தினசெய்தி – 23 4 2023
பக்கம் எண் : 4
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 158
எண்ணற்ற சொற்களில் ஈடற்ற சிந்தனைகள்
– முனைவர் ஔவை அருள்
வில்லியம் சேக்சுபியரின் 460வது பிறந்த நாள் ( 23.04.2023 )
எண்ணிப்பார்க்க முடியாத எண்ண அலைகளையும் ஏறத்தாழ ஆயிரம் பேரை நம் எதிரே நிறுத்தி அவர்களின் உள்ள உணர்வுகளை ஓவியமாக்கிய ஒப்பற்ற நாடக கவி மன்னர் சேக்சுபியர் (23.04.1564) பிறந்த நன்னாளிது.
இலண்டன் மாநகரத்தில் ஆவான் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய சிற்றூரில் அவர் வாழ்ந்த இல்லத்தை சென்று காணும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.
மீளவும் ஒருமுறை என் பெற்றோர்களை அழைத்துச் சென்றிருக்கிறேன்.
சேக்சுபியர் தான் ஆங்கிலம்;
ஆங்கிலம் தான் சேக்சுபியர்
என்று தம்மை கரைத்துக் கொண்ட காவிய வேந்தர் சேக்சுபியர் ஆவார்.
“இன்னலும் நானும் இந்த நாளில் தான் பிறந்தோம்.
இளஞ்சிங்கக் குருளைகள் நாங்கள் யான் மூத்தோர் எனக்கு பின் பிறந்தவன் தான் இன்னல் என்பவர்” என வீரப் பெருமிதத்தோடு சீசர் பேசிய உரைகளை “
அஞ்சாமை அல்லால் துணை வேண்டாம்” என்ற திருக்குறளோடு ஒப்பிட்டு மகிழ்கிறேன்.
மனிதரின் நடத்தைப்பாங்கு மற்றும் உணர்வெழுச்சிகளின் கூறுகள் ஒவ்வொன்று குறித்துமான சேக்ஸ்பியரது நுண்ணிய பார்வை காரணமாகவே அவர் உலகில் தோன்றிய மாமேதைகளுள் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார்.
சொற்களஞ்சிய வரலாற்றிலேயே மிக உயர்ந்ததான 27,870 வேறுபாடான சொற்களை உள்ளடக்கிய 9,36,433 (ஏறத்தாழ 10 இலட்சம்) சொற்களால் அவர் தமது நாடகங்களைக் கட்டமைத்துள்ளார்.
எண்ணிக்கையில் மிகுந்த அவர் அறிந்திருந்த சொற்றொகுதி களஞ்சியத் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு!
கி.பி.1623ஆம் ஆண்டு வரையிலும் ஆங்கில மொழிக்குக் கிடைத்திருந்த சொல்வளத்தின் நாற்பது விழுக்காடு அந்த அளவு எனில் அது மிகையாகாது.
இத்தனைக்கும் அவர் அத்தனை சொற்களை அறிந்திருந்தமைக்கு உதவும் வகையில் அகராதி ஒன்று கூட அவரிடம் இருந்ததில்லை.
இதனை இன்னமும் விரிவானதொரு பார்வையில் முன்வைக்க முற்படுவோமானால், சராசரியானதொரு மனிதன் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அறிந்திருக்கக் கூடிய சொற்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் வரைதான் இருக்கக் கூடும்.
வேண்டுமானால் ஐயாயிரம் சொற்கள் வரை ஒருவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியலாம்.
மிகப்பெரிய எழுத்தாளர்களைப் பொறுத்தவரை இந்த மதிப்பீடு ஒன்றரை மடங்கிலிருந்து இரண்டு மடங்கு வரை கூடுதலாக இருக்கலாம்.
மில்டன் அறிந்திருந்த சொற்றொகுதியின் எண்ணிக்கை பத்தாயிரம் என்றும்
ஹோமர் ஒன்பதனாயிரம் சொற்களைக் கையாண்டதாகவும் அறிகிறோம்.
மன்னர் ஜேம்ஸ் பைபிள் எட்டாயிரம் சொற்களைக் கொண்டது.
வெப்ஸ்டரின் மூன்றாம் உலகளாவிய அகராதி 4,50,000 சொற்களையும்
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி 6,15,000 சொற்களையும் தொகுத்துள்ளன.
இன்றைய நிலையில் ஆங்கில மொழி இருபது லட்சம் சொற்களைக் கொண்டு கோலோச்சுகிறது.
