POST: 2023-06-12T09:02:27+05:30

அன்புப் பாலம் –

மே மாத இதழ் – 2023
பக்கம் எண்கள் : 5,6,7…

தமிழறிஞர் ஒளவை நடராசன் சிறப்பிதழ்

எனது ஆசான் ஒளவை

பாலம் கலியாணசுந்தரம்

1957ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தேன்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் புதுமுக வகுப்பில் சேர்ந்தேன், இப்போதுள்ள பிளஸ் டூ, அப்போது கல்லூரியில் புதுமுக வகுப்பாக இருந்தது.

தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிறப்புத் தமிழைப் பாடமாக எடுத்து படித்தேன்.

மறு ஆண்டு,பி.ஏ., தமிழ் வகுப்பில் சேர விரும்பினேன்.

அதற்கேற்றார் போல், அந்த ஆண்டு பி.ஏ., தமிழை அறிமுகப்படுத்தினார்கள்.

ஆனால், என்னைத் தவிர வேறு யாரும் தமிழ் வகுப்பில் சேராததால் பி.ஏ., தமிழ் வகுப்பு தொடங்குவதை தவிர்த்துவிட்டனர்.

அருகிலிருந்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில் தமிழ் வகுப்பு இருந்ததால் அங்கு சேர்ந்தேன்.

ஆனால், சில நாள்களிலேயே அங்கு படித்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்களும் வெவ்வேறு பாடப் பிரிவிற்கு சென்றதால், மீண்டும் நான் ஒரு மாணவன் ஆனேன்.

அதனால், அங்கும் வகுப்பை மூடிவிட்டார்கள்.

எனது சகோதரர் மதுரை தியாகராயர் கல்லூரியில் என்னைச் சேர்த்தார்.

அங்கு நிறைய மாணவர்கள் தமிழ்ப் படித்தனர்.

ஏனெனில், ஔவை துரைசாமி பிள்ளை, அ.கி.பரந்தாமனார், ராசமாணிக்கனார், இலக்குவனார், மே. சுந்தரம், சுபா அண்ணாமலை போன்ற புகழ் வாய்ந்த பேராசிரியர்கள் ஒருங்கே அங்கே பணிப்புரிந்தனர்.

மதுரை தியாகராயர் கல்லூரியில் 1959 ஆம் ஆண்டிலிருந்து 1962 ஆம் ஆண்டு வரை பி.ஏ., தமிழ் படித்தேன்.

தமிழ் படிக்கும் ஆர்வத்தில் இரண்டு கல்லூரியில் வாய்ப்பை இழந்தாலும் மூன்றாவது கல்லூரியாக தியாகராய கல்லூரிக்கு வந்ததால் அனைத்து ஆசிரியர்களும் என்னிடம் பிரியமாக இருந்தார்கள்.

பேராசிரியர் ஔவை துரைசாமி அவர்கள் தான் ஆசிரியர்களில் வயதில் மூத்தவர்.

கல்லூரியை நிறுவிய தியாராசன் செட்டியாரின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர்.

தமிழ் இலக்கியங்களை கசடறக் கற்றவர்.

அவர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பாடம் நடத்துவது ஒரு தனி அழகு ஆகும்.

தியாகராசன் செட்டியார் தன் மனைவி ராதாவிற்கு வீட்டிற்கு வந்து தமிழ் சொல்லிக்கொடுக்க விரும்பினார்.

அவ்வாறே, ஔவையார் அவர்கள் ராதா தியாகராசனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து அவரை பழைமை மிக்க தமிழ்ப் பெண்மணியாக ஆக்கினார்.

அவர்கள் பிற்காலத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஔவை துரைசாமி அவர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்போது ஒரு முறை என்னை உதாரணமாக சொன்னார்.

ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு குறிக்கோளுடன் வாழ வேண்டும்.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை பயனற்றது.

ஒரு நோக்கத்தில் வாழ்க்கையில் நடைபோடும் போது என்ன இடையூறு ஏற்பட்டாலும், என்ன இழப்பு ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தக் கூடாது.

தம்பி கலியாணசுந்தரம் இரண்டு கல்லூரியில் தமிழ் படிக்கும் வாய்ப்பை இழந்தாலும், விடாமுயற்சியுடன் இங்கு வந்து சேர்ந்தார்.

இம்மாணவரைப் பற்றி செட்டியார் தெரிந்துகொண்டதும் அவரது கல்வி செலவு அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறு வாழ்க்கையில் தொடர்ந்து குறிக்கோளுடன் நடந்தால் வெற்றி நிச்சயம்.

இம்மாணவர் எதிர்காலத்தில் பல வெற்றிகளைப் பெற்று புகழ் வாய்ந்த மனிதனாக வருவார் என்று மற்ற மாணவர்களிடம் சொன்னார்.

இன்று பத்மஸ்ரீ, மகுடம் விருதுகளைப் பெற்றபோது அவர் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மை ஆகின !

தியாகராயர் கல்லாரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு துடிப்பான இளைஞர் தமிழ்த் துறையில் சேர்ந்தார்.

மேடையில் நாற்காலி இருந்தாலும் அதில் அமராமல் நின்றுகொண்டே பாடம் நடத்துவார்.

தமிழ் சொற்கள் அருவி போல் பாயும்.

அவர் பாடம் நடத்தும் விதம் மாணவர்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.

அவர் வேறு யாருமில்லை; பேராசிரியர் ஒளவை துரைசாமி அவர்களின் மகன் ஒளவை நடராசனார்.

இவ்வாறு தந்தையாரிடம் மூன்று ஆண்டுகளும் ,மகனாரிடம் ஓராண்டு கல்வி பெற வாய்ப்பு கிடைத்தது.

படித்து முடித்ததும் சென்னை பல்கலைக்கழகத்தில் நூலகத் துறை சான்றிதழ் படிப்பில் சேர்ந்து படித்தேன்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருள்மிகு குமரகுருபரர் கல்லூரியில் நூலகராக பணியில் சேர்ந்தேன் .

பல வருடங்கள் எனது ஆசான் ஒளவை நடராசன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை பெறவில்லை.

எந்த ஊருக்கு நான் சென்றாலும் அந்த ஊரில் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் இருந்தால் அவரை தவறாமல் சந்தித்து வாழ்த்துப் பெறுவது வழக்கம்.

அவ்வாறே சென்னைக்கு வரும்போதெல்லாம் அண்ணா நகரில் உள்ள ஒளவை நடராசன் அவர்களைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்.

அவர் பிறந்த நாள் தோறும் அவரிடம் நான் வாழ்த்து பெறுவது வழக்கம் ஆகும்.

ஊதியம் முழுவதும் நான் மக்களுக்கு அளிக்கும் செய்தியை அறிந்து என்னை வெகுவாகப் பாராட்டினார்.

சென்னையில் பாலம் நிறுவனத்தை தொடங்கியபோது அதில் பங்கேற்று சிறப்பித்தார்.

சான்றோர்களுக்கும் மக்களுக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

கோட்டையில் அவர் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளராக இருந்தபோது தமிழ் வளர்ச்சி தொடர்பாக எனது கருத்துக்களை சொன்னேன்.

ஒரு துறையில் செயலாளர் இருக்கவேண்டும்.

ஆனால், அவர் இந்திய ஆட்சிப் பணி தேர்வெழுதி வெற்றி பெற்றிருக்கவேண்டும்.

I.A.S அதைப் படிக்காமலேயே ஒரு துறையில் செயலாளராக இருந்தது ஒளவை நடராசன் அவர்கள் மட்டுமே !

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

அப்போது, தமிழ்ப் பல்கலைக்கழக செயல்பாடுகள் உலகெங்கும் ஒலித்தது.

ஒரு மொழிக்கான பல்கலைக்கழகத்தை மிகச் சிறப்பாக நடத்திய பெருமை அவரையே சாரும்.

பொதுவாக, தமிழறிஞர்கள் பிற மொழிகளில் புலமை பெறுவதில்லை.

ஆனால், எனது ஆசான் ஒளவை நடராசன் அவர்கள் ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவர்.

ஆசிரியர்களில் மிகச் சிலரே நிர்வாகத்திலும் சிறப்பாக செயல்படுவர்.

எனது ஆசான் அவர்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் போன்ற பெரும் பொறுப்புகளில் முத்திரை பதித்தவர்.

ஒளவை அவர்கள் எல்லோருக்கும் பொது மனிதராக இருந்தார்.

அனைவருக்கும் பிடித்த வகையில் நடந்துகொண்டார்.

டாக்டர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்கள் ஆகிய மூன்று முதலமைச்சர்களிடத்திலும் மதிப்பு மரியாதையும் பெற்றவர்.

அதனால் தான், மூன்று முதலமைச்சர்கள் ஆட்சி நிர்வாகத்தில் பெரும் பொறுப்புகளை அளித்தும் கௌரவித்தனர்.

இதுவே இவரது திறமைக்கு சான்றாகும்.

ஒரு குடும்பத்தில் தந்தை புகழ் வாய்ந்தவராக இருப்பார்.

ஆனால், மகனோ யாருக்கும் தெரியாதவராக இருப்பார்.

பேராசிரியர் ஔவை துரைசாமி தமிழ் இலக்கியங்களில் முடிசூடா மன்னராக இருந்தார்.

அவர் மகன் ஒளவை நடராசன் அவர்களோ தமிழ்ப் பேராசியராக மட்டுமல்லாமல் ஆட்சி நிர்வாகத்திலும் சிறந்து விளங்கினார்.

என்னுடைய ஆசானின் மகன் ஒளவை அருள் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக அப்பாவுக்கு பிள்ளைத் தப்பாமல் அனைவரும் பாராட்டும் விதமாக செயல்படுகிறார்.

மூன்று வாழையடி வாழையாக தலைமுறையாக புகழ் வாய்ந்த குடும்பமாக எனது ஆசான் குடும்பம் ! •

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *