வரவேற்புரை
25.02.2023 (சனிக்கிழமை)
பெருமக்களே!
ஸ்ரீராம் நிறுவனம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக. மிகப் பெரிய அளவில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் இன்றைக்குப் பல கிளைகளைத் தொடங்கி ஒரு மாபெரும் வணிக நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
இந்த நிறுவனம் குறிப்பாக, தமிழ்நாட்டில் யாரும் எட்டிப்பார்க்காத அளவிற்கு அருங்கலைகளை வளர்ப்பதிலும், தொழிலை மேம்படுத்துவதையும் பெருமிதக் கோட்பாடாக இணைத்துக் கலையை ஒரு கண்ணாகவும், தொழிலை மறு கண்ணாகவும் அமைத்துக்கொண்டு மாபெரும் இலக்கியப் பணிகளை ஏராளமாகவும் தாராளமாகவும் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் தொடர்ந்து நடத்தி வருகின்றது.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய பேச்சுப் போட்டிகளிலும், கட்டுரைப் போட்டிகளிலும் வென்ற மாணவர்கள் பலரும் இன்றைக்குத் தமிழ்நாட்டில் புகழ் பூத்த பேரறிஞர்களாக மின்னி வருவதை நாம் எல்லோரும் அறிவோம்.
இந்த ஆண்டும் தவறாமல் பாரதியார் பெருவிழாவைப் பாரதியார் பிறந்த நாள் என்பது டிசம்பர் பதினொன்று மட்டுமன்றி நாள்தோறும் பாரதியார் பிறந்த நாள் என்ற அளவுக்கு தமிழகத்தில் ஸ்ரீராம் நிறுவனத்தின் வாயிலாக நாம் பாரதியை நாம் கொண்டாடி மகிழ்கின்றோம்.
அப்படிப்பட்ட பாரதியின் பிறந்த நாளுக்காக இன்றைக்கு மூன்று பெரிய அறிஞர்களை, பாரதியை நினைந்து நினைந்து போற்றுகின்ற பேரறிஞர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு விருதுகளையும், பரிசளிப்பையும், இன்று வழங்க இருக்கின்றோம்.
இந்த விழாவினை நடத்துவதற்கு ஸ்ரீராம் நிறுவனத்தின் தலைவர்
திரு ஆர். தியாகராஜன் அவர்களுடைய மிகப்பெரிய சிந்தனையும் அதைச்
செயலாற்றும் திறமை எங்களுடைய திரு.சுந்தரேசன் அவர்களும் இயல்பாக அமைந்து எங்களைப் போன்றவர்களை ஆற்றுப்படுத்தியிருக்கிறார்கள்.
அவர்கள் இருவரும் இணைந்து இந்தப் பெருவிழாவை மகிழ்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய விழாவிற்குத் தலைமை தாங்குவதற்காக வருகை புரிந்திருப்பவர் பேராசிரியர் வீழிநாதன் காமகோடி ஆவார்.
பேராசிரியர் காமகோடி
சென்னை ஐஐடி நிறுவனத்தினுடைய இயக்குநர் ஆவார்.
சென்னைப் பல்கலைக்கழக வடமொழிப் பேராசிரியர் வீழிநாதனுடைய அரும் புதல்வர் காமகோடி என்று பெருமைக்குரியவர், மாபெரும் சிந்தனையாளராகவும், தொடாத துறையில்லை, கணினித் துறையில் இன்றைய மாபெரும் வளர்ச்சிக்கு அவர் ஒரு பெரிய தூணாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
காமகோடி எப்படி என்றால் இன்றைக்கு நாம் நினைத்துப் பார்த்தால் ஒரு முனைவர் பட்டம் பெறுவது இன்றைக்கு எளிது.
முனைவர் பட்டத்திற்கும் பிறகு முதுமுனைவர் பட்டம் பெறுவது அரிது, அதுவும் முதுமுனைவர் பட்டத்தில் இரண்டு முறை பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.
உலக நாடுகள் அனைத்திலும் தன்னுடைய தனி முத்திரையைப் பதித்து வருபவர்.
அவர் தமிழ் மொழி, வடமொழி என்பது மாத்திரமல்ல இசையிலும் தனக்கென ஒரு அளப்பரிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு வயலின் இசையை மீட்பதில் வல்லவராக ஒளி வீசுகிரார்.
பாரதியாரைப் பற்றி பல இடங்களில் அழகாகத் தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்.
அண்மையில் கூட காசியில் நடைபெற்ற மாபெரும் பாரதியார் விழாவில் தன்னையும் இணைந்துகொண்டு பெரும் பங்காற்றிய பெருமை நம்முடைய திரு. காமகோடி அவர்களைச் சாரும்.