அதனையடுத்து, ஜெர்மன் மொழி 1,86,000 சொற்களையும்,
ருசிய மொழி !, 36,000 சொற்களையும், பிரெஞ்சு மொழி அவல நிலையாக 1,26,000 சொற்களையும் கொண்டுள்ளன.
இவற்றை நோக்கும் பொழுது 16ஆம் நூற்றாண்டைய சேக்ஸ்பியர் தற்கால ஜெர்மன் மொழியில் உள்ள மொத்தச் சொற்களைப் போல ஐந்து மடங்கு சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் எனலாம்.
பலரால் ஆங்கில இலக்கிய வரலாற்றிலேயே மிகப் பெருமளவில் சேக்ஸ்பியருடைய எழுத்தாக்கம் எடுத்தாளப்பட்டுள்ளது.
அவருடைய நாடகங்கள் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆக்ஸ்போர்டு மேற்கோள்கள் தொகுப்பில் இருபதாயிரம் மேற்கோள்கள், சேக்ஸ்பியரின் பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன.
சேக்ஸ்பியர் மட்டிலும் அறுபது பக்கங்களில் (பத்து விழுக்காடு) தனியாட்சி புரிகிறார்.
ஆங்கில மொழிக்கு அவர் 1,700 புதிய சொற்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
உறைவிடம் (accommodation), காற்றில் உலவுகின்ற (aerial), அரசியல் கொலை (assassination) , அடிப்படையற்றது (baseless), படுக்கையறை (bedroom),
குற்றம் கடிதல் (castigate),
இயற்கைப் புணர்ச்சி (courtship), மனமுடை (dishearten),
தாறுமாறாக்கு (dislocate),
ஊரறியச் செய் (அலர்)(exposure), நிகழ்வுகள் நிறைந்த (eventful), பெருந்தகைமையுடைய (generous), திருகு (gnarled),
விரைவு (hurry),
நடுவுநிலை (impartial), பாகுபடுத்தவொண்ணாதது (indistinguishable),
நகைக்கத்தக்க (laughable), செய்யாமை (lapse), நினைவுகூரத்தக்க (monumental), எண்ணிறந்த (multitudinous),
ஆபாசம் (obscene),
கல்விச் செருக்கு (pedant), கூர்ந்தாய்தல் (perusal),
ஒளிருதல் (radiance),
நம்பகத்தன்மை (reliance),
போலிப் புனிதத்தன்மை (sanctimonious),
இனிமையற்ற (seamy),
பயனற்ற (useless)
போன்ற சொற்களை முதன்முதலாக ஆங்கில மொழியில் பயன்படுத்தியவர் சேக்ஸ்பியர் என்கிற உண்மை அவருடைய நூல்களைக் கற்றறிந்த மேதைகளைத் தவிர பரவலாக அறியப்படவில்லை.
அவர் உருவாக்கிய பெரும்பாலான சொற்றொடர்களும் சொல்லாடல்களும் இன்றைக்கு அன்றாடப் புழக்கத்தில் உள்ளன.
அவ்வகையில் சிலவற்றைக் குறிப்பிடலாம். ‘
சுருங்கக் கூறல் அறிவாற்றலின் ஆன்மா’ (brevity is the soul of wit),
‘அதுதான் சிக்கல்’ (there’s the rub),
‘ஆள் பாதி ஆடை பாதி’ (the apparel oft proclaims the man), ‘
கடன் கொடுப்பவனும், கடன் பெறுபவனும் இல்லை (neither a borrower or the lender be),
‘ஆம்பலை அழகுறுத்தியாங்கு’ (paint the lily), ‘
மாந்தத் தன்மையின் அன்பமுதம்’ (milk of human kindness),
‘ஈவிரக்கமற்ற கொடூரக் கொலை’ (the most unkindest cut of all),
‘பொன்மனம்’ (a heart of gold),
‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ (all that glitters is not gold),‘
வாய் கிழியும் வரை சிரி’ (laugh yourself into stitches), ‘
தீங்கிழைத்தோன் என்பதைக் காட்டிலும் பெரிதும் தீங்கிழைக்கப்பட்டவன்’ (more sinned against than a sinner),
‘காதல் வேட்கைக்குக்கு இசை தான் உணவென்றால்’ (if music be the food of love), ‘
தீய கூட்டணி’ (Strange bedfellows),
‘பேந்த விழிக்கும் பேதைகள்’ (blinking idiots), ‘
ஒரே பாய்ச்சலில் தடையைத் தகர்த்தெறி தேக்கநிலையை மாற்று’ (break the ice with one fell swoop) போன்றவை.
