்ச்சி பெற்றிருந்தார்.

பாரத, ராமாயணக் கதைகளைப்பண்டிதரை விட அழகாகச் சொல்லுவார்; கிராமத்து நிகழ்ச்சிகளை வைத்து உண்மைக் கதைகள் பல இயற்றியிருக்கிறார்.

கிராமிய மெட்டுகளில் அவர் இயற்றிய கேலிப் பாடல்களை இன்றைக்கும் திருக்குவளையில் பலர் பாடக் கேட்கலாம்.

அவர் இயற்றிய பாடல்கள் உண்மையின் படப்பிடிப்பாகவும், யாருக்கும் அஞ்சாமல் கருத்துக்களை வெளியிடுபவைகளாகவும் இருந்தன.

குத்தகைக்கார அய்யர் என்று ஒரு பெரும் பண்ணைக்காரர் திருக்குவளையில் இருந்தாராம்.

அவரிடத்திலே அனைவரும் அஞ்சி நடுங்கிக் கிடந்த காலம்; அப்போது ஒரு பாட்டு எழுந்தது ஏழைகளின் குரலாக.
“இந்தக் கொடுமை செய்தால் ஏழைகள்
என்ன செய்வோம்?
இனிப் பொறுக்க மாட்டோம்
ஈட்டியாய் வேலாய் மாறிடுவோம்!”

என்ற வரிகளைத் தொடக்கமாக வைத்து அந்தச் சீமானைக் கண்டிக்கும் பாடல் எழுதி உரத்த குரலில் எடுத்துப் பாடினார்.

அந்த ஊரே பாடிற்றாம்; குத்தகைக்காரர் கொட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிற்றாம்.

பெரிய குடும்பத்துப் பெண்ணொருத்தி நெறி தவறி விட்டாள்.

பல நாயகர்களைக் கூடிக்கிடந்தாள். வேதனை தாங்காமல் அவள் கணவன் மடாலயத்தில் தம்பிரானாகச் சேர்ந்து விட்டார்.

பெரிய இடத்துப் பெண்ணின் காமச் சேட்டைகள் அதிகமாயின.

ஊரிலே உள்ள பெரும்புள்ளிகள் பலர் அவள் வலையில் விழுந்தனர்.

அதைக் கண்டிக்க வேண்டும். எதிர்க்க வேண்டும் என்ற நல்ல உள்ளம் பெற்றார் என் தந்தை.

அவரது உறவினர்கள் பலர் அவரால் கண்டிக்கப்பட வேண்டியவர்களானார்கள்.

நெறி தவறியவர்களும் முத்துவேல் புலவரால் தாக்கப்பட்டனர்.

அப்பட்டமான உண்மையை அணுவும் மறைக்காமல் எழுதினார் ஒரு பாட்டு, ‘ஏகேலோ என்கிற மெட்டிலே! அதில் சில வரிகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

அந்த மங்கை தன் மணவாளனைப் பார்த்துப் பாடுவது போல் எழுதப்பட்ட கவிதை இது:

அண்டை வீட்டுக்காரர்கள்
கண்டால்தான் என்ன?
அபச்சாரம் புரிந்தேன்னு
சொன்னால் தான் என்ன?
மண்டல முழுவதும்
தெரிந்தால் தான் என்ன?
மரியாதை மானங்கள்
போனால் தான் என்ன?
தாயாரின் பேச்சுக் கேட்டுத்
தாலியைக் கட்டித்
தட்டாரைச் சிநேகித்து
அவரோடு விட்டீர்!
பெண்களே தெய்வமென்
றெண்ணியே கெட்டீர்!
தகாத பண்புகள்
பழக்கமும் பெற்றீர்-”

மனைவி கணவனை மேலே சொன்ன விதம் இடித்துரைக்கிறாள்.

அதோடு தான் பிறரோடு நடத்திய காமச் சேட்டைகளின் சிறப்புப் பற்றிக் கணவனிடையே வர்ணிக்கிறாள்.

கணவனுக்கு நல்ல வீடு வசதி இருக்கின்றது; ஆனால் அவளோ, கள்ளக் காதலர்களில் ஒருவனோடுஆலயத்தில் பிரவேசிக்கிறாள்.

அந்த நிகழ்ச்சியைக் கவியாக்குகிறார் என் தந்தை:

“தங்களுக்குத் தனிக் கிராமம்
குத்தகை யிருந்தும்
தன் வீட்டுத் தரகுமூட்டை
தலை மேலிருந்தும்
தனியாகப் போகசாலை
மனைக் கட்டிடங்களிருந்தும்
தியாகேசன் யாகசாலைக்
குள்ளேயே சென்று
அங்கிருந்து ஆபாசத்தைக்
கண்ணாலே கண்டு
அவசரமாய் முந்தானையால்
கூட்டியே நின்று
அமிர்தகலச பானத்தை
அத்தனையும் உண்டு
அவசரமாய் மதிலேறிக்
குதித்துமே சென்றேன்!”
அத்தோடு முடிந்ததா விளையாட்டு?

“அங்கிருந்து கன்னி மூலை
அறைக்குள்ளே சென்றேன்
அழகான வேலப்ப
சாமியையும் கண்டேன்
அவரோடு ஊடியும்
கலந்துமே வந்தேன்
அங்கிருந்த விநோதத்தை
யாரிடம் சொல்வேன்?
அம்மம்மா –
நீதானே கேளு!”

இன்னும் அந்தப் பாடல் நீளமாக இருக்கிறது. வெகு நீளமானது.

கதாநாயகியின்பெயரும், அவள்பால் விழுந்த காமுகர்களின் பண்புகளும் சித்திரிக்கப்படுகிற அந்த வரிகளையெல்லாம் இப்போது நான் குறிப்பிட விரும்பவில்லை.

அதாவது என் தந்தைக்கு இருந்த துணிவு எனக்கில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

அனாதைக் குழந்தையாக வளர்ந்து, யாருடைய ஆதரவும் மிகுதியாக இல்லாத நிலையில், ஒரு சிற்றூரில் பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னந்தனியாக ஒருவர் அனைவரையும் கண்டிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார் என்பது வியப்புக்குரியது அல்லவா?

அதுவும் ஊரிலுள்ள பெரிய மனிதர் எனப்படுவோர், மடாதிபதிகள், அடியாட்கள் நிலையிலுள்ளோர் இவர்களையெல்லாம் பகிரங்கமாகக் கேலி புரிவது என்பது ஆபத்தான செய்கை தான். ஆனாலும் அதைத் துணிவுடன் மேற்கொண்டார்.

இத்தனைக்கும் என் தந்தை பழுத்த கடவுள் பக்தர்! விடிகிறதோ இல்லையோ அவர் நெற்றியில் விபூதி ஏறிவிடும்.

சிறந்த மாந்திரீகர் என்று கூட அவரை நம்பிப் பலர் வந்து கொண்டேயிருந்தனர்.

பாம்புக் கடி, தேள் கடி, பெரிய ரணங்கள்.

இவைகளுக்கு எல்லாம் முத்துவேல் மாந்திரீகரிடத்திலே மக்கள் திரள் திரளாக வருவார்கள்!

மந்திரமும் ஜெபித்து மருந்தும் கட்டி அனுப்புவார்: மருந்தால் நீங்கியதோ, மந்திரத்தால் நீங்கியதோ அந்த நோய் என்பது அவருக்கே தெரியாது.

இரண்டையும் சேர்த்துச் செய்வது தான் மந்திரம் என்று அவர் நம்பினார்.

அவர் அதற்கு யாரிடமும் காணிக்கை வாங்குவதில்லை. அப்படி யாராவது கொடுத்தாலும், இடும்பன் சாமிக்குப்பால் வைப்பது என்ற பூஜையின் பெயரால், கள்ளுப் புட்டிகளை வைத்துப் படைக்கச் சொல்வார்.

இந்த இடும்பன் பூஜை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எங்கள் வீட்டிற் கெதிரிலேயுள்ள திருக்குளத்தில் நடைபெறும்.

இப்படி மந்திரவாதியாக. வித்வானாக, உழைக்கும் விவசாயியாக, புலமை மிக்கவராக இருந்த அவருக்கு மிக இளமையிலேயே திருமணம் நடைபெற்றது.

அவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஒரு பெண்மணி காத்திருந்தாள்.

விருப்பம் போல் திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடந்த சில ஆண்டுகளில் தந்தை தன் துணைவியாரை இழந்தார்.

ஆமாம்; எங்கள் பெரிய தாயாரை நாங்கள் இழந்தோம். குஞ்சம்மாள் என்ற அந்தக் குலவிளக்குஅணைந்து விட்டதே என்று தந்தை குமுறினார்.

ஆனால் அந்த விளக்கு அவருடைய இருதயத்தில்அணையாத ஜோதியாக நிலைத்து அவருடைய குல தெய்வமாக ஆயிற்று.