ஐஐடி கல்லூரி என்றாலே எப்படிப்பட்டது என்று நமக்கு எல்லோருக்கும் தெரியும்.
என்னுடைய தந்தையார் அடிக்கடிச் சொல்வார்,
எங்களுடைய அண்ணா நகர் இல்லத்தின் பின்புறம் உள்ள இல்லத்தின் உரிமையாளர் பெயர் திரு. சுப்பிரமணியம், அவருடைய பணி என்னவென்றால், டன்லப் நிறுவனத்தில் பணியாளர்கள் வருகையை பதிவுசெய்து, அவர்கள் அன்றைக்கு என்ன பணி செய்தார்கள் என்று பதிவிடுவது தான் வழக்கம்.
அவருக்கு ஆறு பிள்ளைகள். ஆறு பிள்ளைகளும் நான் படித்த பள்ளியில் பல நிலைகளில் பயின்றார்கள்.
வள்ளியம்மாள் மேனிலைப் பள்ளியில் படித்த பிறகு, அறுவரும் பத்மா சேஷாத்ரி பள்ளிக்குச் சென்றார்கள்.
அங்கேயே மிக நுட்பமாக விதை தூவப்பட்டது, என்னவென்றால் பத்மா சேஷாத்ரி முடிந்தவுடன் அனைத்துப் பிள்ளைகளும் ஐஐடியில் தான் போய் படித்தார்கள்.
இன்றைக்கு அந்த ஆறு பேரும் அமெரிக்காவில் தான் இருக்கிறார்கள்.
காரணம் அப்பா அடிக்கடி சொல்வார், ஐஐடி என்றால் தான் உயர்ந்த படிப்பு என்று அதனாலோ என்னவோ, எனக்கு ஐஐடிக்கு அருகில் செல்ல முடியாமல் அங்கங்கே என்று சிதறிவிட்டோம், 1987ஆம் ஆண்டில் என்னுடைய நண்பர் ஸ்ரீராம் ஐஐடியின் நூலகத்திலிருந்து எனக்கு ஒரு அருமையான நூலைப் படிப்பதற்குறிய வாய்ப்பை வழங்கினார்.
அந்நூல் தான் டாக்டர் ஏ.எல். முதலியாருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சுகள், ஆங்கிலத்தில் மிக அற்புதமான நூலாகும்.
அந்த நூலைப் படித்ததினுடைய விளைவு தான் எனக்கு இன்றைக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றிருக்கிறது.
ஸ்ரீராம் நிறுவனத்தினுடைய திரு. தியாகராஜன் அவர்களும், திரு. சுந்தரேசன் அவர்களும் வழங்கிய அந்தப் பெரிய வாய்ப்பு என்னவென்றால், எந்தையார் பேசிய உரைகளில் 46 உரைகளை நாங்கள் தேடித் தொகுத்து இன்றைக்கு நூலாக அச்சிட்டிருக்கின்றோம்.
இந்த நூலை அச்சிடுவது பெரிதல்ல வெளியிடுவதை ஸ்ரீராம் நிறுவனம் அதை தங்களுடைய பெரும் கடமையாக ஏற்றுக்கொண்டு இந்நூலை அனைவருக்கும் இன்றைக்கு விலையேதும் இன்றி விருந்தாக வழங்க வேண்டும் என்று முடிவுசெய்து வழங்கவிருப்பதே பெருஞ்சிறப்பு ஆகும்.
தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் பலமுறை தன்னுடைய கட்டுரைகளில், அவ்வை நடராஜன் அவர்கள் பேசிக்கொண்டே இருக்கின்றார்கள், யாரும் அவருடைய உரைகளைப் பதிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் குறையை இன்றைக்குக் களைவதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறது.
இன்றைக்கு யார் வந்திருக்கிறார்கள் என்றால், நமக்கெல்லாம் ஒரு தொடர் நினைவிற்கு வரும்.
“கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பே!” என்ற தொடரை அப்படியே பொருளாக நீங்கள் பார்க்க வேண்டுமென்றால், கடந்த ஐம்பது ஆண்டுகளாக பட்டிமன்றங்களைக் கலகலப்பாக மாற்றிய பெருமைக்குரியவர் பேராசிரியர் முனைவர் சாலமன் பாப்பையா அவர்கள் வருகை புரிந்திருக்கின்றார்கள்.
பெரும் பேராசிரியர்
திரு. சாலமன் பாப்பையா அவர்களுக்கு அண்மையில் தமிழ் இலக்கியத்திற்காகவும் பேச்சு உலகத்திற்காகவும் பத்மஸ்ரீ பட்டத்தினை இந்திய அரசு வழங்கி பெருமைப் படுத்தியிருக்கிறது.
அவர் செல்லாத நாடுகளில்லை, பேசாத பட்டிதொட்டி இல்லை. இன்றைக்குத் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்குப் பிறகு பட்டிமன்றம் என்றால் பாங்கறிந்து மேடைகளை அலங்கரிக்கும் பேராற்றல், பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களைத்தான் சாரும்.
அவர் உருவாக்கிய பேச்சாளர்கள் எல்லாம் இன்றைக்கு உலக நாடுகளெல்லாம் தங்குதடையின்றி செல்லுமிடமெல்லாம், நாங்களெல்லாம் பாப்பையாவினுடைய மாணவச் செல்வங்கள் என்றுதான் அவர்களெல்லாம் சென்றுவருவது வாடிக்கையாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா வருகை ஸ்ரீராம் நிறுவனம் நற்பேறு பெற்றிருக்கிறது என்றுதான் நாங்கள் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இன்றைக்கு அவர் எந்தையாருடைய நூலை வெளியிடுவதோடு,
வேதம் புதிது என்ற புதுமையான தலைப்பில், பாரதியைக் குறித்து நம்மிடம் அவர்கள் பேசவிருக்கிறார்கள்.
நண்பர்களே!
விருது பெறுபவர்கள் மூவராக இருக்கிறார்கள்.
பாரதி மணி என்ற விருது பெறுகின்றவர் தான் திரு. சீனி. இராஜகோபாலன் அவர்கள்,
திரு.
சீனி. இராஜகோபாலன் ஸ்டேட் பேங்கில் பணியாற்றியது ஒரு பணிதான், பணிக்குப் பிறகு, ஓய்வுக்குப் பிறகு அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழிபெயர்ப்பதைத் தன்னுடைய கடமையாக ஏற்றுக்கொண்டு செவ்வனே பணியாற்றிவருகிறார்.
பலபேர் மொழிபெயர்க்க வேண்டுமென்றால் தொகை கேட்பார்கள்.
தொகை வரையரை செய்த பிறகுதான் மொழிபெயர்ப்பார்கள்.
எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் இன்றி இது என்னுடைய பணி என்று சொல்லி மகிழ்பவர்.
அவர் யார்? என்றால் புலவர் கோவிந்தன் மகள், சீனி. இராஜகோபாலன் அவர்களுடைய மருமகள் ஆவார்கள்.
என்னுடைய தந்தையாரும், புலவர் கோவிந்தன் அவர்களும் சங்க இலக்கியத்தை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் அமர்ந்து கொண்டு பல மணிநேரங்கள் இலக்கியப் பொருண்மைகளைக் குறித்து பேசிக்கொண்டிருப்பார்கள்.
அப்படிப்பட்ட திரு சீனி ராஜகோபாலன் அவர்கள் பாரதியாருடைய தெரிவு செய்யப்பட்ட கதைகள், புதினங்கள் என்று பல கட்டுரைகளை அண்மையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அதனை ஆங்கிலத்தில் வெளியிட்டது.
ஆங்கிலத்தில் ஒரு பிழையுமில்லை. காரணம் ஒவ்வொரு சொல்லையும் எடைபோட்டு மதிப்பிட்டுச் செம்மையாகச் செப்பம் செய்தவர் தான் நம்முடைய திரு. சீனி. ராஜகோபாலன்.
அவருக்கு இன்றைக்கு பாரதி பரிசு வழங்கப்படவுள்ளது.
அதே போல டாக்டர். சிவகடாட்சம் அவர்கள் சாந்தகுமாரி சிவகடாட்சம் என்று தான் நாடே கேட்கும்.
பட்டிமன்றமே நடக்கும், காரணம் யார் யாரை விஞ்சி நிற்பார்கள் என்றார்கள், எங்களுடைய மருத்துவர் அடிக்கடி சொல்வார்கள், எப்பொழுதும் எனக்கு என்னுடைய மனைவினுடைய கரம்தான் உயர்ந்து நிற்க வேண்டும்.
அவர்கள் பெறுகின்ற வெற்றிதான் நான் பெறுகின்ற வெற்றி என்பார்.
அவர்கள் இருவரும் செல்லாத நாடுகளில்லை, அம்மையார் வரையாத கட்டுரைகள் இல்லை, சாந்தகுமாரியின் பயணக்கட்டுரைகள் ஆகட்டும், சிந்தனை கட்டுரைகளும், திருக்குறளைக் கதையாக எழுதி கதைக் கொத்தாக அவர்கள் வெளியிட்டதும் மாபெரும் சிறப்பாகும்.