அவர் துணிச்சலாக, ‘சொர்க்கத்தை முத்தமிடும் நரகம்’
‘‘முடிவற்று நீளும் நாட்கள் கொண்ட உலகம்’
‘பெருமை வண்ணக் கோல ஏப்ரல்’ போன்ற ஒரு சில சொல்லாடல்களை உருவாக்கினார். ‘
பொறாமை உணர்வு’ (green-eyed),
‘எள்ளி நகையாடத் தக்கது’ (laughing stock), ‘
கல் மனம்’ (stony heart), ‘
பேசமுடியா நிலை’ (tongue tied), ‘கடலளவு மாற்றம்’ (sea change), ‘மலையெனப் பெருகும் ஆவல்’ (towering passion), ‘
பலன் கருதாப் பெரும் பணி’ (yeoman’s service), ‘
நீள்முடி கொண்டவன்’ (long haired), ‘காதல் விவகாரம்’ (love affair)
போன்ற ஏராளமான இணைச் சொற்களையும் வடித்தார்.
இவை போன்ற பற்பல தொடர்கள் அவருடைய நாடகங்களிலும் கவிதைகளிலும் சிதறிக்கிடக்கின்றன.
அவர் கையாண்ட தொடர்களில் சில, புகழ்வாய்ந்த நூலாசிரியர்களால் தமது நூல்களுக்குத் தலைப்புகளாகப் பெருமையுடன் சூட்டப்பட்டுள்ளன.
ஃபால்க்னெர் தன்னுடைய புதினங்களுள் ஒன்றிற்கு, ‘மேக்பெத்‘ நாடகத்திலிருந்து ‘கூச்சலும் கோபாவேசமும்’ (Sound and Fury), என்கிற தொடரினைத் தலைப்பாகக் கொடுத்துள்ளார்.
ராபெர்ட் ஃப்ராஸ்ட்டினுடைய ‘வெளியேறு, வெளியேறு’ (Out Out), ரோஸ் மெக்காலேயின் ‘பேதையால் பிதற்றப்பட்டது’ (Told by an Idiot) ஆகிய நூல் தலைப்புகளும் ‘மேக்பெத்‘ நாடகத்திலிருந்து எடுத்தாளப்பட்டவை தாம்!.
மேலும் பல்வேறு சொற்றொடர்கள் அந்த ஒரு நாடகத்திலிருந்து மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டு நூலாசிரியர்களால் தமது நூல்களுக்குத் தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ராபெர்ட் ஸ்டோனின் நூலுக்கான ‘‘போரிடும் நாய்கள்’ (Dogs of War) என்ற தலைப்பு ஜுலியஸ் சீஸரிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
அதே போல, ஜான் கன்தருடைய ‘வெள்ளத்திலிருந்து எடுக்கப்பட்டது’ (Taken at the Flood), லான்ஸ் ஹில்லினுடைய ‘
மனிதன் இழைக்கும் தீங்கு’ (The Evil that men Do),
ஃபோர்டு மெடாக்ஸ் ஃபோர்டு எழுதிய ‘அதுவே பாடும் பறவை’ (That was the Nightingale),
ஃபெரெடெரிக் ரொனால்ட்ஸின் மூடர்கண் குவியும் செல்வம் (Fortune’s Fool),
ஃபிலிப் கே. டிக் இயற்றிய ‘பொருந்தாத காலம்’ (Time out of Joint), ஓக்டென் நாஷ் ‘மலர்ப் பாட்டை’ (The Primrose Path), டொரோத்தி பார்க்கருடைய ‘கிணற்றைப் போல ஆழமானதல்ல’ (Not so Deep as a Well) ஆகிய அனைத்துமே சேக்ஸ்பியருடைய கருவூலத்திலிருந்து இரவல் பெற்ற முத்துக்கள்..
சேக்ஸ்பியருடைய கவித்துவத்தின் தனிச்சிறப்பு ஆங்கிலமொழியிலுள்ள அனைத்து அணி வகைகளையும் உள்ளடக்கியுள்ளது.
அத்தகைய அணி நயங்கள் சேக்ஸ்பியரால் மட்டிலுமே அறியப்பட்டவையாகத் தென்படுகின்றன.