அழகான ஒரு செல்லப்பெட்டியில் திருமண தினத்தன்று அணிந்த மாலையை நிரப்பி முதல் மனைவியைத் தனது குலதெய்வமாக ஆக்கிக் கொண்டார்.

அந்தப் பெட்டியும் அதனுள் எங்கள் தந்தை நிரப்பி வைத்த அந்த மலர் மாலைகளுடன் இன்றைக்கும் எங்கள் வீட்டில் இருக்கிறது.

பிறகுஇரண்டாவதாக அவர் திருமணம் செய்து கொண்டார்.

அந்த்த்துணைவியையும் இழந்தார். வேதம்மாள் என்பது அவர்கள் பெயர்.

மூன்றாவதாக அஞ்சுகம் அவருக்கு மனைவியானார்கள்.

எங்கள் அன்புத் தெய்வம்-எங்களைப் பெற்று வளர்த்த பெருமாட்டி – எறும்பு போல் உழைத்து எங்களை ஆளாக்கிவிட்ட தங்கம்- “அம்மா என்று வாய் நிறைய அழைத்து, அந்த அழைப்பிலே இன்ப சுகம் கண்டு, அமைதிதவழும் பெரும் குடும்பத்தைக் கட்டிக் காக்கும் வலிமையை, உள்ள வளத்தை எமக்களித்த எங்கள் அருமருந்தன்ன தாய்! அவர்கள் வாழ்க்கைத் துணை நலமாக அமைந்த பிறகு, தந்தையின்நெஞ்சிலே மீண்டும் இன்பம் தளிர்த்தது.

தந்தைக்கிருந்த பல தொல்லைகளோடு பயிர்த் தொழிலைக் கவனிக்கும் பொறுப்பும் மிகுந்தது.

கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்க வேண்டுமென்கிற நிலைமை இல்லாமல் இருந்துங்கூடத் தந்தை ஏர் கலப்பையுடன் வயலுக்குச் சென்று விடுவார்.

அன்னையும் அவருக்கு உதவியாக வயல் வேலைகளில் ஈடுபடுவார்.

நாற்று நடுதல். களையெடுத்தல் முதலிய காரியங்களை மற்றத் தொழிலாளர்களோடு சேர்ந்து அம்மாவும் மேற்கொள்ளுவார்.

கழனிக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் எங்கள் வீட்டில் ஒன்று விடாமல் கச்சிதமாக இருக்கும்.

மாடுஓட்டுகிற கம்பிலிருந்து பரம்பு அடிக்கும் பலகை வரை எல்லாமே ஒழுங்காகச் செப்பனிடப்பட்டிருக்கும்.

தந்தைக்குத் தூண்டில் போடுதல் ஒரு பொழுது போக்கு.

ஒவ்வொரு மீனுக்கும் வகைவகையான தூண்டில்கள் வீட்டில் இருக்கும். வரால் மீனுக்கு ஒரு தூண்டில், கெண்டைக்கு ஒருதூண்டில் என்று பல உண்டு.

தென்னந்தோப்பிலே தேங்காய் பறிக்க ஆள் தேவையில்லை.

எங்கள்வீட்டில் தென்னையை விட நீளமான துரட்டிகள் என்ற அலக்குக் கம்புகள் உண்டு. அதன்உதவியால் கீழேஇருந்தபடியே அப்பா தேங்காய்களைப் பறிப்பார்.

அப்படிப் பறித்தபோது ஒரு சமயம்பெரிய இளநீர் ஒன்று அவர் தலையிலே வந்து விழுந்து விட்டது. இளநீருக்கும் சேதமில்லை!அப்பாவின் தலையிலும் காயமில்லை.

நெடுநாட்கள் முத்துவேலரும் அஞ்சுகமும் குழந்தை யில்லாக் கவலையால் வாடினார்கள்.
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

இந்தக் குறள் தந்தையின் நெஞ்சில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

எவ்வளவு கவலையோடு கூடத்தில் அமர்ந்து கஞ்சிக் கலயத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாலும், அப்போதுதாழ்வாரத்தில் விளையாடுகின்ற குழந்தை தன் பிஞ்சுக் கரத்தைக் கலயத்துக்குள் நுழைத்து விட்டால் அந்தக் கூழ் அமிர்தமாகி விடுமல்லவா? அப்படி அமிழ்தாக்கும் திறன் படைத்த அரும்பில்லாக்கவலையினால் அப்பாவும் அம்மாவும் பீடிக்கப்பட்டார்கள்.

பின்னர் பெரிய நாயகம், சண்முகசுந்தரம் என்ற இரு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.