பாரதியின் புகழை அங்கிங்குகெனாதபடி ஒரு வீரப்பெண்மணியாக அவர்கள் ஆற்றி வருகின்ற தமிழ்ப்பணிக்காக இன்றைக்கு ஸ்ரீராம் நிறுவனம் அவர்களைப் பெருமைப்படுத்துவதற்கு விழைகிறது.
பாரதி யாருக்குச் சொந்தம் என்று கேட்டீர்கள் என்றால், நாம் எல்லோரும் சொல்வோம் எட்டையபுரத்தில் இருப்பவர்களுக்கு தான் சொந்தம் என்று, இல்லை இல்லை, நெல்லையில் இருப்பவர்கள் நாங்கள் சொந்தம் கொண்டாடுவோம் என்போம்.
இல்லை இல்லை மதுரையிலும் நாங்களும் பாரதிக்கு உறவு என்பார்கள்.
ஆனால் நண்பர்களே!
கல்கத்தாவிலிருந்து கடந்த 82 ஆண்டுகளாக்க் கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் என்று ஒரு மிகப்பெரிய சங்கத்தை உருவாக்கிப் பாரதியின் தொண்டையே பரப்பிக்கொண்டு, கல்கத்தாவில் திரு. மு.சீனிவாசன், திரு. சங்கரன்,
திரு. கிருஷ்ணமூர்த்தி என்று மிகப் பெரிய அறிஞர்கள், ஆண்டு தவறாமல் பாரதி தமிழ்ச்சங்கத்தில் அங்கு ஒரு பெருவிழாவாக நடத்திக்கொண்டும் அங்கேயே பாரதியாருக்கு ஒரு திருவுருவச் சிலையை அமைத்துக்கொண்டும், அண்மையில் நான் கல்கத்தாவிற்கு சென்ற பொழுது நெகிழ்ந்து போனேன்.
அங்கு இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர், மாண்புமிகு அமைச்சர்கள் அனைவரும் பாரதி எங்கள் வீட்டுக் கவிஞர் என்றுதான் பெருமிதமாக அவர்கள் வங்கத்தில் பேசியதைக்காட்டியதும். அவர்கள் எங்களுக்கெல்லாம் இந்திய நாட்டில் தலை சிறந்த கவிஞர்கள் என்றால் தாகூரும், பாரதியும் என்று அவர்கள் பெருமையாக பேசிய அந்த சங்கத்தின் நீண்ட கால உறுப்பினரும், மிகப்பெரிய மொழியியல் பேராசிரியராகவும், இந்திய நாட்டின் மக்கள் தொகை புள்ளியியல் நிறுவனத்தின் ஒரு தலைசிறந்த நுணுக்கமான ஆய்வாளராக இருக்கின்ற பேராசிரியர் நக்கீரன் அவர்கள் கொல்கத்தாவில் இருந்து வருகை புரிந்திருக்கின்றார்.
அவருக்கு நாங்கள் பாரதி மணி என்ற ஒரு பெரிய விருதினை வழங்கி மகிழ்கின்றோம்.
பெருமக்களே!
பாரதியின் புகழை அங்கிங்குகெனாதபடி இப்படியெல்லாம் பல இடங்களில் புகழ்பரப்பி வருகின்ற பேரறிஞர்களைத் தேடித்தேடி அவர்களுக்கு விருது வழங்குவது என்பது ஸ்ரீராம் நிறுவனத்தினுடைய அரும்பெரும் கடமையாக, கடந்த 45 ஆண்டுகளாக அவர்கள் அதை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்னும் சில ஆண்டுகளில் பொன்விழாவை எதிர் நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கின்ற இந்த நேரத்திலும், பாரதி அறிஞர்களையும், பாரதி பெருமக்களையும் அவர்களுக்கு விருது வழங்குவது என்பதை ஒரு கடமையாக நாங்கள் ஆற்றிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த நிகழ்ச்சியில் மிக அழகாகத் தொகுத்துத் தருபவர் தான் திரு. பாலசாண்டில்யன் அவர்கள் ஆவர்கள்.
இங்கு வருகை புரிந்திருப்பவர்கள் யார் யாரென்று நான் அடுக்கிக்கொண்டே போனால் பாலசாண்டில்யன் என்னை விடமாட்டார்.
என்னை வளர்த்த பேராசிரியர் அரங்க ராமலிங்கம்,
அண்ணாச்சி, அண்ணாச்சி என்று நாங்கள் எல்லாம் பெருமையாக சொல்லும் வி.ஜி.பி. சந்தோஷம் அண்ணாச்சி அவர்களும் வள்ளல்களுக்கு வள்ளல் நம்முடைய நல்லி குப்புசாமி அவர்களும்
வருகை புரிந்திருக்கின்றார்கள்.
கல்கத்தாவிலிருந்து நண்பர்களும், விருதாளர்களின் குடும்பத்து உறுப்பினர்களும்,
டாக்டர் உலகநாயகி,
திருமதி வாசுகி கண்ணப்பன்,
டாக்டர் பிரியா ராமகிருஷ்ணன் என்று பெருமக்கள் பலரோடு நீதியரசர் பாஸ்கரன்,
பேராசிரியர் தாமரைக் கண்ணன் ஒய்.எம்.சி.ஏ புகழ் பரப்பும் புலவர் கிருஷ்ணமூர்த்தி என்று பல பெருமக்கள் எல்லாம் இங்கு வருகை புரிந்திருக்கின்றார்கள்.
அதுவும் குறிப்பாக மருத்துவத்துறையில் இன்றைக்கு இளமைக்கு இளைமையாகவும், புலமைக்கு புலமையாகவும் வளர்ந்து வருகின்ற டாக்டர் குகன் சிவகடாட்சம் இன்றைக்கு வருகை புரிந்திருப்பது என்பது எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு எல்லாம், அடுத்த தலைமுறை ஒரு மிகப்பெரிய தலைமுறை வந்து கொண்டிருக்கிறது என்பதில் நாங்கள் பெருமை அடைகின்றோம்.
நண்பர்களே!
எங்களுடைய நூல் இன்றைக்கு வெளியிடப்படுகின்ற நூல் ஔவை சொல் கேளீர்!
இந்த நூல் ஒரு 46 தலைப்புகளில் அப்பா பேசிய பல உரைக்கொத்துக்களோடு ஸ்ரீராம் பாரதி தமிழ்ச்சங்கத்தினுடைய வரவேற்புரை முதற்கொண்டு கல்கத்தாவில் பாரதி குறித்து பேசிய ஆங்கில உரை மற்றும் அப்பா 2000களிலும் 1970 களிலும் பேசிய 46 உரைகளை 250 பக்கங்களில் முப்பது ஒளிப்படங்களுடன் இன்றைக்கு நாங்கள் வெளியிட இருக்கின்றோம்.
அந்த வெளியீட்டிற்கு பெரும் உழைப்பினை நல்கியவர் தொண்டர் திலகமாக இருக்கும் எங்கள் அப்பாவுடைய நேர்முக உதவியாளர் திரு பொன்னேரி பிரதாப் அவர்கள் ஆவார்,
இது கடமை இல்லை இது எனக்கு கிடைத்த நற்பேறு என்றும் அவர் அதை மிக நுட்பமாக இரவு பகல் பாராமல் நூலினை இன்றைக்கு வெளியிடுவதற்கு எனக்கு அருந்துணையாக அவர் இருந்திருக்கின்றார்.
தந்தை மறைந்து 100 நாட்களுக்குள் நாம் ஏதாவது செய்யலாமா என்று தான் பிரதாப்பை கேட்டேன்
இன்றுடன் எந்தையார் மறைந்து 97 நாட்கள்தான் ஆகிறது.
97 நாட்களுக்குள் ஒரு பெரிய நூலை அவர் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்
அவருக்குத் தனிப்பட்ட முறையில் நான் நன்றி தெரிவிப்பதை விட இந்த நன்றிக்குப் பெரும் காரணமாக இருந்தவர் திரு. சுந்தரேசன் அவர்கள்.
திரு. சுந்தரேசன் அவர்கள் செய்கின்ற பணி அளப்பரிய பணி. யாரைப்போலவும் இல்லை எதையும் அவர் ஒரு முறைதான் கேட்பார்.
என்னுடைய தந்தையார் சொல்லுவார் சுழலும் பம்பரம் சுந்தரேசன் என்பார்.
எந்தப் பணியைக் கேட்டாலும் இது நம்முடையப் பணி நாம் செய்யவேண்டிய பணி என்று ஒரு முறைதான் சொல்வார்.
நடந்ததா? நடந்துவிட்டது! என்ற அளவிற்கு வாய்ப்பு நல்கிய திரு. சுந்தரேசன் அவர்களுக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, வருகை புரிந்திருக்கின்ற எல்லோரையும் வருக வருக என்று வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
உங்கள் வரவு எங்களுக்கு உவகை என்று சொல்லி அமைகிறேன்.
நன்றி
வணக்கம்!

Add a Comment