சுருங்கக் கூறி விளங்க வைக்கும் முதுமொழி (Aphorism),
மறைமுகமாகக் குறிப்பிடுதல் (Allusion),
மோனத் தொடை (Alliteration),
அந்தாதித் தொடை (Anaphora),
சொல்வரிசைகளைத் தலைகீழாக மாற்றிக் கூறல்(Anastrophe),
உருவகக் கதை (Allegory),
இரட்டுற மொழிதல் (Amphibologia),
முடிவு விழைவதைக் குறிப்பிடும் சொல்லணி (Anacoenosis),
ஆரவார மொழி (Bombast),
கவிதையின் இயற்கையான ஒலி நிறுத்தம் (Caesura),
அடைமொழி(Epithet),
சிலேடை (Equivocation),
உயர்வு நவிற்சி (Hyperbole),
முரண் தொடை (Irony),
குறைவு நவிற்சி (Litotes),
பொருள் ஆகுபெயர் (Metonymy),
உருவகம் (Metaphor),
ஒளிக்குழப்பச் சொற் குளறுபடி (Malapropism),
புதிய சொல், சொற்றொடர் ஆக்கம் (Neologism),
சொல் முரணணி (Oxymoron),
முரண்படு மெய்ம்மை (Paradox),
இருசொல் இயைபணி (Parallelism),
தலைமைப் பொருள் குன்றாத நயச்செருகல் (Parenthesis),
கல்விச் செருக்கு (Pedantry),
வரும்பொருள் முன்குறித்த பெயருடை வழக்கு. (Prolepsis),
உயர்திணைப் பண்புகளை அஃறிணைக்கு ஏற்றிச் சொல்லுதல் (Personification),
சிலேடை நயம் (Pun),
உடனெதிர் மொழி (Repartee),
கூறியது கூறல் (Repetition),
வஞ்சப் புகழ்ச்சி (Sarcasm),
ஒருவழி தழுவல் மயக்க அணி (Soliloquy),
உவமை (Simile),
சினையாகுபெயர் (Synecdoche)
போன்ற அணிநலச் சிறப்புகள் விரவிக் கிடப்பதைக் காணலாம்.
‘‘ஓ, பேராற்றல் மிக்க பெருங்கவிக்கோ!
உனது படைப்புகள் கலையழகுடனும் கவிநயத்துடனும் படைக்கப்பட்ட ஏனைய பெரும் புலவர்களுடைய படைப்புகளைப் போன்றவை என எளிதாகச் சொல்லிவிட இயலாது.
பகலவனின் பேரொளிப் பிழம்பு, ஆரவாரிக்கும் அளப்பரிய பெருங்கடல்,
விண்ணெங்கும் வாரி இரைக்கப்பட்ட விண்மீன் கூட்டம்,
பூத்துக் குலுங்கும் வண்ண மலர்த் தோற்றம்,
பொழிந்துறைந்த பனித்திரள், பெய்யெனப் பெய்த மழை, மரஞ்செடிகளின் இலைகளில் திரண்ட திவலைகள்,
சுழன்றடிக்கும் சூறாவளி, பெருங்குரலெடுத்துறுமும் இடியேறு போன்ற இயற்கைத் திருநடனங்களை ஒத்தவை;
புலனனைத்தையும் அடக்கி ஒடுக்கி முழுச் சரணடையும் பொழுது மட்டிலுமே மூளைக்கு எட்டக் கூடியவை!’’
சேக்ஸ்பியருடைய மூளை எனும் வேதியல் கிண்ணத்திலிருந்த ரசவாதச் செயல்முறை, அவர் தன்னைச் சுற்றிலுமிருந்த மக்களிடையே கண்ட வாழ்க்கை இலக்குகளை எட்டும் பேராவல், கையறுநிலை, பொறாமை, பேராசை, வீரம் செறிந்த காதல், மகிழ்ச்சி, துயரம் ஆகிய உணர்வெழுச்சிகளை சாகா வரம் பெற்ற நாடகங்களாக வளம் கொழிக்கும் இலக்கியப் பொன்னேடுகளாக மாற்றமுறச் செய்தது.
ஆகவே, மனித வாழ்நிலையில் அவருடைய நாடகங்களில் காண முடியாத உணர்வெழுச்சி, செயல்பாடு, சூழமைவு என்று எதுவுமே இல்லை !
சேக்ஸ்பியர் தான் எழுதிய ஒவ்வொரு எழுத்திலும் ஒவ்வொரு சொல்லிலும் பேரொளி வெள்ளமாகப் பெருக்கெடுக்கிறார்.
மனித நாகரிகம் தோன்றிய காலந்தொட்டு வேறு எந்தக் கவிஞனுக்கோ, நாடக ஆசிரியருக்கோ இப்படியொரு புகழாரம் சூட்டிவிட முடியாது.
– தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Add a Comment