ஆயினும் அவர்களுக்கு மனநிறைவில்லை. ஆண் குழந்தை இல்லையே என்ற ஆழ்ந்த கவலையால் திருத்தலங்கள் சென்றனர்.தீர்த்தங்கள் ஆடினர். கடும் விரதங்கள் மேற்கொண்டனர்.

பின்னர் சாலிவாகன சகாப்தம் 1846-கலி யுகாப்தம் 5025 கொல்லம் 1099- இதற்குச்சரியான ரக்தாட்சி ஆண்டு, வைகாசி மாதம் 21-ஆம் நாள் செவ்வாய்க் கிழமை, அதாவது 1924-ஆம் ஆண்டு சூன் மாதம் 3-ஆம் நாள் முத்துவேலருக்கும் அஞ்சுகத்து அம்மையாருக்கும் சுபயோகசுப தினத்தில் ஒரு குழந்தை அவதரித்தது.

அந்தக் குழந்தை தான் நான். நான் பிறந்து சிசுவாகஇருக்கும்போதே என் தாயார் தாலியை இழந்தார்கள். தந்தை சாகவில்லை. ஆனாலும் என் தாய் தாலியை இழந்தார்கள்.

ஒரு நாள் விடியற்காலை, சிசுப் பருவத்தில் தூங்கிக் கொண்டு இருக்கிறேன்.தந்தையும் தாயும் சகோதரிகளும் கூட ஆழ்ந்த தூக்கத்தில்! அந்த நேரம் பார்த்துத் திருடர்கள்வீட்டிற்குள்ளே நுழைந்து விட்டார்கள். வீட்டிலே இருந்த பண்டம் பாத்திரங்கள் ஒன்று விடாமல்சுருட்டிக் கொண்டு போய்விட்டார்கள்.

எனக்குக் கட்டப்பட்டிருந்த ஏணைத் துணியைக் கூடவிடவில்லை. திருடர்களிலும் பிச்சைக்காரத் திருடர்கள் போலும்! பாவம், ஆழ்ந்த நித்திரையிலிருந்தஅன்னையின் கழுத்திலே மின்னிய பொற்றாலியையும் அவர்கள் கத்தரித்துக் கொண்டுபோய்விட்டனர்.

என் தாயார் சாகும் வரையில் சொல்வார்கள். “நல்ல வேளை, திருடர்கள் நுழைந்தபோது கத்தாமல் இருந்தாய்; கத்தியிருந்தால் உன் கழுத்தை நெரித்துப் போட்டுவிட்டுப்போயிருப்பார்கள்!” என்று.
இதை அம்மா சொன்னபோது, நான் நினைத்துக் கொள்வதுண்டு; ‘ஐயோ, நாம்அப்போது கத்தியிருக்கக் கூடாதா? கத்தியிருந்தால் இப்போது நான்கு பக்கமிருந்தும் தொல்லைகளை அனுபவிக்க வேண்டியதில்லையே!’ என்று.

வீட்டிலே எங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டுதிருடர்கள் வெளியேறி விட்டார்கள். அவர்கள் போன பிறகு எங்கள் வீட்டுக் காவல்கார நாய் குரைத்ததாம் ! விழித்துக் கொண்ட தாயார் தன் கழுத்திலே தாலியைக் காணாமல் அழுதுபுரண்டார்களாம்.

உடனே தந்தை, “நான் தான் இருக்கிறேனே! ஏன் அழுகிறாய்?” என்று ஆறுதல்சொல்லி. வேறொரு தாலியை அம்மாவின் கழுத்திலே கட்டினார்களாம். ஆக, எங்கள் அப்பா மூன்று மனைவிக்கு நான்கு தாலிகள் கட்டினார்!

“தாலியைக் கூடத் திருடிக் கொண்டு போய் விட்டானே!” என்று அம்மா வருத்தத்தோடு கேட்டார்களாம்.
அதற்கு அப்பா, ‘ஆமாம்! தாலியைப் பித்தளையால் செய்து போட்டிருந்தால். ஐயோ.எதைத் திருடினாலும் தாலியைத் திருடக் கூடாது. பாவம்!’ என்று திருடன் அதைத்தொடாமல் போயிருப்பான்.

தாலி பொன்னால் அல்லவா செய்யப் பட்டிருக்கிறது! பொன்னுக்குப் பாவம் இல்லைஎன்று கருதியிருப்பான் ! ” என்ற விதத்தில் திருட்டிற்குத் தத்துவம் கூறினாராம்.

– தொடர்புக்கு: “thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *